Saturday, September 09, 2023

"கொலை நிலம்": தியாகு- ஷோபாசக்தி உரையாடல்

 

"கொலை நிலம்" என்ற தலைப்பில் தியாகு- ஷோபாசக்தி நடத்திய உரையாடல் தொகுப்பு நூலை இப்போது தான் வாசித்தேன். அதில் தியாகு ஈழம் பற்றிய தனது அறிவுக் குறைபாட்டை மறைப்பதற்காக சோவியத் யூனியன், பாலஸ்தீனம் என்று தாவுவதை அவதானிக்க முடிந்தது. அதில் கூட அவர் சில பிழையான தகவல்களை கூறுகின்றார்.

1. புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய சம்பவத்தை நியாயப் படுத்த சோவியத் யூனியனுக்கு செல்கின்றார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நாஸி ஜெர்மன் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த நேரம், அங்கு வாழ்ந்த யூதர்களை "அவர்களது பாதுகாப்பு கருதி" (நாஸிகள் பிடித்தால் கொன்று விடுவார்கள் என்பதால்) வெளியேற்றியதாக கூறுகின்றார். இது முழுக்க முழுக்க பிழையான தகவல்.

நாஸிகள் ஆக்கிரமித்த சோவியத் பகுதிகளில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தனர். உண்மை தான். ஆனால் அதற்காக சோவியத் அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த யூதர்கள் வெளியேற்றப் படவில்லை. மாறாக அவர்கள் செம்படையிலும், கெரில்லா குழுக்களிலும் பெருமளவில் சேர்ந்து போராடினார்கள். ஆனால் சோவியத் யூனியன் எல்லைக்குள் வாழ்ந்த ஜெர்மன் இன மக்களைத் தான் இடம்பெயர்வித்து கஸகஸ்தானில் மீள்குடியேற்றம் செய்தனர். அவர்கள் நாஸி ஆக்கிரமிப்பு படையினருடன் ஒத்துழைக்கலாம் என்ற அச்சம் காரணம். ஒரு வேளை புலிகள் வவுனியா எல்லையில் வாழ்ந்த சிங்கள மக்களை இடம்பெயர்வித்து யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்திருந்தால் தியாகு சொன்ன உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?

2. இரண்டாம் உலகப் போரில் செம்படையில் சேர்ந்த போர்வீரர்கள் (சோஷலிச) கொள்கையை பாதுகாக்க போராடினார்கள் என்கிறார் தியாகு. அந்த நிலைமை போல்ஷேவிக் புரட்சிக்கு பின்னரான உள்நாட்டுப் போரில் இருந்தது. அப்போது போரிட்டவர்களுக்கு கொள்கை முக்கியமாகப் பட்டது. ஆனால் 2ம் உலகப் போர் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் நடந்தது. சோவியத் அரசின் சோஷலிச கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், எதிர்த்தவர்கள், ஏன் அரசியலில் எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் கூட செம்படையில் சேர்ந்து போரிட்டனர். காரணம், நாட்டுப் பற்று. பல போர்வீரர்கள் நாஸி ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளை கண்டு, கேட்டறிந்த ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்து நாஸிகளை எதிர்த்து போரிட சென்றனர். இன்றைக்கும் ரஷ்யாவில் அது "மாபெரும் தேசபக்திப் போர்" என்று தான் அழைக்கப் படுகிறது.

3. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) "ஆயுதங்களை மௌனித்த" பின்னர் இன்டிபதா எழுச்சி நடந்தது உண்மை தான். அதன் பிறகு தியாகு சொல்வது தான் பிழையான தகவல். அதாவது இன்டிபதா மூலம் போராட்டக் களத்திற்கு வந்த இளைஞர்கள் PLO வில் சேர்ந்தனர் என்கிறார். இது தவறு. அந்த இளைஞர்கள் "ஆயுதங்களை மௌனித்த" PLO வை துரோகிகளாக கருதினார்கள். அதனால் ஆயுதங்களை கைவிடாத ஹமாஸ், ஜிகாத் போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களில் சேர்ந்து கொண்டனர். இது இன்னொரு உண்மையையும் தெரிவிக்கிறது. தேசியவாத இயக்கம் ஒரு கட்டத்தில் சரணடைய வேண்டிய நிலை வருகின்றது. அந்த வெற்றிடத்தை மத அடிப்படைவாத இயக்கங்கள் தான் நிரப்புகின்றன. அது இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

No comments:

Post a Comment