Wednesday, November 24, 2021

அவுஸ்திரேலிய துன்பத் தமிழ் வானொலியில் சாதிய வன்மம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஈழத்து சாதிய வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நடத்தும் வானொலியிலும் சாதிய வன்மம் எதிரொலித்தது.

யார் அந்த சாதிவெறியர்?

இன்பத்தமிழ் என்ற வானொலியை நடத்தும் நெறியாளர், ஒரு நேரலை நிகழ்வில் "கீழ் சாதி!" என்று சாதிய வன்மத்துடன் பாய்ந்துள்ளார். சில தினங்களின் பின்னர் இது தொடர்பான கண்டனங்கள் சமூகவலத்தளம் ஊடாக பரவியதால் அந்த நேரலைப் பதிவு பேஸ்புக்கில் அழிக்கப் பட்டு விட்டது. இருப்பினும் வானொலியின் நெறியாளர் சாதிவெறி வன்மத்துடன் பேசிய ஒளிப்பதிவு எனது கைகளுக்கு கிடைத்துள்ளது. 

இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? 

இது தொடர்பாக உறுதிப்படுத்தப் பட்ட தகவல்களை இங்கே தருகிறேன். 

அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் என்ற வானொலி சேவை கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்தியவரின் சமூகச் சீர்கேடான பழக்கவழக்கங்கள் காரணமாக இடையில் நிறுத்தப் பட்டிருந்தாலும், மறுபடியும் இணையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த வானொலியின் உரிமையாளரான பாலசிங்கம் பிரபாகரன் தன்னை ஒரு தீவிர தமிழ்தேசிய செயற்பாட்டளராக காட்டிக் கொள்பவர். முன்பு புலிகள் இருந்த காலத்தில் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தியவர். தற்போதும் மாவீரர் நிகழ்வுகளை முன்நின்று நடத்தி தன்னை ஒரு புலி அனுதாபியாக காட்டிக் கொள்பவர். 

பாலசிங்கம் பிரபாகரன் தனது தீவிர புலி ஆதரவை காட்டுவதற்காக, ஈழத்து அரசியல் களத்தில் மிதவாத  TNA யை நிராகரித்து விட்டு, தீவிரவாத TNPF கட்சியை ஆதரித்து வருகிறார். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சர்ச்சைக்குரிய வானொலி நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமாரை அழைத்து பேசியுள்ளார். இந்த உரையாடல் Zoom செயலி மூலம் பதிவுசெய்யப்பட்ட படியே, இணைய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

யார் இந்த கஜேந்திரகுமார்?

கஜேந்திரகுமார் முன்பு TNA க்குள் இருந்த காலத்தில், புலிகளால் ஆசீர்வதிக்கப் பட்டவர் என நம்பப் பட்டார். இவரது பாட்டன் ஜி.ஜி. பொன்னம்பலம் தான் ஈழத்தில் முதலாவது வெள்ளாள ஆதிக்க சாதியினருக்காக தமிழ்க் காங்கிரஸ் என்ற சாதிக் கட்சியை உருவாக்கியவர். தற்போது அவரது பேரன் கஜேந்திரகுமார் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். இதனது சின்னத்தின் பெயரில் சைக்கிள் கட்சி என்றும் அழைக்கப் படுகின்றது. 

இன்பத்தமிழ் வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திரகுமார், வழமை போல பூகோள அரசியல் பாடம் நடத்தி, தனது மேற்குலக அடிவருடித்தனத்தை நியாயப் படுத்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு நேயர், இது தொடர்பாக தனது எதிர்க் கருத்துகளை முன்வைத்திருந்தார். மேற்கத்திய நாடுகளிடம் கையேந்தும் பூகோள அரசியல் வாய்ச் சவடால்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை என்றும் எமது அயல்நாடான இந்தியாவை பகைக்காமல், அதன் உதவியுடன் தீர்வுக்காக முயற்சிப்பதே சிறந்தது என்று தனது கருத்தை முன்வைத்திருந்தார். 

நிச்சயமாக இந்தக் கருத்து நெறியாளர் பாலசிங்கம் பிரபாகரனுக்கு உவப்பானதாக இருந்திருக்காது. அவர் கஜேந்திரகுமார் கட்சிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். 

கஜேந்திரகுமாரை கேள்வி கேட்டவர் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வசித்து வருகிறார். நெறியாளருக்கு நன்கு தெரிந்தவர். அதனால் தனது அரசியல் எதிரியை தாக்குவது என்ற பெயரில் மிக மோசமான தனிமனித தாக்குதல் நடத்தினார். 

எதிர்க் கேள்வி கேட்டவரை ஆளுமை அழிப்பு அதாவது Character assasination செய்வது ஒரு பாசிசப் பண்பாடு. கருத்து சுதந்திரத்தை மதிக்காத சர்வாதிகார மனநிலை. ஜெர்மனியில் நாசிச கொடுங்கோலர்கள் தம்மை விமர்சித்தவர்கள் மீது எத்தகைய வன்மைத்தை கொட்டினார்கள் என்பதை வரலாறு கற்பிக்கின்றது. நாசிகளின் அதே மாதிரியான வன்மத்தை அன்று நெறியாளர் வெளிப்படையாகக் காட்டினார். 

"இவர் கையாலாகாத ஒருவர்... சுமந்திரனின் செம்பு..."

"கீழ்த்தரமான சிந்தனை உள்ளவர்..."

"விடுதலைப் போராட்டத்தில் இவரது அண்ணன் கொல்லப் பட்டார் என்பதற்காக இவருக்கு தமிழ்த்தேசியம் பேசுவோரை கண்ணில் காட்ட முடியாது..."

"இவர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து நீக்கப் பட வேண்டியவர்கள்..."

இப்படி தனிமனித தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது இடைமறித்த நேயர் "என்ன உங்கள் குரல் கொன்னை தட்டுகிறது?" என்று கேட்டிருக்கிறார். ஒருவேளை "குடித்து விட்டு உளறுகிறாயா?" என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தாலும் அதில் தவறேதுமில்லை. சம்பந்தப்பட்ட நெறியாளரின் ஒழுக்க சீர்கேடுகள் ஊரறிந்த இரகசியம். 

ஆனால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்ற நெறியாளர் மிகக் கேவலமான சாதிய வன்மத்தை கக்கினார். 

"இவன் இதற்குப் பிறகு பல பதிவுகளை போடுவான்..."

"கீழ்த்தரமான பதிவுகளை போடுகிற கீழ்சாதி இவன்!"

"சாதிக்கேற்ற குணம் தான் அவருக்கு இருக்கிறது!"

இப்படிக் கூறுவது இவர் வாழும் அவுஸ்திரேலியாவில் Racial Discrimination Act 1975 என்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய மிக மோசமான இனப்பாகுபாடு காட்டும் குற்றம் ஆகும். 

இன்பத்தமிழ் வானொலியில் இவ்வாறு நெறியாளர் பிரபாகரன் பகிரங்கமாக சாதிய வன்மத்தை கக்கிய நேரம், ஒரு தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார். ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக காட்டிக் கொள்ளும் கஜேந்திரகுமார், தனக்கு முன்னால் நடந்த சாதிய வன்கொடுமையை கண்டும் காணாமல் கடந்து சென்றமை கண்டனத்திற்கு உரியது. இவருக்கு தமிழர்களின் இன உரிமை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? இப்படியானவர் தான் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கித் தரப் போகிறாராம். 

பிந்திக் கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக கஜேந்திரகுமாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் தான் அந்த நேரம் முகத்தை சுழித்தேன் என்று பதில் கூறி இருக்கிறார். இது தான் ஒரு பொறுப்புள்ள தலைவரின் பதில்? சரி, அப்போது தான் எதிர்வினை ஆற்றவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதற்கு அடுத்த நாளாவது கண்டனம் தெரிவித்திருக்கலாம் அல்லவா? இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் கஜேந்திரகுமாரிடம் இருந்தோ, அவரது கட்சியில் இருந்தோ எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளிவரவில்லை. இதன் மூலம் கஜேந்திரகுமார் தானும் சாதிவெறியர்களின் பக்கம் நிற்கிறேன் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார். TNPF என்பது ஒரு சாதிக் கட்சி தானென்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது.  


இந்தப் பதிவு YOU TUBE வீடியோவாகவும் பதிவேற்றப் பட்டுள்ளது:

No comments:

Post a Comment