Monday, November 29, 2021

வலதுசாரி (தமிழ்த்) தேசியவாத அறிவுஜீவிகளின் வர்க்கத் துவேஷம்

கிளப் ஹவுசில், ஐரோப்பிய நேரம் கிளப்பில், "JVP பேசும் அரசியல்" என்ற தலைப்பில் கூட்டம் போட்டார்கள். ஐரோப்பிய நேரம் கிளப்பை நடத்துவோர், அதில் பேசுவோர் எல்லாம் வலதுசாரி (தமிழ்த்) தேசியவாதிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். வழமை போல ஜேவிபி பேசும் அரசியல் இனவாத அரசியல் என்று நிறுவுவது தான் அவர்களது நோக்கமாகவும் இருந்தது.

எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த பொழுது எனது கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்து விட்டு வந்து விட்டேன். அங்கிருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக எனது கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கி விட்டன. குறிப்பாக இலங்கையில் ஜேவிபி அழித்தொழிப்பு நடவடிக்கையில் 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் இனப்படுகொலை நடந்தது என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. இதில் ஒரு சில இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும் அடக்கம்.

1971, 1989 இனப்படுகொலைக்கு நான் முன்வைத்திருந்த வாதங்கள்: 
- அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்பு படை ஏராளமான அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்தது.

- ஈவிரக்கமின்றி மக்களை கொல்லும் அளவிற்கு வர்க்கத் துவேஷம் இருந்திருக்கிறது.

- சிறிலங்கா அரசு சிங்களப் பேரினவாத கொள்கையை பின்பற்றும் முதலாளிகள், பணக்காரர்களின் அரசு. அதனது மேட்டுக்குடி வர்க்க நிலைப்பாடு காரணமாக, அடித்தட்டு ஏழை மக்களும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் கொன்று குவிக்கப் பட்டனர். 

- பிரிட்டிஷ் கூலிப்படையான கீனிமீனி 1971 ம் ஆண்டிலிருந்து படுகொலைகளில் ஈடுபட்டமை ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

- அப்போதும் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, ஆகிய "முப்பது உலக நாடுகள்" சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நின்றன.

- உலகம் முழுவதும் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக நடக்கும் இனப்படுகொலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. சிலி, இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலைகள் சிறந்த உதாரணம்.

- மேற்கத்திய நாடுகள், தமக்கும் எதிராக திரும்பும் என்பதால் புறக்கணித்து வருகின்றன. அதற்காகவே இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணத்தில் இடதுசாரி கொள்கையாளர்களுக்கு எதிரான, வர்க்க ரீதியான காரணியை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நேரம் குழுவில் மொடறேட்டராக இருந்தவர்கள் என்னைப் பேச விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். நடராஜா முரளிதரன் நடுவில் நின்று கொண்டு நாட்டாண்மை செய்து கொண்டிருந்தார். என்னை தூக்கி கீழே போடுவதும், mute பண்ணுவதாகவும் இருந்தார்.

என்னைப் பேச விடாமல் தடுத்து அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தான் பேசி முடிந்ததும், தனது கருத்துடன் ஒத்துப் போகக் கூடிய சஜீவன், திரு யோ ஆகியோரை கூப்பிட்டு விட்டார். அவர்களும் தம் பங்கிற்கு "தமிழர்களுக்கு நடந்தது மட்டுமே இனப்படுகொலை, மற்றது அரசியல் படுகொலை" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்களது பேச்சுக்களில் இருந்து நான் அறிந்து கொண்ட உண்மை என்னவெனில், மேற்படி நபர்கள் தம்மை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் இனவாதிகளாக தான் இருக்கிறார்கள். அதிலும் திரு யோ "தமிழர்களுக்கு நடந்தால் மட்டுமே இனப்படுகொலை, சிங்களவர்களுக்கு நடந்தால் அரசியல் படுகொலை" என்று சொன்னது அபத்தத்தின் உச்சம். அப்பட்டமான இனவாதம்.

நடராஜா முரளிதரன் "சிலியில் இடதுசாரிகளை தான் கொன்றார்கள்" என்று அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவது மாதிரி பேசினார். இதை நான் சுட்டிக் காட்டியதும், தான் படுகொலைகளை கண்டிப்பதாகவும், ஆனால் அது இனப்படுகொலை ஆகாது என்றும் வாதாடினார். எனது கேள்வி என்னவெனில், அப்பாவி மக்களையும் "இடதுசாரிகள்"(?) என்பதால் கொன்றார்கள் என்று கூறுவது, கொலைக்கு லைசன்ஸ் கொடுப்பது ஆகாதா?

இருந்து பாருங்கள். எதிர்காலத்தில் இலங்கையில் இடதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு இனப்படுகொலை நடந்தால், இந்த "அறிவுஜீவிகள்" கண்ணை மூடிக் கொண்டு அரசை ஆதரிப்பார்கள். அந்த இனப்படுகொலையில் சிங்களவர்கள் மட்டுமல்லாது, தமிழர்கள் கொல்லப் பட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் "இடதுசாரிகளை கொல்லலாம்!", "அது இனப்படுகொலை ஆகாது!!"

இப்படிப்பட்ட தீவிர வலதுசாரி பாசிஸ்டுகளை முற்போக்கு தமிழ்த்தேசியத்தின் கீழ் கொண்டு வரலாம் என நம்புவது வெகுளித்தனமானது. "தீவிர வலதுசாரிகளை திருத்தி விடலாம்" என பகற்கனவு காணும், தமிழ் பேசும் இடதுசாரிகளும் இந்த உண்மையை. உணர வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, வலதுசாரி தமிழ்த்தேசிய அறிவுஜீவிகள் மனதிலும் வர்க்கத் துவேஷம் ஊறி உள்ளது. நாளைக்கு இந்த சிறிலங்கா அரச படைகள், வர்க்கரீதியாக ஒடுக்கபட்ட ஏழை எளிய மக்களை மட்டும் குறிவைத்து கொன்று குவித்தால் பாராமுகமாக இருப்பார்கள். அந்த இனப்படுகொலையை நியாயப் படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

Wednesday, November 24, 2021

அவுஸ்திரேலிய துன்பத் தமிழ் வானொலியில் சாதிய வன்மம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஈழத்து சாதிய வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நடத்தும் வானொலியிலும் சாதிய வன்மம் எதிரொலித்தது.

யார் அந்த சாதிவெறியர்?

இன்பத்தமிழ் என்ற வானொலியை நடத்தும் நெறியாளர், ஒரு நேரலை நிகழ்வில் "கீழ் சாதி!" என்று சாதிய வன்மத்துடன் பாய்ந்துள்ளார். சில தினங்களின் பின்னர் இது தொடர்பான கண்டனங்கள் சமூகவலத்தளம் ஊடாக பரவியதால் அந்த நேரலைப் பதிவு பேஸ்புக்கில் அழிக்கப் பட்டு விட்டது. இருப்பினும் வானொலியின் நெறியாளர் சாதிவெறி வன்மத்துடன் பேசிய ஒளிப்பதிவு எனது கைகளுக்கு கிடைத்துள்ளது. 

இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? 

இது தொடர்பாக உறுதிப்படுத்தப் பட்ட தகவல்களை இங்கே தருகிறேன். 

அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் என்ற வானொலி சேவை கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்தியவரின் சமூகச் சீர்கேடான பழக்கவழக்கங்கள் காரணமாக இடையில் நிறுத்தப் பட்டிருந்தாலும், மறுபடியும் இணையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த வானொலியின் உரிமையாளரான பாலசிங்கம் பிரபாகரன் தன்னை ஒரு தீவிர தமிழ்தேசிய செயற்பாட்டளராக காட்டிக் கொள்பவர். முன்பு புலிகள் இருந்த காலத்தில் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தியவர். தற்போதும் மாவீரர் நிகழ்வுகளை முன்நின்று நடத்தி தன்னை ஒரு புலி அனுதாபியாக காட்டிக் கொள்பவர். 

பாலசிங்கம் பிரபாகரன் தனது தீவிர புலி ஆதரவை காட்டுவதற்காக, ஈழத்து அரசியல் களத்தில் மிதவாத  TNA யை நிராகரித்து விட்டு, தீவிரவாத TNPF கட்சியை ஆதரித்து வருகிறார். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சர்ச்சைக்குரிய வானொலி நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமாரை அழைத்து பேசியுள்ளார். இந்த உரையாடல் Zoom செயலி மூலம் பதிவுசெய்யப்பட்ட படியே, இணைய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

யார் இந்த கஜேந்திரகுமார்?

கஜேந்திரகுமார் முன்பு TNA க்குள் இருந்த காலத்தில், புலிகளால் ஆசீர்வதிக்கப் பட்டவர் என நம்பப் பட்டார். இவரது பாட்டன் ஜி.ஜி. பொன்னம்பலம் தான் ஈழத்தில் முதலாவது வெள்ளாள ஆதிக்க சாதியினருக்காக தமிழ்க் காங்கிரஸ் என்ற சாதிக் கட்சியை உருவாக்கியவர். தற்போது அவரது பேரன் கஜேந்திரகுமார் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். இதனது சின்னத்தின் பெயரில் சைக்கிள் கட்சி என்றும் அழைக்கப் படுகின்றது. 

இன்பத்தமிழ் வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திரகுமார், வழமை போல பூகோள அரசியல் பாடம் நடத்தி, தனது மேற்குலக அடிவருடித்தனத்தை நியாயப் படுத்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு நேயர், இது தொடர்பாக தனது எதிர்க் கருத்துகளை முன்வைத்திருந்தார். மேற்கத்திய நாடுகளிடம் கையேந்தும் பூகோள அரசியல் வாய்ச் சவடால்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை என்றும் எமது அயல்நாடான இந்தியாவை பகைக்காமல், அதன் உதவியுடன் தீர்வுக்காக முயற்சிப்பதே சிறந்தது என்று தனது கருத்தை முன்வைத்திருந்தார். 

நிச்சயமாக இந்தக் கருத்து நெறியாளர் பாலசிங்கம் பிரபாகரனுக்கு உவப்பானதாக இருந்திருக்காது. அவர் கஜேந்திரகுமார் கட்சிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். 

கஜேந்திரகுமாரை கேள்வி கேட்டவர் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வசித்து வருகிறார். நெறியாளருக்கு நன்கு தெரிந்தவர். அதனால் தனது அரசியல் எதிரியை தாக்குவது என்ற பெயரில் மிக மோசமான தனிமனித தாக்குதல் நடத்தினார். 

எதிர்க் கேள்வி கேட்டவரை ஆளுமை அழிப்பு அதாவது Character assasination செய்வது ஒரு பாசிசப் பண்பாடு. கருத்து சுதந்திரத்தை மதிக்காத சர்வாதிகார மனநிலை. ஜெர்மனியில் நாசிச கொடுங்கோலர்கள் தம்மை விமர்சித்தவர்கள் மீது எத்தகைய வன்மைத்தை கொட்டினார்கள் என்பதை வரலாறு கற்பிக்கின்றது. நாசிகளின் அதே மாதிரியான வன்மத்தை அன்று நெறியாளர் வெளிப்படையாகக் காட்டினார். 

"இவர் கையாலாகாத ஒருவர்... சுமந்திரனின் செம்பு..."

"கீழ்த்தரமான சிந்தனை உள்ளவர்..."

"விடுதலைப் போராட்டத்தில் இவரது அண்ணன் கொல்லப் பட்டார் என்பதற்காக இவருக்கு தமிழ்த்தேசியம் பேசுவோரை கண்ணில் காட்ட முடியாது..."

"இவர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து நீக்கப் பட வேண்டியவர்கள்..."

இப்படி தனிமனித தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது இடைமறித்த நேயர் "என்ன உங்கள் குரல் கொன்னை தட்டுகிறது?" என்று கேட்டிருக்கிறார். ஒருவேளை "குடித்து விட்டு உளறுகிறாயா?" என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தாலும் அதில் தவறேதுமில்லை. சம்பந்தப்பட்ட நெறியாளரின் ஒழுக்க சீர்கேடுகள் ஊரறிந்த இரகசியம். 

ஆனால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்ற நெறியாளர் மிகக் கேவலமான சாதிய வன்மத்தை கக்கினார். 

"இவன் இதற்குப் பிறகு பல பதிவுகளை போடுவான்..."

"கீழ்த்தரமான பதிவுகளை போடுகிற கீழ்சாதி இவன்!"

"சாதிக்கேற்ற குணம் தான் அவருக்கு இருக்கிறது!"

இப்படிக் கூறுவது இவர் வாழும் அவுஸ்திரேலியாவில் Racial Discrimination Act 1975 என்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய மிக மோசமான இனப்பாகுபாடு காட்டும் குற்றம் ஆகும். 

இன்பத்தமிழ் வானொலியில் இவ்வாறு நெறியாளர் பிரபாகரன் பகிரங்கமாக சாதிய வன்மத்தை கக்கிய நேரம், ஒரு தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார். ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக காட்டிக் கொள்ளும் கஜேந்திரகுமார், தனக்கு முன்னால் நடந்த சாதிய வன்கொடுமையை கண்டும் காணாமல் கடந்து சென்றமை கண்டனத்திற்கு உரியது. இவருக்கு தமிழர்களின் இன உரிமை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? இப்படியானவர் தான் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கித் தரப் போகிறாராம். 

பிந்திக் கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக கஜேந்திரகுமாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் தான் அந்த நேரம் முகத்தை சுழித்தேன் என்று பதில் கூறி இருக்கிறார். இது தான் ஒரு பொறுப்புள்ள தலைவரின் பதில்? சரி, அப்போது தான் எதிர்வினை ஆற்றவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதற்கு அடுத்த நாளாவது கண்டனம் தெரிவித்திருக்கலாம் அல்லவா? இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் கஜேந்திரகுமாரிடம் இருந்தோ, அவரது கட்சியில் இருந்தோ எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளிவரவில்லை. இதன் மூலம் கஜேந்திரகுமார் தானும் சாதிவெறியர்களின் பக்கம் நிற்கிறேன் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார். TNPF என்பது ஒரு சாதிக் கட்சி தானென்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது.  


இந்தப் பதிவு YOU TUBE வீடியோவாகவும் பதிவேற்றப் பட்டுள்ளது:

Sunday, November 21, 2021

துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்!

 


துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியை(TKP) சேர்ந்த Fatih Mehmet Maçoğlu கிழக்கு துருக்கியில் உள்ள துன்செலி (Tunceli) உள்ளூராட்சி சபை மேயராக இருக்கிறார். இவரது ஆட்சியில் பல சோஷலிச பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

சுமார் 33000 பேரை சனத்தொகையாக கொண்ட துன்செலியில் சிறுபான்மையின குர்திஷ், அலாவி, ஆர்மீனிய மக்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அங்கே வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கடந்த தேர்தலில் Mehmet Maçoğlu மேயராக தெரிவானார். அவர் தனது முதலாவது கடமையாக வேலையில்லா பிரச்சினையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் படி கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. தற்போது அந்த பண்ணைகளில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய தேன் துருக்கி முழுவதும் ஏற்றுமதியாகிறது.

இதைத் தவிர நகர எல்லைக்குள் இலவச பொதுப் போக்குவரத்து சேவை, இலவச தண்ணீர் விநியோகம் செய்து கொடுக்க பட்டுள்ளது. அத்துடன் ஏழைகளுக்கான சலுகைகள் வழங்க படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இடதுசாரி துருக்கியரும் சமூக நலத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளனர்.

துருக்கியின் ஒரேயொரு கம்யூனிச மேயரின் சாதனைகளை கேள்விப்பட்ட பலர், கடந்த காலத்தில் தாம் கொண்டிருந்த கம்யூனிசம் தொடர்பான தப்பெண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Wednesday, November 03, 2021

ஈழ தேச மாயையும் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையும்

திருப்பூர் குணா எழுதிய‌ "இஸ்லாமிய‌ தேசிய‌ மாயைக‌ளும் ஈழச் சிக்க‌லும்" நூலில் ப‌ல‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் மொழி அடிப்ப‌டைவாத‌ அல்ல‌து த‌மிழ்ப்பேரின‌வாத‌ ம‌ன‌நிலையுட‌ன் எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. இந்த‌ த‌க‌வ‌ல் முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌து: 

//இந்த நேரத்தில் இசுலாமியர்கள் தமது கல்வி மொழியாக சிங்களத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழி இசுலாமியர்களின் தாய்மொழி அல்ல என்றும் இசுலாமியத் தலைமை பிரச்சாரம் செய்தது. இசுலாமிய மாணவர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் தமிழ் அதிபர்களை நியமிக்கக் கூடாதென்றும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.// 

உண்மையில் சிங்க‌ள‌ப் ப‌குதிக‌ளில் வாழும் முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ளை பெரும்பான்மையாகக் கொண்ட‌ பாட‌சாலைக‌ளில், இன்றைக்கும் த‌மிழ் தான் போத‌னா மொழியாக‌ உள்ள‌து. (ஒரு இந்து/கிறிஸ்த‌வத் த‌மிழர் கூட‌ இல்லாத‌) சிங்க‌ள‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழும் இஸ்லாமிய‌ர்க‌ள் இன்றைக்கும் த‌மிழை தாய்மொழியாக‌ கொண்டுள்ள‌ன‌ர். அன்றாட‌ வாழ்வில் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர். த‌ம‌து பிள்ளைக‌ளை த‌மிழ் மொழியில் ப‌டிக்க‌ வைக்கிறார்க‌ள். 

நூலில் உள்ள‌ இந்த‌ த‌க‌வ‌ல் முழுவதும் க‌ற்பனை. ஒரு புனைய‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுக்க‌தை. இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்க‌வேயில்லை: 

//1986-இல் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒன்று 782 உறுப்பினர்களுடன் பலமான நிலையில் இருந்துள்ளது. யாழ்ப்பாண இசுலாமியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அதுதான் கையாண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் இசுலாமிய இளைஞர்கள் எந்த தமிழீழ ஆயுதக்குழுக்களிலும் பங்குபெறக் கூடாதென்று வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருந்தது. அந்த நேரத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட தமிழீழ ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. இவற்றில் பல இசுலாமிய இளைஞர்கள் சேர்ந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். இது யாழ்ப்பாண இசுலாமியர் விசயத்தில் தமிழீழ ஆயுதக்குழுக்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக கருதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அனைத்து தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் 36 தமிழீழ ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இசுலாமிய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டத்துக்கு ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். “முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப் பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக்கூடாது. தன்னிச்சையாக செயல்படவும் கூடாது” என்று தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கு அறிவுத்தப்பட்டது. இதனை தமிழீழ ஆயுதக்குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவும் செய்தன.// 

1986ம் ஆண்டு அங்கே 36 த‌மிழீழ‌ இய‌க்க‌ங்க‌ள் இருக்க‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல். 1984ம் ஆண்டு தொட‌க்க‌த்திலேயே மொத்த‌ம் 5 இய‌க்க‌ங்க‌ள் தான் இருந்த‌ன‌. 1986 ம் ஆண்டு ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து விட்டு புலிக‌ள் ஏக‌போக‌ உரிமை கோரினார்க‌ள். எஞ்சிய‌ ஈரோஸ் ம‌ட்டும் புலிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்ட‌து. அத்த‌கைய‌ நிலையில் ஒரு "ப‌ல‌மான‌" இஸ்லாமிய‌ இளைஞ‌ர் அமைப்பு இருந்திருக்க‌ சாத்திய‌மே இல்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ஒரு க‌ட்டுக்க‌தை. 

 ***** 

திருப்பூர் குணா எழுதிய "இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்" என்ற நூல் மீதான விமர்சனம். இலங்கையில் உள்ள முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கிளப் ஹவுஸ் கூட்டம். பகுதி - 1 

 https://youtu.be/c0HFyqGVFKw