கார்ல் மார்க்ஸ் எழுதிய "லூயி பொனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்" (The Eighteenth Brumaire
of Louis Bonaparte) நூலை வாசிப்பதற்கு முன்னர், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்:
- அது இன்றைய, நமது காலத்திய முதலாளித்துவ அரசின் தோற்றம், குணங்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையை புரிந்து கொள்ள உதவும் நூல்.
- அது "முதலாளித்துவ சமுதாயத்தில் தனிமனித சுதந்திரம் இருக்கிறது... ஜனநாயகம் இருக்கிறது... அதனால் இன்றுள்ள அமைப்பே சிறந்தது!" என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை வாயடைக்க வைக்கும் நூல்.
- ஜனநாயகம் என்றால் பல கட்சி தேர்தல் நடக்கும் முறை என்று 19ம் நூற்றாண்டில் யாருமே கனவு கூடக் கண்டிருக்கவில்லை. உண்மையில், ஐரோப்பாவில் அன்றிருந்த ஜனநாயகம் என்பது பாராளுமன்ற அமைப்பைக் குறிக்கும். அது தொழிலதிபர்கள், மற்றும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது.
- பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர் பிரான்ஸ் முற்றிலும் மாறுபட்ட நாடாக இருந்தது. பூர்ஷுவா (முதலாளிய வர்க்கம்) புரட்சியாளர்களின் நாட்டுக்கு எதிராக, மன்னராட்சி நடந்த நாடுகளான பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், பியேமொன்த் (இத்தாலி) எல்லாம் போரிட்டு வந்தன. மதிநுட்பம் வாய்ந்த தளபதி நெப்போலியனின் படைகள் எதிர்ப்பை முறியடித்தன.
- ஐரோப்பாவுடன் மட்டும் நில்லாது, ஆங்கிலேய காலனிய மேலாதிக்கத்தை முறியடித்து, வெற்றிகரமாக எகிப்து மீது படையெடுத்து, அதை காலனியாக்கி விட்டு திரும்பிய நெப்போலியனுக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பு அளிக்கப் பட்டது.
- தலைநகர் பாரிஸ் வந்த நெப்போலியன், பாராளுமன்றத்தில் தனக்கு விசுவாசமானவர்களை சேர்த்துக் கொண்டு சதிப்புரட்சி நடத்தினான். அதனால் ஜனநாயகம் (அதாவது: பாராளுமன்றம்) நசுக்கப் பட்டு நெப்போலியனின் சர்வாதிகார ஆட்சி உருவானது.
- இந்த சதிப்புரட்சி நடந்த தினம் 18 ம் தேதி, புருமேர் (அக்டோபர் அல்லது நவம்பர்?) VIII ம் ஆண்டு. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் புதிய கலண்டர் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. (அதே மாதிரி, பிற்காலத்தில் கம்போடியாவில் க்மெர் ரூஜ் ஒரு புதிய கலண்டர் கொண்டு வந்தனர்) புதிய கலண்டர் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து ஆரம்பித்தது. மாதங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன.
- ஆகவே, அன்றிருந்த பிரெஞ்சுப் புரட்சிக் கலண்டர் படி, நெப்போலியனின் சதிப்புரட்சி நடந்த தினம் 18 ம் தேதி, புருமேர் மாதத்தில் ஆகும். புருமேர் என்ற சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் மூடுபனி என்று அர்த்தம் உள்ளது. அன்று பிரான்ஸ் அரசியல் நிலவரமும் மூடுபனியாகத் தான் இருந்தது. அரச மட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மர்மமாக இருந்தது.
- ஆகவே, கார்ல் மார்க்ஸ் ஒரு காரணத்தோடு தான் தனது கட்டுரைக்கு 18ம் புருமேர் என்று தலைப்பிட்டிருக்கிறார். ஐரோப்பாவில், அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கும்.
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றது. பிரான்ஸில் நெப்போலியனின் சர்வாதிகார ஆட்சி உருவான அதே பாணியில் தான், ஜேர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகாரமும் வந்தது. நிகழ்வுகளும், காரணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன.
- "வரலாறு திரும்புகிறது. ஒரு தரம் துயரமாகவும், மறு தரம் வேடிக்கையாகவும்." எனும் மார்க்ஸின் பிரபலமான கூற்றும் அந்த நூலில் தான் இடம்பெற்றுள்ளது.
- எவ்வாறு ஒரு நாட்டில் உள்ள முதலாளித்துவ - ஜனநாயகம், குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் முதலாளித்துவ - பாஸிசமாக மாற்றமடைகின்றது என்பதை விளக்குகிறது. மார்க்ஸ் 19ம் நூற்றாண்டில் எழுதியது, 21ம் நூற்றாண்டுக்கும் பொருந்துகிறது. இப்போதும் பலர் ஜனநாயகம் குறித்த மயக்கத்தில் உள்ளனர். அந்த மயக்கத்தை தெளிய வைக்க இந்த நூல் உதவும்.
No comments:
Post a Comment