Wednesday, January 13, 2021

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்

"இலங்கை சீனாவின் காலனி ஆகிறது" என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆபிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக, ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவ பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன அதுமட்டுமல்ல ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாத பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் சீனாவின் நவ காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து சீன மொழி கற்பிக்கப்படுகின்றது அங்கு சீன மொழி படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு. 


கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். "எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?" என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்து போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார். 

 

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டோரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமான பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும் அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையை கூட பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரான போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாக பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததை தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாத பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இது தான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை "காப்பிலிகள்" என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்று தான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும் மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள் தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாத பாகுபாடும் அத்தகைய மனநிலையில் இருந்து தான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்களோ, அதையே தான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாக கண்டறிந்தார். அதாவது எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால் சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன் முன்னாள் காலனியாதிக்க வாதிகளான மேற்கத்திய நாடுகளும் இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களை பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன. 


முதலாவதாக பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்க கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசி மெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆபிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால் சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது, போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற் தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு. கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவ காலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆபிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந் நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும் முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துகொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது. இது போன்று தான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை, அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள் தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

சீன மொழியை தாமாக விரும்பி படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்ப பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர். இலங்கை இந்தியாவில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.


இந்தக் கட்டுரை யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

No comments:

Post a Comment