News 18 நேர்காணலில் ஆன்மீகக் குரு சத்குரு ஜாக்கி வாசுதேவ், கம்யூனிசம், தனியுடமை குறித்து அரைவேக்காட்டுத்தனமான பதில்களைக் கூறியுள்ளார். இவற்றில் கம்யூனிசம் குறித்த அவரது அறியாமை, முட்டாள்தனம் நன்கு புலப்படுகின்றது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் கம்யூனிசம் குறித்த தேடல்கள் அதிகரித்து வருவதால், முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள் சத்குரு போன்ற பிரபலங்களின் வாயால் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வைக்கும் நோக்கமாகவே இந்த நேர்காணலை கருத இடமுண்டு. இங்கு நான் சத்குருவின் அரைவேக்காட்டுத்தனமான பதில்களுக்கு எனது எதிர்வினையை முன்வைக்கிறேன்.
சத்குருவின் அபத்தமான கூற்று://சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தன்னை சோஷலிஸ்ட் (சமூகவுடைமை) நாடாக அறிவித்துக் கொண்டது. சோஷலிஸம் என்பது வீரியம் குறைக்கப்பட்ட கம்யூனிசம் (பொதுவுடைமை) தான். அதாவது முழுமையான கம்யூனிசத்தை பின்பற்ற தைரியம் இல்லாததால், சோஷலிஸக் கொள்கைகளை பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டோம். இது தான் நம் நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம். நாம் யார், என்ன வேண்டும், என்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என எதையும் தெளிவாக, தைரியமாக சொல்லமாட்டோம். அது, இது, என்று ஏதேதோ சொல்லி மழுப்புவதால், ஒவ்வொருவரும் நாம் எவ்வழியில் செல்ல திட்டமிடுகிறோம் என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.//
சோஷலிசம் என்பது "வீரியம் குறைக்கப் பட்ட கம்யூனிசம்" அல்ல. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான புரிதல். பெரும்பாலான உலக நாடுகளைப் பொறுத்த வரையில், சோஷலிசம் என்பது முதலாளித்துவ துன்பங்களில் இருந்து தற்காலிக வநிவாரணியாக அரசு முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சமூக ஜனநாயக கட்சிகளின் செல்வாக்கு காரணமாக சோஷலிச திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாகக் கருதிக் கொண்டது. சோஷலிசம் என்றாலே திட்டமிடல் பொருளாதாரம் என்று தான் அர்த்தம். ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில் தாம் அடைய விரும்பும் இலக்குகள் பற்றி முன்கூட்டியே தெளிவாக சொல்லி விடுவார்கள். அந்த இலக்குகள் எட்டப் பட்டனவா? தோல்வி அடைந்தனவா? என்பதெல்லாம் வேறு விடயம். இந்தியாவில் அரசு முன்னெடுத்த திட்டங்களில் இருந்த குறைகளை கூறலாம். குறைந்த பட்சம் அதைப் பற்றி விமர்சித்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இங்கே சத்குரு சோஷலிசம் என்றால் என்னவென்று தெரியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.
சத்குருவின் அபத்தமான கூற்று://கார்ல் மார்க்ஸ்-க்கு பொருளாதாரம் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால் மனிதர்களைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்று தான் சொல்லவேண்டும்.//
இதைச் சொல்வதற்கு முன்னர் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்க வேண்டும். அவர் எழுதிய நூல்களை மேம்போக்காக என்றாலும் விரித்துப் பார்த்திருக்க வேண்டும். எதுவும் தெரியாமல் உளறக் கூடாது. கார்ல் மார்க்ஸ் இரண்டாவது தெரிவாகத் தான் பொருளாதாரம் படித்தார். அவர் முதலில் படித்தது தத்துவம். அது மனிதர்களைப் பற்றியது அல்லாமல் வேறென்ன? ஓர் "ஆன்மீகக்"(?) குருவான சத்குருவுக்கு தத்துவம் என்றால் என்னவென்று நான் விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இங்கேயுள்ள பிரச்சினை ஆன்மிகம் சாராத பொருள்முதல்வாத தத்துவம் என்ற ஒன்று இருப்பதை சத்குரு மறைக்கப் பார்க்கிறார். இதையே ஐரோப்பாவில் இருந்த கிறிஸ்தவ ஆன்மீகக் குருக்களும் செய்தனர். அரிஸ்டாட்டில், சோக்கிரடீஸ் போன்ற ஆதிகால கிரேக்க தத்துவ ஞானிகள் முன்மொழிந்த பொருள்முதல்வாதக் கருத்துக்கள் கூட இருட்டடிப்பு செய்யப் பட்டன. கார்ல் மார்க்ஸ் அவற்றை தூசு தட்டி எடுத்துக் காட்டினார். தத்துவஞானிகளின் நோக்கம் உலகை மாற்றுவது தான் என்று எடுத்துரைத்தார். தத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்றார். அதனால் தான் கார்ல் மார்க்ஸ் வரலாற்று இயங்கியல் என்ற தத்துவத்தை உருவாக்கினார்.
சத்குருவின் அபத்தமான கூற்று://....(கார்ல் மார்க்ஸ்) தான் வழங்கிய கோட்பாட்டைப் பின்பற்றி உலகின் செல்வச் செழிப்பான நாடுகள் எப்படி கம்யூனிஸ்ட்டாக மாறிவிடும் என்றும் மக்கள் அனைவரும் தங்கள் செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள் என்றும், அதன்பின் இவ்வுலகே எப்படி பிரமாதமாக மாறிவிடும் என்றும் அவர் விவரித்திருந்தார். இது ஒரு அற்புதமான கனவு. அதில் சந்தேகம் இல்லை. யோசித்துப் பாருங்கள், உலகில் எல்லோரும் சமமாக இருப்பர். 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார். கேட்பதற்கு இது நிச்சயம் நன்றாகத் தான் இருக்கிறது!//
சிறுபிள்ளைத்தனமான உளறல். சத்குரு இந்தளவு பாமரத்தனமாக பேசுவார் என்று நாமும் கனவு கூட கண்டிருக்க மாட்டோம். கார்ல் மார்க்ஸ் தனது கோட்பாட்டை பின்பற்ற சொல்லவில்லை. ஒரு சோஷலிச சமுதாயத்தை விஞ்ஞானபூர்வமாக அடைவது எப்படி என்பதை விளக்கிக் கூறினார். எழுத்துடன் நில்லாமல் செயலிலும் இறங்கினார். முதலாவது பாட்டாளிவர்க்க அகிலம் உருவாக ஒத்துழைத்தார். அது ஒரு போராட்டத்தின் தொடக்கம் மட்டுமே. செல்வச் செழிப்பான நாடுகள் ஒரே இரவில் கம்யூனிஸ்டாக மாறிவிடும் என்று மார்க்ஸ் ஒருபோதும் சொல்லவில்லை. உழைக்கும் வர்க்க மக்களின் ஆயுதமேந்திய புரட்சிகள் மூலம் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி வீழ்த்தப் படும் என்றார். அதை அவர் கண்கூடாகக் கண்டார். கார்ல் மார்க்ஸ், 1848ம் ஆண்டு நடந்த ஜெர்மன் புரட்சியில் பங்கெடுத்தமைக்காக இரகசியப் பொலிசாரால் தேடப் பட்டு வந்தமையால் தான், பெல்ஜியம், பிரான்ஸ் என்று அகதியாக அலைந்தார். அவரது வாழ்நாள் காலத்தில் தான், 1871ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஆனால், அவையெல்லாம் ஆளும் முதலளைத்துவ அரசால் கொடூரமாக நசுக்கப் பட்ட பாட்டாளிவர்க்க புரட்சிகள். தனது பாதுகாப்புக்காக ஒரு கூலிப்படையை போஷித்து வளர்த்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு, பாட்டாளி வர்க்க மக்களும் ஆயுதபாணிகளாக்கப் பட வேண்டும். இது ஒரு மிக நீண்ட போராட்டம். ஒரே இரவில் எதுவும் மாறாது. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புரட்சிக்குப் பின்னர், மக்கள் விரோத சக்திகளான நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள், முதலாளிகள் போன்றவர்கள் மக்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப் படுவார்கள். அவர்களது சொத்துக்கள் மக்கள் உடைமையாக்கப் படும்.
சத்குருவின் அபத்தமான கூற்று://பொதுவுடைமைப் புரட்சி நடந்து முடிந்த ருஷிய நாட்டிற்கு, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சென்றிருந்தார். ‘அடடா! செல்வந்தர்கள் எல்லாம் தங்கள் செல்வத்தை எளியோருடன் பகிர்ந்து கொள்ளப்போகும் அற்புதக் காட்சியை காணப் போகிறேன். எல்லோரும் சமம். எல்லோருக்கும் சமவாய்ப்பு. கேட்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே, இதை நேரில் பார்த்தால்...’ என்று ஆனந்தக் கனவோடு ருஷியாவிற்கு சென்றார் அவர்.//
இதைச் சொல்வதற்கு முன்னர், மார்க் டிவைன் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதை தேடி அறிந்து கொள்வது நல்லது. ரஷ்யப் புரட்சி நடந்தது 1917ம் ஆண்டு. மார்க் டிவைன் அதற்கு முன்னரே அதாவது 1910ம் ஆண்டே இறந்து விட்டார். ரஷ்யா சென்றது மார்க் டிவைன் ஆவியாக இருக்க வேண்டும்! பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். சத்குரு தானாக கற்பனை செய்த ஒரு கதையை புளுகுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.
சத்குருவின் அபத்தமான கூற்று://எப்போதுமே மக்கள் தங்களிடம் இல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளவே தயாராக இருக்கின்றனர். பரம ஏழைகள் பொதுவுடைமை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நிலைமை மிக மோசமாக மாறியது. பொதுவுடைமை மிக அற்புதமான எண்ணம்தான். அதை செல்வந்தர்கள் பின்பற்றி இருந்தால், அது ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். இவ்வுலகில் ஒரு ஆன்மீக சூழலை அது தோற்றுவித்திருக்கும். இவ்வுலகமே ஆசிரமமாக மாறி இருக்கும்.//
சத்குருவுக்கே ஆன்மீக போதனை செய்ய வேண்டிய நிலைமை இருப்பது ஒரு காலக்கொடுமை! குருவே! சாதாரண உழைக்கும் மக்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால், சொத்துக்களை ஆண்டு அனுபவித்து வரும் பேராசை பிடித்த பணக்காரர்கள் பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்பது தான் கேள்வி. பொதுவுடைமை சமுதாயத்தில் இருப்பவன், இல்லாதவன் என்ற வேறுபாடு இருக்காது. அதை செல்வந்தர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது, "மயிலே மயிலே இறகு போடு" என்று கேட்பது போன்று மடமையானது. ஓர் இடத்தில் மேடு இருந்தால் பக்கத்தில் பள்ளம் இருக்கும். அதாவது, பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் சிறுபான்மை பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த செல்வங்களை தான் இவர்கள் பறித்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இன்று மனித சமுதாயம் அனுபவிக்கும் பல துன்பங்கள், துயரங்களுக்கு பின்னால் முதலாளித்துவ சுரண்டல் உள்ளது. அதை திரை போட்டு மறைப்பதற்கு தான் சத்குருவுக்கு ஆன்மிகம் தேவைப் படுகிறது. பொதுவுடைமை "அற்புதமான எண்ணம்" அல்ல, அது மனித நாகரிக வளர்ச்சியின் உச்சக்கட்டம். ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தில் ஆச்சிரமங்களுக்கு அவசியம் இருக்காது. அதற்குப் பதிலாக கூட்டுறவு பண்ணைகள் இருக்கும்.
சத்குருவின் அபத்தமான கூற்று://ஆனால் உலகின் ஏழைகள்தான் அதை ஆதரிக்கத் துவங்கினர். தங்களால் உழைத்து சம்பாதிக்க முடியாததை, அடித்துப்பிடுங்க அவர்கள் முனைந்தனர். எல்லோருக்கும் சமபங்கு என்னும் போர்வையில் கொள்ளையும், திருட்டும் ஒரு தத்துவமாக ஆதரிக்கப்பட்டன. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பழகி, பகிர்ந்து, மிக அழகான, அற்புதமான ஒன்றாய் இருந்திருக்க வேண்டியது... மனித நேயத்தின் இணையில்லா வெளிப்பாடாய் அமைந்திருக்க வேண்டியது... மிக அசிங்கமான, கொடூரமான ஒன்றாய் உருவெடுத்தது. ஆம், பொதுவுடைமை என்ற பெயரில் மிகமிகக் கொடூரமான செயல்கள் அரங்கேற்றப்பட்டன.//
யாரும் ஏழையாக இருப்பதால் பொதுவுடைமையை ஆதரிக்கவில்லை. பெரும்பாலான ஏழைகளுக்கு தாம் ஏன் ஏழையாக இருக்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூடக் கிடையாது. இந்தியாவில் உள்ளவர்கள் இதை தமது "கர்ம வினைப் பயன்" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளால் ஏழைகளாக படைக்கப் பட்டனர் என்று காலங்காலமாக ஏமாற்றப் பட்டு வந்தனர். அது சரி, ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்ற விடயம் ஓர் "ஆன்மீகக் குருவான"(?) சத்குருவுக்கே தெரியவில்லை, பிறகெப்படி சாதாரண ஏழைகளுக்கு தெரியும்? பணக்காரர்கள் ஏழைகளின் உழைப்பை திருடுவது தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பைத் திருடுகிறார்கள். விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் கையிருப்பில் உள்ள பணத்தை திருடுகிறார்கள். சில நேரம் அவை பகற்கொள்ளையாக நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு சட்டபூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ நடந்து கொண்டிருக்கும் திருட்டு சத்குருவின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், "சமபங்கு எனும் போர்வையில் ஏழைகள் திருடினார்கள்..." என்று பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறார். இதன் மூலம் சத்குரு தானும் பணக்காரக் கொள்ளையர்கள் பக்கம் நிற்பதை வெளிப்படுத்தி விடுகிறார். இதன் மூலம் தனது அசிங்கமான பக்கத்தை காட்டி விடுகிறார். இவ்வாறு ஆன்மீகப் போர்வையின் கீழ் திருட்டுக் கும்பல்களை, கொள்ளைக் கோஷ்டிகளை ஆதரிப்பதை விட, தெருவில் பிச்சை எடுத்துப் பிழைப்பது மேலானது.
ஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி பேர்வழி . அவனை சத்குரு என்று கூப்பிடுவதன் மூலமோ அவனுக்கு எதிர்வினை செய்வதன் மூலமோ அவனை அங்கீகரிக்கிறீர்கள்
ReplyDeleteஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி பேர்வழி . அவனை சத்குரு என்று கூப்பிடுவதன் மூலமோ அவனுக்கு எதிர்வினை செய்வதன் மூலமோ அவனை அங்கீகரிக்கிறீர்கள்
ReplyDeleteஒரு நேர்காணலில் ஜக்கி தன்னை சத்குரு என்று அழைக்கப் சொல்லி மன்றாடுகிறார்.ஆளும் வர்க்கத்தின் கால்நக்கிப் பிழைக்கும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி தன்னை உலகலாவிய அறிவாளியாக்க் காட்டிக்கொள்ள இப்படித்தான் எதையாவது உளறிக் கொட்டி தன்னைத்தானே அம்பலப்படுத்திக்கொள்வார்.
ReplyDelete