Sunday, December 20, 2020

தமிழ்நாடு புரட்சிக்கு வித்திட்ட விசைத்தறி தொழிலாளர் போராட்டம்


தறியுடன் நாவல் விமர்சனம்...

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவல் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டின் வட மேல் மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் எண்பதுகளில் நக்சலைட் புரட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் இந்த நாவலின் கதைக்கரு. இதை எழுதிய இரா. பாரதிநாதன் ஒரு விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்தவர் என்பது மட்டுமல்லாது, அங்கு நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காக போலீசில் பிடிபட்டு சித்திரவதைப் பட்டு வருடக் கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நாவலில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனை அல்ல.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, சில புனைவுகளுடன் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்ற பிரமிப்பு ஏற்பட்டுகிறது. சமூகப்புரட்சி சம்பந்தப்பட்ட நாவல் என்றால், அது ரஷ்யாவை, அல்லது வியட்நாமை கதைக் களனாக கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நாவலை வாசிக்க வேண்டும். இதில் சாதி, மத பேதமின்றி, வர்க்க உணர்வுடன் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் காரர்கள். வர்க்கப் போராட்டத்தில் மொழி முரண்பாட்டுக்கும் இடமில்லை. தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த கத்தார், அங்கு சென்று புரட்சிகர இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நாவலின் இறுதியில் வருகிறது.

திருப்பூர் பகுதிகளில் பரவலாகக் காணப்படும், விசைத்தறி இயந்திரங்கள் பாவித்து, நெசவு செய்யும் தொழிற்சாலைகள் தான் இந்த நாவலின் அச்சாணி. உள்நாட்டு ஆடைத் தேவைக்காக மட்டுமல்லாது, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் சிறிதும் பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றன. இயந்திரங்களின் பேரிரைச்சல் காரணமாக காதுகள் செவிடாகலாம். ஆனால் எந்த முதலாளியும் காதுகளுக்கு கவசம் வாங்கிக் கொடுப்பதில்லை. இதைவிட பஞ்சுத் துகள்களை சுவாசித்து காலப்போக்கில் காச நோய் வந்து செத்தவர்கள் பலருண்டு. இருப்பினும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கினால் தனது இலாபத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டி வருமே என்பது தான் முதலாளிகளின் கவலை.

பெரும்பாலான விசைத்தறிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறு முதலாளிகள், பெரும் மூலதன முதலாளிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. காலப்போக்கில் அவர்களும் பெரும் மூலதன திமிங்கிலங்களால் விழுங்கப் படுவார்கள். அது குறித்து எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாத, குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த சிறு முதலாளிகள், ஈவிரக்கமின்றி தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் தாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக வரலாம் எனக் கனவு காண்கிறார்கள். இந்த உண்மையும் நாவலில் ஓரிடத்தில் பேசப் படுகின்றது.

இருப்பினும் இந்த நாவலின் கதை சிறு முதலாளிகளுக்கு எதிரான போராட்டக் களமாக விரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தொழிற்புரட்சிக்கு பின்னரான லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அறியாதவர்கள் இந்த நாவலை வாசிக்கவும். அப்போதும் இதே மாதிரித் தான் சிறிதும், பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அன்றிருந்த லண்டன், மான்செஸ்டர் தொழிலகங்களில் இதே நிலைமை தான் காணப்பட்டது. அங்கும் அப்போது தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இயந்திரங்களில் அகப்பட்டு கைகளை இழந்து முடமானவர்கள் பலருண்டு.

அவ்வாறு இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப் பட்ட ஒரு பெண் தொழிலாளியின் துயரச் சம்பவத்தில் இருந்து தான் தறியுடன் நாவலின் கதை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்ட முதலாளி விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மருத்துவ செலவுகளை பொறுப்பேற்க மறுப்பதுடன், சிறு தொகையை கொடுத்து ஏமாற்ற முனைகிறான். இந்த அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மார்க்சிய நூல்களை கண்டாலே ஓட்டமெடுத்த ரங்கன் என்ற தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக அரசியலுக்குள் இழுக்கப் படுகிறான். அன்றிலிருந்து ஒரு தீவிர இளம் புரட்சியானாக மாறுகிறான். அந்த ரங்கன் தான் இந்த நாவலின் கதாநாயகன்.

அரசியல் உணர்வற்ற சாதாரண மக்கள் எவ்வாறு அரசியல்மயப் படுகிறார்கள் என்பதை, இந்த நாவல் விரிவாகக் கூறுகின்றது. அதைக் கதாசிரியர் சாதாரண மனிதர்களின் பேச்சு மொழியில் எழுதிச் செல்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளராக அந்த மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை விபரிக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மரமேறும் தொழிலாளியின் உதவியை நாடிச் செல்லும் ரங்கனை, அரசியலை வெறுக்கும் அவனது மனைவி கண்டபடி திட்டி விரட்டும் காட்சி ஒன்று வருகின்றது. பிற்காலத்தில் அதே பெண் அரசியலை புரிந்து கொள்வதுடன் புரட்சிப் பாடல்கள் பாடும் பெண்கள் குழுவிலும் பங்கெடுக்கிறார்.

அன்றைய காலத்தில் தலைமறைவாக இயங்கி வந்த நக்சலைட் இயக்கம், விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றது. உண்மையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் இயக்கம் தலைமறைவாக மட்டுமல்லாது, இது போன்று வெளிப்படையாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. தலைமறைவாக மட்டும் இயங்கும் கெரில்லா இயக்கம், சிலநேரம் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டுப் போகலாம். அதைத் தடுப்பதற்கு தொழிற்சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் ஊடாக செயற்படுவதும் அவசியமானது. 
 
மேலும் வெளிப்படையாக இயங்குவோர் அரசு வழங்கும் ஜனநாயக வெளியை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. கைது செய்யப் பட்டவர்களை விடுவிப்பதற்காக வழக்காடுவது, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது, பிணையில் விடுவிப்பது என்பனவும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான். சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப் பட்டிருந்த போதிலும், அதற்குள்ளும் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். நாவலின் சில அத்தியாயங்கள் சிறைச்சாலைக்குள் நடக்கும் உரிமைப் போராட்டங்களை விளக்குகின்றன.

தறியுடன் நாவலின் கதை, எண்பதுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவாக இயங்கிய காலத்தில் நடக்கிறது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, தொழிலாளர் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழி காட்டுகின்றனர். அவர்களில் தகுதியான செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்துகின்றனர். பொதுவாக எல்லா தலைமறைவு இயக்கங்களும், தமது உறுப்பினர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களை மிக இரகசியமாக வைத்திருப்பார்கள். உறுப்பினர்களின் உண்மைப் பெயர் மறைக்கப் பட்டு புனைபெயர் பாவிக்கப் படும். இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசுகின்றது.

அதை வாசிக்கும் பொழுது, எனக்கு ஈழப் போராட்டம் தொடங்கிய காலகட்டம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக எண்பதுகளின் தொடக்கப் பகுதிகளில் ஈழ விடுதலை அமைப்புகளும் இதே மாதிரித் தான் இயங்கின. கூட்டம் நடக்கும் இடம் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் வாய் வழியாக அறிவிக்கப் படும். சிலநேரம் வேறொரு கிராமத்திற்கு சென்று தங்க வேண்டியும் இருக்கலாம். அனேகமாக ஊருக்கு வெளியே அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியாக இருக்கும். திடீரென ரோந்து சுற்றும் போலிஸ் வாகனம் வந்தால், எந்தப் பக்கத்தால் தப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மறைவிடம் தெரிவு செய்யப் பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சி இயக்கமும், ஈழத்தில் ஈழ விடுதலை இயக்கமும் வெவ்வேறு குறிக்கோள்களுக்காக போராடினாலும், இரகசிய நடவடிக்கை குறித்த செயற்பாடுகளில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றது.

தறியுடன் நாவலை வாசிக்கும் பொழுது, கிளாசிக்கல் நாவலாக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளை கொண்டவை. அதாவது அரசியல் என்னவென்றே அறியாத கதாபாத்திரங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து தமது உரிமைகளுக்காக போராடுவதன் ஊடாக அரசியலை கற்றுக் கொள்கின்றன. எழுநூறு பக்கங்களுக்கு அதிகமாக விரியும் தறியுடன் நாவல், பிற நாவல்களைப் போன்று சாதாரண மக்களின் இன்பம், துன்பம், காதல், சோகம், கோபம் போன்ற உணர்வுகளை மட்டும் பேசவில்லை. இடையிடையே அரசியல் குறிப்புகளும் வருகின்றன. உதாரணத்திற்கு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளான சாதிமறுப்புத் திருமணம், பெண்களின் சமத்துவம் போன்ற விடயங்களில் அரசியல் விளக்கவுரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த நாவலை வாசிக்கும் வாசகர்கள், வழமை போல வாசித்து முடிந்த பின், ஒரு மூலையில் போட்டு விட்டு சென்று விட முடியாது. இந்த நாவல் சொல்ல வரும் அரசியல் கருத்துக்கள் மூலம் தெளிவான உலகறிவைப் பெற்றுக் கொள்வார்கள். அதனால் எல்லா வகையான தரத்தை உடையவர்களுக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. இதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் தறியுடன் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாவல் ஒரு நடந்து முடிந்த கதையை பற்றி மட்டுமல்லாது, இனிமேல் நடக்கப் போகும் கதைகளை பற்றியும் கூறுகின்றது.

- கலையரசன் 
20-12-2020

 
நூலின் பெயர்: தறியுடன் 
ஆசிரியர்: இரா. பாரதிநாதன்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம் 
4/413, 3வது வீதி பாரதி நகர், பிச்சம்பாளையம் 
திருப்பூர் 641 603 
94866 41586 
gunarpf@gmail.com 
விலை இந்திய ரூபா: 650.00

No comments:

Post a Comment