Tuesday, October 06, 2020

அமெரிக்கா, ஐரோப்பாவை பிடித்தாட்டும் கம்யூனிச பூதம்!

"அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேறத் தடை" என்று தந்தி டிவி ஒரு தட்டையான செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் அது அமெரிக்க- சீன பனிப்போரின் விளைவாக, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான தடை. தந்தி டிவி இந்தத் தகவலை, "ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரான நடவடிக்கை" என்பது போன்று திரித்து வெளியிட்டுள்ளது. 

 கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலதிபர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியேறி உள்ளனர். மேலை நாடுகளின் குடியுரிமை சட்டமானது, பிற உலக நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்கள் குடியேறுவதற்கு இலகுவாக வசதிகளை செய்து கொடுக்கிறது. ஏராளமான சீனப் பணக்காரர்களும் அந்த சலுகையை பயன்படுத்தி அமெரிக்க பிரஜாவுரிமை அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ளனர். அமெரிக்காவில் குடியேறியுள்ள தொழிலதிபர்களில் பலர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுமாக இருப்பதால் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாக உள்ளனர். சீனாவைப் பொறுத்தவரையில், எந்தளவு சக்திவாய்ந்த முதலாளியாக இருந்தாலும், அவர் சீன அரசுக்கு (அல்லது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு) கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அமெரிக்கா குடியேற்ற தடை போட்டதற்கான காரணம் அது தான். அமெரிக்காவிலும் பெரும் முதலாளிகள் ரிப்பப்ளிக்கன் அல்லது டெமோக்கிராட்டிக் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமே வித்தியாசம். 

 மற்றும் படி, பொதுவாக அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எந்த வகையில் குடியேறுவதையும் அமெரிக்கா அனுமதிப்பதில்லை. அகதியாக செல்பவர்களையும் கண்காணித்து, தீவிர விசாரணை செய்து, பல்வேறு தடைகளை உண்டாக்குவது வழமை. இது அங்கே காலங்காலமாக பின்பற்றப் பட்டு வரும் நடைமுறை. அது ஒன்றும் புதினம் அல்ல.

 அதே நேரம் பிரித்தானிய பாடசாலைகளில் கம்யூனிசம் போன்ற முதலாளித்துவத்திற்கு எதிரான பாடக்குறிப்புகளை கற்பிக்கக் கூடாது என அரசு தடையுத்தரவு போட்டுள்ளது! மேலதிக விபரங்களுக்கு இந்தக் காணொளியை பார்க்கவும்.

 

No comments:

Post a Comment