"ஆத்திகர்களை விட கம்யூனிச நாத்திகர்கள்
ஆபத்தானவர்கள்" என்று Facebook இல் Sridhar Subramaniam என்பவர் எழுதிய
இந்தப் பதிவை முதலில் பார்த்த நேரம் இதை ஒரு காமெடியாக எடுத்து கடந்து
சென்று விட்டேன். பின்னர் அவர் ஒரு எழுத்தாளர், அதிலும் "ஒரு
செக்யுலரிஸ்டின் வாக்குமூலம்" என்ற நூல் எழுதியவர் என்று கேள்விப் பட்டேன். (https://www.youtube.com/watch?v=RQex174LcXM)
நம்பவே முடியவில்லை. ஒருவேளை அவர் தன்னைத்தானே கலாய்க்கும் நோக்கில்
இந்தக் காமெடிப் பதிவை எழுதி இருக்கலாம்.
"நாத்திகர்கள் இடையிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர்..." என்று ஆரம்பிக்கிறார். நாத்திகம் என்பது கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தத்துவம். ஒவ்வொரு மதத்தவரும் ஏனைய மதத்தவரை நாத்திகராக கருதுகின்றனர். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த மக்கள் கிறிஸ்தவர்களை நாத்திகர்கள் என அழைத்தனர்.
பிற்காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்பிருந்த மதங்களின் தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த மக்கள் இயற்கை வழிபாடு நடத்திய புனிதமான ஆல மரம் ஒன்றை தறித்து விழுத்தினார்கள். அப்போது கிளர்ந்தெழுந்து எதிர்த்த மக்களை "கிறிஸ்துவின் அடியாட்கள்" கொன்று குவித்தார்கள். அன்று கோடிக் கணக்கான மக்களின் சாவுக்கு காரணமாக இருந்த கிறிஸ்தவம் ஒரு நாத்திக சிந்தனை என்று நாமும் சொல்லிக் கொள்ளலாம்.
அது போகட்டும். பிரெஞ்சுப் புரட்சியை நடத்தியவர்கள் தமது நாத்திக அடிப்படைவாத கொள்கை காரணமாக பிரான்ஸ் முழுவதும் இடித்துத் தள்ளிய தேவாலயங்கள் எத்தனை? அவர்கள் உடைத்து நொறுக்கிய இயேசு, மாதா சிலைகள் எண்ணிலடங்காது. ஆயிரக்கணக்கான கத்தோலிக்க பாதிரிகள் கொல்லப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு பின்னர் ஆற்றில் வீசியெறியப் பட்டனர். இந்தக் கொடுமைகளின் விளைவாக தான் மேற்கு ஐரோப்பாவில் மதச் சார்பற்ற நாடுகள் உருவாகின. அதனால் தான் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்ற நபர் ஒரு செக்யுலரிஸ்டின் வாக்குமூலம் என்ற நூல் எழுதி வெளியிட முடிந்தது.
பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய நாத்திக இயக்கத்தின் 300 ஆண்டு கால வரலாறு பற்றி அறிந்திராத "secularist"(?) ஸ்ரீதர் சுப்ரமணியம், திடீரென மாவோ காலத்து சீனாவுக்குள் ஊடுருவிப் பார்க்கிறார். "சீனாவில் மாவோவின் அடியாட்கள் ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள், தாவோ கோயில்களை உடைத்தெறிந்தனர். 3,5 முதல் 4 கோடி மக்களின் சாவுக்கு காரணமாக இருந்தனர்." என்று கணக்கு காட்டுகிறார். இந்தப் புள்ளிவிபரம் எங்கே யாரால் எடுக்கப் பட்டது என்று கேட்டு விடாதீர்கள். அது அவருக்கே தெரியாது. கூகிளில் கலாச்சாரப் புரட்சி என்று தேடிய போது கிடைத்ததாம். கூகிளாண்டவருக்கு நன்றி!
முதலில் இவர் கலாச்சாரப் புரட்சி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்? 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய ஜெர்மன் குடியரசின் அதிபர் பிஸ்மார்க் "கலாச்சார யுத்தம்" என்ற பெயரில் மத நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்னர் 18ம் நூற்றாண்டில் பிரான்ஸின் சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொண்ட நெப்போலியன் போரில் வென்ற இடமெல்லாம் நாத்திகத்தை பரப்பினான். ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தேவாலயங்களை உடைத்தெறிந்து கலாச்சாரப் புரட்சி நடத்தினான்.
நமது "செக்யூலரிஸ்ட்" ஸ்ரீதரின் மனதிலும் சீனா குறித்து இப்படியான எண்ணம் ஓடியுள்ளது. ஆனால் சீனாவில் நடந்தது "மதத்திற்கு எதிரான நாத்திக புரட்சி" அல்ல. இது அவரது தப்பெண்ணம். உண்மையில் அது அதிகார மையத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய வர்க்கப் புரட்சி. பழைய அதிகார வர்க்க சிந்தனை கொண்டவர்கள் குறி வைக்கப் பட்டனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அதற்கு தப்பவில்லை. பலர் மாணவர்களால் வர்க்க எதிரி எனக் குற்றம் சாட்டப் பட்டு பதவி இறக்கப் பட்டனர். மக்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப் பட்டு தலை குனிய வைக்கப் பட்டனர். பின்னாளில் அதிபரான டெங்சியாபிங் அவர்களில் ஒருவர்.
மாணவர் எழுச்சியை மாவோ தடுக்கவில்லை. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று கூறினார். அது தான் உண்மையான ஜனநாயகம். இன்றைக்கும் இப்படி ஒரு நிலைமையை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அத்துடன் இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பு ஐரோப்பாவில் பிஸ்மார்க், நெப்போலியன் நடத்தியது போன்ற மத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை, சீனாவில் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் தான் நடந்துள்ளது. ஏன் மத நிறுவனங்களை தாக்க வேண்டும்? அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளிலும் உள்ளது. பழமைவாதிகளின் கோட்டையை தகர்க்காமல் மக்கள் விடுதலை பெற்று விட முடியாது.
எழுத்தாளர் ஸ்ரீதர் "கம்யூனிசம் என்றால் நாத்திகம்" என்று மட்டும் படித்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால் "சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொலைகாரர் மாசேதுங் ஒரு புடம் போட்ட நாத்திகர்" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். கம்யூனிசம் என்பது பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன் அர்த்தம் மதத்தை என்ன செய்வது என்ற எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு, பொருளாதார பலன்களை அனுபவிக்கும் காலத்தில் மதத்தின் தேவை மறைந்து விடும். இதைப் புரிந்து கொள்ள எங்கெல்ஸ் எழுதிய "டூரிங்கிற்கு மறுப்பு" என்ற நூலை வாசிக்கவும்.
- கலையரசன்
11-7-2020
முகநூலில் எனது இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் இட்ட பின்னூட்டம் இது:Sridhar Subramaniam: கலாச்சாரப் புரட்சி பற்றி நான் கூகுளில் படிக்கவில்லை. ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு கூகுள் செய்து பாருங்கள் என்று சொன்னேன். அவ்வளவுதான். சென்ற நூற்றாண்டின் மாபெரும் கொடூரக் கொலைகாரன் மாவோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு பின்னர் ஆற்றில் வீசியெறியப் பட்டனர்.இதை எப்படி ஏற்றுகொள்ளமுடியும்?
ReplyDeleteகன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு பின்னர் ஆற்றில் வீசியெறியப் பட்டனர்.இதை எப்படி ஏற்றுகொள்ளமுடியும்?
ReplyDelete