Sunday, December 27, 2020

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம். 


இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப் படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப் பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப் படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் கமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப் படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப் படும் ஆதாரங்களிலும், சொல்லப் படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு "நம்பத் தகுந்தது" எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும் படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர். அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

1 comment:

  1. நல்ல அறிமுகம். பிரைமில் காணக்கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete