Thursday, July 16, 2020

ஆனந்தசங்கரி என்ற சாதிவெறிப் பூனை வெளியே வந்து விட்டது!


யாழ் ஊடக மையத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி உரையாற்றிய பொழுது அவரிடம், யாழ் நூலகத் திறப்புவிழா சர்ச்சை தொடர்பாக கேள்வி கேட்கப் பட்டது. அதற்குப் பதிலளித்த ஆனந்தசங்கரி "சாதி எப்போதோ ஒழிக்கப் பட்டு விட்டது, அதுவும் அறுபதுகளில் தான் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே ஒழிந்து விட்டது..." என்று பேசினார். ஆகவே நூலக திறப்புவிழா பிரச்சினையில் சாதி ஒரு விடயமாக இருக்கவில்லை என்பது அவரது வாதம்.

 அவர் மேலும் பேசுகையில் "நான் தான் கந்தையனை மேயர் ஆக்கினேன்..." என்றும் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார். இலங்கையில் எந்த நகரசபையிலும் மேயர் பதவி மேலிருந்து தீர்மானிக்கப் படும் விடயம் அல்ல. மக்களால் தெரிவு செய்யப் பட்ட நகரசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி தம்மில் ஒருவரை மேயராக தெரிவு செய்வார்கள். இந்த ஜனநாயக அடிப்படை ஆனந்தசங்கரிக்கு தெரியாமல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் மேயராக பதவி வகித்தவர்கள் புலிகளால் கொலை செய்யப் பட்டனர். ஆகவே உயர்த்தப்பட்ட சாதியினர் யாரும் உயிரை துச்சமாகக் கருதி மேயர் பதவி வகிக்க முன்வராத நிலையில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த செல்லன் கந்தையாவை ஒரு பலியாடாக நியமித்தனர். ஆனந்தசங்கரி தன்னையறியாமலே இந்த உண்மையை வெளிப்படுத்தி விடுகிறார்.

அறுபதுகளில் தமது கூட்டணிக் கட்சி தான் "சமபந்தி போஜனம் நடத்தி சாதியை ஒழித்தது" என்று ஆனந்த சங்கரியை அடுத்து பேசிய அவரது கட்சிக்காரர் ஒருவர் பெருமையாகக் குறிப்பிட்டார். அன்று அது கட்சிக்கு விளம்பரம் தேட பயன்பட்டதே தவிர அதனால் சாதி ஒழிந்து விட்டது என்று பிதற்றுவது நகைப்புக்குரியது. இன்றைக்கும் பல யாழ் கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் சமமாக அமர்ந்து உணவருந்த மறுக்கிறார்கள். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினர் சமைத்துப் பரிமாற ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. தாழ்த்தப் பட்ட சாதியினர் சமைத்து உணவுபரிமாறும் நாளில் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கூட சாப்பிட வர மாட்டார்! ஆனந்தசங்கரி ஐயாவை நேரில் வரச் சொல்லுங்கள். எனது சொந்த ஊரை சுற்றியுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் எந்தெந்த கோயில்களில் இன்னமும் இந்த பாகுபாடு நடக்கிறது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன்.

ஆனந்தசங்கரி யாழ் ஊடக மையத்தில் ஆற்றிய உரையின் தொடக்கத்தில் (மாவை)சேனாதிராசா பற்றி சில (தனிப்பட்ட) தகவல்களை கூறினார். இன்று அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகள். இரு வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி இருந்தும் ஆனந்தசங்கரி சேனாதிராசாவை "வந்தார்... போனார்..." என்று மரியாதையாக பேசினார். இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் செல்லன் கந்தையாவை பற்றி குறிப்பிடும் பொழுது மட்டும் "அவன்... இவன்.." என்று மரியாதைக் குறைவாக பேசினார். இதற்குக் காரணம் சாதிவெறி அன்றி வேறென்ன?

"கந்தையன் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு கூப்பிடுவான். நான் சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று ஆனந்தசங்கரி பேசினார். உங்களோடு கூடப் படிக்கும், அல்லது வேலை செய்யும் ஒருவர், தனது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அழைத்து, அங்கு சென்று சாப்பிட்டதை இப்படி கூட்டம் போட்டு சொல்வீர்களா? அப்படி யாராவது செய்தால் அற்பத்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயலாக தோன்றாதா? ஆனால் ஆனந்தசங்கரி அதையே பெருமையாக சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

அதாவது தான் இன்னமும் சாதியால் உயர்ந்தவன், கந்தையன் சாதியால் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஆனந்தசங்கரியின் மனதில் இருக்கிறது. "இப்ப யார் சாதி பார்க்கிறார்கள்?" என்று கேட்பது மாதிரி, "நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று சொல்வதற்குப் பின்னாலும் ஆதிக்க சாதிப் பெருமிதம் தான் மறைந்திருக்கிறது. அதன் மூலம், நாங்கள் இன்னமும் சாதியால் பிரிந்து தான் வாழ்கிறோம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கின்றனர். இதைத் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். அது அவர்களை அறியாமலே வெளிப்படும்.

யாழ் ஊடக மையத்தில் ஆனந்தசங்கரியின் உரை:
 https://www.facebook.com/mayurapriyan104/videos/3779258802089449

No comments:

Post a Comment