Thursday, June 25, 2020

புலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...


விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட பத்திரிகையில் இருந்து ஒரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதாவது சாதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள படியால், அந்தக் கிராமங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்தால் சாதி ஒழிந்து விடும் என்பது புலிகளின் எண்ணமாக இருந்துள்ளது. இந்த பத்திரிகைத் துணுக்கில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் பூம்புகார் மாதிரிக் கிராம திட்டம் விவரிக்கப் படுகின்றது.

இது தவிர்க்கவியலாது சிறிலங்கா அரசு முன்னெடுத்த கிராமிய அபிவிருத்தி திட்டங்களை நினைவுபடுத்துகிறது. பல கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளன. அதனால் இலங்கையில் வறுமை ஒழிந்து விட்டதா, அல்லது நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதா என்பது நிச்சயமாக கேட்கப் பட வேண்டிய கேள்வி. மேலும் போர் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சே கூறிய, "தமிழர்களின் பிரதேசம் அபிவிருத்தி அடைந்தால் நாட்டில் இனப்பிரச்சினை மறைந்து விடும்" என்ற கூற்றையும் இது நினைவுபடுத்துகிறது. சிறிலங்கா அரசானாலும், விடுதலைப் புலிகள் என்றாலும் வலதுசாரி தாராளவாத பொருளாதார அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களால் இதற்கு மேல் வேறொன்றும் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் பலர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்து விட்டனர். அறுபதுகள், எழுபதுகளில் இந்த மாற்றம் தெளிவாக உணரப்பட்டது. குறிப்பாக இலவசக் கல்வியை பயன்படுத்தி, கஷ்டப்பட்டு படித்து மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அரச அதிகாரிகளாக வந்த ஏராளம் பேரை உதாரணம் காட்டலாம். இப்படியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்தில் இருந்தும் பலர் வசதியாக வாழ்கின்றனர். அவர்களில் ஒரு elite பிரிவினர், தமது மத்தியதர வர்க்க அடிப்படை காரணமாக தமிழரசுக் கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். அது இன்று TNA ஆதரவு வரை தொடர்கிறது.

சிறிமாவோ காலத்தில் கொண்டுவரப்பட்ட கள்ளுத்தவறணை கூட்டுறவு சங்கம் காரணமாக எத்தனையோ மரமேறும் தொழிலாளர்கள் கைகளில் தாராளமாக பணம் புழங்கியது. இந்த தகவலை காலஞ்சென்ற எழுத்தாளர் இரகுநாதன் தனது பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி எனும் நூலில் பதிவு செய்துள்ளார். அதே மாதிரி கரையோரங்களில் மீனவர் சங்கங்கள் மூலமும், வன்னியில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டும் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்தவர்கள் ஏராளம். அத்துடன் கராஜ் போன்ற சுயதொழில் செய்து முன்னேறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பலருண்டு. மேற்குறிப்பிட்ட பிரிவினர் தனிப்பட்ட முறையில் காணி, பூமி, நகை, நட்டு வாங்கி சொத்துக்களையும் சேர்த்துள்ளனர்.

அப்படியானால் ஏன் இன்னமும் சாதிப்பிரச்சினை ஒழியவில்லை? உலகில் எந்த நாடாகிலும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும். பெரும்பாலானோர் வறுமையில் துன்பப் பட வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் முற்றுமுழுதாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

இனப்பிரச்சினை மட்டுமல்ல, சாதிப்பிரச்சினையும் ஒரே அரசியல் பொருளாதார அடித்தளத்தை கொண்டவை தான். அடிப்படையில் இரண்டுமே வர்க்கப் பிரச்சினை தான். இலங்கையில் சிங்கள மொழி பேசும் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதால் தான், அதைப் பாதுகாப்பதற்காக சிங்கள பேரினவாத அரசியல் கட்டமைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் சாதியமும் அப்படித் தான். சாதிய படிநிலையில் மேன்நிலையில் உள்ள வெள்ளாளர்களில் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமது செல்வத்தை மற்றவர்களுடன் பங்கிட விரும்பாத காரணத்தால் தான் இன்று வரைக்கும் சாதிப்பிரச்சினை தொடர்கிறது.

வட மாகாணத்தில் பெருமளவு நிலங்கள் எந்த சாதியின் ஆதிக்கத்தில் இருக்கின்றன? எந்த சாதியை சேர்ந்தவர்களில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் சாதிப் பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து விடும். துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளிடம் அப்படியொரு தூரப் பார்வை இருக்கவில்லை. அதனை சயந்தன் கொடுத்த பத்திரிகை ஆதாரமே நிரூபிக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து அறிந்து வைத்திருந்த புலிகளுக்கு, வெள்ளாள சாதியவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம். ஒடுக்குபவர்கள் யார் என்பதிலும், ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதிலும் புலிகளிடம் தெளிவான அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லை என்பதை இங்குள்ள பத்திரிகை ஆதாரம் எடுத்துக் காட்டுகின்றது.

(படத்திற்கு நன்றி: Sayanthan Kathir)

No comments:

Post a Comment