Thursday, May 21, 2020

முள்ளிவாய்க்காலில் மறைந்த தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்!


தோழர் பாலகுமாருக்கு செவ்வணக்கம்! 
பதினோராவது ஆண்டு நினைவஞ்சலி!

2009, மே 17 முள்ளிவாய்க்கால் அருகில் சரணடைந்த ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமார் இராணுவத்தால் கொல்லப் பட்டாரா? அல்லது இன்னமும் உயிரோடு இருக்கிறாரா? எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து எனக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் நேரம், ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் பாலகுமாருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது.

பல்வேறு பட்ட இடங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், போரின் முடிவில் பாலகுமார் தனது மகன் சூரியதீபனுடன் இராணுவத்திடம் சரணடைந்த சில நாட்களில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு ஒரு காரணம், போரின் கடைசி நாளான மே 17 அன்று சரணடைந்த அத்தனை பேரும் புலிகள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்றே இலங்கை இராணுவம் கருதியது. துரதிர்ஷ்டவசமாக தோழர் பாலகுமாரும் அந்தப் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டமை ஒரு வருத்தத்திற்குரிய விடயம்.

1987 ம் ஆண்டு, நான் தோழர் பாலகுமாரை கடைசித் தடவையாக சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்த சந்திப்பு முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான முல்லைத்தீவில் நடந்தது என்பது மனத்தைக் கனமாக்கும் நினைவு. அப்போது இந்திய - இலங்கை ஒப்பந்தம் முடிந்து வடக்கில் இந்திய இராணும் நிலைகொண்டிருந்தது. ஒப்பந்த நிபந்தனைகளின் படி, முதலாவதாக ஈரோஸ் தான் தன்னிடம் இருந்த ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தது. (அந்தக் காலகட்டத்தில் புலிகள், ஈரோஸ் மட்டும் தான் களத்தில் ஆயுதங்களோடு இருந்த இயக்கங்கள்.) அப்போது, "இந்தியா கொடுத்த ஆயுதங்களை இந்தியாவிடமே திருப்பிக் கொடுக்கிறோம்" என்று நகைச்சுவையாக குறிப்பிடுவதுண்டு.

ஈரோஸ் இயக்கம் இராணுவ பிரிவை விட அரசியல் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படியால், அதன் பல்வேறு வெகுஜன அமைப்புகள் வடக்கில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. "ஈரோஸ் இராணுவம்" என்றழைக்கப் பட்ட இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் மட்டுமே இரகசியமாக இயங்கி வந்தனர். அவர்களும் ஆயுத ஒப்படைப்புக்குப் பின்னர் தத்தமது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். அவ்வாறு முல்லைத்தீவில் பெற்றோரின் வீடுகளில் தங்கியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர்.

சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் முன்னாள் போராளிகளை கைது செய்ய வேண்டிய காரணம் என்னவென்று இந்திய இராணுவ தரப்பால் தெரிவிக்கப் படவில்லை. அந்த நேரம் சமாதானம் நிலவினாலும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் சில உரசல்கள் இருந்தன. அநேகமாக புலிகளை எச்சரிக்கும் வகையில் தான் அந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்கப் பட்டது.

அன்று அந்த முன்னாள் ஈரோஸ் போராளிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தோழர் பாலகுமார் முல்லைத்தீவுக்கு வந்திருந்தார். தற்செயலாக அன்றைய தினம் நானும் தனிப்பட்ட காரணங்களுக்காக வன்னியில் இருந்த படியால், பேச்சுவார்த்தைக் குழுவில் என்னையும் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு தான் தோழர் பாலகுமாருடன் முல்லைத்தீவில் ஒரு நாள் முழுவதும் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் என்னை ஒரு நிகழ்வில் சந்தித்த தோழர் பாலகுமார், அப்போதும் நினைவில் வைத்திருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையிலேயே அது எனக்கு ஆச்சரியம் தான். தோழரின் நினைவாற்றல் பற்றிப் பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், அப்போது தான் நேரில் பார்த்தேன். என்னுடன் கதைத்த சந்தர்ப்பம் பற்றி மட்டுமல்லாது, ஒரு காலத்தில் அவரது செயலாளராக இருந்த எனது மைத்துனர் பற்றிய நினைவுகளையும் இரை மீட்டார்.

தோழர் பாலகுமார், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற எந்த தலைக்கனமும் இல்லாத, சக தோழராக நட்புடன் பழகக் கூடிய எளிமையான மனிதர். எல்லா பிரச்சினைக்கும், பொதுவுடமைக் கண்ணோட்டத்தில் தர்க்க ரீதியாக பதிலளிப்பார். நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டு, அவரையும் விமர்சிப்போம். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைக் கூறுவார். அது எமக்கு நியாயமாகத் தோன்றும். சில நேரம் இன்று நான் எழுதும் கட்டுரைகளிலும் தோழர் பாலகுமாரின் தர்க்கவாதம் பிரதிபலிக்கலாம். எனது சிந்தனையை மாற்றிய மிகப்பெரிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்.

அன்று முல்லைத்தீவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தோழரின் வீட்டில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அரசியல், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பல கதைகள் பேசிய நினைவுகள் இன்னமும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அப்படியான ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த துயர் தரத் தக்கது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் கொழும்புக்கு சென்று தங்கி விட்டேன். சில வருடங்களில் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து விட்டேன். இருபதாண்டு காலப் போர் எங்களை பிரித்து வைத்தது. திரும்பவும் அவரை ஒரு போர்க்கால நிழற் படத்தில் மட்டுமே பார்ப்பேன் என நினைத்திருக்கவில்லை.

போரின் இறுதிக் காலத்தில் தோழர் பாலகுமார் மனமுடைந்து போயிருந்ததாக அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது எப்படி முடியப் போகிறது என்பதை அனுமானித்திருந்தார். எழுபதுகளில் அவர் நம்பிக்கையோடு தொடங்கிய ஈழப் புரட்சி இன்னும் வரவில்லை என்பது ஒரு சிலருக்கு ஏளனமாக இருக்கலாம். இது வரலாற்று இயங்கியலை மறுக்கும் பார்வை. ஈழப்புரட்சியின் வரலாற்றில் தோழர் பாலகுமாரின் பங்களிப்பு குறுகிய காலம் தான். ஆனால் அவர் விதைத்த கருத்துக்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றன. அவரால் வளர்க்கப் பட்ட தோழர்கள் இன்று பல்வேறு அரசியல் பாதைகளில் திசை மாறி சென்று விட்டார்கள். இருப்பினும் பாலகுமார் இப்போதும் எல்லோராலும் மதிக்கப்படும் மாமனிதர் தான்.

ஈழவர் தேசிய இனத்தின் ஈழப்புரட்சிக்கான பாதை அமைத்து வழிகாட்டிய தோழர் பாலகுமாருக்கு எனது செவ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

- கலையரசன்
21-05-2020

No comments:

Post a Comment