Friday, May 15, 2020

மியான்மர் காரென் தேசிய இன விடுதலைப் போராட்டம்

தமிழீழம் சாத்தியமில்லை என்று சொன்னால் பலர் இப்போது சண்டைக்கு வருவார்கள். அவர்கள் உலக நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். உலகில் பிற நாடுகளிலும் தனிநாட்டுக்கான விடுதலைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து சமஷ்டி உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றன. அவற்றில் ஒன்று மியான்மரில் காரென் தனிநாடு கோரும் காரென் தேசிய விடுதலை இராணுவம்.

அவுஸ்திரேலிய எழுத்தாளர் Phil Thornton எழுதிய Restless Souls என்ற நூல் பற்றிய அறிமுகம். இப்படியான நூல்கள் மிகவும் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. நானும் இதை ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தான் வாங்கினேன். இந்த நூலில் மியான்மரில் தனிநாடு கோரிப் போராடும் காரென் இன மக்களின் போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை வாசித்து அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த எழுத்தாளர் தாய்லாந்தில் உள்ள மியான்மர் எல்லோயோர நகரமான Mae Sot எனும் இடத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து, அங்கு வாழ்ந்த காரென் அகதிகள், போராளிகளுடன் பழகிய அனுபவக் கதைகளை இதில் பகிர்ந்து கொள்கிறார்.

எந்தப் போரும் புனிதமானவை அல்ல. பர்மிய இராணுவம் காரென் பிரதேசத்தில் நடத்திய வெறியாட்டம் இந்த நூலில் விபரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகள் தமக்கு நடந்த கொடுமைகளை விபரிக்கிறார்கள். வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவது, கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, இவற்றில் பர்மிய இராணுவமும் சளைத்தது அல்ல. சில இடங்களில் மனித மாமிசம் உண்ட கதைகளும் வதந்திகளாக உலாவுகின்றன. மியான்மர் இராணுவம் எத்தகைய கொடூரச் செயலுக்கும் தயங்குவதில்லை.

மியான்மரில் நடக்கும் போர் அவலங்களில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த காரென் அகதிகளை தாய்லாந்து அரசும் பாராமுகமாக நடத்துகிறது. தாய்லாந்து மக்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப் படுகின்றனர். இருப்பினும், தாய்லாந்துக்குள் அமைந்துள்ள காரென் அகதி முகாம்களையும், KNLA இயக்க அலுவலகங்களையும் தாய்லாந்து அரசு பொறுத்துக் கொள்கிறது. அதாவது, மியான்மருடன் வர்த்தக தொடர்புகளை புதுப்பிக்கும் வரை அழுத்தம் கொடுப்பதற்கு காரென் மக்களை பயன்படுத்திக் கொள்கிறது.

தாய்லாந்து பணக்காரர்கள் மியான்மர் அகதிகளை மலிவுவிலைக் கூலிகளாக நடத்துகின்றனர். சில இடங்களில் கூலியே கொடுப்பதில்லை. தாய்லாந்து தொழில் வழங்குனர் வாக்குறுதி அளித்த கூலியை குறைத்துக் கொடுப்பதும், சிலநேரம் கூலியே கொடுக்காமல் ஏமாற்றுவதும் சர்வசாதாரணம். வேலை செய்த கூலியை கேட்ட பலர் ஆள் வைத்து கொல்லப் பட்டுள்ளனர். தாய்லாந்தில் மியான்மர் அகதிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

மியான்மர் நாட்டில் பர்மிய மொழி பேசுவோர் எழுபது சதவீத பெரும்பான்மையை கொண்டுள்ளனர். அவர்களைத் தவிர பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் தமக்குரிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனமும் தனக்கென தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்துள்ளது. இந்த நூல் காரென் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி மட்டுமே அதிக கவனம் குவிக்கிறது.

காரென் இனத்தவரின் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றிருந்தது. அதற்குக் காரணம் காரென் இனத்தவரில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பர்மா ஜப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில், காரென் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து பர்மாவை விடுதலை செய்ய போராடியது. அப்போது யுத்தம் முடிந்த பின்னர் காரென் தேசத்திற்கு சுதந்திரம் தருவதாக பிரிட்டிஷார் வாக்குறுதி அளித்தனர். ஆனால் போர் முடிந்த பின்னர் ஏமாற்றி விட்டனர். பர்மிய ஆட்சியாளர்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் வெளியேறி விட்டனர்.

அன்று பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை மறக்க வைப்பதற்காக, பிற்காலத்தில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் காரென் விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கின. பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த கூலிப் படையினர் காரென் தேசிய விடுதலை இராணுவத்திற்கு (KNLA) பயிற்சி வழங்கினார்கள். இந்த நூலை எழுதிய எழுத்தாளர் காரென் தளபதிகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு கூலிப்படையினரையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

காரென் பிரதேசத்தில் உள்ள கூலிப்படையினரில் ஒரு சிலர் வியட்நாம் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ சாகசம் செய்வதற்காக வந்தவர்கள். வேறு சிலர் கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்கள். மேலும் காரென் மக்கள் மேற்குலக சார்பானவர்களாக வைத்திருப்பதற்கு இது போன்ற தொடர்புகள் உதவுகின்றன. ஏராளமான மேற்கத்திய NGO க்கள் காரென் அகதிகளுக்கு உதவுவதற்கு வந்து முகாமிட்டுள்ளன. அவற்றில் சில KNLA க்கு ஆயுதங்கள் கடத்தி வருவதும் இரகசியம் அல்ல.

பல தசாப்த காலமாக KNLA கட்டுப்பாட்டில் இருந்த காரென் பிரதேசத்தை பர்மிய இராணுவம் கைப்பற்ற முடியவில்லை. அரச படைகள் அடுத்தடுத்து எடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின. இறுதியில் காரென் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே வெற்றி பெற முடிந்தது.

காரென் இனத்தவரில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்தாலும், கணிசமான அளவினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பான்மை பர்மியர்களும் பௌத்தர்கள் என்பதால், மியான்மர் அரசு காரென் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. ஒரு சில பௌத்த காரென் இனத்தவர் காட்டிக் கொடுத்த படியால் தான் மியான்மர் இராணுவம் படையெடுத்து, KNLA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது.

காரென் பிரதேசம் முழுவதையும் மியான்மர் இராணுவம் கைப்பற்றிய பின்னர், DKBA என்ற துணைப்படையை உருவாக்கியது. காரென் ஜனநாயக பௌத்த இராணுவம் என்ற அந்த துணைப்படையினர் இன்று வரையில் மியான்மர் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர். KNLA க்கும், DKBA க்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிலநேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் KNLA இலும், இன்னொருவர் DKBA இலும் இருப்பார்கள். யுத்தம் நடக்கும் போது சகோதரர்கள் எதிரெதிர் அணியில் நின்று சுட வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்துள்ளன.

இந்த நூல் எழுதப் பட்ட 2004 ம் ஆண்டளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. (இந்த நூல் 2006 ம் ஆண்டு தாய்லாந்தில் வெளியிடப் பட்டுள்ளது.) அது பற்றிய விபரங்களும் வருகின்றன. அந்த நேரம் மியான்மர் ஜனநாயக வழிக்கு திரும்பும் அறிகுறிகள் தெரிந்த படியால், மேற்கத்திய நாடுகளும், NGO க்களும் மியான்மர் அரசை திருப்திப்படுத்துவதற்காக காரென் விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டன.

NGO காரர்களின் இரட்டை வேடம் குறித்து காரென் மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து உள்ளூர் மனித உரிமைகள் நிறுவன ஆர்வலர் ஒருவர் நூலாசிரியருக்கு பின்வருமாறு கூறுகிறார்: "அவர்களுக்கு தேவையானதெல்லாம் எங்களது அவலக் கதைகள் தான். அவற்றை அறிக்கைகளாக எழுதி தமக்கென ஒதுக்கிய நிதியை செலவிடுகிறார்கள். ஆடம்பர ஹோட்டல்களில், உணவுவிடுதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் எமக்கு உதவ வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் போகப் போக இவர்களது சுயரூபம் தெரிந்து விட்டது." அதே போன்று வருடமொருமுறை தலைகாட்டும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்க்கள சாகசக் காட்சிகளை நேரில் காண முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஒரு சிலர் போலி மோதல் காட்சிகளை, போலி மரணங்களை படமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்கா குறிப்பிட்ட அளவு காரென் அகதிகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. தாய்லாந்தில் உள்ள காரென் அகதிகள் UNHCR மூலம் அமெரிக்க தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தனர். பெரும்பாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போன்ற அறிவுஜீவிகளை அமெரிக்கா அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துக் கொண்டது. இது குறித்து காரென் அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். காரென் பிரதேசத்தில் மருத்துவராக வேலை செய்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று ரெஸ்டாரன்ட்களில் கோப்பை கழுவி பிழைக்கிறார்கள். அவர்களது தாயகத்தில் காரென் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

நூலின் இறுதிப் பகுதியில் ஐ.நா.வில் வேலை செய்யும் இராஜதந்திரி உண்மையை போட்டுடைக்கிறார். எக்காரணம் கொண்டும் மியான்மர் பல துண்டுகளாக உடைவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. மியான்மர் ஒரே நாடாக இருந்தால் தொடர்புகளை பேணுவது இலகு என நினைக்கிறார்கள். காரென் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப் பட்டுள்ளனர். அன்று பிரித்தனியா, இன்று அமெரிக்கா. இரண்டு தடவையும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் காரென் மக்களின் முதுகில் குத்தியுள்ளன. காரென் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து தமிழ் மக்களும் பாடம் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment