Tuesday, May 05, 2020

மொசாம்பிக்கில் திடீரென முளைத்த ஐ.எஸ். இயக்கம்! அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா?


மொசாம்பிக் வட பகுதியில் உள்ள Cabo Delagado மாகாணத்தில் ஐ.எஸ். ஜிகாதிக் குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படுகொலை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்திருந்த போதிலும், இப்போது தான் வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக, மொசாம்பிக்கின் வட பகுதியில் "மத்திய ஆப்பிரிக்க இஸ்லாமிய தேசம்" (Islamic State Central Africa Province (ISCAP)) என்ற பெயரிலான ஒரு ஜிகாதி இயக்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. மார்ச் மாதம் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது நடந்த சண்டையில் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு விழுத்தியதாக வீடியோ வெளியிட்டனர்.

அந்தப் பிரதேசங்களை ஜிகாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், அங்கிருந்த வங்கிக் கிளைகளை கொள்ளையடித்து, அரச கட்டிடங்களுக்கு தீவைத்தனர். மதுபானக் கடைகளை மூடி, அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் பின்பற்றப் பட வேண்டும் என உத்தரவிட்டனர். ஐ.எஸ். சின்னம் பொறித்த கருப்பு- வெள்ளை கொடிகளை பறக்க விட்டனர். அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்த போதிலும், மக்கள் மத்தியில் ஜிகாதி தீவிரவாதிகளுக்கான ஆதரவு மிக மிகக் குறைவு. அதனால் தான் தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர்.

மொசாம்பிக்கில் எவ்வாறு இந்த ஐ.எஸ். ஜிகாதிக் குழு திடீரென முளைத்தது? குறுகிய காலத்தில் அரச படைகளை எதிர்த்துப் போரிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது எப்படி? அதுவும் உள்நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமானது எப்படி?

மொசாம்பிக்கில் திடீர் ஜிகாதிகள் உருவாகக் காரணம் என்ன? இவர்களை திரை மறைவில் இருந்து இயக்கும் உலக நாடுகள் எவை? இஸ்ரேல்? அமெரிக்கா? ஏனெனில் இந்த யுத்தத்திற்கு பின்னால் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மறைந்துள்ளது. அண்மையில் தான் Cabo Delagado மாகாணத்தில் நிறைய எரிவாயு வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐ.எஸ். இயக்கம் சிரியாவில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டாலும், அது இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியாவில் ஐ.எஸ். இயங்கி வருகின்றது. ஆப்பிரிக்காவில் அண்மையில் பல நாடுகளிலும் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியிருந்தது. மேற்கத்திய நாடுகள் அதைப் பற்றி எந்தக் கவலையுமற்று காணப் படுகின்றன.

No comments:

Post a Comment