Saturday, April 18, 2020

மக்டொனால்ட்ஸ் உடைத்து ஏழைகளுக்கு உணவளித்த தொழிலாளர்கள்


பிரான்ஸில் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்!

- கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் பல வாரங்கள் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையை நிர்வாகம் எதிர்த்த போதிலும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரெட்ரான்ட் திறந்துள்ளனர்.

- கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுன் காரணமாக ஏழைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். மார்செய் நகரிலும் அது தான் நிலைமை. மார்செய் வடக்கில் உள்ள Saint-Barthélemy வட்டாரத்தில் ஒரு மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையில் அவர்களும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் தானே? தமது உற்றார் உறவினர்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

- மார்செய் நகரில் பெரும்பாலும் வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதிகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிரான்ஸ் முழுவதும் வேலையற்றவர் எண்ணிக்கை 8.5%. ஆனால் இந்தப் பகுதிகளில் 25 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்ல மார்செய் நகரில் 39 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- கடந்த காலத்தில் நடந்த வேலையிழப்புகள், சம்பளக் குறைப்புகள் இத்துடன் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட ஊரடங்கு தனிமைப்படுத்தலும் சேர்ந்து கொள்ளவே நிலைமை இன்னும் மோசமடைந்தது. அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் நலன் பேணும் Maison Blanche அமைப்பின் சார்பில் பேசிய போது, தம்மிடம் சாப்பிட எதுவுமில்லை என்று பல குடும்பங்கள் தம்மிடம் முறையிடுவதாக தெரிவித்தார். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்களுக்கு வெங்காய சூப் மட்டும் கொடுத்ததாக கூறினார்.

- அங்கு "கலக்டிவ்" என பொதுவுடைமை கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய அமைப்புகளில் நிர்வாகி என்று யாரும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் கூட அவர்களிடம் உதவி கேட்குமாறு சொல்லும் அளவிற்கு இந்த கலக்டிவ் சிறப்பாக செயற்படுகின்றது.

- இருப்பினும் உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால் Syndicat des quartiers populaires de Marseille (மார்செய் பொதுச் சங்கம்) போன்ற கலக்டிவ் அமைப்புகள் மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட்டை உடைத்து திறப்பது என்று முடிவெடுத்தன. Forc e Ouvrière (தொழிலாளர் சக்தி) அமைப்பின் பிரதிநிதி Kamel Guémari இவ்வாறு கூறினார்: "அவசர காலத்தில் எமது பிரதேசத்தில் வாழும் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள்?"

- மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கையகப் படுத்திய தொழிலாளர்கள் அங்கு ஏற்கனவே வைத்திருந்த உணவுப் பொருட்களுடன், கடைகள், தனிநபர்கள் தானமாகக் கொடுத்த உணவு பொருட்களையும் சேர்த்து உணவு தயாரித்து பெட்டிகளில் அடைத்து தயாராக வைத்திருந்தார்கள். அவற்றை தொண்டர்கள் எடுத்துச் சென்று வீடு வீடாக விநியோகித்தனர். இந்த செயற்பாடுகள் யாவும் சுகாதார முறைகளுக்கு அமையவே நடந்துள்ளன. எல்லோரும் கிளவுஸ், முகக்கவசம் அணிந்தே வேலை செய்தார்கள்.

- இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் மக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகம் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது குறித்து La Marseillaise பத்திரிகையுடனான பேட்டியில் விளக்கம் கொடுத்தார்: "ஏற்கனவே நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை." அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்குமா?

- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு உழைக்கும் வர்க்கமான வெளிநாட்டு குடியேறிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க காலனிகளை சேர்ந்தவர்கள் மார்செய் நகர சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர். "இஸ்லாமியர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதில்லை" என்ற பலரது தப்பெண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் சுக்குநூறாகி விட்டது. பிரான்சில், ஐரோப்பாவில் இதுவரை காலமும் இருந்து வந்த "இஸ்லாமியர் பிரச்சினை" உண்மையில் இனப்பிரச்சினையாகவும், அதன் அடிப்படையாக வர்க்கப் பிரச்சினையாகவும் உள்ளது. பல்லின உழைக்கும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். அதைத் தான் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கைப்பற்றிய தோழர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு எமது தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். 


No comments:

Post a Comment