Friday, January 17, 2020

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு "இன உணர்வு" ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல்  தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை "கெர்மானி" (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.

உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.

இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.

அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும். 

அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!

மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த "நாகரிக வளர்ச்சி" தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.

ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் "காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்" ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

"காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்" எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.

மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக "மக்களின் மொழி" பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!

தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்)முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.

அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் "நேடர் டொய்ச்"(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் "நெடர் லான்ட்ஸ்" (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.

இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.

இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக" கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.

காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு "புரூசீ" என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் "புரூசியா" (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் "டொய்ச்லாந்து" என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் "ஜெர்மனியரின் தேசத்தில்" போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.

அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.

"ஜெர்மன் ஷேக்ஸ்பியர்" என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய "ரைன் சமஷ்டிக் குடியரசு" உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.

1848 ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு: 
- மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
- அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும். 
-பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும். 
- தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும். 

பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.

தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

No comments:

Post a Comment