உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு "ஐரோப்பிய நாடு" என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008 ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது.
சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, "இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!" அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.
ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.
ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். "பதிவு செய்வீர்களா?" என்று கேட்டதற்கு "அப்படி என்றால் என்ன?" என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள்.
பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன்.
திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.
ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.
மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.
மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது.
திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம்.
நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட "சுதந்திர தேவி" சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம்.
இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது.
அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. "ரஷ்ய மயமாக்கல்" என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.
அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.
மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.
இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.
இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். "அதிர்ஷ்டம் இல்லாத" பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது.
எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே "சுதந்திர சதுக்கம்" எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே.
ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார்.
அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.
ஜோர்ஜியாவில் "மாட்ரூஷ்கா" என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.
(தொடரும்)