"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.
இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.
ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.
அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.
வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.
மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.
நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.
உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.
இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.
நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.
நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.
நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.
ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.
No comments:
Post a Comment