Friday, August 09, 2019

ஸ்லோவேனியா பயணக் கதை


கிழக்கு ஐரோப்பாவில், தொண்ணூறுகளில் பனிப்போரின் முடிவில் பல புதிய தேசங்கள் உருவாகின. அவற்றில் ஸ்லோவேனியா முதன்மையானது. இன்று வரைக்கும் ஸ்லோவேனியாவுக்கும், ஸ்லாவாக்கியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவோர் பலருண்டு. இந்தக் குழப்பம் பல ஐரோப்பியருக்கும் உண்டு. முன்னாள் செக்கொஸ்லாவிக்கியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லாவாக்கியா. முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லோவேனியா. 


முன்பு யூகோஸ்லேவியா பல தேசிய இனக் குடியரசுகளின் சமஷ்டி நாடாக இருந்த காலத்தில், ஸ்லோவேனியா தான் எல்லாவற்றிலும் தனிநபர் வருமானம் கூடிய பணக்காரக் குடியரசாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்த ஏழைக் குடியரசுகளுக்கு ஸ்லோவேனியாவின் நிதி தான் உதவிக் கொண்டிருந்தது. இது குறித்த சர்ச்சை தான் யூகோஸ்லேவியா துண்டு துண்டாக உடைவதற்கான முதலாவது காரணம். 



எண்பதுகளுக்குப் பின்னர், குறிப்பாக முன்னாள் கம்யூனிச அதிபர் டிட்டோவின் மறைவுக்குப் பின், தங்களது வளங்களை பிற குடியரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பாத ஸ்லோவேனியா தேசியவாதிகளின் கை ஓங்கியது. அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தனர். 1990 ம் ஆண்டளவில் (மேற்கு)ஜெர்மனியின் ஆதரவும் மறைமுகமாகக் கிடைத்து வந்தது. ஸ்லோவேனியா பொலிஸ் படை கிளர்ச்சி இராணுவமாக மாற்றப் பட்டது. யூகோஸ்லேவிய இராணுவத்துடனான போர் வெறும் பத்து நாட்கள் மட்டுமே நீடித்தது. பெருமளவு உயிரிழப்புகள், சொத்தழிவுகள் இல்லாமல் ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக பிரிந்து சென்றது. 


இவ்வளவு விரைவாக ஸ்லோவேனியா தனி நாடானதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஸ்லோவேனிய கிளர்ச்சிப் படை யூகோஸ்லேவிய இராணுவத்தை சுற்றிவளைத்து விட்டது என்றும் அதனாலேயே பின்வாங்கிச் சென்றனர் என்றும், முன்னர் ஒரு தடவை ஸ்லோவேனியா நண்பர் சொல்லக் கேள்விப் பட்டேன். நான் ஸ்லோவேனியா சுற்றுப் பயணம் செய்த நேரம் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நேரில் கண்டேன். அதே நேரம் அது மட்டும் தான் ஒரேயொரு காரணம் என்று சொல்வதும் தவறு. செர்பிய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் போரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், வேறு முக்கியமான காரணங்களுக்காக பின்வாங்கியிருக்கிறார்கள்.

முதலாவதாக ஸ்லோவேனியாவின் பூகோள அமைவிடம் போரை நடத்துவதற்கு ஏற்ற இடம் அல்ல. அது மேற்கத்திய, நேட்டோ நாடுகளான ஆஸ்திரியா, இத்தாலியுடன் எல்லைகளை கொண்டுள்ளது. ஸ்லோவேனியாவின் உள்நாட்டுப் போரின் விளைவாக நேட்டோ இராணுவத் தலையீடு ஏற்படலாம் என்ற அச்சம் இருந்திருக்கலாம். ஸ்லோவேனியா தேசியவாதிகளுக்கும், ஜெர்மனிக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகளின் விளைவாக, ஜெர்மனியின் மறைமுகமான அழுத்தமும் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ, ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக மாறியதுடன், பிற்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்ந்து விட்டது. அது செங்கண் கூட்டமைப்பிலும் அங்கம் வகிப்பதால், எல்லைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. செங்கண் விசா இருப்பவர்கள் அந்நாட்டுக்கும் சென்று வரலாம். தலைநகர் லியூப்லியானாவில் நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு சிலி நாட்டு இளம் பெண்ணை சந்தித்தேன். அவர் ஏற்கனவே பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து விட்டு வந்ததாக கூறினார். உண்மையில் சுற்றுலாப் பிரியர்களுக்கு ஒரே செங்கண் விசா ஒரு வரப்பிரசாதம் தான். 

ஸ்லோவேனியாவின் தலைநகரம் லியூப்லியானா ஏறக்குறைய நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கவனிக்கவும், Ljubljana என்ற பெயரில் உள்ள "J" என்ற எழுத்து "யே" என்று உச்சரிக்கப் பட வேண்டும். ஆகவே, லிஜூப்லிஜானா அல்ல லியூப்லியானா. மத்திய காலத்தில் அந்த நகரம் ஜெர்மன் மொழியில் லைபாக் (Laibach) என்ற பெயரில் அழைக்கப் பட்டது. பல நூறாண்டுகளாக, இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், ஆஸ்திரிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள ஸ்லோவேனியா நாட்டில் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே ஸ்லாவிய மொழி பேசும் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்லோவேனியா ஒரு ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. அதாவது செர்பிய, குரோவாசிய மொழிகளுக்கும் நெருக்கமானது. இவற்றிற்கு இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை விடக் குறைவு எனலாம். ஸ்லோவேனியா மொழியை எழுதுவதற்கு லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே, இடங்களின் பெயர்களை இலகுவாக வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. விசேட உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களும் மிகக் குறைவு எனலாம்.

அந்நாட்டில் எங்கு பயணம் செய்வதென்றாலும் தலைநகர் லியூப்லியானா வந்து செல்ல வேண்டும். லியூப்லியான மத்திய ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் அனைத்துப் இடங்களுக்கும் ரயில், பஸ் சேவைகள் இருக்கின்றன. மத்திய பஸ் நிலையமும் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. தலைநகரமாக இருந்தாலும், லியூப்லியானா ஒரு பெரிய நகரம் அல்ல. ஸ்லோவேனியாவின் சனத்தொகையும் மிகக் குறைவு. வெறும் இரண்டு மில்லியன் மட்டுமே.

நான் லியூப்லியானா போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஆறு மணி இருக்கும். ஜெர்மனியில் இருந்து இரவு நேர ரயிலில் பிரயாணம் செய்து வந்த களைப்பு வேறு வாட்டியது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கழிவறைக்கு சென்று, முகம் கழுவி, காலைக்கடன்களை முடித்து விட்டு பயணத்திற்கு தயாரானேன். ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தின் போது நான் அவதானித்த விடயம், எங்கு பார்த்தாலும் பொதுக் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

ஸ்லோவேனியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பொஸ்டோன்யா குகைகளை பார்க்காமல் திரும்புவதில்லை. லியூப்லியானாவில் இருந்து தென் மேற்காக மலைப் பிரதேசத்தில் உள்ளது. ஒன்றரை மணிநேர பஸ் பயணத்திற்கான டிக்கட் ஒன்பது யூரோ மட்டுமே. ஸ்லோவேனியாவும் யூரோ நாணயம் தான் பயன்படுத்துகிறது. விலைகள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய தரத்தில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் போக்குவரத்து செலவு குறைவு தான்.

நிலத்தின் கீழே ஓர் அற்புத உலகம் என அழைக்கப்படும் பொஸ்டோன்யா குகை இருபது கிலோ மீட்டர் சுரங்கப் பாதையை கொண்டது. அதில் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காண்பிக்கிறார்கள். நிலத்தின் கீழே குறிப்பிட்ட தூரம் ஒரு சிறிய ரயில் வண்டியில் கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரமளவில் நடக்க விடுகிறார்கள். வெளியே கோடை கால வெயில் முப்பது பாகை செல்சியசில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆனால் குகைக்குள்ளே பத்து பாகை செல்சியஸ் குளிராக இருந்தது.

பொஸ்டோன்யா சுரங்கத்தின் உள்ளே சுண்ணாம்புப் பாறைகள் விசித்திரமான கோலங்களில் பார்ப்பதற்கு அழகாக உள்ளன. மாயாஜால படங்களில் காட்டப் படுவதைப் போன்று வேறொரு உலகத்தினுள் வந்து விட்டதைப் போன்ற பிரமையை தோற்றுவிக்கிறது. மின் விளக்குகள் மட்டும் இல்லையென்றால் குகைக்குள் கும்மிருட்டாக இருக்கும். எதுவும் தெரியாது. அங்கு இருட்டுக்குள்ளே வாழும் உயிரினங்கள் உள்ளனவாம். தேள்கள் கூட இருப்பதாக எமது வழிகாட்டி சொன்னார். உடும்பு போன்ற தனித்துவமான உயிரினம் ஒன்று அங்கே கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப் படும் பொருட்களில் எல்லாம் அந்த உயிரினத்தின் படம் பொறிக்கப் பட்டுள்ளது. 

பொஸ்டோன்யா சுரங்கப் பாதை இரண்டு உலகப்போர்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் படையினர் ரஷ்ய போர்க் கைதிகளை கொண்டு கட்டுவித்த பாலம் இன்னமும் உள்ளது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் பொஸ்டோன்யா சுரங்கத்தை தமது மறைவிடமாக பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்து கொண்டு நாஸி ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். பொஸ்டோன்யா சுரங்கத்தை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது பிள்ளைகளுக்கும் பிடித்த இடமாக இருக்கிறது. இருப்பினும், நுழைவுச் சீட்டு விலை அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அடுத்த நாள் பிளேட் (Bled) ஏரியை பார்வையிடச் சென்றேன். அது லியூப்லியானா நகரில் இருந்து வட மேற்காக ஆஸ்திரிய எல்லையோரம் அமைந்துள்ளது. உலகில் மிகவும் அழகான எரிகளில் அதுவும் ஒன்று. ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு உள்ளது. டிக்கட் எடுத்தால் கானோ எனும் வள்ளத்தில் துடுப்பு வலித்து சென்று வரலாம். பிலேட் சோஷலிச யூகோஸ்லேவியாவின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் அதிபர் டிட்டோ வந்து தங்கிச் சென்ற ஏரிக்கரை மாளிகை இன்று ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப் பட்டுள்ளது. ஒரு நாள் தங்குவதற்கான செலவு 850 யூரோ. அடேங்கப்பா! 


மேற்கொண்டு பயணம் செல்வதற்கு முன்னர் லியூப்லியானா நகரை சுற்றிப் பார்க்க விரும்பினேன். பழைய நகரம் மிகவும் அழகானது. மத்திய காலத்து கட்டிடங்கள் இன்னமும் உருக் குலையாமல் பேணிப் பாதுக்காக்கப் பட்டு வருகின்றன. பழைய நகர மத்தியில் ஒரு குன்றும், அதன் மேலே ஒரு கோட்டையும் உள்ளது. மலையேறும் குட்டி ரயிலில் அங்கு சென்று வரலாம். அந்த ரயிலில் இருந்த படியே கீழே தெரியும் லியூப்லியானா நகரத்தை முழுமையாகக் கண்டு இரசிக்கலாம்.

ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தில் கடைசியாக தெரிவு செய்த இடம் கோபர். அங்கு சென்றால் முற்றிலும் வித்தியாசமான இடத்தைக் காணலாம். ஸ்லோவேனியாவின் பெரும்பாலான பகுதிகள் அல்ப்ஸ் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. அதாவது, அல்ப்ஸ் மலை நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஆனால் கோபர் இத்தாலி மாதிரி இருக்கும். அதற்குக் காரணம் அந்த நகரம் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அயல் நாடுகளால் நிலத்தால் சூளப்பட்ட ஸ்லோவேனியா சுமார் ஐம்பது கிலோ மீட்டர் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. அந்தப் பகுதியை இஸ்திரியா என்றழைப்பார்கள். குரோவேசியாவின் முன்னூறு கிலோமீட்டர் கரையோரப் பகுதியும் அதற்குள் அடங்கும்.

கோபர் சென்ற நேரம் ஒரே நாளில் காலநிலை மாற்றத்தை உணரக் கூடியதாக இருந்தது. அதாவது லியூப்லியானாவை விட அங்கு வெப்பம் அதிகம். அதனால் பெருந்தெருவின் மத்தியில் ஈச்சை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். வெப்ப மண்டலத்தை சேர்ந்த, மத்தியதரைக் கடலோரம் உள்ள தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே ஈச்சை மரம் வளரும். விடுமுறையில் கடற்கரையில் பொழுதுபோக்க விரும்புவோருக்கு கோபர் சிறந்த இடம்.

இத்தாலியில் வெனிஸ் நகர கட்டிடக் கலைக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதனை ஸ்லோவேனியாவின் கடலோரப் பகுதிகளில் காணலாம். பழைய கோபர் நகரம் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது. அங்குள்ள பழைய கட்டிடங்கள் யாவும் வெனிஸ் நகரை நினைவுபடுத்தும். அதற்குக் காரணம் அந்தப் பகுதி ஒரு காலத்தில் வெனிஸ் குடியரசின் கீழ் இருந்துள்ளது. இன்றைக்கும் அங்கே இத்தாலி மொழிபேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்கிறார்கள். தெருக்களின் பெயர்ப் பலகைகள் ஸ்லோவேனியா, இத்தாலி ஆகிய இரு மொழிகளிலும் எழுதப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களிலும் இரு மொழி அறிவிப்புகள் காணப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் வெனிஸ் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. ஸ்லோவேனியா மட்டுமல்ல, குரோவாசியாவினதும் கரையோரப் பிரதேசம் கூட ஒரு காலத்தில் வெனிஸ் நாட்டின் பகுதியாக இருந்தது. அங்கெல்லாம் இத்தாலி (வெனிஸ் மொழி?) பேசும் மக்களும் வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. அதற்குக் காரணம் முசோலினியின் விஸ்தரிப்புவாத அரசியல். அதாவது, இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னரே யூகோஸ்லேவியாவின் இஸ்திரியா கடல் பிரதேசம் முழுவதும் இத்தாலிக்கு சொந்தம் என்று முசோலினியால் உரிமை கோரப் பட்டது. முசோலினியின் இத்தாலி- பாசிசப் படைகள் இஸ்திரியாவை ஆக்கிரமித்தன.

பாசிச ஆக்கிரமிப்புக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தேடித் தேடி சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிக்கப் பட்டதும் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் அந்த இடத்தை விடுதலை செய்தனர். அப்போது பாசிசக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப் பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். பெரும்பாலும் இத்தாலி மொழி பேசும் சிறுபான்மையினர் தான் பாசிச ஆதரவாளர்களாக இருந்தனர். ஆகையினால் யூகொஸ்லேவியரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சி, பெருமளவு இத்தாலியர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

இறுதியாக சில பயணக் குறிப்புகள். ஸ்லோவேனியா சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு. ஓரளவுக்காவது ஆங்கிலம் பேசுவோரை எல்லா இடங்களிலும் சந்திக்கலாம். போக்குவரத்து பிரயாணச் சீட்டு கொடுக்கும் இடங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தெருக்கள், பொது இடங்களில் ஆங்கிலம் பேசத் தெரிந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். வழிப்போக்கர்களில் யாராவது ஒருவர் உதவுவதற்கு முன்வருவார்கள். இருப்பினும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் வேலை செய்வோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.

சுற்றுலா ஸ்தலங்களில், நகரங்களில் அனைத்து வகையான ரெஸ்ட்டாரண்ட்களும் உண்டு. ஆனால், உணவு விடுதிகளில் சாப்பிடுவது அதிக செலவாகும் விடயம். குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பினால் சூப்பர் மார்க்கெட்டுகளை நாடலாம். அங்கு பொருட்களின் விலை மேற்கைரோப்பிய விலைகளை விடக் குறைவு. சமைத்த உணவுப் பொருட்களும் விற்கிறார்கள். ஹாஸ்டலில் தங்கி இருந்தால், அங்கு உணவை கொண்டு சென்று சூடாக்கிச் சாப்பிடும் வசதி உள்ளது. விசேடமாக, ஸ்லோவேனிய தயிர் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும். அது நமது ஊர்களில் கிடைக்கும் தயிர் மாதிரி சுவையாக இருக்கும். மேற்கைரோப்பாவில் எங்குமே அந்தத் தயிர் கிடைக்காது.

நான் ஸ்லோவேனியா வரும் பொழுது வடக்கே ஆஸ்திரியாவில் இருந்து ரயிலில் வந்தேன். திரும்பிப் போகும் பொழுது தெற்கே உள்ள இத்தாலி நகரான திரீஸ்டே க்கு பேருந்து வண்டியில் சென்றேன். கோபர் நகரில் இருந்து திரீஸ்டே அரை மணிநேர பஸ் பயணம் தான். பனிப்போர் காலத்தில் மிகவும் கெடுபிடியான எல்லை அது. தற்போது அங்கே எல்லைக் காவலரண் எதுவும் கிடையாது.

திரீஸ்டே நகரத்தினுள் நுழைந்த நேரம் வேறொரு உலகத்திற்கு வந்தது போலிருந்தது. அதற்குக் காரணம் சன நெருக்கடி. இந்தளவு இட நெருக்கடியுடன் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஸ்லோவேனியாவில் எங்குமே காணவில்லை. இத்தாலியின் திரீஸ்டே நகருடன் ஒப்பிட்டால், அதிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோவேனியாவின் கோபர் நகரம் ஒரு கிராமம் மாதிரிக் காட்சியளித்தது. 

திரீஸ்டே ஒரு காலத்தில் யூகோஸ்லேவியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் எழுந்த அரசியல், இராஜதந்திர முரண்பாடுகளை தீர்ப்பதற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டு இத்தாலியிடம் ஒப்படைக்கப் பட்டது. அன்றிலிருந்து அந்தப் பிரதேசம் முழுவதும் இத்தாலிமயமாகி விட்டது. 


மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம். 

No comments:

Post a Comment