"கடுமையான இஸ்லாமிய மதப்பற்று காரணமாக தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை. ISIS போன்ற தீவிரவாத இயக்கங்களில் மத நம்பிக்கை இல்லாதிருந்தவர்களும் நிறையப் பேர் சேர்ந்திருந்தனர். குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையின் வேர் கடந்த கால ஐரோப்பிய காலனிய வரலாற்றில் உள்ளது. தவிர்க்கவியலாமல், நாம் எல்லோரும் அதற்குப் பலியானவர்கள் தான். ஐரோப்பிய காலனிய காலத்தில் இருந்து நீடிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப் படா விட்டால், மீண்டும் ஐ.எஸ். போன்ற இயக்கம் உருவாவதை தடுக்க முடியாது." இவ்வாறு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த முன்னாள் ISIS போராளி ஒருவர் பெல்ஜிய நாட்டு பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் சிரியாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தாயகம் வந்து சேர்ந்திருந்தார். மொரோக்கோ அரசு கைது செய்து பதினான்கு மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்து விட்டு விடுதலை செய்துள்ளது. அதற்குப் பிறகு முன்னாள் தீவிரவாதிகளுக்கான புனர்வாழ்வு மையத்தில் சமூக சேவகராக செயற்பட்டு வருகிறார். 2017 ம் ஆண்டு, De Morgen பத்திரிகையில் பிரசுரமான பேட்டியை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்து தருகிறேன்.
கேள்வி: சிரியாவுக்கு சென்று IS இல் சேர்வதற்கு என்ன காரணம்?
பதில்: அயலவர் மூலம் ஐ.எஸ். இற்கு ஆள் சேர்க்கும் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.
அதில் சேர்வதற்கு முன்னர் மதத்தை பற்றுடன் பின்பற்றி வந்தாயா?
இல்லை. நான் முன்பு ஒரு கலாச்சார முஸ்லிம். பண்டிகை நாளன்று மட்டுமே பள்ளிவாசலுக்கு சென்று வந்தேன். சில நேரம் ரமலான் நோன்பு பிடித்திருப்பேன். நிச்சயமாக நான் மதத்தை தீவிரமாக பின்பற்றவில்லை. பொதுவாக ஒருவர் இஸ்லாமிய மதநெறிகளில் பற்றுக் கொண்டு தீவிரவாதியாவதில்லை. நானும் அதில் ஈடுபாடு காட்டவில்லை. எனது பிரதானமான நோக்கம் பணமாக இருந்தது. குடும்பத்தில் எனக்கான அங்கீகாரத்தை தேடினேன். நிச்சயமாக IS கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பல வகையான நாடுகளில் இருந்து வந்த பெருமளவு இளைஞர்கள், ஐ.எஸ். இல் மதச் சார்பற்ற காரணங்களுக்காக சேர்ந்துள்ளனர். கடும் மதப்பற்று காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை.
என்ன காரணத்தால் அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்கள்?
IS இன் இயங்குதளம் என்னவென்று அப்போதே புரிந்து கொண்டேன். மேற்குலகு மீதான ஆத்திரம். இருப்பினும், மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக் கொண்டேன். தினசரி தொழுகைகளிலும், அனைத்து வகை சடங்குகளிலும் கலந்து கொண்டேன். நான் சிரியா போகும் விடயத்தை வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும், தங்கைக்கும் சொல்லவில்லை. மொரோக்கோவின் இன்னொரு நகரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறினேன்.
அப்போது எனக்கு 28 வயது. பிரயாண முகவர் எமக்கான விசா, மொபைல் தொலைபேசி, கொஞ்சப் பணம் எல்லாம் கொடுத்திருந்தார். துனிசியா வழியாக பிரயாணம் செய்தோம். துருக்கி- சிரியா எல்லையை அடையும் வரையில் எல்லாம் நல்ல படியாக நடந்தது. எல்லையை அடைந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அங்கு ஓர் ஐ.எஸ். போராளியும், கட்டார் எல்லைக் காவலரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கண்டேன். துருக்கி படையினரும் ஐ.எஸ். இயக்கத்துடன் நல்ல நட்புறவில் இருந்தனர். அந்த நேரத்தில் ஐ.எஸ். இற்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் ஐ.எஸ். உடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள்.
நான் ராக்கா நகருக்கு வந்து சேர்ந்தேன். ஒரு பெரிய வீட்டில் பிற மொரோக்கோ நாட்டுக்காரருடன் சேர்ந்து தங்கி இருந்தேன். வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்கு தொலைபேசி எடுத்துக் கதைத்தேன். இரண்டு மாதங்களுக்கு நான் இத்தாலியில் இருப்பதாக பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மையை சொல்லி விட்டேன். அதற்குக் காரணம், ஒரு துனிசிய போராளியின் தலையை வெட்டிய சம்பவத்தை கண்ட பின்னர் மனம் மாறி விட்டேன். IS கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலையை நிர்ணயித்த கடைக்காரர் ஒருவரின் கையை வெட்டுமாறு அந்தப் போராளிக்கு உத்தரவிட்டனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தலையை துண்டித்து விட்டார்கள். நான் சிரியாவில் நிற்கும் உண்மையை அம்மாவுக்கு சொன்ன பிறகு, அவர் கடும் நோய் வாய்ப்பட்டு விட்டார். அதற்காக இன்று வரையில் தங்கை என்னை மன்னிக்கவில்லை.
உங்களுக்கு அங்கே என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா? ராக்காவில் என்ன செய்தாய்?
இரண்டு மாதங்கள் முகாமில் தங்கியிருந்து இராணுவப் பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு கலாச்சாரக் கண்காணிப்புப் பொலிஸ் வேலையில் விட்டார்கள். அந்த வாழ்க்கை பரவாயில்லை. இரு மாதங்களுக்குப் பின்னர் எனக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்றில் தற்கொலைப் படையில் "விரும்பிச்" சேர்வது, அல்லது மரண தண்டனைக்கு உள்ளாவது. அதைக் கேள்விப்பட்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டேன். என்னிடம் இருந்த சம்பளப் பணத்தை வைத்து ஒரு மனிதக் கடத்தல்காரரை பிடித்தேன். அவர் என்னையும், வேறு சில சிரியாக்காரர்களையும் எல்லை கடந்து கூட்டிச் சென்றார். நான் 15 செப்டம்பர் 2015 தப்பியோடும் வரையில், அங்கிருந்த 1.500 மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த போராளிகளில் 250 பேர் போரில் கொல்லப் பட்டு விட்டனர். முப்பது பேர் தற்கொலைப் படையில் சென்று செத்துள்ளனர்.
நான் அல்ஜீரியா ஊடாக மொரோக்கோ வந்து சேர்ந்த நேரம் பொலிஸ் கைது செய்தது. பதினான்கு மாதங்கள் சிறையில் இருந்தேன். கொலைக்குற்றம் செய்திருந்தால் நீண்ட காலம் சிறைத்தண்டனை விதித்திருப்பார்கள். நான் அங்கு யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால், சவுக்கால் அடித்திருக்கிறேன்.
சிரியாவுக்கு போவதற்கும் பணம் தான் காரணம் என்றால், எவ்வளவு சம்பாதித்திருப்பாய்?
ராக்காவில் ஒரு ஐ.எஸ். போராளிக்கு 2.500 யூரோக்கள் சம்பளம் கொடுத்தார்கள். திருமணம் முடித்திருந்தால் மேலதிக கொடுப்பனவு உண்டு. அந்த சம்பளத்தை மொரோக்கோவில் எந்தக் காலத்திலும் சம்பாதிக்க முடியாது.
இளைஞர்கள் இஸ்லாமிய தேசம் என்று சொல்லப்படும் அமைப்பில் இணைவதற்கு பணம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. உன்னை உந்தித் தள்ளியது எது?
IS ஒரு மூடப்பட்ட மதக் குழு (sect) போன்று இயங்கியது. ஆரம்பத்தில் அதனை ஆயுதமேந்திப் போராடும் விடுதலை இயக்கம் என்று காட்டினார்கள். ஆனால், உண்மையில் அது ஒழுங்கமைக்கப் பட்ட கொடூரமான பயங்கரவாத இயக்கம் என்பது பின்னர் தெளிவாகத் தெரிந்தது.
சிரியாவில் உள்ள IS இயக்கப் போராளிகள், ஆதரவாளர்களின் கோபாவேசமும், வன்முறையும் வரலாற்றில் இருந்து பிறக்கின்றது. ஒரு பயங்கரவாதக் குழு, ஒரு சில தேர்ந்தெடுத்த குரான் வசனங்களை பிழையாக பாவிப்பதன் காரணமாக பலர் அதில் சேர்வதாக நினைப்பது தவறு. மத்திய கிழக்கில் மேற்குலகின் தலையீடு தான் பலர் IS சார்பு நிலை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
வரலாற்றை இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாக பார்க்கப் பட வேண்டும். அதன் மூலம் IS பல்லாயிரம் இளைஞர்களின் மனங்களை கவர்கிறது. ஏற்கனவே சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை தேர்ந்தெடுத்து அதை ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அவலமாக சித்தரிக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட "நாங்கள், அவர்கள்" எனும் பிரச்சாரம். அதாவது, தீவிரமான அடையாள அரசியல். ஆனால், அடிப்படையில் வரலாறு ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. உதாரணத்திற்கு, பிரான்சும், ஸ்பெயினும் மொரோக்கோவில் செய்த அட்டூழியங்களை எடுத்துப் பாருங்கள்.
ஸ்பானிஷ் சர்வாதிகாரி Primo de Rivera, பிரெஞ்சு ஜெனரல் Hubert Lyautey ஆகியோரின் பொறுப்பில் நடந்த இரசாயன தாக்குதல்கள் பற்றிய விபரங்களும் சரித்திர பாடநூல்களில் எழுதப் பட வேண்டும் அல்லவா?
உலகில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற வரலாற்றுக் கதைகள் IS இயக்கத்திற்கு மிக முக்கியமானது. ஒரு குழுவாக சேர்ந்து இயங்கும் மனப்பான்மை, இதனுடன் ஐ.எஸ்.க்கு எதிராக போரிடும் அரசுகள், இராணுவங்களின் நடவடிக்கைகளும் மிகுதிக் காரணங்கள். அதாவது, ஒடுக்கப்பட்டோர் என்ற உணர்வு தான் எதிரிக்கு எதிராக போரிடுவதற்கு முக்கியமான தேவை. IS பார்வையில் மேற்கத்திய நாட்டவருக்கும், அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. ஒன்றில் நீ எங்களுடன் இருக்கிறாய், அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறாய். ஐ.எஸ். உடன் சேர்ந்து போரிடாதவர்கள் துரோகிகளாக கருதப் படுகின்றனர்.
இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பவரிடம் யுத்தத்தில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களின் அவலங்களைக் காட்டும் வீடியோக்கள் இருக்கும். பொஸ்னியாவில் இரத்தக் காயங்களுடன் கிடக்கும் உடல்கள், ஈராக்கில் வன்புணர்ச்சிகுள்ளான சிறுவர்கள், அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப் பட்ட ஆண்கள், காசா மீதான குண்டுவீச்சுகள்... இவை என்னிலும் மன உளைச்சலை உண்டாக்கின. முஸ்லிம்கள் மீதான கொலை, சித்திரவதை, அழிவைக் காட்டும் படங்கள் எனது கண்களில் நிறைந்திருந்தன. அது என்னை ஆத்திரப்பட வைத்தது.
அது ஓர் உளவியல் சித்திரவதையாக இருந்தது. அத்துடன் உணர்வை தட்டி எழுப்பும் வகையில்; "அவர்கள் எங்களுக்கு என்ன கொடுமைகள் செய்கிறார்கள் என்று பார்த்தாயா? அதற்கு எதிராக நீ என்ன செய்யப் போகிறாய்? சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்கள். அத்துடன் சொந்த நாட்டில் நிலவும் பின்தங்கிய சமூக- பொருளாதாரம் காரணமாக எதிர்காலம் சூனியமாக இருந்த நிலைமை, நல்ல குடும்பத்தில் வளர்ந்து, உயர்கல்வி கற்றிருந்த என்னையும் ஐ.எஸ். இல் சேர உந்தித் தள்ளியது. IS என்பது ஒரு பனிமலையின் வெளித்தெரியும் சிகரம் மட்டும் தான்.
மேற்குலகமும் மொரோக்கோ அரசும் ஐ.எஸ். இற்கு எதிரான போரில் சரியான பாதையில் செல்கின்றனவா?
குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. சில இளைஞர்களுக்கு மதத்தில் எந்த ஆர்வமும் கிடையாது. ஆனால், சமூகத்தில் தமக்கு ஓர் அந்தஸ்தை தேடுகிறார்கள். அவ்வளவு தான். அதை விட, தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மொரோக்கோ அரசு சரியான பாதையில் செல்வதாக நான் நினைக்கிறேன்.
இப்போது என்ன செய்கிறாய்?
முன்னாள் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக இமாம், சமூகவியலாளர், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட்டு வருகிறோம். நாங்கள் மாதத்திற்கு ஒரு தடவை இரகசியமான இடத்தில் சந்திப்பதுடன், பெற்றோருக்கும், இளைஞர்களுக்குமான வேலைத் திட்டங்களையும் ஒழுங்கு படுத்துகிறோம். "இஸ்லாத்திற்கு ஆதரவு, ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு" எனும் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். இளைஞர்களை சுயமாக சிந்திக்க வைக்கிறோம். சொர்க்கத்தில் எழுபது கன்னிகளின் கதை சாத்தியமானதா என்று யோசித்து அறிந்தால் அதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்?
ஆனால், சிரியா, ஈராக்கில் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், IS போன்ற இயக்கங்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் ஆட்சி அதிகாரம் நீண்ட காலம் நிலைக்காது என்பதை உணர வேண்டும். ஒரு புதியதொரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்டு வரப் பட வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மறுசீரமைக்கப் பட வேண்டும்.
(டச்சு மொழியில் உள்ள பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Ex-jihadi getuigt: "Veel jongeren hebben niet-religieuze motieven om zich bij IS aan te sluiten")
No comments:
Post a Comment