ஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு. அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.
இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.
அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.
அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.
இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது.
ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது.
அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன. ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.
இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள்.
அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், "இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது" என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும்.
புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது. மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம்.
சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம்,மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.
அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது.
இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.
1929 ம் ஆண்டு சோவியத் அரசுக்கும் அமெரிக்க Ford நிறுவனத்திற்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் போடப் பட்டது. இதன் விளைவாக, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) நகரில் ஒரு பிரமாண்டமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டப் பட்டது. இதற்காக பல நூற்றுக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் சோவியத் யூனியனில் தங்கி இருந்து வேலை செய்தனர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.
ஒப்பந்தப் படி, சோவியத் அரசு முதலாவது வருடம் குறிப்பிட்டளவு போர்ட் கார்களை வாங்குவதாக தீர்மானிக்கப் பட்டது. இரண்டாவது வருடம் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப் பட்ட வாகன உதிரிப் பாகங்கள் சோவியத் யூனியனில் பொருத்தப் படும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவதும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.
ஒப்பந்தப் படி, பத்தாண்டுகளுக்குள் போர்ட் நிறுவனம் தனது பேட்டன்ட் உரிமையையும், தொழில்நுட்ப அறிவையும் சோவியத் அரசிடம் கொடுத்து விட வேண்டும். திட்டமிட்ட படி பத்தாண்டுகளுக்குள் தொழிற்சாலை முழுவதும் சோவியத் வசமாகியது. அன்று அமெரிக்கர்கள் கட்டிய கார் தொழிற்சாலை GAZ என்ற பெயரில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.
ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.
இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.
(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff's uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.)