பதினைந்தாம் நூற்றாண்டில் "சீன நாட்டு கொலம்பஸ்" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இன்றுள்ளதை போன்று அந்தக் காலத்திலும் சீனாவில் இருந்து அரேபியா வரையில், இந்து சமுத்திரம் ஊடாக வணிகப் போக்குவரத்து கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அவை இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்று பொருட்களை வேறு கப்பல்களுக்கு மாற்றுவதுண்டு.
சீன அட்மிரல் செங்க்ஹோவின் பிரதான நோக்கமும் சர்வதேச வர்த்தகம் தான். ஒரு தடவை இலங்கைக்கு வந்த செங்க்ஹோ சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசித்து விட்டு வந்தார். அதை நினைவுகூர்வதற்காக காலியில் (?) ஒரு கல்வெட்டு செதுக்கி வைத்திருந்தார். அதில் சீனம், அரபி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப் பட்டிருந்தன. சீன மொழி செங்க்ஹோவின் தாய்மொழி. இலங்கையில் இருந்து அரபிக் கடலுக்கு பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அரபு வணிகர்கள். அதனால் அரபு மொழி. மூன்றாவதாக இலங்கையின் உள்நாட்டு மொழியாக தமிழில் எழுத வேண்டிய காரணம் என்ன?
அந்தப் பிரதேசம் கோட்டே ராஜ்ஜியத்திற்கு உட்பட்டது. அங்கு சிங்களம் பேசப் பட்டது. அது சீனர்களுக்கும் தெரியும். ஒரு தடவை கோட்டே மன்னன் வர்த்தகத்திற்கு இடையூறு செய்த காரணத்தால், பெரும் படையுடன் திரும்பி வந்த சீனர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி முப்பதாண்டுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனாவுக்கு கொண்டு சென்று விட்டனர். இந்தப் போர் பற்றிய சீன வரலாற்றுத் தகவல்களில் "சிங்கள மன்னன் அழகேஸ்வரன்"(ஒரு தமிழன்?) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். திரும்பவும் கேள்விக்கு வருவோம். கல்வெட்டில் சிங்களத்தை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அதற்குக் காரணம் அன்றைய சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தினார்கள். (அப்போது அதை தமிழ் என்று சொல்லாமல் மலபார் என்ற பெயரில் அழைத்தனர்.) செங்க்ஹோ ஒரு சீன முஸ்லிம். இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில், இலங்கை முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. அதனால் இலகுவாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.
ஐநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஐரோப்பிய காலனியாதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்து வருகின்றது. அவர்கள் அரேபியருடன் வணிகத் தொடர்புகளை வைத்திருந்த போதிலும் எந்தக் காலத்திலும் அரபி மொழிக்கு மாற விரும்பி இருக்கவில்லை. அதற்கான எந்த நிர்ப்பந்தமும் இருக்கவில்லை.
அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். அரேபியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னரே இலங்கையுடன் வணிகம் செய்து வந்தனர். அப்போதும் சர்வதேச வணிக மொழியாக தமிழ் இருந்து வந்துள்ளது. இலங்கையில் இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலமாகவே பரப்பப் பட்டது. மாலைதீவிலும் அப்படித் தான்.
இஸ்லாமியராக மதம் மாறியவர்கள் தமது மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை. அதனால் தான் இந்தியா, இலங்கை, மாலைதீவுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் தமது பூர்வீக மொழிகளை பேசி வருகின்றனர். புள்ளிவிபரக் கணக்கெடுப்பை எடுத்துப் பார்த்தால் கூட, உலகில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள், அரபி அல்லாத பிற மொழிகளைப் பேசுகின்றனர்.
இன்று சவூதி வஹாபிச வழிகாட்டலில் இயங்கும் சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அரபியை இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியாக கொண்டு வரும் கொள்கையை கொண்டிருக்கின்றனர். இது ஒரு நவீன காலத்து மதவாத அரசியல்.
இந்தியாவில் இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வர விரும்புகிறது. (இது அந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளது.) அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும்.
உண்மையில் இது நவீன காலத்து இஸ்ரேலை பார்த்து உருவான அரசியல் கோட்பாடு. காலங்காலமாக ஹீபுரு பேசத் தெரியாமல் இருந்த யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் தான் ஹீபுரு படித்தார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழும் முதலாம் தலைமுறை யூதர்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். ஏன் அரபியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்களும் உள்ளனர். அது மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு செல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் யூதர்களுக்கு இன்றைக்கும் ஹீபுரு தெரியாது.
இது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவின் கொள்கை மட்டுமே. இதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருத்திப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் முஸ்லிம்களின் தாய்மொழியாக அரபி மொழியை கொண்டு வந்தால், அதற்கான முதல் எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் கிளம்பும். இலகுவாக தாய்மொழியான தமிழில் படிக்கும் வசதி இருக்கையில், யாரும் கஷ்டப்பட்டு அந்நிய மொழியான அரபியில் படிக்க விரும்ப மாட்டார்கள். அதை ஒரு பலவந்தமான திணிப்பாகவே உணர்வார்கள்.
இலங்கையை ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலமாக காலனியாக வைத்திருந்தாலும், இலங்கையர் அனைவரும் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசவில்லை. ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால், குறைந்த பட்சம் கிறிஸ்தவரின் தாய்மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவர முடியவில்லை. இன்றைக்கும் அவர்கள் சிங்களம் அல்லது தமிழ் தான் பேசுகிறார்கள். இந்த நிலைமை தான் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படும் அரபி மொழிக்கும் ஏற்படும். ஆகவே நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பதே நல்லது.
//இது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவின் கொள்கை மட்டுமே. இதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருத்திப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் முஸ்லிம்களின் தாய்மொழியாக அரபி மொழியை கொண்டு வந்தால், அதற்கான முதல் எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் கிளம்பும். இலகுவாக தாய்மொழியான தமிழில் படிக்கும் வசதி இருக்கையில், யாரும் கஷ்டப்பட்டு அந்நிய மொழியான அரபியில் படிக்க விரும்ப மாட்டார்கள். அதை ஒரு பலவந்தமான திணிப்பாகவே உணர்வார்கள். //
ReplyDeleteதோழர், வஹாபிஸதால் பல ஆண்டுகளாக மூளை சலவை செய்யப்பட்ட இன்றைய இலங்கை முஸ்லிம்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அரபியை தாய்மொழியாக கொண்டு வரும் பட்சத்தில் 95% மேற்பட்ட முஸ்லிம்கள் அதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும், சவாலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?
கிட்டத்தட்ட எல்லா இலங்கை முஸ்லிம்களுக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று, பிழைப்புவாதத்திக்காக வெளியில் காட்டும் முகம், இதை தான் எல்லோருக்கும் தெரியும். இது நமது மக்கள் "இப்போவெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்" என்று நடிப்பதோடு ஒப்பிடலாம். அத்தோடு, இப்போது பவுத்தர்களுடன் சேர்ந்து வெசாக் கொண்டாடினார்களே, அதையும் இதில் சேர்த்து கொள்ளலாம். (புத்தருக்கு இவர்கள் சமூகத்தில் சைத்தான் என்று பெயர்) இரண்டாவது முகம், அவர்கள் சமூகத்துக்குள் மட்டுமே இருக்கும் அவர்களின் உண்மை முகம், இதை அவ்வளவு எளிதில் யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. அவர்கள் சமூகத்திற்குள்ளேயே பல ஆண்டுகள் வாழும் ஒருவரால் மாத்திரமே இதை கணிக்க முடியும். நான், ஒரு முஸ்லீம் ஊரில் பிறந்து வளர்ந்த, முஸ்லீம் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்ற பெண். இவர்களின் எல்லா முகமும் எனக்கு அத்துப்படி. நீங்கள் இங்கே குறிப்பிடும் அந்த முஸ்லிம்கள் இலங்கையிலிருந்து காணாமல் போய் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது! ஆகையால் உங்கள் ஆராய்ச்சியை புதிய கோணத்தில் தொடங்குங்கள்.