Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns 
 

No comments:

Post a Comment