Wednesday, April 04, 2018

கட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன?

இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இது பற்றி ஏற்கனவே ஒரு பக்கச்சார்பான ஹாலிவூட் திரைப்படமும் வெளியாகி உள்ளது.

வழமையாக, ஸ்டாலினின் படுகொலைக் கணக்கில் வரவு வைக்கப் படும் கதைகளில் இதுவும் ஒன்று. தமிழர்களிலும் சிலர், குறிப்பாக, நவ- நாஸிகள், தமது மேற்கத்திய எஜமானர்களின் பணிப்புரைக்கு ஏற்றவாறு திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆகவே, கட்டினில் (Katyn: சரியான போலிஷ் மொழி உச்சரிப்பு "கட்டின்", கேய்டின் அல்ல.) நடந்தது என்ன என்பதை, தமிழ் பேசும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. அதற்காக, வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.

1939 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி அயல்நாடான போலந்தின் மீது படையெடுத்தது. அதற்கு முன்னர், செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மனியின் வசமாகி இருந்தது. அப்போது மேற்கைரோப்பிய வல்லரசு நாடுகளான பிரித்தானியாவும், பிரான்ஸும் செக்கோஸ்லாவாக்கியா மீதான படையெடுப்பை கண்டுகொள்ளவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி எடுவார்ட் டலாடியே ஆகியோர் ஏற்கனவே ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டிருந்த படியால் ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் பசிக்கு மௌனமான அங்கீகாரம் வழங்கி இருந்தனர்.

ஆனால், போலந்து மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. போலந்து அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையில் இராணுவ ஒப்பந்தம் போடப் பட்டிருந்தது. அதன் அர்த்தம் போலந்து தாக்கப் பட்டால் பிரான்ஸ் உதவிக்கு வர வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நாஸி இராணுவம் போலந்து மீது படையெடுத்த நேரம், பிரான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஆகவே, பிரான்ஸ், பிரித்தானியாவின் துரோகத்தை மூடி மறைக்கும் நோக்கில், இன்று மீண்டும் கட்டின் படுகொலை விவகாரம் பரப்புரை செய்யப் படுவதாக எண்ண இடமுண்டு.

இதிலே இன்னொரு துரோகமும் இடம்பெற்றிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் பகுதியாகவிருந்த டான்சிக் (தற்போது: Gdansk,கிடான்ஸ்க்)போலந்தின் பெயரில் ஐ.நா. சபையால் நிர்வகிக்கப் பட்டது. (அப்போது அதற்கு வேறு பெயர். இலகுவான புரிதலுக்காக "ஐ.நா." என்ற சொற்பதம் பயன்படுத்தி உள்ளேன்.) பால்டிக் கடல் துறைமுக நகரமான டான்சிக்/கிடான்ஸ்க் தனியான பிரதேசமாக சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஹிட்லரின் படைகள் தாக்குதல் நடத்தி, அந்த நகரத்தை கைப்பற்றும் வரையில் ஐ.நா. பேசாமல் இருந்தது.

முதலாம் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப் படுவதையும், மேற்கத்திய வல்லரசுகள் பாராமுகமாக இருப்பதையும், சோவியத் யூனியன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அத்துடன் பிரித்தானியாவும், பிரான்ஸும் நாஸி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர், எஞ்சியுள்ள ஒரேயொரு எதிரி சோவியத் யூனியன் மட்டும் தான். போலந்து மீது படையெடுத்த ஜெர்மன் படைகள், அடுத்ததாக சோவியத் யூனியனுக்கும் வராதென்பதற்கு என்ன நிச்சயம்?

அன்றைய சூழ்நிலையில், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்வது தவிர்க்க முடியாதது. அத்துடன் ஜெர்மனியின் எதிர்கால படையெடுப்பை தடுப்பதற்காக, போலந்தை ஒரு பாதுகாப்பு அரணாக மாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. உலக வரலாற்றில் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 19 ம் நூற்றாண்டில், சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவும், பிரித்தானியாவும் ஆப்கானிஸ்தானை எல்லையாக பயன்படுத்திக் கொள்ள இணக்கம் கண்டன.

அந்த வகையில், முந்திய ஜார் மன்னனின் சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த, முதலாம் உலகப்போர் முடிவில் பறிகொடுத்த போலந்துப் பிரதேசத்தின் மீது படையெடுத்த சோவியத் யூனியன் அதை இணைத்துக் கொண்டது. அன்றிருந்த போலந்தின் ஆட்சியாளர்கள் தீவிர தேசியவாதிகள். கத்தோலிக்க மதவாதிகள். அந்நாட்டு தேசிய இராணுவமும் போலிஷ் இனவெறியூட்டப் பட்டிருந்தது. ஆகையினால், சோவியத் படைகள் கைப்பற்றிய போலந்துப் பிரதேசத்தில் இருந்த போலிஷ் இராணுவத்தினர் ஒருவர் விடாமல் கைது செய்யப் பட்டனர். ஆயிரக் கணக்கான போலிஷ் இராணுவ அதிகாரிகள், போர்வீரர்கள் பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப் பட்டனர்.

அந்தப் பிரதேசம் மிகக் குறுகிய காலமே சோவியத் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு வருடத்திற்குள் நாஸி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது போர்ப் பிரகடனம் செய்தது. திடீரென நடந்த அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத சோவியத் செம்படை பின்வாங்கிக் கொண்டிருக்க, அந்த இடங்களை ஜெர்மன் நாஸிப் படை கைப்பற்றியது. பிளிட்ஸ் கிரீக் (Blitz krieg) எனப்படும் மின்னலடிப் போரில் ஜெர்மன் படைகள் போலந்தையும் தாண்டி சோவியத் யூனியனுக்குள் பிரவேசித்திருந்தன.

நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சோவியத் செம்படையினர், தாம் ஏற்கனவே பிடித்து அடைத்து வைத்திருந்த போலிஷ் இராணுவ வீரர்களை விடுதலை செய்தனர். அவர்களை தம்முடன் சேர்ந்து போராட வருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக போலிஷ் துணைப் படை ஒன்றும் அமைக்கப் பட்டது.

இதற்கிடையில், லண்டனில் இருந்த "நாடு கடந்த போலிஷ் அரசு" மாறிவரும் போர்ச் சூழல் கருதி சோவியத் யூனியனை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. அப்படியானதொரு நிலைமையில், சோவியத் செம்படையினர் தம்மிடமிருந்த இருபதாயிரம் போலிஷ் இராணுவவீரர்களை கட்டின் காட்டுக்குள் கொண்டு சென்று ஆறுதலாக சுட்டுக் கொன்றனர் என்றால் நம்ப முடிகின்றதா? அதுவும் இதற்காக இரண்டு நாட்கள் ரயிலில் கொண்டு சென்று, ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குள் சுட்டுக் கொன்று புதைத்தனர் என்கிறார்கள்.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. 13-4-1943 அன்று, நாஸி ஜெர்மனி சர்வதேச ஊடகங்களை அழைத்து பின்வரும் தகவலை தெரிவித்தது. தமது படையினர் கைப்பற்றிய கட்டின் காட்டுப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு புதைக்கப் பட்டவர்கள் போலிஷ் வீரர்கள் என்றும் அறிவித்தனர். அதற்கு ஆதாரமாக போலிஷ் இராணுவ சீருடைகளையும் காட்டினார்கள். அன்று, "ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப் பட்ட போர்க்குற்றம்" என்று நாஸி ஜெர்மனி வழங்கிய தகவலைத் தான் இன்று வரையில் பலர் காவித் திரிகின்றனர்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில், நாஸிகள் தெரிவித்த "கட்டின் மனிதப் புதைகுழிகள்" என்ற அறிவிப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. அதாவது, சர்வதேச ஊடகங்கள் இதை பரபரப்பு செய்தியாக்கியதன் மூலம், நாஸிகள் எதிர்பார்த்த பிரச்சார வெற்றி கிடைத்தது. அதிலும், தீய வழியில் புகழ்பெற்ற நாஸி ஜெர்மனியின் அமைச்சர் கெபெல்ஸ் (சிலர் அதை கோயபல்ஸ் என்று தமிழில் உச்சரிக்கிறார்கள்.) பொய் சொல்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர்.

நாஸிகளின் அழைப்பை ஏற்று கட்டின் மனிதப் புதைகுழிகளுக்கு சென்று ஆராய்ந்த மேற்கத்திய தடயவியல் அறிஞர்கள், அந்தக் குற்றத்தை இழைத்தவர்கள் ரஷ்யர்களா அல்லது ஜெர்மனியர்களா என்பதை தம்மால் உறுதிப் படுத்த முடியாதுள்ளது என்றனர். மேலும், அது சமீபத்தில் தோண்டப்பட்ட புதைகுழிகளாக காணப் பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் அர்த்தம், நாஸிப் படைகளே போலிஷ் இராணுவ வீரர்களை கொன்று புதைத்து விட்டு சோவியத் யூனியன் மீது பழி போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. அதற்கான காரணங்களும் வெள்ளிடை மலையாக தெரிகின்றன.

ஹிட்லரின் இனவாதக் கோட்பாட்டின் படி, போலிஷ் இனத்தவர்கள் "உன்ட்டர் மென்ஷன்"(Untermenschen- தாழ்ந்த மக்கள்) என இழிவாகக் கருதப் பட்டனர். போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் இனவெறிப் படையினர் கண்ணில் கண்ட போலிஷ் காரர்களை வகை தொகையின்றி கொன்று குவித்தனர். அதற்காக அவர்கள் வருந்தவில்லை. மேலும் போலந்தை ஜெர்மனியர்களின் காலனி ஆக்குவதும் ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. அதை "லேபென்ஸ் ரவும்"(Lebensraum- வாழிடம்) என்று நாஸிகள் நியாயப் படுத்தினார்கள்.

வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த  செவ்விந்திய மக்களை வகைதொகையின்றி படுகொலை செய்த இடங்களில், குடியேறிய ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி, போலந்தில் வாழும் போலிஷ் மக்களை படுகொலை செய்து ஒழித்துக் கட்டி விட்டு, அந்தப் பிரதேசங்களை ஜெர்மனியுடன் இணைப்பதே ஹிட்லரின் குறிக்கோளாக இருந்தது. கட்டின் படுகொலைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலி மனிதாபிமானவாதிகள், நாஸிகளால் கொல்லப் பட்ட கோடிக்கணக்கான போலிஷ் மக்களை கண்டுகொள்ளாத மர்மம் என்ன? அதைச் சொல்வதால் தமக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதாலா?

பனிப்போர் காலம் முழுவதும் கட்டின் படுகொலைகளுக்கு காரணம் நாஸி ஜெர்மன் படைகள் என்றே வெளியுலகில் நம்பப் பட்டது. பலர் அதை யார் செய்தது என்று நிரூபிக்க முடியாது என்ற நிலையெடுத்தனர். தொண்ணூறுகளுக்கு பிறகு தான் கட்டின் படுகொலை விவகாரம் மறுபடியும் சூடு பிடித்தது. போலந்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய போலிஷ் தேசியவாத சக்திகள், ரஷ்யாவை பகை நாடாக காட்டத் தொடங்கின. இந்திய-பாகிஸ்தான் பகைமை மாதிரி, போலந்து - ரஷ்யாவுக்கிடையிலான பகைமைக்கும் நீண்ட வரலாறுண்டு. அந்த வகையில், போலிஷ் மக்கள் மனதில் இன வெறுப்பை உண்டாக்கும் நோக்கில், ஒவ்வொரு வருடமும் கட்டின் படுகொலை நினைவுகூரப்படுகின்றது.

3 comments:

  1. பல புதிய நான் அறிந்திராத தகவல்கள் .. Paul Joseph Goebbels இவரின் பெயரை பலரும் கோயபெல்ஸ் என்றே உச்சரிக்கிறோம் Wikipedia இலும் அப்படித்தான் உள்ளது.அதை விடுவோம் . அனால் கட்டுரை பல் விடயங்களி உள்ளடக்கி உள்ளது . நன்றி

    ReplyDelete
  2. தோழர். இந்த கட்டுரையில் குறிப்பாக நீங்கள் இன்னொன்றையும் அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்று கருதுகிறேன். என்னவென்றால் போலந்தின் மீதான படையெடுப்பை ஆக்கிரமிப்பு என்று யாரும் சொல்லிவிடமுடியாது. அன்றிருந்த போலந்து அரசாங்கம் கூட அன்று அப்படி சொல்ல முடியவில்லை. காரணம் நாஜி ஆக்கிரமிப்பு ஆரம்பித்தவுடன் தாக்கு பிடிக்க முடியாத போலந்து அரசு அகதி அரசாக போலந்திலிருந்து வெளியேறிய பிறகுதான் செம்படை போலந்திற்குள் நுழைந்தது. ஆதலால் போலந்தை ஆக்கிரமித்தனர் என்று சொல்லமுடியாது. காரணம்: அந்நாட்டின் அரசாங்கமே அங்கு இல்லை. எனவே இது ஒரு பாதுகாப்பு யுக்தி என்று அன்றைய பல முதலாளித்துவ நாட்டின் தலைவர்கள் கூட வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    ஆதாரம் : ஸ்டாலின் சகாப்தம் நூலில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கவனத்தில் எடுக்கிறேன், தோழர்.

      Delete