Wednesday, April 11, 2018

பொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை

அரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். 

இது நாங்கள் எந்தளவுக்கு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மலட்டு சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது. மார்க்சியம் அடைய விரும்பும் இலக்கான கம்யூனிச சமுதாயம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், பண்டைய அரசியல் அமைப்பை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமானது.

எமக்கு தெரிந்த ஆங்கிலச் சொல்லான "Politics" என்பது உண்மையில் ஒரு கிரேக்கச் சொல். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தில் நாகரீகமடைந்த சமுதாயமான கிரேக்கர்களின் நாடுகள் "Polis" என்று அழைக்கப் பட்டன. போலிஸ் என்றால், தமிழில் ஊர் அல்லது நகரம் என்று அர்த்தம் வரும்.

ஒரு கோயில் அதை சுற்றிய குடியிருப்புகள், அதை சுற்றிய வயல்கள், எல்லையோர காடுகள், மலைகள் என்பனவற்றை உள்ளடக்கியது தான் கிரேக்கர்களின் போலிஸ். ஒரு நகரமயமாக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவுகளை எடுக்கும் செயலுக்குப் பெயர் பொலிட்டிக்ஸ். அதாவது அரசியல் என்ற சொல்லை, நாம் "நகரியல்" என்று இன்னொரு பெயரில் அழைக்கலாம்.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டுஸ்தலத்தை, தமிழில் "தேவாலயம்" என்று மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது ஆங்கிலத்தில் "Church" என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ஆங்கில சொல்லான சர்ச், ஜெர்மன் சொல்லான Kirche என்பதில் இருந்து வந்தது. அதன் மூலம் "Kuriake" என்ற கிரேக்க சொல். அதன் அர்த்தம் ஆண்டவரின் இருப்பிடம். (தமிழில்: ஆலயம் அல்லது கோயில்) ஆனால், ஆதி கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை! அவர்கள் "Ekklesia" என்ற சொல்லை பாவித்தார்கள். இன்றைக்கும் கிரேக்க கிறிஸ்தவர்கள் அந்தச் சொல்லை பாவிக்கிறார்கள்.

எக்லேசியா என்றால் சபை என்று அர்த்தம் வரும். அதாவது முன்னர் குறிப்பிட்ட போலிஸ் சமூக உறுப்பினர்கள், பொலிட்டிக்ஸ் செய்யுமிடத்தின் பெயர் தான் எக்லேசியா. "பொது மக்கள் கூடுமிடம்" என்ற ஜனநாயகத் தன்மை வாய்ந்த சொல், ஆண்டவனின் சந்நிதானமாகி, இன்று அரசு என்ற கட்டமைப்பாகி உள்ளது.

அரசு என்ற ஸ்தாபனத்திடம் இருந்து அரசியலை மீட்டெடுப்பதே, இன்றுள்ள மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் மேட்டுக்குடி அரசியலை, மக்கள் அரசியலாக்க வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் எந்த அர்த்தத்தில் அரசியலை பயன்படுத்தி வந்தார்கள் என்பதை இன்றுள்ள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிச நாடு ஒன்றை உருவாக்குவதற்கான கோட்பாடு, கார்ல் மார்க்ஸ், லெனினிடம் இருந்து தொடங்கியதாக, இன்றைக்கும் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, 1516 ம் ஆண்டு, Sir Thomas More என்ற ஆங்கிலேயர், "Utopia" என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த நூல், நவீன கம்யூனிச சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல மனிதநேயவாதிகள் அந்த நூலில் வர்ணிக்கப் பட்டதைப் போன்ற நாடொன்றை உருவாக்க வேண்டுமென கனவு கண்டனர்.

கிரேக்க மொழியில் "இல்லாத ஓர் இடம்" என்ற அர்த்தம் வரும் உத்தொபியா என்ற கனவு தேசமான ஒரு தீவு, எல்லோருக்கும் நீதி, சமத்துவம், செல்வச் செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருக்கும். அனைவருக்கும் தேவையான அளவு உணவு, உறையுள் கிடைக்கும். எவருக்கும் தனிப்பட்ட சலுகையோ, அல்லது அந்தஸ்தோ வழங்கப் பட மாட்டாது.

தனி உடைமை இருக்காது. ஆண்களும், பெண்களும் சமமாக வேலை செய்வார்கள். ஏதாவது தொழிலில் பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களை சேர்த்து வைக்க வேண்டிய அவசியமிராது. ஒவ்வொருவரும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு சுதந்திரம் இருக்கும். மக்கள் சமாதானமாக வாழ்வார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென உத்தரவிடுவதற்கு யாரும் கிடையாது.

தாமஸ் மூர் வாழ்ந்த காலத்தில், இவ்வாறான சிந்தனை வெறும் கனவு மட்டுமே. அத்தோடு, அவர் ஒரு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர் என்பதால், சில கிறிஸ்தவ நற்பண்புகளையும் குறிப்பிட்டிருந்தார். 19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்கள் சிலர், உத்தொப்பியா போன்றொதொரு நீதியான, சமத்துவமான சமுதாயத்தை, நிஜ உலகில் உருவாக்கும் சாத்தியம் பற்றி சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் அந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 


கம்யூனிசம் என்பது "கார்ல் மார்க்ஸ், லெனினுக்கு பிறகு உருவான கொள்கை" என்று சில "படித்தவர்கள்" கூட தவறாக நினைக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த பாராளுமன்றப் புரட்சிக் காலத்திலேயே பொதுவுடைமை சிந்தனை, ஒரு அரசியல் இயக்கமாக பரிணமித்திருந்தது.

இங்கிலாந்து மன்னராட்சிக்கு எதிராக, குரொம்வெல் தலைமையில் பாராளுமன்றம் புரட்சி செய்தது. அது இங்கிலாந்து குடியரசாவதற்கான பாராளுமன்றவாதிகளின் புரட்சி மட்டுமல்ல. கத்தோலிக்க மத மேலாதிக்கத்திற்கு எதிரான, புரட்டஸ்தாந்து அடிப்படைவாதிகளின் புரட்சியாகவும் இருந்தது.

அந்தப் புரட்சிகர காலகட்டத்தில், Diggers என்று அறியப்பட்ட அமைப்பினர், நிலங்களை பொதுவுடமையாக்கி, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர். அதனால் விவிலிய நூலில் உள்ள சமநீதிப் போதனைகளை மேற்கோள் காட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர்.

*******

//கேள்வி: கம்யூனிச முறையிலான சமுதாய அமைப்பு, குடும்பத்தின் மீது என்ன செல்வாக்குச் செலுத்தும்?

பதில்: ஆடவர், மகளிர் இருபாலினருக்கும் இடையிலான உறவு, அதிலே ஈடுபட்ட இரு நபர்கள் சம்பந்தப் பட்டதும், சமுதாயத்தின் தலையீடுக்கு அவசியமில்லாத, முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக ஆக்கும்.

அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம், அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. குழந்தைகளுக்கு சமுதாய முறையில் கல்வி போதிக்கிறது. தனியார் சொத்துடைமையால் நெறியாக்கம் செய்யப்பட்டு வந்த, மனைவி அவளது கணவனை சார்ந்திருப்பது, குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருப்பது எனும் அடிக்கல்களை தகர்த்தழிக்கிறது.

கம்யூனிசத்தின் கீழ் மனைவிகள் பொதுவாக்கிக் கொள்ளப் படுவதாக, ஒழுக்க நெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்பும் கூக்குரலுக்கு அளிக்கப்படும் பதிலாகும் இது. மனைவிகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் உறவு முற்றிலும் முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு உரியது. அது இன்றும் விபச்சாரம் என்ற வடிவில் நிலவி வருகின்றது.

விபச்சாரம் தனியார் சொத்துடமையுடன் சம்பந்தப்பட்டது. கம்யூனிச முறையிலான அமைப்பு, மகளிரை பொதுவாக்கிக் கொள்வதை நிலைநாட்டுவதற்கு மாறாக, அதற்கு முடிவு கட்டுகிறது.//

- பி. எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

1 comment:

  1. இடையிடயே உங்கள் பதிவுகள் வாசிப்பவர்கள், வாழ்த்துக்கள்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete