Wednesday, November 29, 2017

பணம் தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறுபடுத்துகிறது


(சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் ) 
(பகுதி - 4)

கம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப் பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் "புத்திசாலி" பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. "இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை" என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது "வேண்டப்படாதவர்கள்" என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். "வேண்டப்படாதவர்கள்" வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: "பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்." என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மொடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள். 

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளபாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

"இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?" 
மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார்: 
"தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது."

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் "எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கைரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்" என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கைரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கைரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். 


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: 

1 comment:

  1. கலைக்கு மீண்டும் நன்றி,சிறப்பான எளிமையான கட்டுரை.உங்களின் தொடர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete