வேலைநிறுத்தப் போராட்டங்கள் மூலமே தொழிலாளர்கள் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் வசிப்பதாலும், அந்நாட்டின் வரலாறு படித்திருப்பதாலும், அங்கு நடந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நெதர்லாந்து வரலாற்றில், முதன்முறையாக 1823 ம் ஆண்டு கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது, வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றன தடைசெய்யப்பட்டிருந்த காலகட்டம். அதனால் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு பகிரங்கமாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. சம்பளம் கிடைக்காதது மட்டுமல்லாது, வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. அத்துடன் வேறெந்த முதலாளியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.அரச உதவி எதுவும் கிடைக்காத காலத்தில், குடும்பம் முழுவதும் பட்டினி கிடந்தது வாட வேண்டிய கட்டாயம் இருந்தது.
வைரக் கல் பட்டை தீட்டும் தொழில் செய்த கைவினைஞர்கள் மத்தியில் வலுவான தொழிற்சங்கம் இருந்தது. தொழிலாளர் நலன்களுக்காக உருவான (மார்க்சிய) சமூக ஜனநாயகக் கட்சி (SDP), அதனை முன்மாதிரியாகக் கொண்டு தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் அமைத்தது. அதனால், ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் பொழுது, அவர்களுக்கான வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடிந்தது.
ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஆரம்ப காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தன. அதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியது. சகோதர உணர்வு ஏற்பட்டிருந்தது.
முதலாம் உலகப்போருக்கு முன்னர் பாட்டாளிவர்க்க சர்வதேசிய உணர்வு மிகவும் தீவிரமாக இருந்தது.அதனால், ஐரோப்பிய அரசுகள் தேசிய உணர்வை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அது பேரழிவு தந்த உலகப்போருக்கு இட்டுச் சென்றது.
1889 ம் ஆண்டு, லண்டன் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். போராட்ட முடிவில், துறைமுக முதலாளிகள் இறங்கி வந்து கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர். வேலைநேரத்தை குறைக்கவும், சம்பளத்தை கூட்டவும் சம்மதித்தனர். முதலாளிகள் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வாறு உருவானது?
லண்டன் துறைமுகத்தில் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம், இங்கிலாந்து முதலாளிகள் தமது கப்பல்களை, ரொட்டர்டாம் துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். லண்டன் வேலைநிறுத்தம் பற்றிக் கேள்விப்பட்ட ரொட்டர்டாம் தொழிலாளர்கள், பொருட்களை இறக்கி ஏற்ற மறுத்து விட்டனர்.
இந்த சர்வதேச ஒருமைப்பாடு அத்துடன் நின்று விடவில்லை. லண்டன் தொழிற்சங்கத் தலைவர்கள் ரொட்டர்டாம் துறைமுகத்திற்கு வந்தனர். எவ்வாறு போராட வேண்டும் என்று டச்சுத் தொழிலாளர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர்.
இந்தத் தடவை ரொட்டர்டாம் தொழிலாளரின் முறை. அவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். வேலை நேரத்தை குறைக்குமாறும், சம்பளத்தை கூட்டுமாறும் கோரிக்கை வைத்தனர். அரசு பொலிஸ் அனுப்பி வேலைநிறுத்தத்தை தடுக்கப் பார்த்தது. தொழிலாளர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து எதிர்த்து நின்றனர். அங்கு நடந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இறுதியில் துறைமுக முதலாளிகள் இறங்கி வந்தனர். தொழிலாளரின் கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மதித்தனர். இவ்வாறு கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் தான் ஐரோப்பிய தொழிலாளர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொண்டனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிலும் துருக்கிப் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த வரலாறு நெதர்லாந்தில் நடந்துள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வளர்ந்தது. உள்நாட்டு தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், துருக்கி, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து மலிவான ஒப்பந்தக் கூலிகளை இறக்குமதி செய்தனர்.
முதலாளிகள் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து, உழைப்பை சுரண்டி வந்தனர். தற்போது வளைகுடா அரபு நாடுகளில், தெற்காசியத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே மாதிரித் அன்றைய ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருந்தது.
அல்மேலோ நகரில் அமைந்திருந்த B.J.ten Dam என்ற தொழிற்சாலையின் உரிமையாளர் துருக்கிப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார். கோழி இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர்.
அந்தப் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு அறுபது மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். நெதர்லாந்தின் அடிபப்டை சம்பளத்தை விடக் குறைவாக கொடுக்கப் பட்டது. அத்துடன், விடுமுறை இல்லை. சுகயீன விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.
அவர்கள் FNV என்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர் தான் நிலைமை மாறியது. 1978 ம் ஆண்டு,
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக நியாயமான ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொண்டனர். போராடாமல் எதுவும் கிடைக்காது.
நெதர்லாந்தில் இதுவரை காலமும் நடந்த வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒருவர் ஆய்வு செய்துள்ளார். ஷாக் வன் டெர் வெல்டன் (Sjaak van der Velden) ஒரு முன்னாள் மரவேலைத் தொழிலாளி. தற்போது மதுபானசாலை நடத்துகிறார். அவரிடம் எடுக்கப் பட்ட தொலைக்காட்சி பேட்டியில் இருந்து:
கேள்வி: கடந்த 150 வருட காலங்களில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டங்களால் கிடைத்த பயன்கள் என்ன?
பதில்: ஏராளம் உள்ளன. வேலைநிறுத்தங்கள் நடந்திரா விட்டால், இன்றுள்ள வாழ்க்கை வசதிகளை நாங்கள் அனுபவித்திருக்க முடியாது.
நெதர்லாந்தில், கடந்த 150 வருடங்களில் 15000 வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 20ம் நூற்றாண்டில் நடந்துள்ளன.
4000 வேலைநிறுத்தங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை தந்துள்ளன. 3500 வேலைநிறுத்தங்கள் இறுதியில் முதலாளிகளுடன் சமரச ஒப்பந்தம் செய்ய வைத்தன.
வேலைநிறுத்தம் செய்வதால் நன்மை உண்டாகின்றது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. வேலையை இடை நிறுத்துவது அல்ல இங்கே முக்கியம். தொழிலாளர்கள் தமது சக்தியை உணர்ந்து கொள்வதும், சந்தர்ப்பம் வரும் போது பலத்தைக் காட்டுவதுமே முக்கியம்.
மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், பின்னருமான நிலைமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. போருக்கு முன்னர் வர்க்கப் போராட்டம் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதாக காட்டிக் கொண்டது. அதன் தலைவர்கள், முதலாம் உலகப்போர் காலத்திலேயே விலைக்கு வாங்கப் பட்டு விட்டனர். இருப்பினும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடுக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாது, முதலாளித்துவ அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த சம்பவங்களை ஓர் உதாரணமாக எடுத்துப் பார்க்கவும். இப்படித் தான் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.
1940 ம் ஆண்டு, நெதர்லாந்து நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டது. நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியை (CPN) தடை செய்தனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியை (SDAP) தம்முடன் சேர்ந்து வேலை செய்ய வருமாறு அழைத்தனர். தாங்கள் "இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல, தேசப் பற்றாளர்கள்..." என்று நாஸிகள் சொல்லிக் கொண்டனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியினர் சேர்ந்து வேலை செய்ய மறுத்து விட்டனர். அதனால் அந்தக் கட்சியும் தடை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே SDAP இயங்குவதை நிறுத்திக் கொண்டது.
நாஸிகள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வேலைநிறுத்தம் செய்தது. அதற்குப் பின்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.
நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம் அது தான். முதல் நாள் செய்வதறியாது திகைத்து நின்ற நாஸிகள், அடுத்தநாள் அடக்குமுறையை ஏவி விட்டனர். டச்சு தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப் பட்டு, ஆஸ்திரியாவில் இருந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர். குறைந்தது அரைவாசிப் பேராவது அங்கிருந்து மீளவில்லை.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், நெதர்லாந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுகளுக்கு பெருமளவு ஆதரவு இருந்தது. பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகள் கம்யூனிஸ்டுகளை உண்மையான நாட்டுப் பற்றாளர்களாக பார்த்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், அரச குடும்பமும், பிற கட்சிகளின் தலைவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது கையில் தான் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது!
முன்னாள் SDAP கட்சியினரும், கிறிஸ்தவ கட்சி ஒன்றும் சேர்ந்து, புதிய சமூக ஜனநாயகக் கட்சியான தொழிற்கட்சி (PvdA) உருவானது. அதன் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்தனர். அதற்குப் பதிலாக லிபரல் கட்சிகளுடன் கூட்டு வைத்தனர். இந்த "இடது - வலது கூட்டரசாங்கம்" இன்று வரை தொடர்கின்றது.
1955 - 1959 காலப் பகுதியில், சமூக ஜனநாயகவாதிகளின் நீண்ட கால சோஷலிசக் கோரிக்கைகள், "நலன்புரி அரசு" என்ற பெயரில் அமுல்படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, அனைவருக்கும் ஓய்வூதியம், மணமுறிவு பெற்ற தாய்மார், வேலையற்றோர், நிரந்தர நோயாளிகளுக்கான அரச கொடுப்பனவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் இந்த மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்தன. கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சியான SGP மட்டும், "அபாயகரமான அரசு சோஷலிசம்" என்று கூறி எதிர்த்தது.
அதே காலகட்டத்தில் (1955), ஆம்ஸ்டர்டாம் நகரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அரசால் அங்கீகரிக்கப் படாத கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அவர்களது போராட்டத்தை ஆதரித்தது. அந்தப் போராட்டத்தை பொது மக்களும் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கது. அரசு கருங்காலி சாரதிகளை கொண்டு சில டிராம் வண்டிகளை ஒட்டிய போதிலும், பொது மக்கள் அவற்றில் ஏற மறுத்தனர்.
ஆம்ஸ்டர்டாம் நகரின் பொதுப்போக்குவரத்து துறை ஓர் அரச நிறுவனம் ஆகும். அப்போது ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி, "வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதம்" என்றது! "தற்போதுள்ளது ஒரு புதிய சகாப்தம். முன்பிருந்த வர்க்கப் போராட்டம் மறைந்து, வர்க்க சமரசம் உருவாகி உள்ளது. அப்படியான நிலைமையில் வேலைநிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல..." என்று வாதிட்டது.
போருக்கு முன்னர் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடிய அதே சமூக ஜனநாயகவாதிகள், தற்போது தாமே அடக்குமுறை அரசாக மாறி இருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸ் படையை ஏவி விட்டனர். வேலைநிறுத்தம் செய்த குற்றத்திற்காக, ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்ற தடைச்சட்டம், முப்பதுகளில் இருந்த முதலாளித்துவ அடக்குமுறை அரசினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது அதற்கு எதிராகப் போராடிய சமூக ஜனநாயகவாதிகள், பின்னர் அதே சட்டத்தைக் காட்டி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்! அதற்கு அவர்கள் கூறிய ஒரே காரணம்: "வர்க்கங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்! நீங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்தால், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தேசத்துரோகக் குற்றம் புரிகிறீர்கள்!! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்கிறீர்கள்!!!" என்றது அன்றைய சமூகஜனநாயக அரசாங்கம்.
முன்னொரு காலத்தில் போராட்டக் குணாம்சம் கொண்டதாக இருந்த சோஷலிச தொழிற்சங்கமும் (NVV: தற்போது FNV) அரசுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. நலன்புரி அரசு என்ற பெயரில் முதலாளிகளுடனும், அரசுடனும் சேர்ந்து கூட்டு ஒப்பந்தங்கள் போடுவதில் பங்கெடுத்தது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதில்லை என்ற நிபந்தனைக்கு தொழிற்சங்க தலைவர்கள் சம்மதித்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை, இந்தத் துரோகம் தொடர்கதையாக உள்ளது. அண்மைக்காலமாக, அரசு கொண்டு வரும் சிக்கனப் பொருளாதார திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. ஆனால், சமூக ஜனநாயக் கட்சியினரும், தொழிற்சங்கமும் அதற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.

No comments:
Post a Comment