அமெரிக்க- சியோனிச கைக்கூலி நிராஜ் டேவிட், நாஸி இனப்படுகொலைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில், "ஸ்டாலின் இனப்படுகொலை செய்ததாக" திரிபுபடுத்தி தயாரித்த ஆவணப்படம் ஒன்று, 2009 ம் ஆண்டு மே மாதம் IBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (
http://www.nirajdavid.com/இன-அழிப்பு-என்றால்-என்ன-ப-5/) பொய்களும், புரட்டுகளும் நிறைந்த அந்த ஆவணப்படத்தில் சொல்லப் பட்டவை உண்மை என்று நம்பும் வடிகட்டிய முட்டாள்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்தப் பதிவு.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில், "ஸ்டாலின் செய்த இனப்படுகொலைகள்" என்று நிராஜ் டேவிட் ஓர் ஆவணப்படத்தை தொகுத்து வழங்க வேண்டிய தேவை என்ன? இதற்குப் பின்னால் உள்ள, தமிழர்களை மூளைச்சலவை செய்யும் சி.ஐ.ஏ. இன் சதித் திட்டங்களை சாதாரணமாக கடந்து சென்று விட முடியுமா? "ஈழத்தமிழர்கள் அனைவரும் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவர்களாக மதம் மாறி, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும்" என்று, தமிழ்வின் இணையத்தளத்தில் நிராஜ் டேவிட் வெளிப்படையாகவே எழுதி இருந்தார்.
ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் பலியான மக்களைத் தான், நிராஜ் டேவிட் "இனப்படுகொலை" என்று திரிக்கிறார். பஞ்சம் காரணமாக செத்தவர்களை இனப்படுகொலை கணக்கில் சேர்க்கலாம் என்றால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கொல்கத்தா, அயர்லாந்து பஞ்சங்களும் இனப்படுகொலை என்றே சொல்லப் பட வேண்டும். ஆனால், நிராஜ் டேவிட் தனக்கு பணம் கொடுக்கும் எஜமானுக்கு எதிராக பேச மாட்டார்.
நிராஜ்டேவிட், உக்ரைன் பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிப்பதன் நோக்கம் என்ன? நாஸிகள் நடத்திய இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அன்றி வேறென்ன?
இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பிரதேசங்கள் முழுவதும் நாஸிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இன்றைய உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி, ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராட் வரையில் முன்னேறி இருந்தனர்.
இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலை, ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் பிரதேசங்களில் நாஸி- ஜெர்மனி படைகளால் நடத்தப் பட்டது. ஆக்கிரமிக்கப் பட்ட உக்ரைன், பெலாருஸ், பால்ட்டிக் நாடுகளில் யூதர்களையும், ரஷ்யர்களையும் பெருமளவில் சுட்டுக் கொன்று மனிதப் புதைகுழிகளில் போட்டு மூடினார்கள். ஜெர்மன் படையினர் "துப்பாக்கியால் சுட்டுக் களைத்து விட்ட படியால்" தான், அவுட்ஸ்விட்ஷ் தடுப்பு முகாமில் அடைத்து வைத்து விஷவாயு அடித்துக் கொல்லும் திட்டம் கொண்டு வந்தார்கள்.
கம்யூனிச வெறுப்புக் காரணமாக, ஹிட்லர் சோவியத் யூனியனை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களை நச்சுவாயு அடித்து கொன்று குவிக்க திட்டமிட்டிருந்தான்!
"அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி தடுப்பு முகாம் பற்றிய ஆவணப் படம் பார்க்கக் கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள்.
- இலட்சக் கணக்கான யூதர்களை நச்சுவாயு அடித்து கொன்று குவித்த படியால் தீய வழியில் பிரபலமடைந்த முகாம் அது. யூதர்களை அங்கு கொண்டு செல்வதற்கு முன்னரே ரஷ்யர்கள் மீது பரிசோதிக்கப் பட்டது.
- IG farben என்ற ஜேர்மன் பன்னாட்டுக் கம்பனிக்கு தேவையான மூலப் பொருட்கள் அவுஷ்விட்ஸ் சுற்றாடலில் கிடைத்தன. அடிமை உழைப்பாளிகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் அந்தக் கம்பனிக்கு இருந்தது. அந்த முதலாளித்துவ சுரண்டலுக்கு உதவுவதன் மூலம் நாஸிகளும் பலனடைந்தனர்.
- சோவியத் படையெடுப்புக்கு வசதியாகத் தான் அந்த இடத்தில் முகாம் அமைக்கப் பட்டது. அதாவது சோவியத் எல்லையில் இருந்து சில நூறு கி.மீ. தொலைவில் போலந்தில் அந்த இடம் இருந்தது.
- ஹிட்லரும், நாஸிகளும் யூதர்களை வெறுத்த அளவிற்கு கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ரஷ்ய யூதர்கள் பலர் போல்ஷேவிக் கட்சியில் இருந்ததாக நம்பினார்கள்.
- பெலாரஸ் போன்ற சோவியத் யூனியனின் பகுதிகள் நாஸிகளால் ஆக்கிரமிக்கப் பட்டதும், 3 மில்லியன் பேரளவில் போர்க் கைதிகளாக சிறைப் பிடிக்கப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், 2 மில்லியன் பேரளவில் கொன்று குவிக்கப் பட்டனர்.
- ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகள், யூதர்கள் அல்லது போரிடும் வயதில் இருந்த ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால், பெருந்தொகையான ரஷ்யர்களை இலகுவான முறையில் கொன்றொழிப்பது எப்படி என்று யோசித்தார்கள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்பன் மொனோக்சைட் நச்சு வாயு பிரயோகித்து பரிசோதனை செய்தனர். அது வெற்றிகரமாக நடந்த பின்னர் தான், ஐரோப்பிய யூதர்கள் அங்கு கொண்டு வரப் பட்டனர்.
உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாகத் தான் இனப்படுகொலை ஆரம்பமானது. நாஸிகளுடன் ஒத்துழைத்த உக்ரைனிய தேசியவாத- பாசிஸ்டுகள் ஆயிரக் கணக்கான யூதர்களை தெருக்களில் அடித்துக் கொன்றார்கள். அப்போது உக்ரைனில் நடந்த இனப்படுகொலை எதுவென கேட்டால், அதைத் தான் குறிப்பிடலாம்.
(பார்க்க: உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்)
ஆனால், அதையெல்லாம் நிராஜ் டேவிட் தனது ஆவணப்படத்தில் மூடி மறைக்கிறார்.
உக்ரைனிய இனவாதிகள் யூதர்களை மட்டும் தாக்கவில்லை. போலிஷ், ரஷ்ய மொழி பேசும் மக்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்தனர். இவற்றை எல்லாம் ஜெர்மன் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவல் எதுவும், நிராஜ் டேவிட் தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப் படவில்லை. இருட்டடிப்பு!
பஞ்சத்தில் செத்தவர்களை "இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள்" என்று எந்த முட்டாளும் சொல்வதில்லை. எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் பொய்களை நிராஜ் டேவிட் தனது ஆவணப் படத்தில் சொல்கிறார். அதைப் பார்க்கும் தமிழர்கள் எல்லோரும் வடிகட்டிய முட்டாள்கள் என்று அவரே முடிவு செய்துவிட்டார் போலும்.
ஸ்டாலின் காலத்தில், குலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் (நமது நாட்டில் "பண்ணையார்கள்") சமூக விரோதிகளாக செயற்பட்டனர். பொதுவுடமைக் - கூட்டுறவுப் பண்ணை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டதும், இந்த "கிராமிய முதலாளிகள்" அல்லது பண்ணையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் தம்மிடமிருந்த கால்நடைகளை தாமே கொன்றழித்தனர். தானியக் களஞ்சியங்களை தீவைத்துக் கொளுத்தினர். உக்ரைன் பஞ்சம் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.
நிராஜ் டேவிட், தனது ஆவணப்படத்திற்கான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி நாஸி பரப்புரையாளர்களிடம் இருந்து தான்! நாஸிகள் சோவியத் யூனியன் மீது படையெடுப்பதற்கு முன்னர், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் தாக்கத் தொடங்கி விட்டனர். அதில் ஒன்று தான் உக்ரைனிய பஞ்சத்தில் மில்லியன் கணக்கில் இறந்தனர் என்ற தகவலும். இது பின்னர் சி.ஐ.ஏ. இனரால் பிரதியெடுக்க பட்டு உலகம் முழுவதும் பரப்பப் பட்டது.
(பார்க்க: கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!)
இன்றைய உக்ரைனின் அரைவாசிப் பகுதி தான், அன்றைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. மிகுதி, போலந்து அல்லது ஆஸ்திரியா (ஹங்கேரி)வின் பகுதியாக இருந்தது. அப்படியானால், உக்ரைனிய பஞ்சத்திற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியுமா? அன்றைய காலத்தில் பஞ்சம் ஐரோப்பா முழுவதும் எல்லா இடங்களிலும் இருந்தது.
உக்ரைனில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் பஞ்சத்தால் இறந்து கொண்டிருந்தனர். ஒரு குறுகிய காலத்திற்குள் ஐரோப்பா பல போர்களை கண்டிருந்தது. நெப்போலியனின் போர்கள், கிரீமியா யுத்தம், முதலாம் உலகப்போர், இவை யாவும் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்திருந்தன. அதைவிட, ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.
இன்று ஐரோப்பாவிலேயே அதி கூடிய வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட, நோர்வே, சுவிட்சர்லாந்து போன்ற பணக்கார நாடுகள் கூட பட்டினிச் சாவுகளுக்கு தப்பவில்லை. அயர்லாந்து பஞ்சத்தால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கும். இலட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக அமெரிக்காவில் குடியேறினார்கள். இதெல்லாம் நிராஜ்டேவிட்டின் கண்களுக்கு தெரியவில்லை! அமெரிக்க டாலர்கள் அவரது கண்களை மறைத்து விட்டன.
ஒரு நாட்டில் பஞ்சம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் நீடிக்கும் போர், உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகச் சீர்கேடுகள் என்று பல காரணங்கள் உள்ளன. ஸ்டாலினிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் கூட தமது வரலாற்று நூல்களில் அவற்றை மட்டும் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிக்கும் அளவிற்கு முட்டாள்கள் யாரும் இல்லை. நிராஜ் டேவிட், மற்றும் அவரது அடிப்பொடிகளை தவிர.
*********
உக்ரைனிய பஞ்சம் தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:
உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்
கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?
இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.
அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.
இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.