Friday, June 23, 2017

3000 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்தில் நடந்த வர்க்கப் போராட்டம்

மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர், ப‌ண்டைய‌ எகிப்தில் ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம். வ‌ர‌லாற்றில் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்ட‌ உல‌கின் முத‌லாவ‌து வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம்.

கி.மு. 1170 ம் ஆண்டு. ப‌ண்டைய‌ எகிப்தில் தெற்கே உள்ள‌ டெய்ர் எல் மெடீனா (Deir el- Medina) என்ற‌ ஊரில் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம், அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய ஊதிய‌ம் கால‌ தாம‌த‌மான‌து தான். ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ ஊதிய‌ம் கொடுக்க‌ப் ப‌ட‌வில்லை.

இன்றைக்கும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் "அர‌ச‌ர்க‌ளின் ப‌ள்ள‌த்தாக்கு" ப‌குதிக்கு அருகில் டெய்ர் எல் மெடீனா உள்ள‌து. பாரோ ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில், அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ள் தான் க‌ல்ல‌றைக‌ளை க‌ட்டினார்க‌ள். (அந்த‌க் கால‌த்தில், இற‌ந்த‌ பாரோ ம‌ன்ன‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை, பிர‌மிட்டுக‌ளுக்கு ப‌திலாக‌ அங்கிருந்த‌ க‌ல்ல‌றைக‌ளில் புதைத்த‌ன‌ர்.)

அங்கு வேலை செய்து வ‌ந்த‌, ப‌ல்வேறுப‌ட்ட‌ தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ளுக்கும், தொழிலாள‌ர்க‌ளுக்கும் ஊதிய‌மாக‌ தானிய‌ம் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌து. (அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ப‌ண‌ப் புழ‌க்க‌ம் இருக்க‌வில்லை.) அவ‌ர்க‌ளுக்கு ஊதிய‌மாக‌ கிடைக்க‌ வேண்டிய் தானிய‌ங்க‌ள் தாம‌த‌மாக‌ வ‌ர‌த் தொட‌ங்கி, ஒரு க‌ட்ட‌த்தில் அரை வ‌ருட‌ கால‌ம் ச‌ம்ப‌ள‌ம் இன்றி வேலை செய்ய‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

"நாங்க‌ள் ப‌ட்டினியால் சாகிறோம்..." என்று கோஷ‌ம் எழுப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் வேலை செய்ய‌ ம‌றுத்த‌ன‌ர். வேலைநிறுத்த‌ம் செய்த‌து ம‌ட்டும‌ல்லாது, ஊர்வ‌ல‌மாக‌ சென்று, அர‌சு அலுவ‌க‌த்திற்கு முன்னால் அம‌ர்ந்திருந்து, எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். சுருக்க‌மாக‌, இந்த‌க் கால‌த்து தொழிலாள‌ர்க‌ளின் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம் மாதிரியே அப்போதும் ந‌ட‌ந்திருக்கிற‌து.

தொழிலாள‌ர்க‌ளின் இடைய‌றாத‌ போராட்ட‌ம் கார‌ணமாக‌ அர‌சு இய‌ந்திர‌ம் இற‌ங்கி வ‌ந்த‌து. ச‌ம்ப‌ள‌ப் பாக்கியை த‌ர‌ச் ச‌ம்ம‌தித்த‌து. அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ தானிய‌ மூட்டைக‌ள் வ‌ந்து சேர்ந்த‌ன‌.

அன்று ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம், விரிவான‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. அன்றைய‌ எகிப்திய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் ஒவ்வொரு நாளும் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை எழுதி வைத்துள்ள‌ன‌ர். (பார்க்க: Records of the strike at Deir el Medina under Ramses III)

இதிலே குறிப்பிட‌த்த‌க்க‌ விட‌ய‌ம் என்ன‌வெனில், அன்று ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌மும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. உழைக்கும் வ‌ர்க்க‌மும், அதிகார‌ வ‌ர்க்க‌மும் (காவ‌ல‌ர்க‌ள்) மோதிக் கொண்ட‌தை ப‌ண்டைய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் எழுதி வைத்துள்ள‌ன‌ர்.

ஒரு வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தால் டெய்ர் எல் மெடீனா ம‌க்க‌ள் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடித்து விட்ட‌ன‌ர்.

"முந்திய‌ ச‌முதாய‌ங்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் முழுவ‌தும் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ வ‌ர‌லாறாக‌வே இருந்துள்ள‌து." - கார்ல் மார்க்ஸ்

No comments:

Post a Comment