Tuesday, March 07, 2017

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் ஜே.ஆரின். குழந்தைகள்

இலங்கையில், வடக்கு- கிழக்கு மாகாணங்களில், வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது. வழமையாக தமிழரின் தேசியம் சம்பந்தமான போராட்டங்களில் காணப்படும் ஒருநிலைப் பட்ட ஆதரவு இதில் இல்லை.

இதற்கு முன்னர் நடந்த கானாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டம், கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம், இவற்றுடன் ஒப்பிடும் பொழுது, வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் அதிகளவு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம், எப்போதும் பொருளாதாரப் பிரச்சினை என்று வந்து விட்டால், ஈழத் தமிழர்கள் இரண்டு பட்டு சிந்திப்பார்கள்.

தமிழர்களில் பெருமளவில் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், கணிசமான அளவினர் எதிர்ப்பவர்களாக உள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அவர்களில் சிலர் நக்கல், நையாண்டி மூலம் தனியார்துறைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர். "எதற்காக வேலை கேட்டு அரசிடம் கெஞ்சுகிறீர்கள்? தனியார் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளமும் கொடுப்பார்கள்..." என்று நியாயம் பேசுகின்றனர்.

தற்காலத்தில் 15% வேலைவாய்ப்புகள் அரசுத் துறையிலும் 85% வேலைவாய்ப்புகள் தனியார் துறையிலும் இருப்பதாக, ஒரு தனியார்துறை ஆதரவாளர் "அறிவுபூர்வமாக" எடுத்துரைத்தார். அதற்கு அவர் எந்தப் புள்ளிவிபர ஆதாரத்தையும் காட்டவில்லை. இலங்கையில் இன்றும் கூட ரயில், தபால், மின்சாரம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் அரசினால் நடத்தப் படுகின்றன. சரி, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

எல்லா நாடுகளிலும் பொது (அரசு) நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டைப் பொறுத்து விகிதாசாரம் கூடலாம், குறையலாம். வேலையில்லாப் பட்டதாரிகளில் ஒரு பிரிவினர் தமக்கு அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை. வேலையில்லாவிட்டால் வறுமையில் வாட வேண்டும் என்று நிலைமை இருக்கும் நாட்டில், கட்டாயமாக தனியார் துறையில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும்.

ஒருவருக்கு தான் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யும் உரிமை உள்ளது. அதற்கான சுதந்திரமும் உள்ளது. அரசாங்க வேலை வேண்டும் என்பதும் தனி மனித உரிமை தான். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் மனத் திருப்தி அவருக்கு கிடைக்கலாம். அதற்கு மாறாக, தனியார் துறையில் வேலை செய்வதன் மூலம் அவர் சுரண்டலுக்கு துணை போகின்றார். உலகில் எங்காவது மக்களை கொள்ளையடிக்காத, உழைப்பாளிகளை சுரண்டாத தனியார் நிறுவனம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தனியார் துறையில் வேலை தேடுமாறு "ஆலோசனை" கூறிய நியாயவான்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது, அதிக சம்பளம். அரசுத் துறையை விட தனியார் துறையில் பட்டதாரிகளுக்கு இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ஆசை காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுண்டு. அதே தனியார் துறையில் அடிமட்ட ஊழியர்களின் சம்பளம் இரண்டு, மூன்று மடங்கு குறைவு. அதாவது, அடிமட்ட தொழிலாளர்களிடம் இருந்து திருடப் படும் உழைப்பின் ஒரு பகுதி தான் அந்த "அதிக சம்பளம்". இந்தப் பகல் கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக வெட்கப் பட வேண்டும்.

அரசுத் துறையிலா, தனியார் துறையிலா வேலை வாய்ப்பு அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசிடம் கோரிக்கை வைக்கும் வேலையிலாப் பட்டதாரிகளின் போராட்டம் நியாயமானதா? அரசமைப்பு சட்டப் படி, வேலை செய்வது ஒரு குடிமகனின் உரிமை என்றால், வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமையாகின்றது. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காத படியால், அது குறித்து கட்டாயப் படுத்த முடியாது என்றும் அரசு தப்பிக் கொள்கின்றது. எது எப்படி இருப்பினும் அரசு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளமை முக்கியமானது.

தனியார்துறைக்கு ஆதரவாகப் பேசும் இளம் தலைமுறையினர், எழுபதுகள், எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள். அதன் அர்த்தம், இலங்கையில் ஒரு காலத்தில் அரசுத் துரை நிறுவனங்களே அதிகமாக இருந்த காலகட்டம் பற்றி அவர்களுக்குத் தெரியாது. 1977 ம் ஆண்டுக்குப் பிறகு தான், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே கொண்டு வந்த நவ தாராளவாத அரசியலின் விளைவாக தனியார்மயம் ஊக்குவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான் பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்தது.

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் தனியார் மய தாசர்களை "ஜே.ஆரின். குழந்தைகள்" என்று அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை. இலங்கையில் தனியார் மயத்தை புகுத்திய ஜே. ஆர். தான், தமிழர்களுக்கு எதிரான ஈழப்போரைத் திணித்தவர். பல இலட்சம் தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளக் காரணமாக இருந்தார். ஈழப்போருக்கும், தனியார்மயமாக்கலுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. Naomi Klein எழுதிய Shock Doctrine நூலை வாசித்தால் அந்த உண்மை புரியும். அமெரிக்க பொருளியல் அறிஞர் Milton Friedman முன்மொழிந்த சந்தைப் பொருளாதார தத்துவம், முதல் தடவையாக சிலியில் நடந்த சதிப்புரட்சியின் பின்னர் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது.

தனியார்மயத்தின் வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத் தன்மையை இப்போது பார்ப்போம். மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் கூட, வேலை வாய்ப்பு உருவாக்குவதை அரசு தான் பொறுப்பு எடுக்கிறது. நான் கடந்த இருபது வருட காலமாக மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதால், அதை கவனித்து வருகிறேன்.

ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும், வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றிய விடயம் முக்கியமாகப் பேசப் படும். இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இந்த விடயத்தில் ஒன்று தான். தற்போது மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரும் வலதுசாரி இனவாதக் கட்சிகள் கூட, அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பழி போடுவது அவர்களது இனவாத அரசியல் சார்ந்தது. மேலும் அவர்களால் தமது உறுதிமொழியை காப்பாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளிலும் வேலையில்லாத பட்டதாரிகள் தமது பிரச்சினைக்கு அரசை தான் பொறுப்பேற்க வைப்பார்கள். அது சரியானதும் கூட. ஏனென்றால், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை ஒரு கடமையாகக் கருதுவதில்லை. அதாவது நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை அல்ல. அவர்கள் தமக்கு தேவையான அளவில் எடுத்துக் கொண்டு, ஏனையோரை நிராகரிப்பார்கள். ஆகவே, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் கொள்கை வகுப்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த விடயம். அதை அரசு தான் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும்.

1 comment: