Thursday, March 16, 2017

நெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் "தேசிய வீழ்ச்சி"! இடதுசாரிகளின் எழுச்சி!!

நெதர்லாந்து பொதுத் தேர்தல்: இனவாதம் தோற்கடிக்கப் பட்டது!
15-3-2017 ல் நடந்த நெதர்லாந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உலகளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், பிரித்தானியாவின் Brexit வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டிரம்பின் தெரிவுக்குப் பிறகு நடந்த பிரதானமான தேர்தல் இது. அந்த நிகழ்வுகள் நெதர்லாந்தின் இனவாத அரசியல்வாதி வில்டர்சின் வெற்றி வாய்ப்புக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப் பட்டது.

ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்ட இனவாத அரசியல் எழுச்சி இறுதியில் நடக்கவேயில்லை. வில்டர்சின் சுதந்திரக் கட்சி (PVV) 20 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட ஐந்து ஆசனங்கள் அதிகமாக எடுத்துள்ளது. இருப்பினும் அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. உண்மையில் வில்டர்சின் இனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வியே அது.

உண்மையில் சுதந்திரக் கட்சி முழுக்க முழுக்க தனிமனித வழிபாட்டைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் வில்டர்ஸ் மட்டும் தான் எல்லாமே. அவரது வாயில் இருந்து வருவது தான் அரசியல். தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டிருந்தார். மசூதிகளை மூட வேண்டும், குரானை தடை செய்ய வேண்டும் என்று தீவிர அரசியல் பேசினார். அதே நேரம், அகதிகள், குடியேறிகள் வருவதை தடை செய்யவேண்டும் என்றும் பேசி வருபவர்.

வழமையாக இப்படியானவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஊடகங்கள், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் நெதர்லாந்தில் வில்டர்ஸ் வெற்றி பெறலாம் என்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தன. கடந்த வருடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்புகளில் கூட வில்டர்சின் சுதந்திரக் கட்சி குறைந்தது முப்பது ஆசனங்களை பெற்று முதலிடத்திற்கு வரும் என்று எதிர்வு கூறப் பட்டது. ஆனால் அந்த கணிப்புகள் இறுதியில் பொய்த்து விட்டன. அதற்கு என்ன காரணம்?

உண்மையில் வில்டர்ஸ் ஊடகங்களை நம்பி அரசியல் செய்து வந்தார். "பாதுகாப்பு குறைபாடு காரணமாக" வாக்காளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே "மொரோக்கோ குடியேறிகளை குறைப்போம்" என்ற இனவாதப் பேச்சு காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருந்தார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

வில்டர்ஸ் தனது எதிராளிகளுடன் விவாதிப்பதை தவிர்த்து வந்தார். ரொட்டர்டாம் மசூதியில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டும் செல்லவில்லை. அது மட்டுமல்ல, ஊடகங்கள் ஒழுங்கு படுத்திய விவாத அரங்குகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். அதே நேரம், பிரதமர் மார்க் ருத்தே ஒரு முக்கியமான அறிவிப்பை விடுத்தார். PVV பெரிய கட்சிகளில் ஒன்றாக வந்தாலும், அதனோடு கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

மார்க் ருத்தேயின் அறிவிப்பு வில்டர்சின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், நெதர்லாந்தில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கூட்டு அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கின்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையில் கூட்டணியை விட மாற்று வழி இல்லை. 

அடிப்படையில், மார்க் ருத்தேயின் லிபரல் கட்சியும், வில்டர்சின் சுதந்திரக் கட்சியும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் தான். ஆனால், வில்டர்ஸ் பகிரங்கமாக இனவாதம் பேசுவதால், அவரது கட்சியோடு கூட்டு அரசாங்கம் அமைப்பது சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பது மார்க் ருத்தேவுக்கு தெரியும்.

தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிரதமர் மார்க் ருத்தவும், வில்டர்சும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக் கொண்டனர். டச்சு மக்களின் மருத்துவ வசதிகளுக்கான செலவினத்தை குறைத்துள்ள அரசாங்கம், அகதிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகின்றது என்று வில்டர்ஸ் குற்றம் சாட்டினார். அகதிகளை வர விடாமல் தடுப்பதற்கு எல்லையில் மதில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வில்டர்ஸ் அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை வலிந்து புகுத்தினார். அகதிகளை வெளியேற்றினால், குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தால் உள்நாட்டு டச்சு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னார். பிரித்தானியா மாதிரி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றார்.

இவை எல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறமிருக்க, ஆளும் லிபரல் கட்சி ஏற்கனவே குடியேறிகள் விடயத்தில் கடுமையாகத் தான் நடந்து கொள்கின்றது. வில்டர்ஸ் நேரடியாக சொல்வதை, லிபரல் கட்சி சுற்றிவளைத்து சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். அகதிகள் வருகையை தடுப்பதற்காக துருக்கியுடன் ஒப்பந்தம் செய்ததை அந்த விவாதத்தில் மார்க் ருத்தே சுட்டிக் காட்டினார். அதாவது, "நாங்களும் அகதிகளுக்கு எதிரானவர்கள் தான்" என்பதை சொல்லாமல் சொன்னார்.

வீட்டுக்கு வீடு குரான் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வில்டர்ஸ் சொன்னதை நினைவுபடுத்திய மார்க் ருத்தே, "அந்த குரான் பொலிஸ் எப்படி இயங்கும்?" என்று கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் வில்டர்ஸ் தடுமாறினார். "ஓ! போலி வாக்குறுதி கொடுத்தீர்களா?" என்று மார்க் ருத்தே கிண்டலடித்தார்.

உண்மையில், வில்டர்ஸ் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. அகதிகள், முஸ்லிம்கள், குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இந்த நாட்டில் துப்பரவுப் பணி போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வோர் அந்தப் பிரிவினர் தான்.

அகதிகள், முஸ்லிம்களை வெளியேற்றுவதால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. முதலாவதாக, பெரும்பாலான டச்சுக் காரர்கள் அடித்தட்டு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. இரண்டாவதாக, மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வர மாட்டார்கள். மூன்றாவதாக, இன்றைய நிலையில் எந்த முதலாளியும் சம்பளம் கூட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

மேலும், வில்டர்ஸ் போன்ற இனவாத சக்திகளின் எழுச்சிக்கு "உலகமயமாக்கல்" காரணம் என்றும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அப்படிச் சொல்வதும் அதே இனவாத சக்திகள் தான். "தேசிய எழுச்சி" என்ற பெயரில் உலகமயமாக்கலை தடுப்பது நடைமுறைச் சாத்தியமன்று.

நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஒருவேளை, பிரித்தானியா மாதிரி பிரிந்தாலும் உலகமயமாக்கலில் இருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து பொருளாதாரமும் உலகமயமாக்கலால் நன்மை அடைகின்றது. பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய ஏற்றுமதி நிறுவனங்களும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்கின்றன.

ஆகவே, வில்டர்ஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை பகைக்க முடியாது. அதனால், அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும், வில்டர்சின் "தேசிய எழுச்சி" எந்தளவு தூய்மையானது? இன்னொரு விதமாகக் கேட்டால், வில்டர்ஸ் உண்மையிலேயே ஒரு "தேசியவாதி" தானா? அவரது கட்சிக்கு இஸ்ரேல், அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. கடந்த வருடம், வில்டர்ஸ் இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுத்துறையால் (AIVD) விசாரணை செய்யப் பட்டார்.

எதற்காக வில்டர்ஸ் போன்ற இனவாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது? உண்மையில் ஊடகங்கள் இப்படியானவர்களை வளர்த்து விடுகின்றன. பல வருடங்களாக பொருளாதாரப் பிரச்சினை நிலவியது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அரசாங்கம் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், மக்கள் அனுபவித்த சலுகைகளை வெட்டியது.

காலங்காலமாக ஆண்டு வரும் பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால், மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மக்களின் ஏமாற்றத்திற்கு வடிகாலாக, வில்டர்ஸ் போன்ற இனவாதக் கோமாளிகளை மாற்று அரசியல் சக்தியாக காட்டுகிறார்கள். இந்த நாடகம் இன்னும் சில வருடங்கள் அரங்கேறும்.

நெதர்லாந்து தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்த தகவல் ஒன்றுள்ளது. 21 ம் நூற்றாண்டின் முற்போக்கு இடதுசாரிகள் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர். குறிப்பாக, இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி (Groen Links) மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. இன்னொரு இடதுசாரிக் கட்சியான சோஷலிசக் கட்சியும் 15 ஆசனங்களுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேர‌ம், பாரம்பரிய சமூக ஜனநாயக அரசியல் வழிவந்த, வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) அவமானகரமான ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் அது பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. இந்தத் தேர்தலில் வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும்.

புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), 1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். தொண்ணூறுகளில் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நெருக்கடிக்கு உள்ளான நெதர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN) கலைக்கப் பட்டு, இன்னும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, Groen Links என்ற புதிய கட்சி உருவாக்கப் பட்டது.

தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த சுற்றுச் சூழலியல் அரசியலுடன், செல்வத்தை பங்கிட்டு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடதுசாரி அரசியலையும் சேர்த்துக் கொண்டது. அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் இளைய தலைமுறையை சேர்ந்த இடதுசாரி என்பதால், பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment