சர்வசன வாக்குரிமை, எமக்கு முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல. அதற்காக ஐரோப்பாவில் சோஷலிசக் கட்சிகள் நீண்ட கால போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்த உண்மை இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாது.
அந்தக் காலத்தில், ஐரோப்பாவில் இருந்த அரசியல் கட்சிகள் யாவும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தன. அதனால் அவை வெளிப்படையாகவே முதலாளித்துவ கட்சிகள் என அழைக்கப் பட்டன. அதற்கு மாறாக, சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. பிற்காலத்தில் அதில் இருந்து பிரிந்தது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள்.
மேற்கத்திய நாடுகளில், 20 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. செல்வந்தர்களுக்கு மட்டுமே தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இடதுசாரிக் கட்சிகளின் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு தான் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்தது.
இங்கேயுள்ள படம், 1907 ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் எடுக்கப் பட்டது. சர்வசன வாக்குரிமைக்காக நடந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம். SDAP (சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) கட்சியால் நடத்தப் பட்டது.
பதாகைகளில் காணப்படும் வாசகங்கள்:
"நாங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்குமான நிபந்தனையற்ற பொது வாக்குரிமை கோருகின்றோம்."
"வர்க்க வாக்குரிமை ஒழிக"
(ஆதாரம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)
(ஆதாரம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)
உருளைக்கிழங்கு கலவரம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா முழுவதும் உழைக்கும் மக்களின் எழுச்சி நடப்பது ஒரு சர்வ சாதாரணமான விடயம். பல இடங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
பிற ஐரோப்பியர்களைப் போன்று, டச்சுக் காரருக்கும் உருளைக்கிழங்கு பிரதானமான உணவு. 1917 ம் ஆண்டு, ஜூலை மாதமளவில், நெதர்லாந்தில் உருளைக்கிழங்கிற்கு தட்டுப்பாடு நிலவியது. அதன் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்தது. அதே நேரம் வெளிநாடுகளுக்கான உருளைக் கிழங்கு ஏற்றுமதியும் குறைந்த பாடில்லை. இதனால் வறிய உழைக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.
ஆம்ஸ்டர்டாம் நகரில் ஏழை மக்கள் கிளர்ந்தெழுந்து அரசுக்கு எதிராக கலகம் செய்தனர். தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நகர மத்தியில் இருந்த கடைகள் சூறையாடப் பட்டன. இடதுசாரிக் கட்சிகள் காலவரையற்ற பொது வேலைநிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தன. ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
அரசாங்கம் கலவரத்தை அடக்குவதற்காக இராணுவத்தை அனுப்பியது. 3500 படையினர் ஆம்ஸ்டர்டாம் நகர மத்தியில் கூடாரங்களை அடித்து தங்கினார்கள். (படத்தில் பார்க்கவும்) கலவரம் அடக்கப் பட்டு, ஜூலை 6 நிலைமை வழமைக்கு திரும்பியது. 10 பேர் பலியானார்கள். 113 பேர் காயமடைந்தனர்.
(ஆதாரம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)
பெப்ரவரி வேலைநிறுத்தம்
பெப்ரவரி வேலைநிறுத்தம்
1941 ம் ஆண்டு, நெதர்லாந்தை ஆக்கிரமித்த ஜேர்மன் நாஸிப் படையினர், யூதர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி பெப்ரவரி 25 அன்று பொது வேலைநிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தது.
ஆம்ஸ்டர்டாம் நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும், அன்று யாரும் வேலைக்கு போகவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு அந்தளவு செல்வாக்கு இருந்தது. மூன்று நாட்களாக போராட்டம் தொடர்ந்தது. 2ம் உலகப் போர் காலத்தில், அன்று நாஸிகள் ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளில் நடந்த முதலாவது மக்கள் போராட்டம் அது தான்.
No comments:
Post a Comment