Monday, February 27, 2017

பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு


இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும்,  வலதுசாரி தமிழ்த் தினசரியான வீரகேசரி,அடிக்கடி கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை பிரசுரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதற்காகவே இருக்கும் சில "அறிவுஜீவிகள்", அபத்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுப்பார்கள்.

ஆசி கந்தராஜா என்பவர் வீரகேசரி வாரமஞ்சரியில் (26 February 2017) "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். (அவரது கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)  

சுருக்கமாக சொன்னால், இது இன்னொரு கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை. வாசகர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள்நோக்கம் கொண்டது. கட்டுரையின் தொடக்கம் முதல் முடிவு வரை அபத்தக் களஞ்சியம் தான்.

முதலில், "பொதுவுடைமை ஒரு சிந்தனைவாதம்" என்ற கட்டுரையின் தலைப்பே அபத்தமானது. "சிந்தனாவாதம்" என்று சொல்வது ஒரு கருத்தியல் முதல்வாதம். அதாவது, உலகில் இருப்பது எல்லாம் சிந்தனாவாதம் மட்டுமே எனும் தத்துவம். அதைத் தான் மதங்கள் பின்பற்றுகின்றன. உதாரணம்: கடவுளை நீங்கள் உணர முடியும், ஆனால் பார்க்க முடியாது. அதாவது கடவுள் என்ற சிந்தனை மட்டுமே நிரந்தரமானது.

மார்க்சியம் கருத்துமுதல்வாத தத்துவத்தை மறுக்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை பின்பற்றுகின்றது. அதாவது உலகில் நாம் கண்ணால் காண்பது மட்டுமே நிஜம். எனும் பொருள்முதல்வாத தத்துவம். அதிலிருந்து தான் விஞ்ஞானம் பிறந்தது. மார்க்சியம் கூட விஞ்ஞானம் தான். கார்ல் மார்க்ஸ் இயங்கியலையும் பொருள் முதல்வாதத்தையும் இணைத்தார். அதையே நாம் இன்றைக்கு மார்க்சியம் என்று சொல்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வில் ஆதிகால பொதுவுடைமை சமுதாயம் பற்றி எழுதி இருக்கிறார். அதாவது ஆதி கால மனித சமூகங்கள் பொதுவுடமை உற்பத்தி அமைப்பைக் கொண்டிருந்தன. சிறு குழந்தைக்கும் புரியும் மொழியில் சொன்னால், வேட்டையாடி வாழ்ந்த ஆதிகால மனிதர்கள், இயற்கை வளங்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு குடும்பம் மாதிரித் தான் ஒரு சமூகம் இருந்தது. அதற்கு ஆதாரமாக, 19ம் நூற்றாண்டிலும் பொதுவுடமையை பின்பற்றிய அமெரிக்க செவ்விந்திய பழங்குடியின மரபுகளை எடுத்துக் காட்டுகின்றார். மேலதிக விபரங்களுக்கு எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற நூலை வாசிக்கவும்.

//கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என, நான் நினைப்பதும் உண்டு.//(ஆசி கந்தராஜா)

கம்யூனிச கொள்கை என்பது கேள்வி ஞானத்தின் ஊடாக வருவதல்ல. அது வர்க்கப் போராட்டத்தின் ஊடாக வருவது. அதாவது, தமது உழைப்பை தொழிற் சந்தையில் விற்று அதற்கு நஷ்டஈடாக கூலி பெற்றுக் கொள்ளும் உழைப்பாளிகள், தமது வாழ்க்கைப் போராட்ட அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொள்வது தான் கம்யூனிசக் கொள்கை. முதலாளித்துவ நாடுகளில் எல்லோரும் "சுகபோக" வாழ்க்கை வாழ்வதாக யார் சொன்னார்கள்?

நானும் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் தான் வாழ்கிறேன். இங்கே வந்து வேலை செய்து பாருங்கள். குறைந்தது மூன்று பேர் செய்யும் வேலையே ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். அது இங்கே சர்வசாதாரணம். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் அடிமட்ட தொழிலாளியாக இருந்தாலும், அலுவலக ஊழியராக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு பற்றி முறையிடாதோர் எவருமில்லை. Burn out என்று சொல்வார்கள். இங்கே மிக மோசமான உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும்.

முதலாளித்துவ நாடுகளில், பல உழைப்பாளிகள் மன அழுத்தங்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு காரணமாக மார்படைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளது. இருபது வருட கடும் உழைப்பாளி நாற்பது வயதில் மண்டையைப் போடுவது பல இடங்களில் நடந்துள்ளது. பல தமிழர்களும் பலியாகி உள்ளனர்.

அனேகமாக, நிரந்தரமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக அடிக்கடி சுகயீன விடுப்பு எடுத்து வீட்டில் நிற்கிறார்கள். அதனால் தற்போது எந்தக் கம்பனியிலும் நிரந்தர வேலை கொடுப்பதில்லை. ஒப்பந்தம் முடிந்தவுடன் தூக்கி வீசுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் பதினாறு, பதினெட்டு வயது இளைஞர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரைவாசி சம்பளம். இப்படிப் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் ந‌ல‌ன்புரி அர‌சு என்ற‌ பெய‌ரில், சோஷ‌லிச‌த்தின் வ‌ச‌திக‌ளை வேறு வித‌மாக‌ ந‌டைமுறைப் ப‌டுத்துகிறார்க‌ள். அது தொழிலாள‌ர் வ‌ர்க்க‌ம் போராடிப் பெற்ற‌ உரிமை. அந்த‌ப் போராட்ட‌ம் இப்போதும் தொட‌ர்கிற‌து. உதார‌ண‌த்திற்கு அண்மையில் பிரான்ஸில் ந‌ட‌ந்த‌ பொது வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தை குறிப்பிடலாம். 

பிரான்ஸில் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே இருந்த பேரம் பேசும் உரிமைக்கான சட்டத்தை மாற்றினார்கள். அதன் மூலம், ஒரு வேலையாளை இலகுவாக பணி நீக்கம் செய்வதற்கும் அனுமதித்தது. அதற்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து நெடுஞ்சாலைகளை மறித்து போராடினார்கள். பொலிஸ் படை, அளவுகடந்த வன்முறை பிரயோகித்து தான் போராட்டத்தை அடக்கியது.

//சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப் பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.// (ஆசி கந்தராஜா)

ஆரம்பத்திலேயே "மாற்றுக் கருத்துடன் வாழ்ந்த பேராசிரியர்" என்கிறார். சோஷலிச நாடுகளில் வாழ்ந்த எல்லோரும் அரசை ஆதரித்தவர்கள் அல்ல. எதிர்த்தவர்களும் இருந்தார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருந்தது. (அதை இந்தக் கட்டுரையாளரே உறுதிப்படுத்துகிறார்.) அதிக பட்சம், இனவாதம்  பேசியவர்களை மட்டுமே கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு, சீனாவைத் தவிர வேறெந்த சோஷலிச நாட்டிலும் வர்க்கப் போராட்டம் நடக்கவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு பதிலாக, குருஷேவ் முன்மொழிந்த "அனைத்து மக்களின் நாடு" கொள்கை பின்பற்றப் பட்டது. அதன் அர்த்தம், அங்கு அறிவுஜீவிகளை கொண்ட மத்தியதர வர்க்கம் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப் படுவது இயற்கை. அது  அவர்களது வர்க்கக் குணாம்சம்.

//சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.//(ஆசி கந்தராஜா)

அந்த நாடுகள் எதுவும் முதலாளித்துவ முறைகளை பின்பற்றி "வீறு நடை" போடவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனாவாதம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகம். சம்பளம் குறைவு. வாழ்க்கைச் செலவு அதிகம். இலட்சக்கணக்கான ஏழைகள் வாழ்வதற்கு சிரமப் படுகிறார்கள். அதனால், தேர்தல்களில் தீவிர தேசியவாத அல்லது இனவாத கட்சிகளை வெல்ல வைக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் பொருளாதாரப் பிரச்சினை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தாலும், ருமேனியாவும், பல்கேரியாவும் இன்று வரைக்கும் மிகவும் வறுமையான நாடுகளாக உள்ளன. ருமேனிய, பல்கேரிய தொழிலாளர்கள் மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த கூலிக்கு அடிமை வேலை செய்கிறார்கள்.  அந்த நாடுகளில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவு. அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அண்மையில் கூட ருமேனியாவில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் எழுச்சி நடந்தது.

முதலாளித்துவத்தை பின்பற்றி "வீறுநடை போட்ட" அல்பேனியா, திருடர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அது இன்றைக்கும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அரசாங்கத்தில் கூட கிரிமினல்கள் தான் அங்கம் வகிக்கிறார்கள். அதைக் காரணமாகக் காட்டி பலர் அகதியாக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சென்ற வருடம், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர். தாம் கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பு தேடி வந்ததாக காரணம் கூறினார்கள்.

//எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டுமே என்பதை உணர, எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.... கம்யூனிசம் என்ற மாயமான் கொள்கையில் அங்கு கஷ்டப்பட்டவர்கள் பாமர மக்களே.//(ஆசி கந்தராஜா)

எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டும் இருக்கவில்லை. இது கட்டுரையாளரின் கற்பனாவாதம். உண்மையிலேயே அது நடைமுறையில் இருந்தது. (பார்க்க: உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி ) அந்த நாடுகள் "சின்னாபின்னமாகிய" பொழுது, அதாவது முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், மேற்படி வசதிகள் தொடர்ந்தும் இருக்கும் என்று சாதாரண மக்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. 

முன்பு சோவியத் குடியரசாக இருந்து பிரிந்த மோல்டாவியா பற்றிய டச்சு ஆவணப்படம் பற்றிய குறிப்புகளை எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். அந்த ஆவணப் படத்தில் சாதாரண மோல்டாவியா மக்களை பேட்டி எடுக்கிறார்கள். முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருந்ததாகவும், தமக்கு எல்லா வசதிகளும் கிடைத்தாகவும் அந்த மக்கள் கூறுகின்றார்கள். தற்போது "வீறுநடை போடும்" முதலாளித்துவ காலத்தில் அவர்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். (பார்க்க: "சோவியத் கால வாழ்க்கை மிகவும் சிறந்தது!" - பொது மக்களின் வாக்குமூலம்)

வீடு, வேலை, இலவச மருத்துவம், இலவச கல்வி போன்ற வசதிகள் மட்டுமல்ல, விடுமுறைக்கு இலவச சுற்றுலா பயணமும் ஒழுங்கு படுத்தப் பட்டது! அதுவும் சாதாரணமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க முடிந்தது. சோவியத் யூனியனில் கிரீமியா பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. குளிர்வலைய பிரதேசத்தில் வாழ்ந்த ரஷ்யர்கள், வெப்ப வலைய பிரதேசமான கிரீமியா கடற்கரைக்கு சென்று உல்லாசமாக விடுமுறையை களித்தனர். பிரயாணச்சீட்டு, தங்குமிட வசதி அனைத்தும் இலவசம்! கிழக்கு ஜெர்மானியர்கள் உல்லாசக் கப்பலில் பல உலக நாடுகளுக்கு சென்று வந்தனர். (பார்க்க: தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை )

//ஜேர்மனியில் நான் கல்வி கற்ற காலங்களில், லெனின், கார்ல் மார்க்ஸ், எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்றுத் தேறும் வாய்ப்பு கிட்டியது. அத்துடன் இதில் பரீட்ஷை எழுதி, சிறப்பு சித்தியும் பெற்றுள்ளேன்.// (ஆசி கந்தராஜா)

இதை நான் நம்பவில்லை. யாரும் அவற்றை வாசிக்கவில்லை என்று தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு புளுகுகிறார். ஒன்றில் இவர் எதையும் படிக்கவில்லை, அல்லது படித்தாலும் அதை மறைத்து விட்டு வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதுகிறார்.

//கார்ல்மார்க்ஸ், ‘Das Kapital’ (The capital) என்னும் நூலை தன் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை முன் மொழியப்படாத புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளாதார வாதத்தின் விவிலிய நூல் இதுதான். இது குறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல் மார்க்ஸ், தமது தோழர் எங்கிள்ஸ் உடன் இணைந்தும் எழுதினார்.// (ஆசி கந்தராஜா)

இவ‌ர் உண்மையிலேயே மூல‌த‌ன‌ம் நூலை ப‌டித்தாரா என்ப‌து ச‌ந்தேக‌த்திற்குரிய‌து. ஏன் என்றால் அதில் முக்கிய‌மான‌ ப‌குதியான‌ உப‌ரிம‌திப்பு ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ க‌ட்டுரையில் இல்லை. மூல‌த‌னம் ஒரு "க‌ம்யூனிச‌" பொருளாதார‌ நூல் அல்ல‌! சுத்த அப‌த்த‌ம். அதில் உள்ள‌து முழுவ‌தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ம் மீதான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள். அதை விவிலிய நூலுடன் ஒப்பிடுவது மகா அபத்தம். அப்படியானால், ஆடம் ஸ்மித் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் நூலைப் பற்றி என்ன சொல்கிறார்? அது லிபரல் பொருளாதாரவாதத்தின் விவிலிய நூல் என்பாரா?

//அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரேநேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.// (ஆசி கந்தராஜா)

அமெரிக்க‌ டால‌ர், மற்றும் பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுன்ஸ் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ரிவ‌ர்த்த‌னைக்கு விட‌ப் ப‌டும் நோக்க‌ம் வேறு. அது ச‌ர்வ‌தேச‌‌ வ‌ர்த்த‌க‌த்தின் மீது ஆதிக்க‌ம் செலுத்தும் நோக்க‌ம் கொண்ட‌து. காலனிய காலத்தில் பிரித்தானியா உலகில் அரைவாசியை ஆண்டது. அதன் கடற்படை சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது ஸ்டேர்லிங் பவுன்ஸ் உலகமெல்லாம் பரவியதில் என்ன ஆச்சரியம்?

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா பிரிட்டனை மிஞ்சிய வல்லரசாக மாறியது. அமெரிக்க டொலர் இன்று பெட்ரோ டொல‌ர் என்றும் அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. அதற்குக் காரணம், ஒபெக் நாடுகளின் பெட்ரோல் விற்ப‌னை முழுக்க‌ முழுக்க‌ அமெரிக்க டொல‌ரில் ந‌ட‌க்கிற‌து. ஒரு தடவை, ச‌தாம் ஹுசைன், க‌டாபி ஆகியோர் யூரோவுக்கு மாற‌ விரும்பினார்க‌ள். அத‌ற்குப் பின்ன‌ர் அவ‌ர்க‌ள் ப‌த‌வியில் இருந்து தூக்கியெறிய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

சோஷ‌லிச‌ நாடுக‌ளின் ம‌த்திய‌ வ‌ங்கிக‌ளிலும் த‌ங்க‌ம் கையிருப்பில் வைத்திருந்தார்க‌ள். இது அடிப்படை பொருளாதாரம். ஒரு நாடு சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றினாலும் மத்தியவங்கியும் அதன் செயற்பாடுகளும் ஒன்று தான். ஒரு பொருளின் விலையை உற்பத்தி செலவுகள் தீர்மானிக்கின்றன. அதன் விற்பனை விலையை சந்தை தீர்மானிக்கிறது. ஒரு சோஷலிச நாட்டிலும் அப்படித் தானே இருக்க வேண்டும்? 

பணத்தாள்களை அதிகமாக அச்சிட்டால் அங்கு பணவீக்கம் ஏற்படும். பணத்தின் மதிப்பு குறைவாகவும், பொருளின் விலை அதிகமாகவும் இருக்கும். ஆகவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தாள்களை மட்டுமே புழக்கத்தில் விட முடியும். ஒரு நாடு முதலாளித்துவத்தை பின்பற்றினாலும், சோஷலிசத்தை பின்பற்றினாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தை பரிவர்த்தனை செய்து கொள்வது வழக்கம். அதற்கான விலைகளையும் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு தேச‌த்தின் நாண‌ய‌ம் அந்த‌ நாட்டிற்குள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்கு ம‌ட்டும் தான். அது ஏன் உல‌க‌ம் முழுக்க‌ சுற்ற‌ வேண்டும்? சோஷ‌லிச‌ பொருளாதார‌த்தை, உல‌க‌ம் முழுவ‌தும் ஆதிக்க‌ம் செலுத்தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌த்துட‌ன் ஒப்பிடுவதே அபத்தமானது.முதலாளித்துவமானது, இன்று நிதி மூலதான ஏகாதிபத்தியமாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

//கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).// (ஆசி கந்தராஜா)

ப‌ண‌ம் சுற்றி சுழ‌ல‌ வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூற‌வில்லை! அதை சொன்ன‌து ஆட‌ம் ஸ்மித். அவர் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் (The Wealth of Nations) நூலில், அதாவது "லிபரல்வாத விவிலிய நூலில்", அப்படி எழுதப் பட்டுள்ளது. ஆடம் ஸ்மித் ஒரு முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ மேதை. இன்றை‌க்கும் மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் அவரது கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அதாவது, ப‌ண‌ம் சுற்றி சுழ‌லும் கொள்கையும் பின்ப‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌து. ஒரு உதார‌ணம் த‌ருகிறேன். வ‌ங்கிக‌ள் சேமிப்பை ஊக்குவிப்ப‌தில்லை. அத‌ற்காக‌ மிக‌க் குறைந்த‌ வ‌ட்டி கொடுக்கிறார்கள்.

//விடுமுறையில் நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது, லங்கா சமசமாசக் கட்சிக்கும் கம்யூனிஸ் கட்சிக்கும் தேர்தல் வேலை செய்த பொன்னையா மாஸ்ரர் தொடக்கம், தமிழரசு தம்பித்துரை அண்ணர் வரை கார்ல் மார்க்ஸ்ஸின் ‘பணம் சுற்றிச் சுழல வேண்டிய தத்துவத்தை’ சொல்லிப் பார்த்தேன். சோசலிஷம் எங்களுக்கு சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட ஐயத்துக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.// (ஆசி கந்தராஜா)

"பணம் சுற்றிச் சுழலும் தத்துவம்", லிபரல்வாத விவிலிய நூல் எழுதிய ஆடம் ஸ்மித் கண்டுபிடித்த தத்துவம் என்பது, ஜெர்மனியில் படித்த ஆசி கந்தராஜாவுக்கே தெரியவில்லை. இலங்கையில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? இவர் சோஷலிசம் என்று லிபரலிசத்தை சொல்கிறாரோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகின்றது. ஏனென்றால், இலங்கையில் முதலாளித்துவம் இருந்தாலும், அது மேற்குலகில் இருப்பதைப் போன்ற நவ- தாராளவாத முதலாளித்துவமாக இருக்கவில்லை. அந்த மாற்றம் தற்போது மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம், இப்போதும் கூட, பெரும்பாலான தமிழ் மக்கள் நகை, காணி போன்ற அசையும், அசையா சொத்துக்களில் பணத்தை பதுக்குவார்கள். அதனால் பணம் சுற்றிச் சுழலுவதில்லை. அதற்கு மாறாக, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் யாரும் காணி, நகைகளில் பணத்தை முடக்குவதில்லை. வீடு வாங்கினாலும் வங்கிக் கடனில் வாங்கி இருப்பார்கள்.

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்களிடம் எந்தச் சொத்தும் கிடையாது. அவசரத் தேவைகளுக்காக கொஞ்சப் பணம் சேமித்து வைத்திருப்பார்கள். பலரிடம் அதுவும் இருப்பதில்லை. தலைக்கு மேலே கடனை வைத்திருப்பார்கள். கடனால் சூழப்பட்ட சமூகத்தில் தான் பணம் சுற்றிச் சுழல்கிறது. 

அந்த நிலைமை தற்போது இலங்கையிலும் வந்து விட்டது. கிரெடிட் கார்ட், லீசிங் என்று மக்களை கடனில் மூழ்கடிக்கும் சாதனங்கள் வந்து விட்டன. நாட்டில் கடனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், பணம் சுற்றிச் சுழல்கிறது. எப்படியோ ஆடம் ஸ்மித்தின் தத்துவம் நடைமுறைக்கு வந்துவிட்டது.


பிற்குறிப்பு:
அவரது கட்டுரைக்கு நான் மறுப்புத் தெரிவித்து எழுதியதும், "மார்க்ஸ் எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை ஜேர்ம‌ன் மொழியில் வாசிக்குமாறு", திரு ஆசி க‌ந்த‌ராஜா என‌க்கு ப‌தில் அளித்திருக்கிறார். என‌க்கு ஜேர்ம‌ன் மொழி தெரியும் என்பது ஒரு புற‌ம் இருக்க‌ட்டும். 

எல்லோரும் எல்லாவ‌ற்றையும் மூல‌ மொழியில் தான் வாசிக்க‌ வேண்டுமா? ஏற்க‌ன‌வே த‌ர‌மான‌ த‌மிழ், ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் உள்ள‌ன‌ தானே? விவிலிய‌ நூலை வாசிப்ப‌த‌ற்கு எம‌க்கு கிரேக்க‌ மொழி தெரிந்திருக்க‌ வேண்டுமா? என்ன‌வொரு அப‌த்த‌மான‌ ப‌தில் இது? 

உண்மையில் அவ‌ர் எதையும் ப‌டிக்க‌வில்லை. அதை ம‌றைப்ப‌த‌ற்காக ஜேர்மன் மொழியில் ப‌டித்த‌தாக‌ புளுகுகிறார். த‌ன‌து க‌ட்டுரையை வாசிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, யாருமே மார்க்ஸின் நூல்க‌ளை ப‌டிக்க‌வில்லை என்று அவ‌ர் நினைத்துக் கொள்கிறார். அதை த‌னது க‌ட்டுரையின் தொட‌க்க‌த்திலேயே கூறி விடுகிறார். 

அது மட்டுமல்ல, நான் கொடுத்த இணைப்புகளை கூட "ஏட்டுச் சுரைக்காய்" என்று நிராகரித்துள்ளார். அதில் ஒன்று நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் சொல்லப் பட்ட விடயங்கள். முன்னாள் சோவியத் குடியரசான மொல்டாவியா மக்களை பேட்டி கண்டிருந்தனர். மற்றைய இணைப்பு Le Monde எனும் பிரெஞ்சு பத்திரிகையில் வந்த கட்டுரை ஆகும்.

No comments:

Post a Comment