கம்யூனிச வெறுப்புக் காரணமாக, ஹிட்லர் சோவியத் யூனியனை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களை நச்சுவாயு அடித்து கொன்று குவிக்க திட்டமிட்டிருந்தான்!
"அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி தடுப்பு முகாம் பற்றிய ஆவணப் படம் பார்க்கக் கிடைத்தது. ( Auschwitz: The Nazis and the 'Final Solution'; http://www.imdb.com/title/tt0446610/) அதிலிருந்து கிடைத்த சில முக்கிய தகவல்களை இங்கே தருகிறேன். இலட்சக் கணக்கான யூதர்களை நச்சுவாயு அடித்து கொன்று குவித்த படியால் தீய வழியில் பிரபலமடைந்த முகாம் அது.
அங்கு யூதர்களை அங்கு கொண்டு செல்வதற்கு முன்னரே ரஷ்யர்கள் மீது பரிசோதிக்கப் பட்டது. அதாவது ஜெர்மன் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னரே, "கம்யூனிஸ்டுகள்" என்ற குற்றச்சாட்டில் இலட்சக் கணக்கான ரஷ்யர்கள் அல்லது ரஷ்ய யூதர்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.
போலந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பிரமாண்டமான தடுப்பு முகாமான அவுஷ்விட்ஸ் கட்டப்பட்டதன் பிரதானமான நோக்கம், தாழ்வான இனமாக கருதப் பட்ட சோவியத் மக்களை அழித்தொழிப்பது. (யூத இன அழிப்பு சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது.)நாஸிகளின் சோவியத் யூனியன் படையெடுப்பில் கைது செய்யப் பட்ட பத்தாயிரம் போர்க் கைதிகளை கொண்டு தான் அந்த முகாம் கட்டப் பட்டது. அந்தப் பத்தாயிரம் கைதிகளில் சில நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பட்டினியாலும், தோற்று நோய்களாலும் கைதிகள் மரணித்தனர்.
IG farben என்ற ஜேர்மன் பன்னாட்டுக் கம்பனி கண்டுபிடித்த செயற்கை இரப்பர் உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்கள் அவுஷ்விட்ஸ் சுற்றாடலில் கிடைத்தன. நிலக்கரி சுரங்கங்களும் அருகில் இருந்தன. அடிமை உழைப்பாளிகளை பயன்படுத்தி, அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்கம் IG farben கம்பனிக்கு இருந்தது. அந்த முதலாளித்துவ சுரண்டலுக்கு உதவுவதன் மூலம் நாஸிகளும் பலனடைந்தனர்.
சோவியத் படையெடுப்புக்கு வசதியாகத் தான், போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் எனும் இடத்தில் முகாம் அமைக்கப் பட்டது. அதாவது சோவியத் எல்லையில் இருந்து சில நூறு கி.மீ. தொலைவில் அந்த இடம் இருந்தது. இதன் மூலம் சோவியத் யூனியன் மீது படையெடுக்கும் திட்டமும், அதற்குப் பிறகும் சோவியத் மக்களை இனப்படுகொலை செய்யும் திட்டமும் நாஸிகளிடம் இருந்துள்ளமை உறுதியாகின்றது.
ஹிட்லரும், நாஸிகளும் யூதர்களை வெறுத்த அளவிற்கு கம்யூனிஸ்டுகளையும் வெறுத்தார்கள். ரஷ்ய யூதர்கள் பலர் போல்ஷேவிக் கட்சியில் இருந்தனர். அதனால், நாஸிகளை பொறுத்தவரையில் கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஒன்று தான். "கம்யூனிசம் என்றால் அது ரஷ்யா" தான் என்பது நாஸிகளின் பிரச்சாரமாக இருந்தது. (இன்றைக்கும் தமிழ் பேசும் நாஸி ஆதரவாளர்களுக்கு, கம்யூனிசம் என்றால் ரஷ்யா தான் மனதில் தோன்றும்.)
போலந்து எல்லையில் இருந்த பெலாரஸ் போன்ற சோவியத் யூனியனின் பகுதிகள் நாஸிகளால் ஆக்கிரமிக்கப் பட்டதும், அங்கிருந்து 3 மில்லியன் பேரளவில் போர்க் கைதிகளாக சிறைப் பிடிக்கப் பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், குறைந்தது 2 மில்லியன் பேரளவில் கொன்று குவிக்கப் பட்டனர்.
ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகள், யூதர்கள் அல்லது போரிடும் வயதில் இருந்த ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால், அவ்வாறு அழித்தொழிப்பது அதிக நேரம் எடுப்பதாகவும், தமது போர்வீரர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவதாகவும் நாஸிகள் நினைத்தார்கள்.
அதற்குப் பதிலாக, பெருந்தொகையான ரஷ்யர்களை இலகுவான முறையில் கொன்றொழிப்பது எப்படி என்று யோசித்தார்கள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்பன் மொனோக்சைட் நச்சு வாயு பிரயோகித்து பரிசோதனை செய்தனர். அதன் மூலம் பலரை சில நிமிடங்களில் கொன்று குவிக்க முடிந்தது. ரஷ்யர்கள் மீதான நச்சுவாயு பரிசோதனை வெற்றிகரமாக நடந்த பின்னர் தான், ஐரோப்பிய யூதர்கள் அங்கு கொண்டு வரப் பட்டனர்.
1941 ம் ஆண்டில் கூட, யூதர்கள் அவுஷ்விட்ஸ் முகாமுக்கு அனுப்பப் பட்டிருக்கவில்லை. அந்த வருடம், வட ஜெர்மன் நகரமான ஹம்பூர்க் மீது, பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அப்போது வீடுகளை இழந்த ஜெர்மன் இனத்தவர்களுக்கு புது வீடுகள் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஹம்பூர்க் யூதர்கள் போலந்தில் உள்ள லொட்ஸ் என்ற நகரில் உள்ள கெட்டோவில் (Ghetto) குடியமர்த்தப் பட்டனர்.
அந்தக் காலத்தில், போலந்து முழுவதும் யூதர்கள் நெருக்கமாக வாழ்ந்த நகர்ப் பகுதிகள், "கெட்டோ" என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப் பட்டிருந்தன. சேரிகள் போன்று காட்சியளித்த கெட்டோவில், ஏற்கனவே அங்கிருந்த போலிஷ் யூதர்கள், மிகவும் வறுமையான நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஜெர்மனியில் ஓரளவேனும் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஜெர்மன் யூதர்களுக்கு அந்த இடம் அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதார வேறுபாடு காரணமாக, ஜெர்மன் யூதர்கள் போலிஷ் யூதர்களை தாழ்வாகக் கருதும் வழக்கம் இருந்தது. திடீரென எல்லா யூதர்களும் ஒரே நிலைமையில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டுபோட்ட பின்னர் அமெரிக்காவும் யுத்தத்தில் குதித்தது. அப்போது ஹிட்லர் "சோவியத் யூனியன் யூதர்கள் மாதிரி, அமெரிக்க யூதர்களும் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக..." குற்றம் சாட்டினான். அன்றிலிருந்து யூதர்களையும் அழித்தொழிக்கும் திட்டம் ஆரம்பமானது.
No comments:
Post a Comment