தனது 90வது வயதில், 25 நவம்பர் 2016 அன்று காலமான முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிற்கு செவ்வணக்கம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் எண்ணிக்கை சமூகவலைத்தளங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கலக்கமடைந்த மக்கள் விரோத சக்திகள், மீண்டும் தமது அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ஒன்றில் அடிப்படை கல்வியறிவு இருக்க வேண்டும் அல்லது அனுபவ அறிவாவது வேண்டும். இரண்டும் இல்லாத தற்குறிகள் தான், பிடல் காஸ்ட்ரோ பற்றி அவதூறு பரப்பித் திரிகின்றன. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.
ஒரு தலைவர் எல்லோராலும் விரும்பப் பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பிரபாகரனை வெறுக்கும் தமிழர்களும், பிடல்காஸ்ட்ரோவை வெறுக்கும் கியூபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஈழத்தில் புலிகளின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அவர்களால் தடைசெய்யப் பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு தப்பியோடி அங்கு ஒன்று சேர்ந்தவர்.
அதே மாதிரியான சம்பவங்கள் கியூபாவிலும் நடந்துள்ளன. அங்கும் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், பிற கட்சிகள், இயக்கங்களை தடை செய்திருந்தது. ஈழத்தில் முன்பிருந்த மிதவாத தமிழ்த் தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் புலி ஆதரவாளர்களாக மாறினார்கள். அதே நிலைமை கியூபாவிலும் இருந்தது. மிதவாத கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் ஜூலை 26 இயக்க ஆதரவாளர்களாக மாறினார்கள்.
கியூபப் புரட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள், அருகில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் பலர் புரட்சிக்கு முந்திய அரசின் ஆதரவாளர்கள். அதே நேரம், மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சாரத் தரகர்கள் போன்றோரும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்குள் அடங்குவார்கள். புரட்சிக்குப் பிந்திய கியூபாவில் ஒரு அதிசயம் நடந்தது. விபச்சாரத் தரகர்கள், மற்றும் பல்வேறு கிரிமினல்களை கைது செய்து, ஒரு வழிப்பாதை பயணச் சீட்டு வாங்கி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்றி நாடுகடத்தினார்கள்!
கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்து, நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்த கியூபர் ஒருவர் எனது நண்பராக இருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி அப்போது அவரும் ஒரு காஸ்ட்ரோ எதிர்ப்பாளராகத் தானிருந்தார். (அப்படியானவர்களுக்குத் தான் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கொடுப்பார்கள் என்பது வேறு விடயம்.) இருப்பினும், ஒரு காலத்தில் தீவிரமாக காஸ்ட்ரோவை எதிர்த்து வந்த அவர், பிற்காலத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டார். ஒரு மேற்குலக நாட்டில் வாழும் பொழுது தான், பிடல் காஸ்ட்ரோ சொன்னவை யாவும் உண்மைகள் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக கூறினார்.
அவர் முதலில் ஸ்பெயின் வந்து சில காலம் தங்கியிருந்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் தான் காண்போர் எல்லாம் காஸ்ட்ரோ ஆதரவாளராக இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். தான் ஏதாவது குறை சொல்லி விட்டால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் நிலவும் பிரபாகரன் ஆதரவு அலையை இதனோடு ஒப்பிடலாம். அங்கும் யாரும் பிரபாகரன் பற்றி குறை சொல்ல முடியாது. உடனே சண்டைக்கு வருவார்கள்.
பிடல்காஸ்ட்ரோவை எதிர்க்கும் தமிழ் வலதுசாரிகள், ஜே.ஆர். ஜெயவர்த்தனேயும், காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்ட ஒரு புகைப் படத்தை, ஏதோ புதையலை கண்டுபிடித்த மாதிரி சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கி இருப்பார்களா என்பது சந்தேகமே.
பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, அல்லது சோவியத் யூனியனில் தங்கியிருக்க விரும்பாத அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது. பெரும்பாலும் மூன்றமுலக நாடுகளின் கூட்டமைப்பான அது, குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அங்கத்துவ நாடுகளில் உச்சிமகாநாடு நடத்துவது வழக்கம்.
இலங்கையில், கொழும்பு நகரில், 16–19 ஆகஸ்ட் 1976 ல் உச்சி மகாநாடு நடைபெற்றது. அணிசேரா நாடுகளின் விதிகளின் படி, மகாநாட்டை ஒழுங்கு படுத்தும் நாட்டின் அதிபர், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார். அவ்வாறு தான் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
3–9 செப்டம்பர் 1979 ம் ஆண்டு, கியூபாவில், ஹவானா நகரில் மீண்டும் மகாநாடு கூடியது. அப்போது அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை, ஜே.ஆர்.ஜெயவர்த்தனே பிடல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அப்போது எடுத்த படம் தான் அது.
1976 ம் ஆண்டு இலங்கையில் நடந்த அணிசேரா நாடுகளின் நாடுகளின் உச்சி மகாநாடு மூலம் தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ அறிமுகமானார். அன்று இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் அது தான் அறிமுகமாக இருந்திருக்கும். அன்று உச்சி மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் காஸ்ட்ரோவும், கடாபியும் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தனர். பொது மக்களும் அவர்களைப் பற்றிக் கதை கதையாக பேசிக் கொண்டனர்.
வட மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் பிடல் காஸ்ட்ரோ பிரமிப்புக்கு உரியவராக பார்க்கப் பட்டார். காஸ்ட்ரோ பற்றியும், கியூபப் புரட்சி பற்றியும் மனோரம்மியமான கதைகளும் உலாவின. சில தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பிடல்காஸ்ட்ரோ என்று பெயரிட்டிருந்தனர். இந்த விடயம் எண்பதுகள், தொண்ணூறுகளுக்கு பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அது மட்டுமல்ல, ஈழ விடுதலைக்கு ஆயுதமேந்திய போராளிகளும் காஸ்ட்ரோ என்ற பெயரை விரும்பிச் சூட்டிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருக்கும் காஸ்ட்ரோ என்ற புனைபெயர் இருந்தது. 2009 இறுதிப்போரரில் மரணிக்கும் வரையில் அவர் அந்தப் பெயரில் தானிருந்தார். அவரைத் தவிர பல பிடல்கள், காஸ்ட்ரோக்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தனர்.
விடுதலைப் புலிகளின் போராட்டமும் "கியூபாப் பாணியில்" இருந்ததை மறுக்க முடியாது. பல கெரில்லாத் தாக்குதல்கள், மினி முகாம் தாக்குதல்கள், கியூபப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளுக்கு அமைய அமைந்திருந்தன. அப்போது போராளிகள் விரும்பி வாசிக்கும் புத்தகமாக கியூப விடுதலைப் போராட்டம் இருந்தது.
1984 ம் ஆண்டு, "விடுதலைப் புலிகள்" என்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை வெளியானது. அதன் முதலாவது இதழில் பிடல்காஸ்ட்ரோவின் பேட்டி பிரசுரமானது. அப்போதே புலிகள் சோஷலிச கருத்துக்களை புறக்கணித்து, தீவிர தேசியவாதம் பேசி வந்தனர்.
இருப்பினும் அவர்களுக்கும் காஸ்ட்ரோ ஒரு ஆதர்ச நாயகனாக இருந்தார். அதற்கு வலுவான காரணம் இருந்தது. புலிகளை மாதிரி ஆயுதமேந்திய தலைமறைவு இயக்கம் கெரில்லா யுத்தம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதை, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ நிரூபித்துக் காட்டி இருந்தார். அது விடுதலைப் புலிகளை வெகுவாக கவர்ந்து இருந்ததில் வியப்பில்லை.
தொண்ணூறுகளுக்கு பிறகு ஏற்பட்ட உலக மாற்றங்கள் ஈழத்திலும் எதிரொலிக்காமல் இல்லை. சோவியத் யூனியனின் மறைவுடன் கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்று நம்பும் புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. உயர்கல்வி கற்று உத்தியோகம் பார்த்த காரணத்தால், அல்லது பொருளாதார வசதிகள் காரணமாக, முதலாளித்துவ விசுவாசிகளாகவும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் இருந்தனர்.
மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட அந்தத் தமிழ் இளைஞர்கள், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்பு சக்திகளாக பார்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் எதிரிகளாக இருந்த நாடுகளை எல்லாம், அவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் கியூபாவையும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் கற்றுக் கொண்டார்கள். அடிமைகள் வேறெப்படி தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவார்கள்?
இந்த மாற்றம், 2009 க்குப் பின்னர் (ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையால்) ஏற்பட்டது என்பது ஒரு பொய் பித்தலாட்டம். அப்படியானால், அவர்கள் அமெரிக்காவை தான் முதலில் எதிர்த்திருக்க வேண்டும். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, "புலிகள் பேச்ச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எச்சரித்திருந்தார். முள்ளிவாய்க்கால் சென்றால் அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று ஏமாற்றியதால், சிறு துண்டு நிலத்திற்குள் அகப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்கள் கனரக ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டனர்.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத மாதிரி, அமெரிக்க அடிவருடிகள் தமிழினப் படுகொலையை சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களது எஜமானான அமெரிக்க அரசும், சிறிலங்கா அரசும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்தின என்பதை மூடி மறைப்பார்கள். அப்படியான பாசாங்குக் காரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஸ்ட்ரோவின் மரணத்தில் தமது அரசியலை திணிக்கிறார்கள்.
தமிழ் மக்களில் பெரும்பாலானோர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது, ஏகாதிபத்திய அடிவருடிகளின் கண்களை உறுத்துகின்றது. அதனால், "தமிழர் நலன்" என்ற போர்வையில் காஸ்ட்ரோ எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர். டாலர்கள் பேசுகின்றன.
பழைய குருடி கதவைத் திறடி கதையாக, திரும்பவும் அதே ஐ.நா. தீர்மான நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். வருடக் கணக்காக தமிழர்களை இனப்படுகொலை செய்த அமெரிக்காவை கண்டுகொள்ள மாட்டார்களாம். ஆனால் இனப்படுகொலையாளி கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்தது கியூபாவின் மாபெரும் "தமிழினத் துரோகம்" என்கிறார்கள். இரட்டைவேடம் போடுகிறார்கள்.
இதே போலித் தமிழ்த் தேசியவாதிகள், மாக்கிரட் தாட்சர் காலமான போது கண்ணீர் வடித்தார்கள். யார் இந்த மார்க்கிரட் தாட்சர்? ஜே.ஆர். ஆட்சிக் காலத்தில் புலிகளை அழிப்பதற்கு பிரிட்டிஷ் SAS கூலிப்படையை அனுப்பியவர்! அவர் தமிழ் மக்களின் நண்பராம். ஆனால் ஒரு தோட்டா கூட அனுப்பாத பிடல் காஸ்ட்ரோ தமிழரின் எதிரியாம்.
அமெரிக்காவினால் விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் கைக்கூலிகளின், பிடல் காஸ்ட்ரோ பற்றிய பிதற்றல் இது: //பிடல் காஸ்ட்ரோ ஈழத்தில் தமிழினத்தை அழித்து முடித்த சிங்களத்தைப் பாராட்ட வேண்டும் என்றார்!//
தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு, எவனும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வர மாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்லப் படும் பொய் அது.
இலங்கைப் பிரச்சினை பற்றி பிடல்காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் ஏதாவது கருத்து தெரிவித்து இருக்கிறாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? 15 வருடங்களுக்கு முன்னரே, கடும் சுகயீனம் காரணமாக காஸ்ட்ரோ அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். அமெரிக்க கைக்கூலிகள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் கடந்த ஏழு வருடங்களுக்குள் நடந்தவை. கியூப அரசுப் பிரதிநிதிகளின் கூற்றுக்களை காஸ்ட்ரோவின் கூற்றாக திரிப்பதில் இருந்தே பொய் அம்பலமாகத் தொடங்கி விடுகிறது.
முதலில் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கு பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் தோற்றம் பெற்றதும், அதற்கு கியூபா அடிபணிந்து சென்றதும் வரலாறு. தனது தேசத்தின் ஒரு பகுதியில் இருக்கும் குவாந்தனமோ தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு தைரியமில்லாத கியூபாவிடம், ஏன் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்று கேட்பது மடத்தனமானது.
2001 ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்திருந்தது. அதற்குப் பிறகு உலகில் எல்லா நாடுகளும் தமக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிக் கொண்டன. இல்லாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கும் அச்சம் இருந்தது. (உண்மையிலேயே சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.)
சூடான் போன்ற பல நாடுகள் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கின. அவ்வாறான சூழ்நிலையில் "ஏன் கியூபா புலிகளை ஆதரிக்கவில்லை?" என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமானது. கியூபா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. ஏனென்று கேட்டால், அது தான் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் இல்லை. தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.
அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தன. தாம் வெளியிட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை உலகில் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தின. ஆகையினால், கியூபாவும் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்டது. அதற்கான காரணம் மிகவும் தெளிவானது.
அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றை அறிவித்திருந்தது. அப்படியான சூழ்நிலையில் தானும் அதற்கு ஆதரவளிப்பதாக சொல்வது ஒரு இராஜதந்திர நடவடிக்கை. ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளே அதற்கு ஆதரவளித்தன. ஐ.நா. மன்றத்தில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.
ஒரு பேச்சுக்கு, கியூபா புலிகளை (அல்லது அது போன்ற ஆயுதபாணி இயக்கத்தை) மறைமுகமாகவேனும் ஆதரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? கியூபா பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று அமெரிக்கா அதை ஆதாரமாகக் காட்டும். கியூபா மீது படையெடுப்பதற்கு நாள் குறிக்கப் படும். இவ்வாறு தான் அமெரிக்கா பல நாடுகளை அடிபணிய வைத்திருந்தது. அதனால், பனிப்போருக்கு பின்னரான உலகில் எந்த நாடும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் கீழ் புலிகளை அழிப்பதற்கு கியூபா மட்டும் ஆதரிக்கவில்லை, அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளும் அதே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. எதற்காக கியூபாவை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டும்? தமிழினத்தை அழித்ததற்கு பிடல்காஸ்ட்ரோ நன்றி தெரிவித்தாராம்! எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது? ஆதாரம் எங்கே?
இவர்களது லாஜிக் என்னவென்றால்: "புலிகளை அழிப்பது தமிழ் மக்களுக்கு அழிப்பதற்கு சமமானது. ஆகவே கியூபா தமிழர்களுக்கு எதிரானது." அதாவது, "காகம் கருப்பு நிறம், கந்தசாமி கருப்பு நிறம், ஆகவே கந்தசாமி ஒரு காகம்!" இது தான் இவர்களது முட்டாள்தனமான லாஜிக். இப்படி திரித்து விட்டு, "கியூபா தமிழர்களை அழிக்க நினைத்தது" என்று சுற்றும் ரீல்கள் இருக்கிறதே! அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு எல்லாவற்றையும் மிஞ்சி விட்டது.
இன்று சிரியாவில், ஐ.எஸ். (ISIS) இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று கியூபா உட்பட எல்லா உலக நாடுகளும் ஒத்து நிற்கின்றன. அதை "முஸ்லிம்களை அழிக்க துணை நின்றதாக" சொல்வீர்களா? ISIS எதிர்ப்பு நடவடிக்கை, உங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மத அழிப்பு ஆகாதா? உண்மையிலேயே, அது தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் லாஜிக்.
இந்த இடத்தில் ஓர் உண்மையை கூற வேண்டும். அமெரிக்காவில், தொண்ணூறுகளின் இறுதியில், விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அந்தத் தடையானது புலிகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்தது. அதனால், புலிகள் இயக்கம் பெருமளவு பணம் செலவளித்து தடையை நீக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
அதற்காக, அமெரிக்காவில் உள்ள பிரபல சட்டத்தரணியான ராம்சி கிளார்க் என்பவரை நியமித்திருந்தனர். புலிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு அவர் தலைமை தாங்கினார். (LTTE takes battle to the US courts) யார் இந்த ராம்சி கிளார்க்? ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அது மட்டுமல்ல, ஒரு தீவிரமான காஸ்ட்ரோ ஆதரவாளர்! அவர் இன்றைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசில் (TGTE) அங்கம் வகிக்கிறார்!! (Former US Attorney General Joins LTTE Senate)
ஏன் அன்று புலிகள் இன்னொரு வழக்கறிஞரை, குறிப்பாக ஒரு "காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை" நியமித்திருக்கலாமே? அது முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்காவில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு வழக்கறிஞர்கள் அனைவரும், புலிகள் மீதான அரசின் தடையை ஆதரித்தவர்கள் தான். அதனால், புலிகள் ஒரு இடதுசாரி வழக்கறிஞரை தேடிப் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ராம்சி கிளார்க் International Action Center (http://iacenter.org/) என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். அவரது அமைப்பு, நீண்ட காலமாக கியூபா மீதான பொருளாதார தடையை எடுக்குமாறு போராடிக் கொண்டிருந்தது. கியூபாவுக்கு ஆதரவான பல வழக்குகளில் ராம்சி கிளார்க் வாதாடியிருந்தார். அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான ஐந்து கியூபர்கள் தொடர்பான வழக்கை குறிப்பிடலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு தான், புலிகள் தமக்காக வாதாடுமாறு அவரை நியமித்திருந்தனர்.
இன்று சிலர் "புலி ஆதரவாளர்" என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, "கியூபாவும் காஸ்ட்ரோவும் தமிழினத்திற்கு எதிரானவர்கள்" என்ற விஷமத் தனமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், சில வலதுசாரி ஊடகவியலாளர்களும் இந்த எதிர்ப்பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஏ. மட்டுமல்ல, சோரோஸ் பவுண்டேஷன், யு.எஸ். எயிட் போன்ற பல நிறுவனங்கள் இதற்காகவே இலங்கையில் இயங்கி வருகின்றன. ஏகாதிபத்திய அடிவருடிகளை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஈழப்போர் முடிந்து விட்ட பின்னர் பிணங்களை கொத்துவதற்கு அமெரிக்க கழுகுகள் பறந்து வருகின்றன.
https://www.facebook.com/permalink.php?story_fbid=1711415859186530&id=100009543967822
ReplyDeleteபிரபாகரன் பேசினால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோ பேசினால் "தமிழினத் துரோகம்"! (மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.)
ReplyDelete"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?
அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?
இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?
ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.
எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?
அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?
கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மையும் அது தானே? தமிழ் நாடு விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களின் போராட்டத்தை ஆதரித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அது பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட, பல மடங்கு அதிகமான தமிழினத் துரோகம்.
excellent article bro.
ReplyDelete