லண்டனில் வசிக்கும் இரவி அருணாச்சலம் என்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர், முன்னொருகாலத்தில் இடதுசாரியாக இருந்து ஞானஸ்நானம் எடுத்து பின்னர் வலதுசாரியாக மாறியவர். அதன்விளைவாக,புலிகளுக்கு சார்பான தமிழ்த்தேசியம் பேசும் "ஒரு பேப்பர்" பத்திரிகையின் ஆசிரியராகும் பாக்கியம் பெற்றவர். அவர் பேஸ்புக் விவாதம் ஒன்றில், "வர்க்கப் போராட்டம் காலாவதியாகி விட்டது என்றும், தேசியவாதப் போராட்டமே நிரந்தரம் என்றும் கருத்துக்களை உதிர்த்துள்ளார்.
"ஏன் இடதுசாரிகள், பரிசுத்த தமிழ்த் தேசிய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?"
அதற்காக வலதுசாரிகள் முன்வைக்கும் வாதங்கள் ஏற்கனவே பலரும் அறிந்தவை தான்.
//"தோசைக்கடே மசால்வடே அப்பிடட எப்பா" என்று சொன்ன இடதுசாரிகளைத் தமிழ்த்தேசிய 'வலதுசாரிகள்' மறந்தா விடடார்கள்?// - இரவி அருணாச்சலம்
தென்னிலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிங்கள இடதுசாரிகள், "தோசைக்கடே வடே அப்பிட்ட எப்பா" (தமிழரின் உணவான தோசை, வடை எமக்கு வேண்டாம்.) என்று கோஷமிட்டனர். ஊர்வலத்தில் சென்ற சிலர் மட்டுமே அவ்வாறான இனவாதக் கோஷம் எழுப்பி இருந்தாலும், தமிழ்த் தேசியவாதிகள் அதனை இன்றைக்கும் நினைவுபடுத்தி வருகின்றனர்.
ஆனால், அதே தமிழ்த் தேசியவாதிகள், மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக கை உயர்த்திய ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற "இனத் துரோகிகளை" மூடி மறைத்து வருகின்றனர். ஏன்? மலையகத் தமிழர்களை நீங்கள் தமிழ்ச் சகோதரர்களாக கருதவில்லையா?
அரசுடன் ஒத்துழைத்த ஈபிடிபி போன்ற தமிழ்க் கட்சிகளை, யாராவது தமிழ்த் தேசியவாதிகள் என்று அழைக்கிறார்களா? அதே மாதிரி வலதுசாரி அரசுடன் ஒத்துழைக்கும் இடதுசாரிக் கட்சிகளை மாத்திரம் இடதுசாரிகள் என்று அழைப்பது முறையாகுமா? அவர்கள் ஏற்கனவே (சிங்கள) தேசியவாத ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் எடுத்து வலதுசாரிகளாக மாறியிருந்தவர்கள்.
இந்த கொள்கை மாற்றம் தமிழ் சமூகத்திலும் நடந்தது. வட்டுக்கோட்டை தீர்மானம் எழுதிய ஆனந்தசங்கரி, புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை..... இப்படிப் பல இடதுசாரிகளை குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட தமிழ் "இடதுசாரிகளும்", (தமிழ்த்) தேசியவாத ஞானஸ்நானம் எடுத்து வலதுசாரிகளாக மாறியவர்கள் தான்.
நீங்கள் தமிழ் இடதுசாரிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து தமிழ்த் தேசியவாதிகளாக்கிக் கொண்டீர்கள். அதே மாதிரி, அவர்கள் சிங்கள இடதுசாரிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சிங்கள தேசியவாதிகளாக்கிக் கொண்டார்கள். தமிழில் ஒரு பழமொழி உண்டு. "அத்தைக்கு மீசை முளைச்சா அவ சித்தப்பா." ஒருவர் வலதுசாரியத்தை ஏற்றுக் கொண்ட பிறகும், அவரை இடதுசாரி என்பது உள்நோக்கம் கொண்டது. கலியாணம் கட்டினவனை யாரும் பிரமச்சாரி என்று சொல்ல மாட்டார்கள்.
//கார்ல் மார்க்ஸ் சொன்ன ஒரு வாக்கியம் உங்களுக்குத் தெரியுமா, 'தேசிய இனங்களின் விடுதலையின் பிறகே வர்க்கப் புரடசி சாத்தியமாகும்' இவ்வாக்கியங்களைத் தேடி வாசியுங்கள். வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைந்த சோவியத் யூனியன் தேசிய இனங்களின் பெயரால் பிளவுபட்டதும் வர்க்கத்தின் பெயரால் பிளவுபடட ஜெர்மனி, தேசியத்தின் பெயரால் ஒன்றுபட்ட்தும் நம் கண்முன் நிகழ்ந்த ஒன்று. தேசியம் பற்றி பேசுவோர் வலதுசாரி என்று சொல்வோரின் கண், காமாலைக் கண்.//
- இரவி அருணாச்சலம்
இது ஒரு அபத்தமான திரிபுபடுத்தல். தேசிய இனங்களின் விடுதலைக்குப் பிறகே வர்க்கப் புரட்சி சாத்தியமாகும் என்று கார்ல் மார்க்ஸ் எங்கே சொன்னார்? ஆதாரம் தர முடியுமா?
ஐரோப்பாவில் உருவான தேசிய அரசுக்கள், பேரினவாத அரசுக்களாக மாறியதையும், பேரழிவு தரும் போருக்கு இட்டுச் சென்றதையும் கார்ல் மார்க்ஸ் கண்கூடாகக் கண்டவர். அதனால் போர்வெறிக்கு எதிராக போராடியவர்.
தேசியவாதம் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்பு பட்டது. சந்தைகளை விரிவு படுத்தவும், தக்க வைக்கவும் தேசியவாதம் அவசியமாகிறது. அது வளர்ச்சியடையும் பொழுது, தேசிய அரசுக்கள் வளங்களுக்காக மோதிக் கொள்ளும். அதன் விளைவு தான் 1ம், 2ம் உலகப் போர்கள்.
அந்த வகையில் "தேசியத்தால் ஒன்றுசேர்ந்த" ஜேர்மனியும், இன்னொரு உலகப் போருக்கு இட்டுச் செல்லும். தேசியம் கடந்த ஐரோப்பிய ஒன்றியம்(EU) என்ற பெருந்தேசிய அமைப்பில் ஜேர்மனி தான் தலைமை தாங்குகிறது. ஹிட்லர் படை பலத்தால் ஆக்கிரமித்த நாடுகளை, EU பண பலத்தால் ஆக்கிரமிக்கிறது.
பல்வேறு தேசியங்களாக பிரிந்த சோவியத் யூனியன், தீராத போர்களுக்குள் அகப்பட்டு சீரழிந்தது. உதாரணம் வேண்டுமா?
தேசியங்களுக்கு இடையில் நடந்த போர்களின் விபரம்:
- ஆர்மேனியா - அஸர்பைஜான் எல்லைப் போர்
- அஸர்பைஜான் (நாகார்னோ - கரபாக்)
- ஜோர்ஜியா(அப்காசியா மற்றும் தெற்கு ஒசேத்தியா)
- ரஷ்யா (செச்னியா)
- உக்ரைன் (ரஷ்ய சிறுபான்மையினர்)
- மால்டாவியா (திரான்ஸ் நிஸ்திரியா)
- தாஜிகிஸ்தான் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள்)
பல்வேறு தேசியங்களாக பிரிந்த யூகோஸ்லேவியாவில் நடந்த போர்களின் விபரம்:
- ஸ்லோவேனியா
- குரோவாசியா
- பொஸ்னியா
- கொசோவோ
சோவியத் யூனியனும், யூகோஸ்லேவியாவும், தற்போதும் வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைந்து இருந்திருந்தால், ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட தீர்க்கப் பட்டிராது. பல்லாயிரக் கணக்கான மக்களை பலி கொண்ட இனப்படுகொலைகளும் தவிர்க்கப் பட்டிருக்கும்.
இதிலே ஒரு வேடிக்கையான முரண்நகையை அவதானிக்கலாம். வர்க்கத்தால் ஒன்று சேர்ந்திருந்த யூகோஸ்லேவியாவில் இருந்து, பேரழிவு தந்த யுத்தங்களின் பின்னர் பிளவு பட்ட தேசிய இனங்கள், இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு போட்டி போடுகின்றன!
"வர்க்க சோவியத் யூனியன்" கூட்டமைப்பில் இருந்து பிரிந்த பால்ட்டிக் நாடுகள் முதலாளித்துவ சோவியத்தில் (ஐரோப்பிய ஒன்றியம்) கூட்டுச் சேர்ந்துள்ளன. மேலும் நேட்டோவில் சேர்ந்து புதிய உலகப் போருக்கு தயாராகி வருகின்றன.
அதாவது சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்துள்ளன. இது தானா "தேசிய இனங்களின் விடுதலை"?
"முதலாளி வர்க்கத்தினரின் தேசியவெறி ஒரு அகந்தை. அவர்களுடைய பாசாங்குகள் அனைத்துக்கும் தேசியம் ஒரு உடை மட்டுமே. அது நிரந்தரமான இராணுவங்களை கொண்டு சர்வதேசப் போராட்டங்களை நிரந்தரப் படுத்துவதற்கு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள உற்பத்தி செய்பவர்களை மற்ற நாடுகளில் உள்ள சகோதரர்களுக்கு எதிராகப் போராடச் செய்து அவர்களை அடிமைப் படுத்துவதற்கு ஒரு வழியே. தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையின் முதல் நிபந்தைனையான சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பதற்கு ஒரு வழியே."
-கார்ல் மார்க்ஸ் (சோஷலிஸ்ட் புரட்சி, பக்கம் 220)
No comments:
Post a Comment