கனடாவில் வாழும் பிரபலமான அரசியல் ஆர்வலரும், இலக்கிய விமர்சகருமான நடராஜா முரளிதரனுக்கும் எனக்கும் இடையில் பேஸ்புக்கில் நடந்த விவாதத்தை இங்கே தொகுத்துத் தருகின்றேன். பொதுவுடைமை மற்றும் சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலக ஊடகங்களினால் செய்யப்படும் பரப்புரைகளை உண்மையென்று நம்புவோருக்கு பதிலடி கொடுக்க இது உதவும். பலரது சந்தேகங்களை தீர்க்க உதவும்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடராஜா முரளிதரன், முன்னொருகாலத்தில் சுவிட்சர்லாந்திற்கான விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் எழுந்த முரண்பாடுகளால் விலகி, கனடாவில் அகதித் தஞ்சம் கோரி, தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார். திரு.முரளிதரன் இன்றைக்கும் ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் அதிக அக்கறை கொண்டவராகவும், சமகால இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராகவும் காணப் படுகின்றார்.
கேள்வி: (Nadarajah Muralitharan) இதை எழுதியுள்ள "கலை" முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சென்று அங்குள்ள புத்திஜீவிகள், தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் பொதுவுடமைக்கட்சி அங்கத்தவர்கள் என்று சிலரையாவது சந்தித்துப் பேசி இது குறித்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை குறிப்பிடக் கூடியதாக இருந்திருக்கும். இதற்கான வசதி அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் அப்படி எழுதுவதில்லை. அவர் சில புத்தகங்களையே நம்பி வாதங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்த அரசுகள் தங்களுக்கான தத்துவத்தை ஊட்ட முனைந்திருக்கிறார்கள் என்பதே எனது தரப்பு. அது உலகம் எங்கணும் நடந்திருக்கிறது. ஆயினும் வீழ்ச்சியடைந்த... அல்லது தங்களது பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா? என்பதையே நான் உரையாட விரும்புகின்றேன்.
பதில்: நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? தொண்ணூறுகளுக்கு பிறகு, ஏராளமான ரஷ்யர்கள் நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களில் சிலர் எனது நண்பர்களாக இருந்தனர். முன்பு சோவியத் யூனியனில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, நானே வெள்ளை ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன்.
//அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது// எதையும் ஆராயாமல் எழுந்தமானமாக பேசுவது தவறு. இது பற்றி நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது வலைப்பூவில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் நிராகரித்ததாக கூறுவது ஒரு மோசடி. ஏற்கனவே மேற்குலக ஊடுருவல்கள் இருந்தன. கோர்பசேவ் ஆட்சிக்கு வந்ததும் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படையாக நடந்து கொண்டார். அது ஊடுருவலுக்கு மேலும் வழிவகுத்தது. எல்சின் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டார். அங்கு நடந்ததும் ஒரு சதிப்புரட்சி. முதலாளித்துவ ஆதரவாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். மக்கள் அங்கீகாரத்துடன் அது நடக்கவில்லை. அப்படியானால் அக்டோபர் கிளர்ச்சி ஏன் நடந்தது? (பார்க்க: 3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி)
கேள்வி: ஏறத்தாள 70 வருடங்கள் நன்னெறிப் பாடம் புகட்டப்பட்ட ரஷியாவில் இன்று நடைபெறுகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்தீர்களானால் விளையாடுகின்ற கறுப்பின வீரர்களைப் பார்த்து நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும் , கிண்டலடிப்பதையும் காணலாம். இது மற்றைய முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வெட்கக் கேடாக இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.
பதில்: //நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும்// சோவியத் யூனியன் இருந்த காலத்தில் நடந்திருந்தால் அவர்கள் ஜெயிலுக்கு போயிருப்பார்கள். நீங்கள் அதை மனித உரிமை மீறல் என்று கண்டித்து இருப்பீர்கள். முதலாளித்துவம் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுக்கிறது. நிறவெறிக்கும் சுதந்திரம். இப்போ உங்களுக்கு திருப்தி தானே? அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்... நிறவெறிக்கும் சுதந்திரம்... இதைத் தானே எதிர்பார்த்தீர்கள்?
//பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.// இது முதலாளித்துவவாதிகளின் செயல். நீங்க என்ன சேம் சைட் கோல் போடுறீங்க? போலந்தும் அண்மையில் கத்தோலிக்க சபையுடன் சேர்ந்து கருக்கலைப்பு தடைச் சட்டம் கொண்டு வந்தது. அயர்லாந்தில் எப்போதுமே இருந்து வருகின்றது. என்ன ஸார் குழம்பிப் போனீங்களா?
கேள்வி: முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். இன்று நடைபெறுகின்ற தேர்தல் அமைப்பிற்கு ஊடாகக் கொம்யூனிஸ்ட் கட்சியினால் ஏன் அங்கு தேர்தலில் வெல்ல முடியாமல் உள்ளது ? அங்குள்ள மக்கள் அங்கு நடைமுறையில் இருந்த பொதுவுடமை ஆட்சியாளர்களை வெறுத்தார்கள். நிராகரித்தார்கள். அது கொர்பச்சோவின் வழியாக நிகழ்த்தப்பட்டது. சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பதில்: நீங்கள் தான் முழுப் பூசணிக்காயை மறைக்கிறீர்கள். எதையும் ஆராயாமல் பேசுகின்றீர்கள். முதலாளித்துவவாதிகள் ஆளும் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். பண பலத்தால் அடக்கப் பார்ப்பார்கள். அவர்கள் புட்டின் மாதிரி ஒருவரை பதவியில் அமர்த்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு விட மாட்டார்கள். வெளிப்படையாக நடக்கும் தேர்தல்கள் மட்டுமே உங்களது கண்களுக்கு தெரிகின்றன. அதற்குப் பின்னால் திரைமறைவில் நடக்கும் சங்கதிகள் வெளியே வருவதில்லை. முதலாளிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் ஆட்சி இது.
//சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.// சதிப்புரட்சியில் ஈடுபட்ட கும்பல்கள் ஒரு சில இடங்களில் சிலைகளை உடைத்தன. அதை சதிப்புரட்சி ஆதரவாளர்கள் தான் கொண்டாடினார்கள். ஆனால், பெரும்பாலான சிலைகள் இன்னமும் உள்ளன. நம்பாவிட்டால் நீங்களாகவே நேரில் சென்று பாருங்கள். உக்ரைனில் இருந்த லெனின் சிலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது உடைக்கப் பட்டன. அது செய்தியிலும் வந்தது.
கேள்வி: வரலாற்றுப் பெருமை வாய்ந்த சோசலிசப் பாரம்பரியத்தில் வந்த ரஷியாவில்..... சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ? இது குறித்த ஆச்சரியத்தின் வெளிப்பாடே எனது குறிப்பு!
பதில்: //சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ?// எதற்காக ருவாண்டாவிலும், இலங்கையிலும் இனவாதம் கூடுதலாக இருக்கிறது? பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் பொழுது அவை கூடவே வரும். மேற்குலக நாடுகளில் அவை வெளித்தெரியாமல் இருப்பதற்கு காரணம் அங்குள்ள செல்வந்த நிலைமை. வேலைவாய்ப்புகள். மேற்குலகிலும் எந்தவொரு நாட்டிலாவது பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட்டல், வேலைவாய்ப்புகள் குறைந்தால், நிறவாதமும், இனவாதமும் அதிகரிப்பதை காணலாம். உதரணத்திற்கு, கிரீஸ். அமெரிக்காவில் பொலிசாரால் கறுப்பின மக்கள் அடிக்கடி சுட்டுக் கொல்லப் படுகின்றனர். அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் வெளிப்படையாகவே இனவாதம், நிறவாதம் பேசுகின்றார். அதை எல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் மறைக்கும் காரணம் என்னவோ?
கேள்வி: சோவியத் யூனியனிலும் மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் பொதுவுடமை அரசுகள் தோல்வியுற்றதற்கு அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்ட அரசிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தது. சோவியத்தில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நிலமைகள் அமையவில்லை. இந்த மைய்ய அரசுகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் பெருங்கவனம் செலுத்தாமல் தொழிற்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டங்களையே அமுல்படுத்தின. மேற்கத்தேய அரசுகளுடனான பனிப்போரினால் மொத்த தேசிய வருவாயின் பெரும்பகுதி ஆயுத உற்பத்திக்கும் அணு ஆராய்ச்சிக்கும் விண்வெளி ஆய்வுக்கும் போய் சேர்ந்தது. இது மிகப்பெரிய பிழையான அணுகுமுறையாகும். இந்தத் தவறினால் சோவியத் யூனியன் மிகப்பெரிய உணவுத்தட்டுப்பாடுகளைச் சந்திக்கலாயிற்று. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது. வறுமை உருவாகியது. உணவுப் பொருட்களை முதலாளித்துவ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களுக்கு பொதுவுடமை ஆட்சி முறைமையில் அதிருப்தி ஏற்பட்டு ஆட்சியை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
பதில்: பனிப்போர் காரணமாக ஏற்பட்ட ஆயுதப் போட்டி பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது உண்மை தான். ஆப்கானிஸ்தான் போரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அது சோவியத் யூனியனையும், பிற சோஷலிச நாடுகளையும் மட்டும் பாதித்தது என்று சொல்வது பொய். மேற்குலக நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. எண்பதுகளில் மேற்குலகில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக இருந்தது. உண்மையில், அரசியல் சூழ்ச்சிகளை விரைவு படுத்தி சோஷலிச நாடுகளை உடைத்தும் அதற்காகத் தான். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோஷலிச நாடுகளை காலனிகளாக சேர்த்துக் கொண்டது. நேட்டோவும் அவர்களை சேர்த்துக் கொண்டது. அதனால் அமெரிக்க ஆயுதங்களுக்கு புதிய சந்தை கிடைத்தது. அதனால் தான், மேற்குலகம் தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனால் உங்களுக்கும் தெரியாது.
கேள்வி: முதலாளித்துவ நாடுகளை ஒப்பிட்டு உதாரணம் காட்டாதீர்கள். அது பிழையானது. மோசடியானது. உதவாக்கரையானது என்று கூறி நிராகரித்துக் கொண்டு மனித சமூகத்தை மீட்கப் புறப்பட்ட நாடுகளின் அணுகுமுறையும் அது போன்றதே என்று பல இடங்களில் ஒப்புநோக்கி எழுதிக் கொண்டிருப்பதை என்னால் உள்வாங்க முடியாதுள்ளது.
பதில்: நீங்கள் குறிப்பிடும் "சோஷலிச" நாடுகள் கூட உண்மையில் முதலாளித்துவ நாடுகள் தான். இனவாதம் வளர்வதற்கு 25 வருட கால முதலாளித்துவம் போதாதா? இது ஒப்பீடு அல்ல. பொருளாதாரம். ஒரு நாட்டில் முதலாளித்துவ பொருளாதாரம் இருந்தால், அங்கு இனவாதமும், நிறவாதமும் தலைவிரித்தாடும். அது எதிர்பார்க்க வேண்டிய விடயம். அமெரிக்காவில் நிறவாதம் இன்னமும் மறையாமல் இருக்கிறது. ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளில் முன்னொரு காலத்தில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அந்தக் காலத்தில் நிறவாதம், இனவாதம் இருக்கவில்லை. ஆனால், கடந்த தசாப்த காலமாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றது. வறுமை அதிகரிக்கிறது. கூடவே இனவாதம், நிறவாதமும் அதிகரிக்கிறது. முன்னாள் சோஷலிச நாடுகளும் கடந்த 25 வருடங்களாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. அங்கு வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மேற்குலகை விட அதிகமாக உள்ளது. அதனால் நிறவாதம், இனவாதம் வளரும் தானே? இதற்காக நீங்கள் முதலாளித்துவத்தை அல்லவா குறை கூற வேண்டும்?
கேள்வி: அப்படியாயின் 25 வருடங்களுக்கு முன் வேறு நிலை இருந்தது என்கிறீர்களா ?
பதில்: ஆமாம். நிச்சயமாக. பொருளாதரங்களை ஒப்பிடுங்கள். நாடுகளை அல்ல.
கேள்வி: சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் வெறுமனே பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல காரணம்! அந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட கடுமையான சர்வாதிகார ஆட்சி அமைப்பு முறைமைகளினால் பொதுமக்களுக்கு நிறைய அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தன. ரூமேனியாவில் சசெஸ்குவும் மனைவியும் அரசனும் அரசியுமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்ராலினின் ஆட்சிக் காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என எண்ணிறைந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சைபீரியச் சிறை நிறைந்து வழிந்தது. ஸ்ராலினின் ஆட்சி கொடூரமான சர்வாதிகார ஆட்சியாக அமைந்தது. வட கொரியாவில் பரம்பரை மன்னர் ஆட்சி தொடருகிறது.
பதில்: இவையெல்லாம் வழமையான எதிர்ப் பிரச்சாரங்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் மக்கள் தமது பொருளாதார நலன்களை மட்டுமே சிந்திப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை. அமெரிக்காவில் ஒபாமா ஆண்டாலும், புஷ் ஆண்டாலும் ஒன்று தான். அவர்கள் தமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மேலும் அந்த நாட்டில் இரு கட்சி சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் போட்டி போடும். ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது.
முன்னாள் சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது ஒரு பொய்ப் பிரச்சாரம். ஜனநாயகம் என்பது நீங்கள் நினைப்பது போல பொதுத் தேர்தல்கள், பல கட்சி ஆட்சி முறை மட்டுமல்ல. அது ஒரு வகை ஜனநாயகம். முதலாளித்துவம், பாராளுமன்ற முறைமை நிலவிய ஆரம்ப காலங்களில் மேற்குறிப்பிட்ட ஜனநாயகம் இருக்கவில்லை. கடுமையான சர்வாதிகார ஆட்சி நடந்தது. ஜனநாயகம் வந்த போதும், பணக்காரர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப் பட்டது.
சோஷலிச நாடுகள் இன்னொரு வகையான ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன. ஒரு தேசத்திற்குள், தாம் விரும்பியவாறு ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. கிராமிய மட்டத்தில், மாவட்டங்களில், மாகாணங்களில் நடக்கும் தேர்தல்களில் தனி நபர்கள் போட்டியிடுவார்கள். கட்சி சார்பாக மட்டுமல்லாது, சுயேச்சையாகவும் போட்டியிடலாம். ஆனால், பணபலம் காட்டி வெல்ல முடியாது.(அமெரிக்காவில் நிலைமை வேறு. மில்லியன் கணக்கான டாலர்கள் செலவளித்தால் தான் ஜெயிக்க முடியும்.)
ஒரு சோஷலிச நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப் படுவார். நீங்கள் குறிப்பிட்ட ஸ்டாலின், ஸௌசெஸ்கு எல்லோரும் ஜனநாயக வழியில் பதவியைப் பிடித்தவர்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை கூடும் பாராளுமன்றம் அவர்களது பதவிக் காலத்தை நீடிப்பதுண்டு. சிலநேரம், பிரித்தானியா போன்ற பாராளுமன்ற - மன்னராட்சி நாடுகளில், மகாராணி அல்லது மன்னர் இருப்பதைப் போன்ற சம்பிரதாயத் தலைவராகவும் இருப்பார். பிரித்தானியா மன்னருக்கு அதிகாரம் இல்லையென்று ஒரு சாட்டு சொல்லாதீர்கள். மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. அவரது ஒப்புதல் இன்றி எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாது. மேலும் அந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தில் மன்னர் குடும்பமும் ஒன்று.
கேள்வி: சோசலிச ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அங்கு சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தன. தனி மனித விருப்புகள் நசுக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது உழைப்புக்கும் திறமைக்கும் ஆற்றலுக்கும் அமைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் இயல்பாக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தேவையின் அடியில் வருமானத்தைக் குறைத்து திணிக்கப்படுகிற சமத்துவம் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அடுத்தவர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தாங்களே வாழ விரும்பினர். பொது உடமை...கூட்டுறவு வாழ்க்கை.... தேவைக்கு ஏற்ற சம்பளம் ஆகியவற்றை அடிப்படைகளாக கொண்டு உருவாக்கப்படும் சமத்துவத்தை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திர மனிதர்களாக வாழ அந்த மக்கள் விரும்பினார்கள். இதுதான் மனிதர்களின் அடிப்படை இயல்பு! அங்கு நிகழ்ந்த பொதுவுடமை ஆட்சி முறைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதுவும் அங்கு நடைபெற்ற பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
பதில்: இதற்கும் ஏற்கனவே பதில் அளித்து விட்டேன். நீங்கள் குறிப்பிடும் அந்த "மக்கள்" யார்? சுயநலவாதிகள், பணத்தாசை பிடித்தவர்கள், தன்னலம் கருதுவோர், செல்வந்தர்கள், முதலாளிகள்.... இவர்களைப் பற்றியது தான் உங்களது கவலை முழுவதும். இதைத் தான் வர்க்கப் பாசம் என்று அழைப்பார்கள். அதாவது, மேட்டுக்குடி, மத்தியதர வர்க்கத்தினர் மீது உங்களுக்கு இயல்பாகவே அனுதாபம் எழுகிறது. அவர்களது நலன்களை பற்றி மட்டுமே கவலைப் படுகிறீர்கள்.
ஏற்கனவே சொன்னேன். மக்கள் மக்கள் தான். சோவியத் மக்களும், பல தரப்பட்ட அரசியல் கொள்கையை நம்புகிறார்கள். அதில் ஒரு பிரிவினரை பற்றி தான் நீங்கள் சொன்னது. ஆனால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பற்றி நீங்கள் அக்கறைப் படவில்லை. ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ சமுதாயத்தில் அவர்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? ஒரு இடத்தில் மேடு இருந்தால் அதுக்கு அருகில் பள்ளம் இருக்கும். அதே மாதிரி பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆவான். ஏழை மென்மேலும் ஏழை ஆவான். ஐயோ பாவம் பணக்காரன் கஷ்டப் படுகிறானே என்று நீங்கள் பரிதாபப் படுகிறீர்கள்.
கேள்வி: கலை.... அப்படி நான் பணக்கார வர்க்கத்துக்காகப் பரிதாபப்படுகிறேன் என்ற மாயையைத் தயவுசெய்து ஏற்படுத்த வேண்டாம். நான் அங்கு நடைபெற்ற உண்மைகளையே பேச விரும்புகிறேன். வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதால் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை.
பதில்: உங்களது கவலை முழுவதும் பணக்காரர்கள் பற்றியது தான். அது மாயை அல்ல, உண்மை. கனடா மாதிரியான மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனிநபர்வாத தத்துவத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். அதற்குக் காரணம், அப்போது தான் பணக்காரர்களிடம் எவ்வாறு செல்வம் சேர்கிறது ஆராய மாட்டீர்கள். அவர்கள் தீய வழியில் சேர்த்திருப்பார்கள்... பேராசை பிறப்புரிமை அல்லவா? செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத சுயநலம் பெரிதல்லவா? நாங்களும் அப்படியே இருக்க வேண்டாமா? எல்லோருக்கும் வேலை வாய்ப்பிருந்ததால் அது தப்பில்லையா? எல்லோரும் கல்வி கற்பது கூடாது அல்லவா? எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைப்பது அநியாயம் அல்லவா? எல்லோரும் மூன்று வேளையும் சாப்பிடுவது கூடாது அல்லவா? அந்த உரிமைகளை வழங்கிய சோவியத் யூனியனும், சோஷலிச நாடுகளும் நாசமாகப் போகட்டும். இப்போது இலட்சக் கணக்கானோருக்கு வேலை இல்லை, செலவுக்கு பணம் இல்லை, பிள்ளைகளுக்கு படிப்பு இல்லை, மருத்துவ வசதி இல்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை. இப்போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குமே? ஊர் உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று கல்நெஞ்சக்காரர்களாக வாழ வேண்டும். அது தானே உங்கள் கொள்கை? நல்ல தத்துவம்!
இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் சும்மா வரவில்லை. சோவியத் யூனியன் உருவான பின்னர் தான், உலகம் முழுவதும் நாங்கள் இன்று அனுபவிக்கும் சலுகைகள் கிடைத்தன.
சோவியத் சாதனைகள்:
1. இலவசக் கல்வி
2. இலவச மருத்துவம்
3. அனைவருக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு
4. இலவச குழந்தை பராமரிப்பு
5. (வெளிநாடுகளுக்கும்) இலவச சுற்றுலாப் பயணம்
6. வீட்டு வசதி, வாடகை மிக மிகக் குறைவு, மின்சாரம், எரிவாயு செலவு மிகவும் குறைவு.
7. மிகக் குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து சேவை.
சோவியத் யூனியனால் உலகம் முழுவதும் கிடைத்த நன்மைகள்:
1. எட்டு மணி நேர வேலை
2. வருடத்திற்கு ஒரு மாதம் விடுமுறை.
3. சர்வசன வாக்குரிமை பெண்களுக்கும்
கேள்வி: சோவியத் யூனியனுக்கு நாம் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான் வேறு வகையான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆகவே எங்களைக் குற்றம் சாட்டுவது அடாத்து.உலக வரலாறு நிலப்பிரபுத்துவத்தில் இருந்து இருந்து முதலாளித்துவத்துக்குள் நுழைந்த போது சில சீர்திருத்தங்களும் சில மாற்றங்களும் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சீர்திருத்தவாதிகளும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தார்கள். பொதுவுடமைக் கொள்கைகள் உலகில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தின என்பதில் எனக்கு எவ்வித மறுப்பும் கிடையாது. இங்கு உங்களோடு நான் கதைப்பது சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் பற்றியே!
பதில்: // சோவியத் யூனியனுக்கு நாம் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை// இங்கே "நாம்" என்பது யார்? முதலாளிய வர்க்கத்தை குறிக்கிறதா? CIA நிதியில் இயங்கிய Radio Free Europe எப்படியான பிரச்சாரம் செய்தது தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? மேற்கு ஐரோப்பாவில் அகதி தஞ்சம் கோருவோருக்கு வேலையும், இருப்பிடமும் கொடுக்கும் முறை ஏன் எப்போது வந்தது? மேற்கு ஐரோப்பாவுக்கு சோஷலிச கிழக்கு ஐரோப்பிய அகதிகளை கவர்ந்திழுக்க கொண்டு வந்த திட்டம் அது. உண்மையில் மேற்கில் சம்பளம் அதிகம் தான். இலகுவாகக் கிடைக்கும் கார் போன்ற ஆடம்பரப் பாவனைப் பொருட்களும் உண்டு.
அதிகம் போகத் தேவையில்லை. நீங்கள் தமிழர்களைப் பாருங்கள். எத்தனை பேர் மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் மயங்கி வருகிறார்கள்? ஐரோப்பா வந்தவுடன் சொந்த வீடு, கார், என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அதே நிலைமையில் தான் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த அகதிகளும் இருந்தனர்.
RFE வானொலியும் "மேற்கு ஐரோப்பாவுக்கு வாருங்கள்... தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது..." என்று ஆசை காட்டியது. இதை விட BBC, VOA வானொலிகளும் அந்த மக்களை குறி வைத்து பிரச்சாரம் செய்கின்றன. நமது மக்களில் எத்தனை பேர் அமெரிக்க படங்களை பார்த்து விட்டு மேற்குலகில் எல்லோரும் பணக்கார வாழ்க்கை வாழ்வதாக நினைக்கிறார்கள் தெரியுமா? அதே தான் இங்கேயும்...
சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் என்று மக்கள் எதிர்பார்க்கவுமில்லை, விரும்பவுமில்லை. மேற்கத்திய கைக்கூலிகளால் நடத்தப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை. போலந்தில் மட்டும் விதிவிலக்கு. ஆனால் போலிஷ் மக்கள் கத்தோலிக்க அடிப்படைவாதிகளாகவும், தேசியவாதிகளாகவும் இருந்தனர். அரசியலில் கத்தோலிக்க மத நிறுவனத்தின் தலையீட்டை தடுக்க முடியவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் கட்சிக்குள் இருந்த முதலாளிய ஆதரவாளர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள்.
பெரும்பாலான மக்களுக்கு என்ன நடக்கிறதென்பது தெரியாது. பலரது நினைப்பு என்னவென்றால், சோஷலிச காலத்தில் அனுபவித்த சலுகைகள் அப்படியே இருக்கும் என்பது தான். ஆனால் முதலாளித்துவம் நாட்டைக் கைப்பற்ற இடம் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பிறகு தான் தெரிந்தது. அரபிக் காரனின் கூடாரத்திற்குள் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை தெரியும் தானே?
கேள்வி: நாம் என்பதில் நான் என்பவன் இன்றைக்கும் கனடாவில் எவ்வித அடிப்படை உரிமைகளும் அற்று வாழ்பவன். எப்பவும் என்னைக் கனடிய அரசு நாடு கடத்த முடியும். மற்றும் எவ்வகையான அதிகார அமைப்புகளையும் சார்ந்து இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஒரு சாமானியனாகவே எனது கருத்துகளை இங்கு முன் வைக்கின்றேன். 18 ஆம் நூற்றாண்டில் உரிமைகளுக்காக பிரிட்டனிலும் பிரான்சிலும் நிகழ்ந்த போராட்டங்கள்! பிரிட்டனின் "சாட்டிஸ்ட்" இயக்கம்! Chartism, British working-class movement for parliamentary reform named after the People’s Charter, a bill drafted by the London radical William Lovett in May 1838...
பதில்: நீங்கள் இப்போ தான் சார்ட்டிஸ்ட் இயக்கம் பற்றிப் படிக்கிறீர்கள். உலகம் எங்கேயோ சென்று விட்டது நண்பரே! விஞ்ஞான சோஷலிசம் உருவாகி 150 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் குறிப்பிட்ட சோஷலிச நாடுகள் எல்லாம் அதை நடைமுறைப் படுத்தி ஓய்ந்து விட்டன...
கேள்வி: நல்லது.... உங்களது உலகம் அனைத்தையும் கற்றுக்கொண்ட மேதமைக்காக! வெறும் சோவியத்தில் மட்டும் அனைத்துமே நிகழ்ந்தது என்று நீங்கள் போர்த்த முனையும் போர்வைக்கு அப்பால் பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன என்பதை சுட்டுவதற்காகவும்... ஞாபகப்படுத்துவதற்காகவுமே "சாடிஸ்ட்" பற்றிக் கொணர்ந்தேன்! இவ்வகையான எண்ணிறைந்த போராட்டங்கள் வழியாகத்தான் மனித வரலாறு நகர்ந்திருந்திருக்கின்றது. மற்றும் நான் வரலாற்றைக் கற்றுக்கொண்டிருக்கும் "எளிய மாணவன்" தான்! இதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை.
பதில்: அதைத் தான் நானும் சொல்கிறேன்: //பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன // ஏற்கனவே உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி பிரான்ஸ் நாட்டில் தோன்றியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் வாசித்தும் இருக்கிறீர்கள். பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள் தான் எடுத்ததற்கு எல்லாம் ரஷ்யா... ரஷ்யா... என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் விளங்கப் படுத்தி இருக்கிறேன். (அதையும் வாசித்து இருக்கிறீர்கள்.) நீங்கள் இங்கு குறிப்பிட்ட சாட்டிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, உத்தோப்பியா சிந்தனையும் 18 ம் நூற்றாண்டில் இருந்தது. உலகில் ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்கும் அனைவருக்கும் செல்வம் பகிர்ந்தளிக்கப் படுவதற்கும், 19 ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியான சோஷலிச கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன. அதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பணக்காரருக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு மாயை என்றீர்கள். அதுவே உங்களது மனச்சாட்சி. அதாவது உங்களால் பணக்காரர்களை நியாயப் படுத்த முடியவில்லை.
கேள்வி: பிரான்ஸ் பற்றி நீங்கள் குறிப்பிட்டது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எல்லையைத் தாண்டி அதீதமாக எதனையும் ஆகா...ஓகோ...என்று மெச்சுகிற பொழுது அதன் நம்பகத்தன்மை தகர்ந்து விடுகிறது. நடுநிலையோடு வரலாறுகள் அனைத்தையும் ஆராய வேண்டியுள்ளளது. அதன் மூலமே தவறுகளையும், பிழைகளையும் களைய முடியும். "சுயவிமர்சனம்" என்பதன் அர்த்தம் என்ன ? சுயவிமர்சனம் இல்லாமல் வரலாற்றை முன்னோக்கி நகர்த்த முடியுமா ? விஞ்ஞானம் என்கிறீர்கள். அது என்ன ? அணு குறித்த இரசாயனவியலின் ஆரம்பகர்த்தா டோல்ரன். அவர் வகுத்தளித்த அடிப்படைகளில் இருந்துதான் அணு விஞ்ஞானம் முன்னேறியது. ஆனால் இன்று "டோல்ரனின் அணுக் கொள்கை" தவறானவை என நிரூபிக்கப்பட்டு முற்றிலும் புதிய கொள்கைகளும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நாம் பௌதீகவியலில் படித்த "ஒளி நேர் கோட்டில் செல்லும்" என்ற விதியும். இன்று அது அலை வடிவமாகி அதற்கு மேலாக வரையறுக்கப்பட்டுச் செல்கிறது. நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் படித்த "திணிவுக் காப்பு விதி"க்கு நிகழ்ந்ததும் அதுதான். ஐன்ஸ்டைன் திணிவு சக்தியாக மாற்றம் பெறுகிறது என்றார். இவ்வாறுதான் விஞ்ஞானம் முன்னேறிச் செல்கிறது. விஞ்ஞானத்தில் முடிந்த முடிபாக எதுவுமில்லை. அது புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கூடாக பழையவற்றைக் களைந்து புதியவற்றைக் கண்டு அடைகிறது. இது முடிவிலி காலம் வரை நீண்டு செல்லலாம். ஆனால் நாமெல்லோரும் "விஞ்ஞான சோசலிசம்" என்ற பத விளக்கத்துக்கூடாக சமூகத்தைத் தேக்கத்தில் வைத்திருக்க அசையாக் கட்டுமானத்துக்குள் உறைய வைத்திருக்க விரும்புகிறோமா என அச்சப்படுகிறேன்.
பதில்: 19 ம் நூற்றாண்டில் உருவான பாரிஸ் கம்யூன் தான் உலகில் முதலாவது சோஷலிசப் புரட்சி. அத்ற்கு தலைமை தாங்கியவர்கள் பலதரப் பட்ட கொள்கைகளை பின்பற்றினர். அனார்க்கிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் போன்றவர்கள். பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் நடத்திய புரட்சி என்பது தான் முக்கியம். மார்க்ஸ் அதன் தோல்வியை ஆய்வு செய்து "பிரான்ஸின் உள்நாட்டுப் போர்" என்ற நூல் எழுதினார். அதில் நீங்கள் எதிர்பார்க்கும் விமர்சனங்கள் உள்ளன. அதில் முக்கியமான இரண்டு (சுய)விமர்சனங்கள்.
1. தொழிலாளர், விவசாயிகளின் இராணுவம் உருவாக்கப் பட வேண்டும்.
2. தற்போதுள்ள அமைப்பில் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு மாற்றாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டு வரப் பட வேண்டும்.
விஞ்ஞானம் பற்றி நீங்கள் கூறியது மிகச் சரி. அதைத் தான் மார்க்சியமும் சொல்கிறது. அதனால் தான் அது விஞ்ஞான சோஷலிசம் என்று அழைக்கப் படுகின்றது. நீங்கள் உதாரணம் காட்டிய சார்ட்டிஸ்ட் இயக்கம், உத்தோப்பியன் இயக்கம் என்பனவும் சோஷலிச சிந்தனை தான். ஆனால், விஞ்ஞானபூர்வமானவை அல்ல. அவை கோட்பாடுகள் ஆனால் விஞ்ஞானம் அல்ல. அதனால் தான் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் விஞ்ஞான சோஷலிசத்திற்கான ஆய்வுகளை செய்தனர். இந்த விபரங்களை எங்கெல்ஸ் எழுதிய "கற்பனாவாத சோஷலிசமா? விஞ்ஞான சோஷலிசமா?" என்ற நூலில் வாசிக்கலாம்.
மார்க்சியம் என்பது சித்தந்தம் அல்ல. அது விஞ்ஞானம். தாராளமாக விஞ்ஞான முடிவுகளை திருத்தி எழுதலாம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து குறைகளை திருத்தி எழுதியது தான் லெனினிசம். பிற்காலத்தில் மாவோ அதிலும் திருத்தங்கள் செய்தார். ஆகவே, நீங்கள் சொல்வது மாதிரி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முதலாளித்துவ பாதைக்கு திரும்புவது திரிபுவாதம்.
விஞ்ஞானத்தில் முடிந்த முடிவு இல்லை. மார்க்சியமும் அப்படித் தான். அது முதலாளித்துவ காலகட்டத்தில் இருந்து சோஷலிச காலகட்டத்திற்கு மாறுவதற்கான விஞ்ஞானம். ஆனால், கம்யூனிச காலகட்டத்திற்கான விஞ்ஞான ஆய்வுகள் பூரணமடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதற்கான ஆய்வுகளை செய்யலாம். ஆனால், சோஷலிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்திற்கு திரும்புவதற்குப் பெயர் விஞ்ஞானம் அல்ல. அது முன்னேற்றம் அல்ல, பின்னேற்றம். பிற்போக்குவாதம். இன்றைக்கும் டார்வினின் கூர்ப்பு கோட்பாட்டை பிழையென்று சொல்வோர் இருக்கிறனர். குறிப்பாக, மத அடிப்படைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளே எல்லாவற்றையும் படைத்தார் என்று சொல்கிறார்கள். அதே மாதிரி, இன்றைய உலகில் யாரும் மன்னராட்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அது மாதிரித் தான் இதுவும்.
கேள்வி : பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா ?
(பிற்குறிப்பு: இது மேலே உள்ள கேள்வியில் இருந்து எடுத்த ஒரு பகுதி. மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக தனியாக எடுத்திருக்கிறேன்.)
பதில்: உலக வரலாற்றுக் காலகட்டத்தில், பாராளுமன்ற ஆட்சியும் இதே மாதிரியான நெருக்கடிகளை சந்தித்து இருந்தது. மன்னராட்சிக்குப் பதிலாக பாராளுமன்ற குடியரசு முறை வந்தது. ஆனால், அதற்காக பல போர்கள் நடந்துள்ளன. பெரும்பான்மை மக்களும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.
கவனிக்கவும்: அன்றைய பாராளுமன்ற ஆட்சி ஒரு சர்வாதிகாரம், ஜனநாயகம் இருக்கவில்லை, தேர்தல்கள் நடக்கவில்லை. இருப்பினும், அது நிலைத்து நிற்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சுற்றியுள்ள மன்னராட்சி நாடுகளின் சதிகளை முறியடிக்க வேண்டியிருந்தது.
பிரித்தானியாவில், 1649 ம் ஆண்டு மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பாராளுமன்ற ஆட்சிமுறை வந்தது. அது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு, பெரும்பான்மை ஆங்கிலேய மக்கள் பாராளுமன்ற ஆட்சியை நிராகரித்து, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்தார்கள்.
நெதர்லாந்தில், 1795 ம் ஆண்டு, மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பதாவியாக் குடியரசு உருவானது. அதுவும் பத்தாண்டுகள் மட்டுமே நீடித்தது. பதவியிறக்கப் பட்ட நெதர்லாந்து இளவரசன், இங்கிலாந்து மன்னரின் உறவினன். அதனால், இங்கிலாந்து பல வழிகளிலும் டச்சு பதாவியாக் குடியரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் விளைவுகளில் ஒன்று தான், டச்சுக்காரர் வசமிருந்த இலங்கைத் தீவு ஆங்கிலேயக் காலனியானது.
இறுதியில், நெதர்லாந்து மக்களில் ஒரு பகுதியினரும் பதாவியா குடியரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். பிரதமரும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், கலகக் கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டனர். பாராளுமன்றக் குடியரசு பெரும்பான்மை டச்சு மக்களால் நிராகரிக்கப் பட்ட பின்னர், அங்கு மீண்டும் மன்னராட்சி அமைக்கப் பட்டது.
நிலப்பிரபுத்துவத்திற்கு 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. முதலாளித்துவத்திற்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சோஷலிசத்தின் 70 வருட வரலாறு ஒரு பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை
கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை
கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை