Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal

1 comment:

  1. டெலோ இயக்கம் பற்றிய உங்கள் கருத்து தவறு...

    புலிகள் செய்த தவறுகளைத்தான் இறுதியில் டெலோவின்மேல் போட்டார்கள்....

    முதன்முதலில் சிவில் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி அனைத்து குற்ற செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்தது டெலோதான்

    ReplyDelete