மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, தனது 74 வது வயதில் காலமானார். முதற்கண் அன்னாருக்கு எனது அஞ்சலியையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சோமவன்ச, "ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்" என்று சொல்லக் கூடிய, 1989 - 1991 படுகொலைகளில் இருந்து உயிர் தப்பிய சில தலைவர்களில் ஒருவராவார். அந்தக் காலத்தில் தலைவர் ரோகன விஜேவீர உட்பட, தலைமையில் இருந்த அத்தனை பேரும் சிறிலங்கா இராணுவத்தால் அழித்தொழிக்கப் பட்டனர்.
சோமவன்ச சில தமிழ் நண்பர்களின் உதவியால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து பிரிட்டன் சென்று அகதித் தஞ்சம் கோரி பல வருட காலம் அந்நாட்டில் ஒரு அகதியாக வாழ்ந்து வந்தார். சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப் பட்ட பின்னர் தாயகம் திரும்பி இருந்தார்.
புலம்பெயர்ந்து வாழ்ந்த போதிலும், சோமவன்ச லண்டனில் இருந்து கொண்டே இலங்கையில் இருந்த கட்சி உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். பழைய ஜேவிபியின் அழிவில் இருந்து தப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற காரணத்தினால் தான், சோமவன்சவுக்கு கட்சியின் தலைமைப் பதவி கிட்டியது.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில், ஜே.வி.பி. முற்றாக அழித்தொழிக்கப் பட்ட நிலையில், முற்றிலும் புதியதொரு அரசியல் கட்சியாக உருவாக்கப் பட்டது. அரசியலை விட்டொதுங்கி உதிரிகளாக இருந்த கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து மீண்டும் கட்சி கட்டியெழுப்பப் பட்டிருந்தது.
இருப்பினும், புதிய ஜேவிபி பாராளுமன்ற சாக்கடை அரசியலுக்குள் அமிழ்ந்து போனது. கட்சியை வலதுசாரிப் பாதையில் வழி நடத்தியதில் சோமவன்ச அமரசிங்கவின் தலைமைப் பாத்திரம் கணிசமான அளவில் இருந்தது. தேர்தல் காலங்களில் பிற வலதுசாரிக் கட்சிகள் போன்று, ஜே.வி.பி.யும் இனவாதம் பேசி வாக்கு வேட்டையாடியதை மறைக்க முடியாது. சோமவன்ச அமெரிக்கத் தூதுவராலயத்துடன் இரகசியத் தொடர்பில் இருந்ததை, விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தி இருந்தது.
முன்பு பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிறிலங்கா அரசு ஜேவிபியையும், புலிகளையும் பிரித்து வைப்பதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. சில கசப்பான அனுபவங்கள் காரணமாக புலிகள் மேல் ஏற்பட்ட வன்மம், பிற்காலத்தில் ஜேவிபியை போர் ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தூண்டியது.
ஏற்கனவே ஒரு அழித்தொழிப்பு போரில் தப்பிய இயக்கம், இன்னொரு அழித்தொழிப்பு போரை ஆதரித்த முரண்நகை அரங்கேறியது. "போரில் வெல்வது எப்படி?" என்று ஜேவிபி நடத்திய பாடத்தை, மகிந்த ராஜபக்ச சுவீகரித்துக் கொண்டார். போர் முடியும் வரையில் ஜேவிபியை பயன்படுத்தி விட்டு, தேவை முடிந்தவுடன் தூக்கி வீசி விட்டார். ஜேவிபி இன் வீழ்ச்சிக்கு காரணமான அந்தத் தவறான அரசியல் அணுகுமுறைக்கு, கடைசி வரையில் சோமவன்ச பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே ஒரு அழித்தொழிப்பு போரில் தப்பிய இயக்கம், இன்னொரு அழித்தொழிப்பு போரை ஆதரித்த முரண்நகை அரங்கேறியது. "போரில் வெல்வது எப்படி?" என்று ஜேவிபி நடத்திய பாடத்தை, மகிந்த ராஜபக்ச சுவீகரித்துக் கொண்டார். போர் முடியும் வரையில் ஜேவிபியை பயன்படுத்தி விட்டு, தேவை முடிந்தவுடன் தூக்கி வீசி விட்டார். ஜேவிபி இன் வீழ்ச்சிக்கு காரணமான அந்தத் தவறான அரசியல் அணுகுமுறைக்கு, கடைசி வரையில் சோமவன்ச பொறுப்பேற்கவில்லை.
சோமவன்ச அமரசிங்க தலைமையிலிருந்த காலத்தில், ஜேவிபி ராஜபக்ச அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்தது. இதனால் ஆதாயமடைந்த மகிந்த ராஜபக்ச, அதற்கு "நன்றிக் கடனாக" ஜேவிபி யில் இருந்த விமல் வீரவன்ச தலைமையிலான தீவிர வலதுசாரிகளை பிரித்தெடுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். (இறுதிக் காலத்தில், கட்சியை விட்டு வெளியேற்றப் பட்ட பின்னர், சோமவன்ச வெளிப்படையாகவே ராஜபக்சவை ஆதரித்தார்.)
சோமவன்ச அமரசிங்கவின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல், கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் அவருக்கும் நன்மையையும் உண்டாக்கவில்லை. கட்சியின் தலைமையில் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக, கட்சி இரண்டாகப் பிளவுவுற்றது.
தீவிர இடதுசாரிகள் குமார் குணரட்னம் தலைமையில் பிரிந்து சென்றனர். குமார் குணரட்ணம் ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்து தலைமறைவான தலைவராக இயங்கியவர். அதனால், "கடும்போக்காளர்கள்" என்று அழைக்கப் படும், "பழைய" இடதுசாரிகள், குமார் குணரட்னத்தை ஆதரித்ததில் வியப்பில்லை.
பிளவின் பின்னர் எஞ்சிய ஜேவிபி இலும், சோமவன்சவின் தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்தன. சோமவன்சவின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல், கட்சியை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றதை பலர் அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர்.
இறுதியில், சோமவன்சவின் தலைமையில் அதிருப்தியுற்ற ஜேவிபி மத்திய குழு உறுப்பினர்கள் அவரை பதவியிறக்கினார்கள். ஜேவிபி இன் மறுமலர்ச்சியில் பெரும் பங்கெடுத்த ஒருவர், இறுதியில் அந்தக் கட்சியினாலேயே ஓரங் கட்டப் பட்டார். சோமவன்ச பதவி அகற்றப் பட்ட பின்னர், கட்சிக்குள் இடதுசாரி குழுவினரின் செல்வாக்கு அதிகரித்தது.
கட்சிக்குள் தோன்றிய புதிய தலைமையுடனும் சோமவன்ச முரண்பட்டார். ஒரு கட்டத்தில், அவராகவே கட்சியை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டது. அதற்குப் பிறகு, சோமவன்ச அமரசிங்க தனியாக ஒரு "பௌத்த - தேசியவாத" கட்சியை உருவாக்க முனைந்து தோல்வியுற்றார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜபக்சவை ஆதரித்து அரசியல் செய்யப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
சோமவன்ச தனது இறுதிக் காலத்தில், பகிரங்கமாகவே வலதுசாரி அரசியல் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார். முந்திய காலங்களில், அவை அவரது தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும், ஜேவிபியையும் பாதித்திருந்தது. சோமவன்ச அமரசிங்கவின் மறைவு, ஜேவிபியின் பின்னடைவுக்கு காரணமான, வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலின் மறைவாக, இனிவரும் வரலாற்றில் எழுதப் படலாம்.
No comments:
Post a Comment