Thursday, May 19, 2016

எத்தியோப்பியா பஞ்சத்தில் இலாபம் சம்பாதிக்கும் மேற்கத்திய ரோஜாப்பூ கம்பனி


மேற்குலகில் கொண்டாடப்படும் "வாலண்டைன்ஸ் டே", "மதர்ஸ் டே" போன்ற தினங்களில் ரோஜாப்பூக்கள் அதிகமாக விற்பனையாகின்றன. அவை ஆப்பிரிக்காவில் ஒரு வறிய நாடான எத்தியோப்பியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகின்றன. எத்தியோப்பியாவில் சில இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிப்பதற்கு நீரின்றி பட்டினியால் வாடுகிறார்கள். அதே இடத்தில் உள்ள ரோஜாப்பூ தோட்டங்கள், வருடத்திற்கு இரண்டாயிரம் நீச்சல் குளம் அளவு தண்ணீரை உறுஞ்சுகின்றன.

ஷேர் (Sher) எனும் பன்னாட்டு நிறுவனம், நெதர்லாந்து, ஜெர்மனியில் ரோஜாப்பூக்களை சந்தைப் படுத்தி வருகின்றது. ஷேர் நிறுவனத்தின் டச்சு உரிமையாளர், வருடம் இருநூறு மில்லியன் யூரோக்கள் இலாபமாக சம்பாதிக்கிறார். அதே நேரம், ஷேர் நிறுவனத்தின் ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளி மாதமொன்றுக்கு முப்பத்திநான்கு யூரோக்களுக்கு மேலே சம்பாதிப்பதில்லை. அது மட்டுமல்லாது, அங்கு பயன்படுத்தப் படும் கிருமி நாசினி நச்சுப் பதார்த்தங்களால் நோயாளி ஆகி, காலப்போக்கில் வேலை செய்ய முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்ட செம்ப்லா (Zembla) நிகழ்ச்சியில், ரோஜாப்பூக்களுக்கு பின்னால் உள்ள சுரண்டல் பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பினார்கள். செம்ப்லா ஊடகவியலாளர்கள், எத்தியோப்பியா சென்று ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை கண்டு பேசியுள்ளனர். அயலில் வாழும் கிராம மக்களையும் பேட்டி கண்டு, சுற்றுச் சூழல் பாதிப்பை நேரடியாக கண்டறிந்தனர். அந்த ஆவணப் படத்தில் சொல்லப் பட்ட தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

எத்தியோப்பிய அரசு, குறைந்த பட்ச சம்பளம் எதுவென வரையறுக்கவில்லை. உண்மையில் எத்தியோப்பிய செலவினத்தை ஈடுகட்டுவதற்கு, ஒருவர் குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து யூரோக்கள் சம்பாதிக்க வேண்டும். ஆனால், ஒரு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனமான ஷேர் கொடுக்கும் சம்பளம் நாளொன்றுக்கு ஒரு யூரோ கூட இல்லை. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

ரோஜாத் தோட்டங்களில் வேலை செய்யும் பெரும்பான்மையான தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள். அவர்கள் வாடைகைக்கு வீடு எடுத்து தங்க வேண்டும். அந்த இடத்தில் வீட்டு வாடகை உயர்ந்து வருவதால், இரண்டு, மூன்று பேர் ஒரு வீட்டை பங்கிட்டுக் கொள்கின்றனர். அப்படி இருந்தும், சம்பளத்தில் அரைவாசி வாடகைக்கு சென்று விடுகின்றது. அதே நேரம், அந்த இடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகமாக உள்ளன.

ரோஜாக்களில் கிருமி நாசினி நஞ்சு கலந்திருக்கும் என்பதால், அவற்றை வகைப்படுத்தி பொலித்தீன் பைகளில் அடுக்கும் வேலை செய்யும் தொழிலாளர்கள், முழங்கை அளவிற்கு கையுறை அணிந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கையுறை சிறியது. இதனால் ரோஜாவின் முள் குத்தியதால் தோலில் நஞ்சேறி நோய் வாய்ப் பட்டவர்களும் உண்டு. ரோஜாச் செடிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிப்பவர்களும், பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்கவில்லை. அது உடலில் பட்டால் புண்ணாகும் அளவிற்கு கடுமையான நஞ்சு என்பதால், பெருமளவு தண்ணீர் கலந்து தான் அடிக்கிறார்கள்.

எத்தியோப்பியாவில் வேறெங்கும் இல்லாத புதுமையான நோய்கள் எல்லாம், அந்தப் பிரதேசத்தில் காணப்படுவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். பல கர்ப்பிணிப் பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளதால், குறைப்பிரசவங்கள் நேர்கின்றன. ரோஜாத் தோட்டங்களில் பயன்படுத்தும் கிருமிநாசினிகளால் ஏற்பட்ட தீய விளைவு இதுவென சந்தேகப் பட்டாலும் தன்னிடம் ஆதாரம் இல்லை என்று அந்த மருத்துவர் தெரிவித்தார். நெதர்லாந்தில் விற்கப்படும் ரோஜாக்களில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை சோதனை செய்து பார்த்ததில், அந்த மருத்துவரின் கூற்றில் உண்மை இருப்பது நிரூபணமானது.

ஷேர் நிறுவனம், தோட்டங்களுக்கு அருகில் மருத்துவமனை ஒன்று கட்டியுள்ளது. அங்கு தொழிலாளர்களுக்கு "இலவச" மருத்துவம் வழங்கப் படுகின்றது. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலையும் கட்டிக் கொடுத்துள்ளது. அங்கே கல்வி "இலவசம்" அதாவது, ஷேர் நிறுவனம் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டும் மில்லியன் கணக்கான யூரோக்களில், மிகச் சிறிய தொகையை தொழிலாளர் நலனுக்காக செலவிடுகின்றது. உண்மையில், தொழிலாளர்களின் பணத்தில் தான் "இலவச" மருத்துவம், கல்விக்கு செலவு செய்யப் படுகின்றது. முதலாளிகள் இதனை "நல்ல மனது வைத்து தானமாகக் கொடுத்ததாக" காட்டிக் கொள்கிறார்கள்.

இத்தகைய நிறுவனங்கள், 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்துள்ளன. அப்போது அதனை "சமூக- முதலாளித்துவம்" (Social- Capitalism) என்று அழைத்தார்கள். ஐரோப்பிய மக்கள் அது எந்தளவு பெரிய மோசடி என்ற விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், சமூக நலத் திட்டங்களை அரசு பொறுப்பேற்றது. மக்களிடம் அறவிடப் படும் வரிப்பணத்தில் இருந்து செலவிடப் பட்டது. ஆனால், 21 ம் நூற்றாண்டில், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இன்னமும் அந்த மோசடியான சமூக முதலாளித்துவம் உள்ளது.

ரோஜாத் தோட்டங்கள் பெருமளவு தண்ணீரை உறுஞ்சுகின்றன. அதனால், சிவாய் எனும் பெரியதொரு ஏரிக்கு அருகில் தான் தோட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அருகில் ஒரு ஆறும் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. ஆற்றுத் தண்ணீர் ஏறக்குறைய வற்றி விட்டது. கிராம மக்கள் தமது கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். 

ஷேர் நிறுவனத்தின் ரோஜாத் தோட்டங்களினால் தான், ஏரியிலும், ஆற்றிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது என்ற உண்மையை ஊர் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இது குறித்து ஷேர் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர். எத்தியோப்பிய அரசுக்கும், ஷேர் நிறுவனத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் அரசு அதிகாரிகளே முதலாளிகளின் அடியாட்களாக வந்து மிரட்டுகிறார்கள்.

கண் முன்னே அநியாயம் நடப்பது தெரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் எத்தியோப்பிய மக்கள் உள்ளனர். தற்போது பஞ்சமும், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவும் பிரதேசங்களில், ஒரு குடும்பத்திற்கு நாளொன்றுக்கு இருபது லீட்டர் தண்ணீர் கொடுக்கிறார்கள். நிவாரணப் பணிகளில் மேற்கத்திய தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தமது நாட்டு நிறுவனங்கள் தான் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி உள்ளன என்ற உண்மை மேற்கத்திய தொண்டர்களுக்கும் தெரியும்.

மேற்கத்திய நாடுகளிலேயே பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்புச் செய்கின்றன. எத்தியோப்பியா போன்ற வறிய நாடுகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஷேர் நிறுவனத்தின் வருடாந்த கணக்கு அறிக்கையை எடுத்துப் பார்த்த பொழுது, 2014, 2015 ஆகிய இரண்டு வருடங்களில் ஒரு சதம் கூட வரியாக கட்டி இருக்கவில்லை என்பது தெரிய வந்தது. அதற்கு முன்னர் கட்டிய வரியின் அளவும் மிகவும் குறைவு.

இத்தனைக்கும், ஷேர் நிறுவனத்திற்கு "நியாயமான வணிகம்" (Fair Trade) முத்திரை கிடைத்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில், தொழிலாளர்களுக்கு நியாயமான தொகையை ஊதியமாக கொடுத்து, ஒழுங்காக வரி கட்டும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் சான்றிதழ் அது. அதற்காக ஒவ்வொரு வருடமும் பரிசோதிக்கப் படுகின்றது. ஆகையினால், எந்தவொரு தகுதியும் இல்லாத ஷேர் நிறுவனத்திற்கு அந்த சான்றிதழ் கிடைத்தது எப்படி? இது தொடர்பாக, Fair Trade தலைமை நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இன்னமும் நடவடிக்கை எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:

No comments:

Post a Comment