"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!" என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை" கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?
முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
//எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//
மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்" தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம். கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.
//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?//
இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை.
விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.
மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.
எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை" மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.
//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//
மஞ்சள் கண்னாடி அணிந்தால் காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும். இனவாத கண்ணாடி அணிந்தவர்கள் நிலையும் அது தான். இந்தியாவில் அரசு இயந்திரம் ஊழல் மயமானது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.
ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"
மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?
இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:
//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//
ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்? மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள்.
//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//
தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.
"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்ற வெற்றுக் கூச்சல்?
//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//
அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.
மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்" இலட்சணம்!
இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது.
முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."
திராவிடக்கட்சிகள் காலத்தில் தான் மொழிவாரி மாநிலம் உருவானது. அப்போது திமுக முன்வைத்த நியாயம் பார்ப்பனீயத்திற்கு எதிரான தார்மீக கோபம்தான். அப்போது வட இந்தியர்களை குறை கூறினார்கள். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. தனித் தமிழ் நாடு பிரச்சினைகளுக்கு தீர்வு என்றார்கள்.மத்திய அரசு தமிழ் நாடு மாநில சட்ட சபைக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, தமிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்தது.
தமிழர்கள் ஆளும் தமிழ் நாட்டில் எல்லாம் சிறப்பாக இல்லை. உண்மையில் இது ஒரு வகையில் தமிழ் தேசிய அரசியலின் வங்குறோத்துதனம். அந்த உண்மையை மறைக்கும் சீமானும், அவரது துதிபாடிகளும் இப்போது புதியதொரு காரணத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். மரபணு சோதனை நடத்தி எவன் அசல் தமிழன், எவன் போலித் தமிழன் என்று ஆராய்கிறார்கள்.
அவர்களது ஆராய்ச்சியின்(?) முடிவு: "தமிழ் நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் போலித் தமிழர்கள். அசல் தமிழர்கள் ஆட்சி செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக ஓடும்..." என்று குடுகுடுப்பைக் காரன் மாதிரி ஜோஸ்யம் சொல்கிறார்கள். ஐம்பதுகளில் திமுக அரங்கேற்றிய அதே நாடகம் தான்.
ஆனால், ஒரு வித்தியாசம் உள்ளது. திமுக நடத்திய போராட்டத்தினால் மத்திய அரசின் அதிகாரம், ஹிந்தி பேரினவாத மேலாதிக்கம் கணிசமான அளவில் குறைக்கப் பட்டது. நாம் தமிழர் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகாரப் பரவலாக்கல் பற்றியது அல்ல. இந்த விடயத்தில், திமுக தமிழ் தேசிய இயக்கத்திற்கு வழங்கிய பங்களிப்புக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத வகையில் சீமானின் கோரிக்கைகள் அமைந்துள்ளன.
இந்த மறத்தமிழன் தென் தமிழகத்தின் தாதுமணலை கொள்ளையடிக்கும் வைகுண்டராஜனையோ அல்லது மதுரையின் கிராணைட் மலைகளை கொள்ளையடிக்கும் பி.ஆர்.பி பழனிச்சாமியை பற்றியோ வாய் திறக்காதது ஏன்? அவர்கள் தமிழர்கள் என்பதனாலா? அவர்கள் இயற்கையையும், தமிழ் மக்களையும் சுரண்டினால் தவறில்லையா? எங்கே போயிற்று சீமானின் தமிழ்த்தேசியம். இதில் கூடுதலாய் வைகுண்டராஜன் மகனின் திருமணத்திலும் சீமான் கலந்து கொண்டார்.
ReplyDelete//திமுக நடத்திய போராட்டத்தினால் மத்திய அரசின் அதிகாரம், ஹிந்தி பேரினவாத மேலாதிக்கம் கணிசமான அளவில் குறைக்கப் பட்டது.//- 1938 லிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டம், பார்ப்பனிய எதிர்ப்பு என நீதிகட்சி தொடங்கி பெரியாரின் திராவிடர் கழகம் வரை தி.மு.க தலைவர்களுக்கு அழுத்தமான அரசியல் பிண்ணனி உள்ளது, ஆனால் ஒற்றை சர்வாதிகாரியான சீமானோ வெறும் வாய்ச்சொல் வீரர். இந்த தேர்தலில் சீமானுக்கு விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கை தமிழ்தேசியம் பேசுவோரின் முகத்தில் கண்டிப்பாய் கரியை பூசும்.
nice
ReplyDeletehttp://alltomysite.blogspot.in/2016/03/a-little-girl-stick-fighting-silambattam.html
சீமானின் அடிவருடி கேட்ட ஏன் ஏன் கேள்விகளுக்கு நான்
ReplyDeleteபதிலாக கேட்க நினைத்ததை நண்பர் சீனிவாசன் கேட்டுவிட்டார்.
வினவு தளம் பலமுறை சீமானை அடித்து துவைத்து காயப்போட்டு
இஸ்திரி பண்ணி தொங்க விட்டும் இந்த அடிவருடிகளுக்கு ஒரு
போதும் புத்தி வருவதேயில்லை.இந்த விசயத்தில் காவி கும்பலுக்கும்
இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.எதை ஆதாரப்பூர்வமாக
எடுத்து கூறினாலும் இவர்கள் மர மண்டையில் ஏறாது.தப்பி தவறியும்
ஏறி விட கூடாது என்று பிடிவாதமாக இருப்பார்கள்.கழிசடைகள்.