Tuesday, August 11, 2015

இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல்


பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய, "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றி, இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் பதிவு செய்யப் படவில்லை. அதனால் இன்று வரைக்கும் உலகப் புகழ் பெற்ற மாபெரும் இலக்கியங்களில் ஒன்றாக போற்றப் படுகின்றது.

19 ம் நூற்றாண்டில், தொழில் துறை வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களில் சேரிகளும் பெருகின. தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், எந்த வசதியுமற்ற வீடுகளில், கழிவுகள், குப்பைகளுக்கு நடுவில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். அது தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை, எங்கெல்ஸ் இந்த நூலில் விரிவாகக் கூறுகின்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும், சினிமாக்கள், நாவல்கள் தாராளமாக வெளிவருகின்றன. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் அது குறித்து அக்கறை கொண்டவர்கள் மிகக் குறைவு. பிரான்சில் விக்டர் ஹியூகோ Les Misérables (ஏழை படும் பாடு) என்ற நாவலை எழுதினார். இவ்வாறு குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர்.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூல், ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வாசிப்பதற்கு எளிமையாக, ஒரு நாவல் போன்று எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் இதிலே எதுவுமே கற்பனை அல்ல. அந்தக் காலங்களில் இருந்த இங்கிலாந்தின் நிலைமை, இன்றுள்ள வறிய நாடுகளின் நிலைமை மாதிரி, அல்லது அதை விட மோசமானதாக இருந்தது. 

நெருக்கமான குடியிருப்புகள். ஒடுக்கமான தெருக்கள். அகற்றப்படாத குப்பைகளும், மனிதக் கழிவுகளும். எங்கும் வியாபித்திருக்கும் துர் நாற்றம். எட்டுப், பத்துப் பிள்ளைகளை கொண்ட குடும்பம் முழுவதும் ஒரேயொரு அறைக்குள் அடங்கி வாழும் அவலம். இவையெல்லாம் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் இந்த நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஐரோப்பியர்கள் பல நூறாண்டுகளாக செல்வத்தில் வாழ்ந்து வந்ததாக, நம் மத்தியில் உள்ள படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். குறிப்பாக முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் "அறிவுஜீவிகள்", 19 ம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் நிலவிய, வறுமையின் கொடுமைகளை காண மறுக்கிறார்கள். அவர்கள் அது குறித்து எங்கேயும் படிக்கவும் இல்லை, கேள்விப் படவுமில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உலகம் இருண்டு விடுவதில்லை.

மேற்கத்திய முதலாளித்துவ அறிஞர்கள் சிலர், தமது அரசியல் பக்கச் சார்பு காரணமாக, இந்த நூலில் உள்ள தரவுகள் தவறானவை, கற்பனையானவை என்று கூறுகின்றனர். வரலாறு எப்போதும் மன்னர்களைப் பற்றி எழுதப் படுகின்றது. மக்களைப் பற்றிய வரலாறு அரிதாகவே எழுதப் படுகின்றது. அதற்காக, 19 ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாற்றை திரிக்க முடியாது.

மார்க்சியத்தின் மூலவர்கள் என்று கருதப்படும் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு மேட்டுக்குடியில் பிறந்தவர் தான். பிற மேட்டுக்குடி பிறப்பாளர்கள் போன்று, அவரும் மது, மாது மயக்கத்தில், நரி வேட்டையாடி காலம் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆயினும் அவரது இதயம் ஏழைகளின் மேல் பரிவு காட்டியது. 

எங்கெல்ஸ் இருபதாண்டு காலம் குடித்தனம் நடத்திய ஐரிஷ் காதலியான மேரி பேர்ன்ஸ், எழுதப் படிக்கத் தெரியாத ஏழைப் பணிப்பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கும், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த, ஒரு சாதாரண மத்தியதர இளைஞர் கூட, எழுதப் படிக்கத் தெரியாத பணிப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை எதிர்பார்க்க முடியாது. அந்தஸ்து குறைந்து விடும் என்று நினைப்பார்கள்.

எங்கெல்சின் காதலியான மேரி பேர்ன்ஸ், அவரை தனது குடும்பம் வாழும் சேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனால், பிற மேட்டுக்குடியினர் எட்டியும் பார்க்காத சேரிகளின் மூலை முடுக்குகள் எல்லாம் எங்கெல்சுக்கு பரிச்சயமாகின. அங்கு ஏழை மக்கள் படும் துயரை நேரில் கண்டு அனுபவித்துள்ளார். ஆகையினால், எங்கெல்ஸ் கற்பனையான தரவுகளை கொண்டு இந்த நூலை எழுதியதாக வாதிடுவது அபத்தமானது.

கார்ல் மார்க்ஸ் மாதிரி, பிரடெரிக் எங்கெல்ஸ் கூட ஒரு ஜெர்மனியர் தான். நெதர்லாந்துக்கு அருகில் உள்ள, பார்மென் (Barmen) எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். ரைன் நதிக்கரை சார்ந்த அந்தப் பிரதேசம், 19 ம் நூற்றாண்டிலேயே தொழிற்துறை வளர்ச்சியால் முன்னேறி இருந்தது. எங்கெல்சின் தந்தை பார்மென் நகரிலும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரிலும், பருத்தி நூல் நூற்கும் தொழிற்சாலைகளை வைத்திருந்தார். 

எங்கெல்ஸ் தனது தந்தையின் தொழிற்சாலையை நிர்வகிக்கும் முகாமையாளராக வேலை செய்துமிருக்கிறார். அதன் மூலம், பிற தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆகவே, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்தளவு மோசமாக சுரண்டப் படுகிறார்கள் என்பதை அவர் நேரடியாக கண்டுணர்ந்திருப்பார்.

ஏழைப் பெற்றோரும், சிலநேரம் அவர்களின் வயதுக்கு வராத பிள்ளைகளும் கூட, ஒரே தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை செய்வது அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். ஒரு பக்கம், அவர்களின் உழைப்பு முதலாளிகளால் சுரண்டப் படுகின்றது. மறுபக்கம், ஓய்வு நேரத்தில் அவர்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. எங்கெல்ஸ் இந்த நூலில், இவ்விரண்டு விடயங்களையும் தனித்தனியாக பதிவு செய்துள்ளதுடன், அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாக விளக்கி உள்ளார். அந்த வகையில் தான் இது உலகப் புகழ் பெற்ற கிளாசிக்கல் நூல்களில் ஒன்று என இன்றைக்கும் போற்றப் படுகின்றது.

"இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" நூல் எழுதிய காலத்தில், எங்கெல்ஸ் இன்னும் "மார்க்சிஸ்டாக" மாறி இருக்கவில்லை. அதாவது, மார்க்ஸ், எங்கெல்ஸ் சேர்ந்து, கம்யூனிசத்தை அடைவதற்கான "மார்க்சியம்" என்ற சமூக விஞ்ஞானத்தை அதற்குப் பின்னர் தான் கட்டமைத்தார்கள்.

இளம் பராயத்திலேயே எங்கெல்ஸ் ஒரு கம்யூனிஸ்டாக மாறி இருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல! 19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், பொதுவுடமைக் கருத்துக்கள் பரவி இருந்தன. எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், ஜெர்மனியில் மூன்று புரட்சிகள் நடந்துள்ளன.

அப்போது தான் ஜெர்மனி என்ற தேசம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால், இடதுசாரிக் கொள்கைகளை பின்பற்றியவர்கள், அரச அடக்குமுறை காரணமாக பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். அப்போது பிரான்ஸிலும் பொதுவுடைமைக் கொள்கைகள் பிரபலமாக இருந்தன.

19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த தத்துவ அறிஞரான ஹெகல், மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற முற்போக்கு இளைஞர்களின் வழிகாட்டியாக இருந்தார். அவரைப் பின்பற்றிய பல இளைஞர்கள், தம்மை "இடது ஹெகலியன்" என்று அழைத்துக் கொண்டனர். எங்கெல்ஸ் இளம் வயதில் ஒரு இடது ஹெகலியனாக இருந்தார். அதனால், அவரது தந்தை குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு, மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஜெர்மனியில் இருந்தால், தனது பையன் "உதவாக்கரை பயல்களுடன் சேர்ந்து கெட்டு குட்டிச் சுவராகி விடுவான்..." என்று எங்கெல்சின் தந்தை நினைத்திருப்பார்.

அதே நேரம், எங்கெல்ஸ் மான்செஸ்டரில் குடியேறுவது தனது கொள்கைக்கு சாதகமான விடயமாக நினைத்திருப்பார். அதாவது, அன்றைய ஐரோப்பாவில் இங்கிலாந்தில் தான் தொழிற்புரட்சி காரணமாக மிகப் பெரியதொரு சமூக மாற்றம் நடந்திருந்தது. தொழிற்சாலைகளும், பாட்டாளி வர்க்கமும் இங்கிலாந்தில் தான் அதிகளவில் இருந்தன. லண்டன் போன்று, மான்செஸ்டரும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரமாக இருந்தது. ஆகவே, முதலாளித்துவ பொருளுற்பத்தி உச்சத்தில் இருந்த இங்கிலாந்தில் தான், அதன் விளைவால் உருவான பாட்டாளி வர்க்கத்தை சிறப்பாக ஆய்வு செய்ய முடியும் என்று எங்கெல்ஸ் நினைத்திருப்பார்.

இன்று பல இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான நூல்களை தேடி வாசிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. மார்க்சியம் பற்றிய தேடலும் அதிகரித்து வருகின்றது. அவர்களில் பலர் என்னை தொடர்பு கொண்டு சில நூல்களை பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில், இந்த நூல் விமர்சனத்தை எழுதி உள்ளேன்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்
என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...

No comments:

Post a Comment