Friday, June 26, 2015

சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!


சன் தொலைக்காட்சியில், "நிஜம்"(?) என்ற நிகழ்ச்சியில், "மர்ம தேசம்" என்ற பெயரில், வட கொரியா பற்றிய பல பொய்யான, கற்பனையான தகவல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு சில பொய்களை இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.

வட கொரிய மக்கள் வாரத்திற்கு ஏழு நாட்கள், தினசரி 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கடந்த தசாப்த காலமாகவே, தென் கொரிய நிறுவனங்கள், வட கொரியாவினுள் முதலீடு செய்து, அங்குள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துள்ளன. அவர்களும் 7 நாட்கள்/ 12 மணிநேரம் வேலை செய்கிறார்களா? சுதந்திர வர்த்தக வலையங்கள் பற்றி, சன் தொலைக்காட்சி ஒரு வார்த்தை கூட பேசாத மர்மம் என்ன?

கொரிய யுத்தம் ஐ.நா. தலையீட்டால் முடிவுக்கு வந்ததாக, வரலாற்றுப் புனைவு ஒன்றை திணிக்கிறார்கள். அன்றைய யுத்தத்தில், வட கொரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டதே "ஐ.நா. படைகள்" தான்! அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்திய "ஐ.நா. படைகள்". இந்தியா கூட பெயருக்கு ஒரு சிறு படையணியை அனுப்பி இருந்தது. போர்க்காலத்தில் நடந்த படுகொலைகளில் ஈடுபட்ட, ஐ.நா. படையினரும் போர்க் குற்றவாளிகள் தான்.

ஓர் "இந்திய" தொலைக்காட்சிக்கு, இந்த உண்மை தெரியாமல் போனதெப்படி? அது மட்டுமல்ல, கொரியப் போர் இன்னும் முடியவில்லை. அன்று ஒரு போர் நிறுத்தம் தான் கைச் சாத்திடப் பட்டது. அதன் அர்த்தம், இன்று வரைக்கும் வட கொரியாவும், அமெரிக்காவும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதுவும் தெரியாதா?

"நிஜம்" என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு, பொய்களை பரப்புவது தான் சன் தொலைக்காட்சியின் நோக்கமா? நிகழ்ச்சி தயாரிப்பதற்கு முன்னர், வட கொரியாவுக்கு நேரில் சென்ற சிலரின் ஆவணப் படங்களை பார்த்திருக்க வேண்டும். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில், கற்பனைக் கதைகளை சோடிப்பது சிலருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

வட கொரிய சிறைகளில் இருக்கும் கைதிகளை விட, பத்து மடங்கு அதிகமானோர் அமெரிக்க சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். ஏழைகள், அல்லது இனப்பாகுபாடு காரணமாகப் பல இலட்சம் பேர் கைது செய்யப் படுகின்றனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்கள் அகதிகள் என்றாலும் சிறைகளில் தடுத்து வைக்கப் படுகின்றனர். இவர்களில் ஈழத் தமிழ் அகதிகளும் அடக்கம்.

வட கொரியா ஓர் ஏழை நாடாக இருந்தாலும், அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்து வருகின்றது. அமெரிக்காவில், பணம் இல்லாவிட்டால் படிக்க முடியாது. காசில்லா விட்டால் நோய் வாய்ப்பட்டு சாக வேண்டியது தான்.

வட கொரிய அரசு, தனது மக்களுக்கு வீடுகளும் இலவசமாக கட்டிக் கொடுக்கிறது. அமெரிக்காவில் இலட்சக் கணக்கானோர் கடன் கட்ட முடியாமல், வருடக் கணக்காக வாழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவும், வட கொரியாவும் இன்று வரையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எதிரி நாடுகள். வட கொரியா, கொரிய தேசிய இனத்தை ஒன்றிணைப்பதற்கான மண் மீட்புப் போர் மட்டுமே நடத்தியது. ஆனால், அமெரிக்கா இன்று வரையில், சிறிதும் பெரிதுமான ஒரு டசின் உலக நாடுகள் மீது படையெடுத்துள்ளது.

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டு இலட்சக் கணக்கானோரை கொன்றது. கொரிய யுத்தத்தின் போது, கொரியாவிலும், சீனாவிலும் அணுகுண்டு போடப் போவதாக மிரட்டியது. 21 ம் நூற்றாண்டிலும், ஆப்கானிஸ்தான், ஈராக், ஆகிய நாடுகள் மீது படையெடுத்த அமெரிக்கப் படையினர், அங்கு இலட்சக் கணக்கான அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர்.

வட கொரியாவை விட, அமெரிக்கா தான், உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, பெரும்பான்மையான உலக மக்கள் நம்புகின்றனர். இதனை சில மேலைத்தேய புள்ளிவிபரங்களே உறுதிப் படுத்தி உள்ளன. அப்படி இருந்தும், இன்றும் சிலர், "வட கொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக" முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அமெரிக்க டாலர்களுக்காக கையேந்திப் பிழைக்கும் போலி மனிதநேயவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்காவின் இனப்படுகொலைகளை கண்டுகொள்ள மறுக்கும் மர்மம் என்னவோ? ஈழப்போரின் இறுதியில், வன்னிக்குள் அகப்பட்ட புலிகளையும், பொது மக்களையும், சாட்டலைட் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, குண்டு போட்டு அழிக்க உதவியதும் அமெரிக்கா தான் என்பதை அதற்குள் மறந்து விட்டார்களா?

வடகொரியா-மர்ம தேசம்

4 comments:

  1. தமிழ்நாட்டில் அனைத்து ஊடகங்களும் காவிமயமாகி
    விட்டது.திராவிடர்கள் என்று தம்மை அழைத்து கொள்ளும்
    நபர்களின் ஊடகங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
    BEST CHRISTIAN IS A CONVERTED CHRISTIAN என்பது போல.
    சாம்பிளுக்கு,தந்தி TV யின் ரங்கராஜ் பாண்டே ஒரு தீவிர RSS காரன்.
    இவர்களுக்கு கம்யூனிசம் என்ற வார்த்தையே விஷம் போல.

    இல்லுமினாட்டி பற்றி எழுதியிருக்கிறீர்களா?
    http://www.truthology.org.au/index.php/posts/419-rothschilds-illuminati-timeline
    "The Rothschild empire helped finance Adolf Hitler."
    இது எப்படி சாத்தியம்?
    கொஞ்சம் எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. good one pls add some documentry link for the same

    ReplyDelete
  4. இங்கு இருக்கும் பெரும்பாளான ஊடகங்கள் விபசார ஊடகங்களே...

    ReplyDelete