முகநூலில், யதார்த்தன் என்ற இளம் நண்பருக்கும் எனக்கும் இடையில் நடந்த அரசியல் தத்துவார்த்த உரையாடல். மார்க்சியம் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும் இளையோர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் கூறுவதாக அமைந்துள்ள உரையாடல், மேலும் பலருக்கு பயன் தரும் என்பதால், அதை இங்கே பதிவிடுகின்றேன்.
-----------------------------------------------------------------
கேள்வி:
ஒரு வகையில் மாக்சியமும் குறிப்பிட்ட வர்கமொன்றின் எதேச்சாதிகாரம் தான். அதிகாரம் யாரிலிருந்து பிறக்கிறதோ, அவர்களிடம் அதை கையாள கொடுப்பது பற்றி எத்தனை மாக்சிஸ்டுக்கள் சிந்தித்து இருக்கிறார்கள் ?
பதில்:
அதற்கு முதலில் நீங்கள் உலக வரலாற்றை எடுத்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடந்தது என்ன? மன்னராட்சி அல்லது பிரபுக்கள் வர்க்கத்திற்கு எதிரான, மத்தியதர வர்க்கத்தின் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா) "எதேச்சாதிகாரம்". அதற்குப் பிறகு நடந்த நெப்போலியன் போர்களையும் அதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அன்று ஐரோப்பாவில், பூர்ஷுவாக்களின் தாராளவாத(லிபரல்) கொள்கையின் பெயரால், மில்லியன் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.
பிரான்சில் தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. பாதிரிகள் பூண்டோடு அழிக்கப் பட்டார்கள். கன்னியாஸ்திரிகள் "ஏசுவின் விபச்சாரிகள்" என்று தூற்றப் பட்டார்கள். புரட்சியாளர்கள் அவர்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். அது மட்டுமல்ல, புரட்சியை முன்னெடுத்த அரசிலே ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள். தங்களது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாற்றுக் கருத்தாளர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தார்கள். "குறித்த வர்க்கமொன்றின் எதேச்சாதிகாரம்" இப்படித் தான் இருந்தது.
சோவியத் என்ற ரஷ்ய சொல்இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. சோவியத் என்பது மக்கள் சபை. அதாவது, மக்கள் அனைவரும் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம். ஒவ்வொரு திட்டமும் விவாதிக்கப் பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் முடிவெடுக்கப் படும். கிராமிய மட்டத்தில் இருந்து, தேசியமட்டம் வரையில் சோவியத் கட்டமைப்பு ஒரே மாதிரித் தான் இருக்கும். அது ஏற்கனவே பிரான்சில் உருவான கம்யூன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. உலகில் அதைவிட சிறந்தவொரு ஜனநாயக அமைப்பை யாராலும் காட்ட முடியாது.
கேள்வி:
சோவியத் என்ற சொல் இருக்கிறது ஆனால், சோவியத் யூனியன் எங்கே இருக்கிறது? பனியில் உருகி உடைந்த பெருங்கனவு எங்கே ?
பதில்:
பாரிஸ் கம்யூன் என்ற சொல் இருக்கிறது. கம்யூனிச பாரிஸ் இப்போது எங்கே இருக்கிறது? ஆயிரம் வருட உலக வரலாற்றில், புதிய தேசங்கள் தோன்றுவதும், மறைவதும் வழமை. தேசங்கள் நிலைப்பதில்லை. ஆனால், ஒரு பூலோக சொர்க்கத்திற்கான மக்களின் கனவு மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.
கேள்வி:
ஒரு சட்டகபடுத்தப்பட்ட கோட்பாட்டின் உறுதியின்மை. அது தேசத்தை உடைத்தது வரலாற்றபூர்வம் அல்லவா?
பதில்:
தனக்கு எதிரான கோட்பாடு அரசாளுவதற்கு, வல்லமை பொருந்திய மூலதனம் அனுமதிக்கப் போவதில்லை. கையூட்டு, சூழ்ச்சி, எதிர்ப் பிரச்சாரம், குழி பறிப்பு, நாசவேலைகள், அனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். அதை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம்.
கேள்வி:
அதிகாரத்தை தோற்கடிக்கும் கூறு அவ்வெற்றியின் பின் தானும் அதிகாரமாகி விடுகின்றது. பாட்டாளிகளின் அதிகாரம் நிரந்தரமாகி விட்டால், வர்கமற்ற இயற்கை நிலை சுவர்க்கம் பற்றிய கனவு கனவு மட்டும் தானே?
பதில்:
இதற்கு ஒரே வரியில் பதில் கூற முடியாது. விரிவான விளக்கம் அவசியம். வரலாற்றின் கடந்த காலங்களில், பல தடவைகள் இது போன்ற புரட்சிகள் நடந்துள்ளன. மார்க்ஸ்ஸுக்கு பிறகு தான் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவசமுதாயத்தில் உழைப்பை விற்றுப் பிழைக்கும் பிரிவினர் என்ற வரைவிலக்கணம்கொடுத்து, கார்ல்மார்க்ஸ் அவர்களுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார். அனார்க்கிஸ்ட் சோஷலிஸ்டுகள் பாட்டாளிவர்க்கம் என்பதற்கு பதிலாக உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கின்றனர். இரண்டும் ஒன்று தான்.
நாங்கள் இப்போது முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தை எடுத்துப் பார்ப்போம். அப்போதும் பாட்டாளிகள் இருந்தனரா? அன்று அவர்களுக்குவேறு பெயர் இருந்தது. அடிமைகள் என்றால் தெரியும். இந்திய சமுதாயத்தில் இருந்த தாழ்த்தப் பட்ட சாதியினரும் அந்த வகைக்குள் அடங்குவார்கள். ஆகையினால், உலக வரலாற்றில், எந்த நாட்டிலாவது அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றினார்களா என்று பார்க்கவேண்டும்.
அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய சம்பவங்கள்பலநடந்துள்ளன. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகஸ் எழுச்சி பண்டைய வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டமையினால் அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் என்ன செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
விவிலியநூலில் கூறப்படும் பாபிலோனிய யூத அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தமக்கென ஒரு மன்னராட்சியை ஸ்தாபித்தார்கள். வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்கதொரு மாற்றத்தை கிறிஸ்தவ மதம் உண்டாக்கியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதமும், ஆரம்பத்தில் அடிமைகளின் எழுச்சியாக இருந்துள்ளது. பிற்காலத்தில், ரோம அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தாமும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். அதனால் ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது. ஐரோப்பாவில் பாரம்பரிய அடிமைகள் முறை ஒழிக்கப்பட்டு, நிலப்பிரபுதத்துவ பண்ணையடிமை முறை வந்தது.
வரலாற்றில் பதியப்பட்டுள்ள அண்மைய உதாரணம், ஹைத்தி அடிமைகளின் எழுச்சி. கருப்பின அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், புரட்சியை முன்னெடுத்த தலைவர்கள், தாமும் வெள்ளையின எஜமானர்கள் போன்று தான் நடந்து கொண்டனர். சுதந்திரமடைந்த அடிமைகள் முன்பு தாம் செய்த அதே வேலைகளைத் தான் தொடர்ந்தும் செய்ய வேண்டி இருந்தது.
மேற்குறிப்பிட்ட வரலாற்று சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினைகளை பெற வேண்டும். பாட்டாளிவர்க்கம் புரட்சி செய்து அதிகாரத்தை கைப்பற்றினால், அவர்களும் முதலாளிகள் போன்று நடந்து கொள்ள மாட்டார்களா? அது சாத்தியமானது தான். ஆகவே, பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சியானது ஒரு சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
ஒருகட்சி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்தக் கட்சியின் கொள்கைகள் இயங்கியல் தத்துவ அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்காகத் தான் எத்தனையோ கோட்பாடுகள், அதைப்பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. கோட்பாடு இல்லாத புரட்சி நடந்தால், அது பழைய குருடி கதவைத் திறடி கதையாகத் தான் இருக்கும். அண்மைய உதாரணம்: துனீசியா, எகிப்து.
-----------------------------------------------------------------------------------------------------------------------முகநூலில் நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் இது:
கேள்வி:
நீங்கள் மார்க்சிய கோட்பாடுகளுக்கு அப்பால் செல்ல மாட்டீர்கள். அது ஒரு 19 ம் நூற்றாண்டுக் கோட்பாடு, நீங்கள் இன்னமும் 19 ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறீர்கள்.
பதில்:
முதலாளித்துவம் ஒரு 18 ம் நூற்றாண்டு கோட்பாடு என்றால், மார்க்சியம் அதை விட நவீனமானது. முதலாளித்துவத்தின் குழந்தையாகத் தான் மார்க்சியம் பிறந்தது.
கேள்வி:
இன்றைய மேற்கத்திய உலகில் இயங்குவது 18 ம் நூற்றாண்டு முதலாளித்துவம் அல்ல. அது மாறி விட்டது.ஸ்கண்டிநேவிய நாடுகளில் கல்வி இலவசம். அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளன. ஆனால்,நீங்கள் பழைய சிவப்புக் கோட்பாட்டை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பதில்:
அனைவருக்குமான கல்வியும், மருத்துவமும் மார்க்சியத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். பல மேற்கத்திய நாடுகளில், கல்வி, மருத்துவம் இலவசம் அல்ல. காப்புறுதி, அரசு மானியங்கள் மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும் கிடைக்கும் வகையில் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மார்க்சியர்கள் தான் அதனை ஒரு அரசியல் கொள்கை ஆக்கினார்கள்.
மார்க்சியர்களான சமூக- ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வாக்குகளால் வென்று அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு தான் அரசு மாறியது. அரசு தான் மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கின்றது. முதலாளிகள் அல்ல. அவர்கள் அதற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லாவிட்டால் ஒரு புரட்சியை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். ரஷ்யா,ஜெர்மனி, ஹங்கேரி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே புரட்சிகள் நடந்திருந்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் அவற்றைத் தொடர்ந்திருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
பதில் மிக சரியாக அமைந்திருக்கின்றன தோழர்
ReplyDeleteஎனது பதிவுகளில் மார்க்சிய அடிப்படையை எழுதி வருகிறேன்