Tuesday, April 14, 2015

நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்


ஈழப்போர் நடந்த காலங்களில், போர்க்களங்களில் காயமடைந்த போராளிகளின் உயிரைப் பாதுகாக்கும் முதலுதவிச் சிகிச்சை செய்வதற்கு தயாரான நிலையில் சில மருத்துவ வாகனங்களை வைத்திருந்தார்கள். அதில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியருக்கு ஓர் உண்மை தெரிந்திருக்காது. அதாவது, போர்க்களங்களில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வழங்கும் அமைப்பை உருவாக்கியவர் ஒரு கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர். அவர் பெயர் Dr. நார்மன் பெதியூன் (Dr.Norman Bethune)

மருத்துவ வரலாற்றில் நீண்ட காலமாகவே, குருதி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. ஆயினும், போர்க்களத்தில் காயப்பட்ட வீரர்களை அயலில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. 1935 ம் ஆண்டு, அதிலே ஒரு புரட்சிகர மாற்றம் நடைபெற்றது. காயமடைந்த வீரர்களை தேடி மருத்துவமனை வந்தது. அதாவது, குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப்பட்ட குருதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு வாகனம் ஓடித் திரிந்தது. அந்த வாகனம் போர்க்களத்திற்கே சென்று சிகிச்சை அளித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. பிராங்கோவின் பாஸிசப் படைகளை எதிர்த்து, கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், குடியரசுவாதிகளும் தனித்தனி இராணுவங்களை அமைத்து போரிட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கம்யூனிஸ்டுகளின் படையணிக்கு உதவுவதற்காக, பன்னாட்டு தொண்டர்கள் வருகை தந்தனர். குறைந்தது 35000 தொண்டர்கள், 60 நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வெவ்வேறு பட்ட இனத்தவர்கள், அன்று ஸ்பெயினில் போரிட்டனர். அவ்வாறு கனடாவில் இருந்து சென்ற தொண்டர்களில் பெதியூனும் ஒருவர்.

கனடாவில் வாழ்ந்த காலங்களிலேயே, கம்யூனிச சித்தாந்தம் பால் கவரப் பட்ட பெதியூன் 1935 ம் ஆண்டு, கனடிய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் இயங்கிய தொண்டு நிறுவனமான Committee to Aid Spanish Democracy (CASD) பெதியூனை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தது. 

பெதியூன் மாட்ரிட் நகருக்கு வந்து சேர்ந்த பொழுது, வைத்தியசாலைகளில் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்ததால், காயமடைந்தவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட தங்க வைக்கப் பட்டனர். அங்குள்ள நிலைமைகளை பார்த்த பெதியூன், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக இளம் வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்ததை கண்டார். அப்போது தான் அவர் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

பிரிட்டனில் இருந்து விசேடமான வேன் ஒன்றை தருவித்தார். அதற்குப் பின்னால் ஒரு குளிர்சாதனப் பெட்டியை இணைத்தார். அதில் குருதி எந்நேரமும் உறை நிலையில் வைக்கப் பட்டிருக்கும். மாட்ரிட் நகரில் குருதியை சேகரிப்பதற்காக ஓர் இரத்த வங்கியை நிறுவினார். 

அன்றிருந்த போர்ச் சூழலில் அனைவரும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையினால் கஷ்டப் பட்டனர். அதனால், கொடையாளிகளின் இரத்தமும் தரம் குறைந்து காணப் பட்டது. பெதியூன் கொடையாளிகளுக்கு முதலில் நல்ல உணவு உண்ணக் கொடுத்து விட்டு தான், அவர்களிடம் இருந்து இரத்தம் சேகரித்தார்.

பார்சலோனா நகரில் ஏற்கனவே ஓர் இரத்த வங்கி இருந்த படியாலும், போர்க்களத்தில் இருந்து எட்டத்தில் இருந்த படியாலும், அந்த நகரை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கினார். பெதியூன் அனுப்பிய அம்புலன்ஸ் வண்டிகள், தினசரி பகலும் இரவுமாக ஓடிக் கொண்டிருந்தன. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி இரத்தம் வழங்கி, அவர்களை சாக விடாமல் காப்பாற்றின. 

நடமாடும் இரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை திறம்பட செயற்பட வைத்ததன் மூலம், கம்யூனிச/சோஷலிசப் படையினர் அனைவருக்கும் இரத்தம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சில காரணங்களுக்காக, ஸ்பெயின் அரச படைகளின் சுகாதார நிறுவனமான Sanidad Militair அதனைப் பொறுப்பெடுத்தது. 

ஸ்பெயினை விட்டுச் சென்ற பெதியூன் அதற்குப் பிறகு அந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கவில்லை. அதே நேரம், சீனாவில் மாவோவின் கம்யூனிசப் படைகள், ஜப்பானிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. பெதியூன் மாவோவின் அழைப்பை ஏற்று சீனா சென்றார். அங்கு அவர் மக்கள் விடுதலைப் படையின் தொண்டராக சேர்ந்தார். 

பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939 ல், பெதியூன் சீனாவில் காலமானார். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ சிகிச்சைகள் காரணமாக, அவரது இரத்தத்தில் நஞ்சு ஏறியிருந்தது. நார்மன் பெதியூனின் சேவையை நினைவுகூரும் முகமாக, சீனா முழுவதும் நூற்றுக் கணக்கான சிலைகள் வைக்கப் பட்டன. இன்றைக்கும் அந்தச் சிலைகள் சீனாவில் உள்ளன.

பெதியூன் பற்றிய திரைப்படம் : Dr Bethune

1 comment:

  1. உலக அளவிலான பல புதிய செய்திகள் தகவல்களை தெரிந்து வருகிறேன் உங்களிடமிருந்து..கூடவே உலக அரசியலும்.
    சிறப்பான பதிவுகள் ..

    ReplyDelete