Thursday, March 12, 2015

தெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேபியரிடம் இந்திய வாள்கள்


உலகம் முழுவதையும் காலனிப் படுத்திய ஐரோப்பியர்கள், அதற்குப் பிறகு உலக வரலாற்றை தமக்கேற்றவாறு திரிபு படுத்தி எழுதி வந்தனர். பல உண்மையான வரலாற்றுத் தகவல்களை இருட்டடிப்பு செய்து வந்தனர். நாங்கள் இன்றைக்கு ஐரோப்பியர் எழுதிய பொய்களையும், புனைவுகளையும் உண்மை என்று நம்பி படித்துக் கொண்டிருக்கிறோம்.

16 ம் நூற்றாண்டில், காலனிய கால கட்டத்திற்கு பின்னரே, ஐரோப்பியர்கள் "ஆப்பிரிக்காவை கண்டுபிடித்தனர்", அதற்குப் பிறகு தான் கருப்பின மக்களும் ஐரோப்பியருக்கு அறிமுகமானார்கள் என்று சில அறிவுஜீவிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக, அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வாணிபத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, அப்படியொரு புனைவை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ரோம சாம்ராஜ்யமாக இருந்த பண்டைய இத்தாலியில், ஆப்பிரிக்க கருப்பின மக்களும் ரோமாபுரியின் குடி மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அது ஒரு சாதாரணமான விடயம். ஏனெனில், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா வரையும் ரோம சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. இன்று முன்னாள் காலனிய நாடுகளை சேர்ந்த மக்கள், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறி வாழவில்லையா? அது போன்று தான் அந்தக் காலத்திலும் இருந்துள்ளது.

எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஆப்பிரிக்க கருப்பர்கள், கணிசமான அளவில் இத்தாலியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பண்டைய ரோமர்கள் காலத்தில் குடியேறிய "யூத டயஸ்போரா" இருக்கலாமென்றால், "ஆப்பிரிக்க டயாஸ்போரா" இருந்திருக்காதா? அநேகமாக, யூதர்கள் தனியான மதப் பிரிவாக பழமைவாதத்தை பேணி வந்தது மாதிரி, ஆப்பிரிக்கர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளூர் இத்தாலி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர்.

அதனை நிரூபிக்கும் வகையில், பண்டைய நகரமான பொம்பெய்யில் ஒரு பாழடைந்த இசிஸ் ஆலயம் இன்றைக்கும் உள்ளது. இன்றைய நேப்பிள்ஸ் நகருக்கு அருகில் உள்ள பொம்பெய், திடீரென வெடித்த எரிமலைத் தணல்களால் மூடப் பட்டிருந்தது. அந்த நகரின் இடிபாடுகளில், இன்னமும் அழியாத சுவரோவியம் ஒன்றில், இசிஸ் ஆலயம் ஒன்றின் படத்தை பார்க்கலாம். இசிஸ் என்பது, பண்டைய எகிப்தியரால் வழிபடப் பட்டு வந்த பெண் தெய்வம் ஆகும். (இஸ்லாமிய தேசம் எனும் ISIS உடன், இதனை குழப்பிக் கொள்ளக் கூடாது.)

பொம்பெய் ஓவியத்தில், கருப்பின பூசாரி ஒருவர் இசிஸ் எனும் பெண் தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைப் பார்க்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்களும், இத்தாலியர்களும் வழிபட்டு வந்த இசிஸ் ஆலயம், இன்றைய இந்துக் கோயில்கள் போன்று இருப்பதையும் அவதானிக்கலாம். 

இந்துக்களின் கோயில்களில் நடப்பதைப் போன்று, ஆப்பிரிக்கர்களின் இசிஸ் ஆலயத்திலும், பக்தர்கள் இரண்டு பக்கமும் வரிசையாக நின்று கும்பிடுகிறார்கள். (வெள்ளையின, கருப்பின பக்தர்கள் கலந்திருப்பது சுவரோவியத்தில் தெளிவாகத் தெரிகின்றது.) ஒரு கருப்பினப் பூசாரி தீபாராதனை காட்டுகிறார். கோயில் முற்றத்தில் கற்பூரம் கொளுத்துவதற்கு வசதியாக, கல்லால் செய்த ஒரு சதுர வடிவிலான தட்டு வைத்திருக்கிறார்கள். நான் சொல்வதை நம்பாதவர்கள், பொம்பெய்க்கு நேரில் சென்று பார்க்கலாம்.

ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்களின் வரலாற்றை மட்டும் இருட்டடிப்பு செய்யவில்லை. அரேபியர்கள், தமிழர்கள் (அல்லது தென்னிந்தியர்கள்) இடையிலான வர்த்தக, இராணுவத் தொடர்புகளையும் மறைத்து வந்தனர். அந்தக் காலங்களில், இந்தியாவும், அரேபியாவும், நாகரிக வளர்ச்சியில் ஐரோப்பாக் கண்டத்தை விட பல மடங்கு சிறப்பான நிலையில் இருந்துள்ளன.

உலகில் ஐரோப்பியர்கள் மேன் நிலைக்கு வந்தமைக்கு, அவர்களிடம் இருந்த நவீன ஆயுதங்கள் காரணம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் ஆயுத பலத்தில் மிகவும் பின்தங்கி இருந்தனர். கிறிஸ்தவ ஐரோப்பா, இஸ்லாமிய மத்திய கிழக்கை விட நாகரிகத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. 

சிலுவைப் போர் நடந்த காலத்தில், இன்றைய சிரியா வரையில் படையெடுத்து வந்த ஐரோப்பியர்கள், அந்தக் காலத்தில் மிகவும் நவீனமான ஆயுதங்களை கண்டு வியந்தனர். அதில் ஒன்று "டமாஸ் (Damatz) வாள்". அரேபியர்கள் பயன்படுத்திய டமாஸ்கஸ் வாள் என்பது மருவி, ஐரோப்பியர் வாய்களில் டமாஸ் வாள் என்று அழைக்கப் பட்டது. 

அப்படி அந்த வாளில் என்ன விசேஷம்? போர்க்களத்தில் எப்படிப் பாவித்தாலும் உடையவே உடையாது. அந்தளவு உறுதியான உலோகத்தால் செய்யப்பட்டது. பாவிக்க இலகுவானது. அது ஐரோப்பியரின் வாள்களைப் போன்று, கவசத்தை குத்தித் துளைப்பதற்கானது அல்ல. ஆனால், ஆழமாக வெட்டக் கூடியது. 

அதை எப்படி செய்தார்கள்? இரும்பை உருக்கி, 1600 பாகை வெப்பத்தில் திரவமாக்குவார்கள். பின்னர் அந்த இரும்புக் குழம்புக்குள் மரக் கரியும், சில குறிப்பிட்ட இலைகளும் கலப்பார்கள். நீண்ட காலமாக, டமாஸ் வாள் எப்படித் தயாரிக்கப் பட்டது என்பது, ஐரோப்பியருக்கு புரியாத புதிராக இருந்தது. தொழில்முறை இரகசியம் தெரியாத படியால், யாராலும் போலியாக தயாரிக்க முடியாமல் இருந்தது. (Historia, Nr.3/2015)

இந்தக் காலத்தில் படையினரால் விரும்பிப் பாவிக்கப் படும், AK - 47 துப்பாக்கிக்கு உள்ள மதிப்பு, அந்தக் காலத்தில் டமாஸ் வாளுக்கு இருந்துள்ளது. உண்மையில், அரேபியர்களும் அதனை தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தனர். இந்திய மன்னர்கள் பயன்படுத்தியதாக, படங்களில் பார்க்கும் அதே வாள் தான். வரலாற்றில் கடைசியாக திப்பு சுல்த்தானால் பயன்படுத்தப் பட்டது. கி.மு. 300 இலிருந்து தென்னிந்தியர்களினால் தயாரிக்கப் பட்ட டமாஸ் வாள், அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் விலையானது. 

இந்தியா ஒரு காலத்தில், உலகில் மிகச் சிறந்த ஆயுதங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்து வந்துள்ளது. அதாவது, இன்று அமெரிக்கா ஆயுதங்களை தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் போன்று, அன்று இந்தியா அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. பண்டைய வணிகத் தொடர்பு காரணமாக, அன்று இந்தியாவும், அரேபியாவும் உலகில் நாகரிகமடைந்த நாடுகளாக இருந்துள்ளன. பிற்காலத்தில் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்த, ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மூடி மறைந்த வரலாறுகளில் இதுவும் ஒன்று.

1 comment: