Tuesday, March 31, 2015

ஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம்



ஹொண்டூரஸ் நாட்டில், அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய நான்கு பாடசாலை மாணவர் தலைவர்கள், கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு மக்கள் பெருமளவில் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையின் படி, கல்விக்கான அரசு செலவினம் குறைக்கப் படுவதுடன், பாடசாலை முடியும் நேரமும் மாற்றப் பட்டுள்ளது. இதனால், மாலை நேரம் பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். 

பொதுப் போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது மட்டுமல்ல, குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கும் ஆபத்தான இடங்களுக்கு ஊடாக செல்ல வேண்டுமென அஞ்சுகின்றனர். ஏழை மாணவர்கள் படிக்க விடாமல் தடுக்கும் அரசின் திட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அதனை தினந்தோறும் விரிவாக அறிவிக்கும் CNN போன்ற ஊடகங்கள், இன்னொரு லத்தீன் அமெரிக்க நாடான ஹொண்டூரஸ் பக்கம் திரும்பியும் பார்க்காத காரணம் என்னவோ?

Assassination of 4 Student Leaders in Honduras Prompts Protests

********


23 மார்ச், கனடாவில், பிரெஞ்சு பேசும் கியூபெக் நகரில், இலட்சக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. கல்விக்கான செலவினத்தை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அன்றிலிருந்து 15 நாட்கள் வகுப்புகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் வரும் மே தினத்தன்று, தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

Quebec City protesters shot directly with tear gas

Monday, March 30, 2015

சிங்கப்பூரில் தொடரும் அரச பயங்கரவாதம், லீகுவான்யூவை விமர்சித்த சிறுவன் சிறையில்

(எச்சரிக்கை: இந்தப் பதிவும், இதிலுள்ள வீடியோவும் சிங்கப்பூரில் இருப்பவர்கள் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.)

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவை பற்றி வானளாவப் புகழும் தமிழர்கள் பலரைக் கண்டிருப்பீர்கள். கை நிறைய பணம் கிடைக்குமானால், அவர்கள் ராஜபக்சவை பற்றிக் கூட புகழ்ந்து பேசத் தயாராக இருக்கிறார்கள். கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டத்தில், ஏராளமான (போலித்) தமிழ் தேசியவாதிகளும் இருக்கின்றனர். 

உலகம் முழுவதும் சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில், மக்கள் வாய் மூடி மௌனிகளாக இருந்ததைப் போன்று தான், சிங்கப்பூர் பிரஜைகளும் வாழ்கின்றனர். தங்களது கல்வி, தொழில் வாய்ப்பு, குடும்ப நலன், வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே முக்கியமாகக் கருதும் ஆட்டு மந்தைக் கூட்டமாக சிங்கப்பூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஷேக்குகளின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும், லீகுவான்யூவின் சிங்கப்பூருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.   

இந்த உண்மைகளை யாரும் இணையத்தில் கூடப் பரப்ப முடியாது. அரச அடக்குமுறையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறைவாசம் கிடைக்கும். லீகுவான்யூ மறைவுக்குப் பின்னர், சிங்கப்பூரில் இருந்து கேட்ட கலகக் குரல் ஒன்று மிக வேகமாக நசுக்கப் பட்டது. 

ஆமோஸ் யி (Amos Yee) எனும் 17 வயது சிங்கப்பூர் சிறுவன், லீகுவான்யூவை விமர்சித்து ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டிருந்தான். அதற்காக அவனைக் கைது செய்துள்ள பொலிஸ், அவன் மீது இருபது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவும் அழிக்கப் பட்டு விட்டது. 

"இறுதியில் லீகுவான்யூ இறந்து விட்டான்" என்று வீடியோவில் பேச ஆரம்பிக்கும் ஆமோஸ் யி, "லீ  கொடூரமானவன்" என்று சாடுகின்றார். அப்படி சொன்னதற்காகவே பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம் என்று எல்லோரும் பயந்திருந்தார்கள். லீ ஆதரவாளர்கள் அறியாமையிலும், மாயையிலும் வாழ்கிறார்கள்.  

லீகுவான்யூ ஒரு சர்வாதிகாரி. ஆனால், தான் ஒரு ஜனநாயகவாதி என்று உலகம் முழுவதையும் ஏமாற்றிக் கொண்டிருந்தார். மக்களிடம் இருந்து அதிக வரி அறவிடும் அரசு, சுகாதாரத் துறைக்கு மிகவும் குறைவாகவே செலவிடுவதாக ஆமோஸ் கூறுகின்றார். சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகமாக இருப்பது மட்டுமல்ல, உலகிலேயே அதிகமாக மன உளைச்சலால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.

உலகில் உள்ள வழமையான சர்வாதிகாரிகளைக் காட்டிலும், லீகுவான்யூ வித்தியாசப் படுவதற்கு காரணமாக, அவரை இயேசு கிறிஸ்துவின் அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். ஒரு பக்கம் அதிகார மமதை கொண்டவராகவும், மறுபக்கம் கருணையுள்ளம் படைத்தவராகவும் காட்டிக் கொள்வதில், லீகுவான்யூ இயேசு கிறிஸ்துவை போன்றவர்.

ஆமோஸ் யி யை கைது செய்து தடுத்து வைத்துள்ள சிங்கப்பூர் காவல்துறையினர், மத நிந்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளனர். அதாவது, லீகுவான்யூவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் பேசியதற்காக, தாங்கள் ஒரு 17 வயது சிறுவனை கைது செய்யவில்லையாம். மதத்தை இழிவு படுத்தியதற்காக கைது செய்தார்களாம். "சிங்கப்பூரில் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி நடக்கிறது. லீகுவான்யூ ஒரு சிங்கப்பூர் ராஜபக்சே," என்ற உண்மையைக் கூறினால் பலருக்குப் பிடிப்பதில்லை.  ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர், தங்களது அடிமை விசுவாசத்தையும், அடிவருடித்தனத்தையும் காட்ட வேண்டாமா?

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. "சிங்கப்பூரின் ராஜபக்சே" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு
2. சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
3. லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்


சிங்கப்பூர் அரச அடக்குமுறையாளர்கள் அழித்த யூடியூப் வீடியோவை, ஆமோஸ் ஆதரவாளர்கள் மீள்பதிவேற்றம் செய்து வருகின்றனர். 
சிங்கப்பூர் அரச ஆதரவு The Straits Times பத்திரிகையில் வந்த செய்தி

Sunday, March 29, 2015

லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்

(எச்சரிக்கை: சிங்கப்பூரில் இருப்பவர்கள் இந்தப் பதிவையும், வீடியோவையும் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.) 

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவின் கொடுங்கோல் ஆட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஆவணப்படம். இது போன்ற எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும், ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடிவருடிப் பிழைக்கும், அடிமை விசுவாசிகளுக்கு உறைக்கப் போவதில்லை.

சிங்கப்பூர் அரசு நீண்ட காலமாக தனது பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் லீ அரசுக்கு எதிராக எதையும் கூற முடியாது என்பது தெரிந்ததே. ஆனால், வெளிநாட்டு ஊடகங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், லீ அதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, பெருமளவு பணத்தை தண்டமாகக் கட்ட வைத்து, வாயை மூடப் பண்ணியுள்ளார்.

இலங்கையில் அரச எதிர்ப்பாளர்களையும், ஈழப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு PTA எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டது. சிறிலங்கா அடக்குமுறை அரசு, அவசரகால சட்டத்தின் மூலம், விசாரணை இல்லாமல், காலவரையறையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்தது. சிங்கப்பூரில் லீயின் அரசு ISA எனும் அடக்குமுறை சட்டத்தை பிரயோகித்து, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ISA சட்டம், பின்னர் லீ எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு பயன்பட்டது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டில், அடிக்கடி பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தேர்தலில் லீயின் PAP கட்சிக்கே அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வைக்கப் பட்டது எப்படி? சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு பண முடிப்புகளும், அரச செலவில் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கும் பணியாதவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை ஏவி விடப் பட்டது.

இந்திய அரசியல் அலங்கோலங்களை விட மிகவும் மோசமாக சிங்கப்பூரில் நடந்துள்ளது. லீகுவான்யூ ஒரு "சிங்கப்பூர் ராஜபக்சே" மட்டுமல்ல, அதற்கும் மேலே...

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

One Nation Under Lee (complete video) 

Saturday, March 28, 2015

சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்


போலித் தமிழ்த் தேசியவாதிகள், மறைந்த சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூவுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொழுதே, பேரினவாத அரசுக்கு சார்பான அடிவருடித்தனம் அவர்களையும் மீறி வெளிப்படுகின்றது. 

தெருக்களில் எச்சில் துப்புவதை தடை செய்த தலைவர் என்று லீகுவான்யூவை புகழ்கின்றனர். இலங்கையில் ராஜபக்சே கூட, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று தடை செய்திருந்தார். இத்தாலியில் முசோலினி, நேரத்திற்கு ரயில் விட்ட பெருமைக்குரியவர்.

உலகம் முழுவதும் பாசிஸ்டுகள், நாட்டை சுத்தமாக வைத்திருந்து நல்ல பெயர் சம்பாதித்துள்ளனர். இவற்றை மட்டும் குறிப்பிட்டுப் பேசி, அவர்கள் மக்கள் மீது பிரயோகித்த கொடுங்கோன்மையை மறைப்பதன் மூலம், போலித் தமிழ்த் தேசியவாதிகள் பேரினவாத சர்வாதிகார அரசுக்கு துணை போகின்றனர். அது சிங்கப்பூராக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் அவர்களது அரசியல் ஒன்று தான்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச, தனக்கு எதிரான சக்திகளை அரசியல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். ஊடகங்களின் மேல் கட்டுப்பாடுகளை விதித்தார். எதிர்த்துப் பேசியவர்களை சிறையில் அடைத்தார் அல்லது காணாமல் போகச் செய்தார். சிங்கப்பூரில் லீகுவான்யூவும் அதையே தான் செய்தார். இன்றைக்கும் அங்கே எந்த ஊடகமும் லீயை விமர்சித்து எழுத முடியாது. 

சிங்கப்பூர் அரசை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான அடக்குமுறைகளை சந்திக்க வேண்டும். குறைந்த பட்சம், அரச எதிர்ப்பாளர்களுக்கு தொழில் செய்யும் உரிமை, வசதியாக வாழும் உரிமை மறுக்கப் படும். இதனால் பல அரச எதிர்ப்பாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். ராஜபக்சேயின் ஆட்சிக்கும், லீகுவான்யூ ஆட்சிக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில், வரலாற்று ரீதியாகவும் ஒற்றுமைகள் உள்ளன. பூகோள அடிப்படையில், இரண்டுமே தீவுகள் தான். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் இருந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான துறைமுக நகரங்கள் அமைந்துள்ளன. அது மட்டுமல்ல, இரண்டுமே பிரிட்டிஷாரால் தனித்தனி நிர்வாக அலகுகளாக ஆளப் பட்டு வந்தன. அறுபதுகளில் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் தலையீட்டினால் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.

சிங்கப்பூர் சனத்தொகையில், 75% சீனர்கள் (இலங்கையில் 75% சிங்களவர்கள்), 15% மலேயர்கள் (இலங்கையில் 15% தமிழர்கள்), 10% இந்தியர்கள் (இலங்கையில் 7% முஸ்லிம்கள்)

கலாச்சார ரீதியாகவும், சிங்கப்பூர், சிறிலங்காவுக்கு இடையில் ஒற்றுமைகள் காணப் படுகின்றன. இலங்கை எவ்வாறு இந்தியாவுடன் தொடர்பு பட்டிருந்ததோ, அதே மாதிரி சிங்கப்பூர் மலேசியாவுடன் நீண்ட கால கலாச்சார தொடர்புகளை பேணி வந்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள், இலங்கையில் சிறுபான்மையாக உள்ளனர். அதே மாதிரி, அயல் நாடான மலேசியாவில் பெரும்பான்மையாக வாழும் மலே மக்கள், சிங்கப்பூரில் சிறுபான்மையாக உள்ளனர். 

அது மட்டுமல்ல, இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக, சிங்களப் பேரினவாதிகளின்  இனக் கலவரம் தூண்டி விடப் பட்டு, அவர்கள் ஒடுக்கப் பட்டு வந்ததைப் போன்று, சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக நடந்தது. சிங்கப்பூரில் மலே மக்களுக்கு எதிராக, சீனப் பேரினவாதிகள் இனக்கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை முன்நின்று நடத்திய முக்கியமான தலைவர் யார்? வேறு யாருமல்ல, நமது போலித் தமிழ்த் தேசியவாதிகளின் நன்மதிப்பை பெற்ற லீகுவான் யூ தான்! (1964 race riots in Singapore; http://en.wikipedia.org/wiki/1964_race_riots_in_Singapore )

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மை இனத்தவர்கள், "இந்தியர்களாக, அல்லது இந்திய விஸ்தரிப்புக்கு துணை போகும் ஐந்தாம் படையாக" கருதப் பட்டனர். சிங்கப்பூரில் மலே சிறுபான்மை இனத்தவர் மீதும் அதே மாதிரியான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டன.

லீகுவான்யூ மலே சிறுபான்மை இனத்தவர்களை மட்டும் ஒடுக்கவில்லை. கம்யூனிஸ்டுகளையும் ஒடுக்கி வந்தார். இன்று வரைக்கும் சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இலக்கியங்களுக்கும் தடை உள்ளது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான "தெருச் சண்டியன்" என்ற புகழும் லீகுவான்யூவை சேரும். இலங்கையிலும், "கம்யூனிஸ்ட் அபாயத்தை" ஒடுக்குவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. ஐம்பதுகளில் பொது வேலை நிறுத்த காலத்தில் நடந்த அரச அடக்குமுறைகளை அதற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், "இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று யாருமில்லை. நாம் எல்லோரும் இலங்கையர்கள்..." என்று அறிவித்தார். லீகுவான்யூ சிந்தனையும், அதே மகிந்த சிந்தனை தான். "சிங்கப்பூரில் சீனர், மலே, இந்தியர் என்று யாரும் இல்லை. நாம் எல்லோரும் சிங்கப்பூரியர்கள்..." என்றார். இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

இலங்கையில் பெரும்பான்மை சிங்களவரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போன்று, சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு, தனது முதன்மை எதிரிகளாக கருதிய தமிழர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில், மூன்றாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது.

சிங்கப்பூரில் லீகுவான்யூ செய்ததும் அதே தான். முதன்மை எதிரிகளாக கருதிய மலேயர்களுடன் முரண்பாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழர்களுக்கு சலுகைகள் கொடுத்து அவர்களின் ஆதரவை சம்பாதித்திருந்தார். லீ அரசில் தமிழர்கள் அமைச்சராக இருந்ததைக் கூறி பெருமைப் படுகின்றனர். சிறிலங்கா அரசும் அதையே தான் செய்தது. பல முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தது. என்ன வித்தியாசம்?

லீகுவான்யூ "தமிழர்களுக்கு ஆதரவாக" பேசி விட்டாராம். மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசியதைப் போன்று தான் இதையும் பார்க்க வேண்டும். தங்களது நாடுகளில் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் சர்வாதிகாரிகள், பிற நாட்டுப் பிரச்சினையில் நடுநிலையாளராக காட்டிக் கொள்வார்கள். இவர்கள் முன்வைக்கும் "தீர்வுகளும்" ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்ட தீர்வுகள் தான் என்பதை சொல்லத் தேவையில்லை.

லீகுவான்யூ தமிழர்களின் நண்பன் என்று சொல்லிப் பெருமைப்படும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், இதே லீகுவான்யூ தான் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தார் என்ற உண்மையை மறைப்பது ஏனோ? புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் நடந்த காலத்தில், புலிகளின் ஆயுதக் கடத்தல் கப்பல்களை காட்டிக் கொடுத்ததில் சிங்கப்பூர் கடற்படைக்கும் பங்கிருந்ததை மறந்து விட்டார்களா? புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்த சிங்கப்பூர் பிரஜையை அமெரிக்காவில் பிடித்துக் கொடுக்க உதவிய விடயம் தெரியாதா?

இவர்களை எதற்காக "போலித் தமிழ்த் தேசியவாதிகள்" என்று அழைக்கிறோம் என்பதை உணர வேண்டும். அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்கள் சார்பாகவும் பேசவில்லை, புலிகளையும் ஆதரிக்கவில்லை. ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதும், முதலாளிய சர்வாதிகாரத்திற்கு மக்களை அடிபணிய வைப்பது மட்டுமே அவர்களது குறிக்கோள்.


சிங்கப்பூரில் லீகுவான்யூவின் சர்வாதிகார ஆட்சி பற்றிய ஆவணப்படம்:

Tuesday, March 24, 2015

"சிங்கப்பூரின் ராஜபக்சே" லீ குவான் யூ எனும் ஒரு சர்வாதிகாரியின் மறைவு


"சிங்கப்பூரின் ராஜபக்ச" வான, சர்வாதிகாரி லீ குவான் யூவின் மரணத்திற்கு, போலித் தமிழ் தேசியவாதிகளும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். சதாம் ஹுசைன், கடாபி கொல்லப் பட்ட நேரம், "சர்வாதிகாரி ஒழிந்தான்" என மகிழ்ச்சி தெரிவித்தவர்கள், சிங்கப்பூரின் சர்வாதிகாரியான லீ குவான் யூவின் மரணத்திற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்.

People's Action Party எனும் ஒரே கட்சியின் சர்வாதிகார ஆட்சி நடக்கும் சிங்கப்பூர் நாட்டில், முன்னாள் அதிபர் லீ குவான் யூவின் மகன் Lee Hsien Loong ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளார். இவர் ஒரு இராணுவ ஜெனரல் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கப்பூரில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மருந்துக்கும் கிடையாது. (Human rights in Singapore; http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Singapore)

நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை மட்டும் தொடர்ந்தும் இருக்கிறது. பிற "எதிர்க்கட்சிகள்" பெயரளவில் இயங்குவதற்கு சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. ஆயினும், அவை ஆட்சியதிகாரத்தினை கைப்பற்ற முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளன. சிங்கப்பூரில், சுதந்திரமான ஊடகம் என்று எதுவும் இல்லை. தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது கூட குற்றமாக்கப் பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக சமூகவலைத்தளமொன்றில் எழுதினால் கூடத் தண்டனை கிடைக்கும். பல தசாப்தங்களாக, அரச எதிர்ப்பாளர்களின் வாழும் உரிமை பறிக்கப் பட்டு வந்துள்ளது. அதாவது, அரசுக்கு எதிரானவர்களை சிறையில் போட்டு சித்திரவதை செய்வதில்லை. ஆனால், அவர்கள் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது. படிக்க முடியாது. வசதியாக வாழ முடியாது. அவர்களின் மனித உரிமைகள் மீறப் படுகின்றன.

வட கொரியாவில் முன்னாள் அதிபர் கிம் இல் சுங்கின் மகன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதை குடும்ப ஆட்சி என்று பரிகசித்தவர்கள், சிங்கப்பூர் விடயத்தில் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் மர்மம் என்னவோ? சிங்கப்பூரிலும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி தானே நடக்கிறது? தமது வர்க்க சார்புத் தன்மையையும், ஏகாதிபத்திய விசுவாசத்தையும் மறைப்பதற்காக, பலர் இங்கே இரட்டை வேடம் போடுகிறார்கள்.

இந்து சமுத்திரத்தையும், பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியில் அமைந்துள்ள சிங்கப்பூர், சர்வதேச கடல் வாணிபத்தால் "ஆசியாவின் பணக்கார" நாடானது. பொருளாதார முக்கியத்துவம் கருதி மேற்கத்திய நாடுகள் துணை நின்றதால் தான், சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

முன்னாள் சீன கடற்கொள்ளையர்கள் லீ குவான் யூ அரசில் முதலாளிகளாக மாறினார்கள். அது மட்டுமல்ல, லீ குவான் யூ ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி, எதிர்க்கட்சிகள், மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை சிறையில் அடைத்தார். சிங்கப்பூரில் இன்று வரையில் அரசியல் கருத்துச் சுதந்திரம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றது.

லீ குவான் யூ அரசு, தனியார்மயத்திற்கு நூறு சதவீத சுதந்திரம் வழங்கவில்லை. இன்றைக்கும், சிங்கப்பூரின் முக்கால்வாசி நிலம் அரசுக்கு சொந்தமானது. உலகில் எந்த நாட்டிலும் நூறு சதவீத முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை வசதிகளை உயர்த்தவில்லை. அரசின் பொருளாதார திட்டங்கள் தான் மக்கள் நலன் சார்ந்து இயங்கக் கூடியவை. அதற்கு சிங்கப்பூர் ஓர் உதாரணம். 

கண்ணை மூடிக் கொண்டு தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில், லீ குவான் யூ வித்தியாசமானவராக திகழ்ந்தார். தமிழீழத்தை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டவர்கள், லீ குவான் யூவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

Saturday, March 21, 2015

அமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்கு பலியாகும் கருப்பின ஏழைகள்


  • அமெரிக்கா என்றதும் அது பொன் விளையும் சொர்க்க பூமியாகத் தான் பலரின் கண்களுக்குத் தெரிகின்றது. சொர்க்கத்தின் மறுபக்கமாக நரகம் இருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை. "பணக்கார நாடான" அமெரிக்காவில் பல இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பான்மை ஏழைகள், கறுப்பினச் சிறுபான்மையினராக இருப்பதால், அது நிறவாதப் பிரச்சினையாகவும் உள்ளது.
  •  
  • தமது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத ஆயிரக் கணக்கான ஏழைகள், சிறைகளில் அடைத்து வதைக்கப் படும் உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?உதாரணத்திற்கு,போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் கட்ட முடியாத ஏழைகள், எந்தக் குற்றச்சாட்டும் இன்றி மாதக் கணக்காக சிறைகளில் வாடுகின்றனர்.
  •  
  • ஒரு "நாகரிகமடைந்த ஜனநாயக" நாடான அமெரிக்காவிலும், சட்டங்கள் எழுத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை பின்பற்றப் படுவதில்லை அல்லது அந்தச் சட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதில்லை. ஒரு சராசரி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பதைப் போன்ற சிறைச்சாலை அவலங்களும், காவலர்களின் அத்துமீறல்களும் அமெரிக்காவிலும் நடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பத் தான் வேண்டும்.
  •  
  • நெதர்லாந்தில் வெளியாகும் பிரபல தினசரிப் பத்திரிகை de Volkskrant ல் பிரசுரமான ஆய்வுக் கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துத் தருகிறேன். அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அறிந்து கொள்வதற்கு இது உதவும்.

Zwart, arm, dus een prooi voor de witte macht 
(கருப்பு, வறுமை, அதனால் வெள்ளை அதிகாரத்திற்கு இரை )


மனித மலமும், இரத்தக் கறைகளும் சுவர்களில் படிந்துள்ள சிறைச்சாலைகள். அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும் மருந்து கிடைப்பதில்லை. பேன் தொல்லையால் ஏற்படும் சொறி நோய். எந்தக் காலத்திலும் சுத்தம் செய்யப்படாத கழிப்பறை. பெண்களின் மாதவிடாய் பட்டிகள், பற்பசை, சவர்க்காரம் என்பன தடைசெய்யப் பட்ட பொருட்களுக்குள் அடங்கும். எப்போது விடுதலையாவோம் என்று தெரியாமல், நிலத்தில் படுத்துறங்கும் ஏழை கறுப்பினக் கைதிகள்.

இந்தக் காட்சிகள் ஆப்கானிஸ்தான் நிலைமையை நினைவுபடுத்தலாம். ஆனால், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில், இன்றைய சென் லூயிஸ் நகரில் இதெல்லாம் நடக்கின்றன. "சுழல் கதவுப் பொறிமுறை" (சிறையில் இருந்து போவதும், பின்னர் திரும்பி வருவதுமான நிலைமை) என்று அழைக்கப் படும் இரக்கமற்ற அமைப்பினால் பாதிக்கப் பட்டவர்கள். பணமில்லாத காரணத்தால், அபராதம் கட்ட முடியாத அவலம், அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கும். ஒரு பிரஜை ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவரைக் கைது செய்ய முடியாது என்று அரசமைப்பு சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சென் லூயிஸ் நகருக்கு அருகில் உள்ள பெர்குசன் நகரில், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஏழைகள் கூண்டுகளுக்குள் அடைக்கப் படுகின்றனர் என்று நீதி அமைச்சின் அரச அறிக்கை தெரிவிக்கின்றது. இதெல்லாம், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான பொலிசின் கடமையுணர்வு காரணமாக நடக்கவில்லை. ஏழைகளை அடைத்து வைப்பதன் முழு நோக்கமும் இலாபம் சம்பாதிப்பது தான். சந்தையில் மாட்டுக்கு விலை பேசுவது போன்று, கைது செய்யப் பட்டவர்களின் உறவினர்கள் விடுவிப்பதற்காக நீதித் துறையுடன் பேரம் பேசுகின்றார்கள். அதனால், நகர சபை பல கோடி பணத்தை சம்பாதித்துள்ளது. ஆனால், ஏழைகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியுள்ளது.

வெள்ளையின, கருப்பின மக்களுக்கு இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு காரணமாக, பெருமளவில் கருப்பின மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அதை விட, நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவாதமும் ஒரு காரணம். நீதிபதி, நீதிமன்ற அலுவலர், வக்கீல், பொலிஸ்காரர்கள், சிறைக் காவலர்கள் எல்லோரும் பெரும்பாலும் வெள்ளயினத்தை சேர்ந்தவர்கள். அப்படி இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே "கடமையுணர்வு" காரணமாக கருப்பின பிரஜைகளை குறிவைக்கிறார்கள். கடன் கட்ட முடியாதவர்களின் சிறைச்சாலைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப் பட்ட மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவையெல்லாம் நகர சபையின் கவனத்தைக் கவரவில்லை.

இவையெல்லாம், மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் "செல்மா" (Selma) எனும் ஹாலிவூட் திரைப்படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் எல்லா வெள்ளையின அரச அலுவலர்களும், கருப்பின பிரஜைகளை தேவையற்ற குப்பைகள் போன்று நடத்த முடிந்தது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர், செல்மா பாலத்தில் நடந்த கருப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை நினைவுகூரும் முகமாக, ஜனாதிபதி ஒபாமா அங்கே சென்றிருந்தார். அவர் ஒரு தடவை அயலில் உள்ள பெர்குசன் நகருக்கு சென்றிருந்தால், நிலைமைகளை நேரில் கண்டறிந்திருக்கலாம். ஏனென்றால், இன்றைக்கும் அங்கேயுள்ள சிறைகளில், வெள்ளையின காவலர்கள் கருப்பின கைதிகளைப் பார்த்து, "ஊத்தை விபச்சாரிகள்", "நாற்றம் பிடித்தவர்கள்" என்றெல்லாம் தண்டனைக்கு பயமின்றி திட்ட முடிகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம், பெர்குசன், ஜென்னிங்க்ஸ் நகரங்களை சேர்ந்த இருபது சமூக ஆர்வலர்கள், "Class action complaint" என்ற பெயரில் நீதிமன்றத்தை நாடினார்கள். சட்டவிரோதமான சுழல் கதவு பொறிமுறைக்கு முடிவு கட்டுவதும், சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதும் அந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. 

வாஷிங்டன் நகரில் உள்ள "Equal Justice unde Law" அமைப்பின் வழக்கறிஞர் Alec Karakatsanis மேற்படி அமைப்பில் பங்களித்து வருகின்றார். ஹார்வார்ட் சட்டக் கல்லூரி நிதியுதவியும், நலன்விரும்பிகள் பலரின் நன்கொடைகளும் அந்த அமைப்பிற்கு கிடைத்துள்ளன. "இங்கே சர்வசாதாரணமாகப் போய் விட்ட மிலேச்சத்தனமான அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்." என்று கூறினார் Alec Karakatsanis

அமெரிக்காவின் சனத்தொகையில் நூறில் ஒருவர் சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். உலகக் கைதிகளின் சனத்தொகையில், கால்வாசிப் பங்கு அமெரிக்காவில் உள்ளது! உலகில் வேறெந்த நாட்டிலும் இந்தளவு பெருந்தொகையான கைதிகள் இல்லை! அவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அல்லது சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர்.

"கருப்பின மக்களை தூள் தூளாக அரைத்துத் தள்ளும் அமைப்பு" என்று ஒரு பொறியியல் அறிஞர் கூறினார். அது எப்படி என்பது, பெர்குசன் நகரில் நீதித்துறை நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகின்றது. 37 வயதான Keilee Fant எனும் பெண்ணின் கதையை உதாரணமாகக் காட்டலாம். அவர் தாதி உதவியாளராக வேலை செய்வதுடன், தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தாயும் ஆவார். அந்தப் பெண் வருடக் கணக்காக பத்து தடவைகளுக்கு மேல் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், போக்குவரத்து விதிகளை மீறிய தண்டப் பணம் கட்டாதது. 

2013 அக்டோபர், Keilee Fant தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்ற சமயம் கைது செய்யப் பட்டார். 300 டாலர் கட்டினால் விடுதலை செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டது. அவரிடம் அந்தளவு பணம் இல்லை. பணம் அறவிட முடியாத கட்டத்தில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால், சில தினங்களுக்கு பின்னர், அயலில் உள்ள இன்னொரு நகரில், அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இறுதியாக பெர்குசன் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நேரம், அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 1400 டாலர்களாக உயர்ந்து விட்டிருந்தது. 

அடிக்கடி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்த காரணத்தால், அந்த அபலைப் பெண்ணின் வேலை பறிபோனது. அரசு உதவித் தொகையில் வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு தடவை, அவரது தந்தையாரின் மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாதவாறு 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சமூகத்தில் எந்த ஆய்வும் நடக்காத காரணத்தால், எப்படி இந்த அநியாயங்கள் நடக்கின்றன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. "நான் எத்தனையோ நீதிமன்றங்களை பார்த்து விட்டேன். எல்லா இடங்களிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதாவது, எழுதப் பட்ட சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது." என்றார் ஒரு வழக்கறிஞர். 

பொலிஸ் யாரையும் எந்தக் காரணமும் இன்றி தடுத்து வைக்கவோ, சோதனையிடவோ முடியாது. ஆனால், அது ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் நடக்கிறது. குற்றஞ்சாடப்பட்டவர் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள உரிமையுண்டு என்று அரசமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆனால், அது இலட்சக் கணக்கான வழக்குகளில் நடப்பதில்லை. ஏனென்றால், ஒரு குற்றம் பல மடங்காக பெருகுகின்றது. 

உதாரணத்திற்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் 150 டாலர் தண்டம் அறவிடப் படலாம். ஆனால், உங்களால் அதைக் கட்ட முடியா விட்டால், அந்தத் தொகை 500 டாலர், சிலநேரம் ஆயிரம் டாலர் வரை உயரும்.

பெர்குசன் நகர பொலிஸ்காரர்கள், எத்தனை பேரை தடுத்து வைத்தார்கள், எத்தனை பேருக்கு அபராதம் விதித்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களது தகைமை மதிப்பிடப் படுகின்றது. ஆகையினால், பொலிஸ்காரர்கள் முடிந்தளவு அதிகமான அளவு தடுத்து வைக்கவும், அபராதம் விதிக்கவும் முயல்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி மாதிரி. இதனால் பாதிக்கப் படுவோர் பெரும்பாலும் கருப்பின மக்கள் தான். 

காவலரிடம் உங்களது பெயரை சுருக்கமாக சொன்னீர்களா? பிழையான தகவல் கொடுத்தமைக்காக அபராதம். உங்கள் காரை தெருவில் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தீர்களா? பெல்ட் போடாத குற்றத்திற்காக அபராதம். அபராதத் தொகை இன்னும் கட்டவில்லையா? கைது செய்யப் படுவதுடன் மேலதிகமாக ஆயிரம் டாலர் அபரதாம் விதிக்கப் படும். வறுமை காரணமாக அபராதம் கட்டுவதற்கு பணம் இல்லையா? கைது செய்யப் படுவீர்கள். 

வீட்டு வன்முறை காரணமாக போலிசை கூப்பிட்டீர்களா? வன்முறையால் பாதிக்கப் பட்ட நீங்களும் கைது செய்யப் படலாம். காரணம்? நீங்கள் அந்த வீட்டில் பதிவு செய்யப்படாத ஒருவராக இருக்கலாம். பூங்காவில் ஒரு மறைவிடத்தில் உங்களது குழந்தையை சிறுநீர் கழிக்க விட்டீர்களா? அபராதம். குற்றம்? நிர்வாணமாக நடந்தது அல்லது பிள்ளைகளை கவனிக்காமல் திரிய விட்டது. இதெல்லாம் நீதித்துறை ஆய்வறிக்கையில் இருந்து கிடைத்த சில உதாரணங்கள்.

"இதைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் பொழுது, சுத்த பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறதா?"  என்று கேட்கிறார் வழக்கறிஞர் Alec Karakatsanis. " இது தான் அமெரிக்கா!ஏராளமான மனிதத் தன்மையற்ற  கொடுமைகள் , இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. உங்களது காற்சட்டை இடுப்பில் எந்தளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து, யார் உங்கள் வீட்டில் தங்கக் கூடாது என்பது வரையில் ஏராளமான விதிகள். அநேகமாக, அர்த்தமற்ற, சட்டத்திற்கு விரோதமான விதிகள். ஆனால், இவையெல்லாம் ஏழைகள் மீது தான் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. அவர்களுக்கு வழக்கறிஞர்களும் கிடையாது. ஒரு சில அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், இந்த ஊழல் மய அமைப்பிற்கு தீர்வு கண்டு விட முடியாது. நாங்கள் வறுமையை கிரிமினல்மயப் படுத்தி வைத்திருக்கிறோம்."

"செல்மா நிகழ்வுகள் நடந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டதைப் போன்ற நிலைமை தான் தற்போதும் உள்ளது." என்கிறார் ஹார்வி என்ற வழக்கறிஞர். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், தற்போது நிறைய சட்ட வல்லுனர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். கருப்பின மக்கள், இப்போதும் வெள்ளையின பொலிஸ்காரர்களை கண்டு அஞ்சுகிறார்கள். நிறவாதத்தை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியாது.

1865 ம் ஆண்டு, அடிமை ஒழிப்பிற்குப் பின்னரே, கருப்பின மக்களை கிரிமினல் மயப் படுத்தும் போக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னர், மிக மிகக் குறைந்தளவு கருப்பின கைதிகள் தான் சிறைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 1870 ம் ஆண்டு அலபமா மாநிலத்தில், கருப்பின கைதிகளின் எண்ணிக்கை திடீரென 74 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? 

பெருந்தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாக, சிலர் இதனை ஒரு வியாபாரமாக செய்து வந்தனர். வெள்ளையின அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கருப்பினத்தவர்களை பிடித்து கைதிகளாக அடைத்து வைத்து, பின்னர் தொழிலாளர்களாக விற்று வந்தனர். 

இந்த வணிகத்தை விரிவு படுத்தி இலாபகரமாக்கும் நோக்கில், பல தடைச் சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. அரசு அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கைதிகளின் இலவச உழைப்பினால் பெருமளவு இலாபம் சம்பாதித்தனர். அன்று அலபமா மாநிலம் தனது வருமானத்தில் பன்னிரண்டு சதவீதத்தை, சிறைக் கைதிகள் எனும் நவீன அடிமைகளிடம் இருந்து ஈட்டி வந்தது. 

Doughlas Blackmon எனும் ஊடகவியலாளர் எழுதிய "Slavery by Another Name" என்ற நூலில் அது குறித்த பல வரலாற்றுத் தகவல்கள் எழுதப் பட்டுள்ளன.

(நன்றி: de Volkskrant, 14-3-2015, மூலப் பிரதியின் தலைப்பு : "Zwart, arm, dus een prooi voor de witte macht")

Friday, March 20, 2015

வங்கி முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி! பிராங்பேர்ட் நகரம் எரிகின்றது!


ஜெர்மனி, பிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ள, ஐரோப்பிய மத்திய வங்கிக்கு (ECB) எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. 20,000 க்கும் அதிகமான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. பொலிசாரின் கண்மூடித் தனமான தாக்குதலினால் பலர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக் காரர்கள், பதிலடியாக பல பொலிஸ் வாகனங்களை எரித்து நாசமாக்கியுள்ளனர். 


பிராங்பேர்ட் நகரில் நடந்த, முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம் தொடர்பான பின்னணித் தகவல்கள்:

"முதலாளித்துவம் கொல்லும்!"
ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) பிராங்பெர்ட் நகரில் அமைந்துள்ளது. மார்ச் 18 ம் தேதி, ECB பெரும் பொருட்செலவில் கட்டிய புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கவிருந்தது. கிரீஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளில் தலையிடுவதில் ECB முக்கிய பங்குவகிக்கிறது. 

அதாவது, IMF மாதிரி, ஐரோப்பிய மத்திய வங்கியும் கடன் கொடுப்பது, வட்டி வீதம் தீர்மானிப்பது போன்ற பல பொருளாதாரத் திட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிப்பது வழமை.

ஜெர்மனியில், "Blockupy" என்ற ஐக்கிய முன்னணி ஒன்று இயங்கிவருகிறது. ஜெர்மனியின் தீவிர இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகள் ஒன்று சேர்ந்து, Blockupy கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. புதிய கட்டட திறப்புவிழாவை இடையூறு செய்யும் வகையில், பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு Blockupy அறைகூவல் விடுத்திருந்தது. கடன்சுமையால் மக்கள் கஷ்டப் படுகையில் திறப்புவிழா கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்பது அவர்களின் வாதம்.

பெருமளவு மக்கள் கலந்து கொண்டஆர்ப்பாட்டம், இறுதியில் கலவரத்தில் முடிந்தது. முன்னூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டார்கள். நூற்றுக்கணக்கான பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர். பொலிஸ் வாகனங்கள் எரிக்கப் பட்டன. வங்கிகள் அடித்து நொறுக்கப் பட்டன. 

(Klasse gegen klasse) வர்க்கத்திற்கு எதிராக வர்க்கம் 

முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர்களின் குழு ஒன்று முதலாளித்துவ இலக்குகளை தாக்கும் வன்முறைகளில் இறங்கினார்கள். அவர்கள் இதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் போன்று, குறுகிய நேரத்திற்குள் மில்லியன் யூரோக்கள் சேதம் உண்டாக்கி விட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், தெருக்களில் தடையரண்கள் போட்டு பொலிசாருடன் மோதினார்கள். ECB கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட தடையரண்களில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பொலிசாரை நெருங்க விடாமல் தடுப்பதற்கு பல வகையான உத்திகளை பயன்படுத்தினார்கள். 

பொலிஸ் வாகனங்களை நோக்கி கற்கள் வீசப் பட்டன. வர்ணப் பூச்சுக் கலவைகள் விசிறியடிக்கப் பட்டன. இதனால் எழுந்த புகை மண்டலம் காரணமாக, நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். பொலிசார் தமது சேவைக் காலத்தில், இது போன்றதொரு கலவரத்தை காணவில்லை என்று, பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.


Thursday, March 12, 2015

தெரியாத வரலாறு: ஐரோப்பாவில் ஆப்பிரிக்க ஆலயம், அரேபியரிடம் இந்திய வாள்கள்


உலகம் முழுவதையும் காலனிப் படுத்திய ஐரோப்பியர்கள், அதற்குப் பிறகு உலக வரலாற்றை தமக்கேற்றவாறு திரிபு படுத்தி எழுதி வந்தனர். பல உண்மையான வரலாற்றுத் தகவல்களை இருட்டடிப்பு செய்து வந்தனர். நாங்கள் இன்றைக்கு ஐரோப்பியர் எழுதிய பொய்களையும், புனைவுகளையும் உண்மை என்று நம்பி படித்துக் கொண்டிருக்கிறோம்.

16 ம் நூற்றாண்டில், காலனிய கால கட்டத்திற்கு பின்னரே, ஐரோப்பியர்கள் "ஆப்பிரிக்காவை கண்டுபிடித்தனர்", அதற்குப் பிறகு தான் கருப்பின மக்களும் ஐரோப்பியருக்கு அறிமுகமானார்கள் என்று சில அறிவுஜீவிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக, அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வாணிபத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, அப்படியொரு புனைவை சொல்லி வந்திருக்கிறார்கள்.

ரோம சாம்ராஜ்யமாக இருந்த பண்டைய இத்தாலியில், ஆப்பிரிக்க கருப்பின மக்களும் ரோமாபுரியின் குடி மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அது ஒரு சாதாரணமான விடயம். ஏனெனில், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா வரையும் ரோம சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. இன்று முன்னாள் காலனிய நாடுகளை சேர்ந்த மக்கள், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறி வாழவில்லையா? அது போன்று தான் அந்தக் காலத்திலும் இருந்துள்ளது.

எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஆப்பிரிக்க கருப்பர்கள், கணிசமான அளவில் இத்தாலியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பண்டைய ரோமர்கள் காலத்தில் குடியேறிய "யூத டயஸ்போரா" இருக்கலாமென்றால், "ஆப்பிரிக்க டயாஸ்போரா" இருந்திருக்காதா? அநேகமாக, யூதர்கள் தனியான மதப் பிரிவாக பழமைவாதத்தை பேணி வந்தது மாதிரி, ஆப்பிரிக்கர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளூர் இத்தாலி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர்.

அதனை நிரூபிக்கும் வகையில், பண்டைய நகரமான பொம்பெய்யில் ஒரு பாழடைந்த இசிஸ் ஆலயம் இன்றைக்கும் உள்ளது. இன்றைய நேப்பிள்ஸ் நகருக்கு அருகில் உள்ள பொம்பெய், திடீரென வெடித்த எரிமலைத் தணல்களால் மூடப் பட்டிருந்தது. அந்த நகரின் இடிபாடுகளில், இன்னமும் அழியாத சுவரோவியம் ஒன்றில், இசிஸ் ஆலயம் ஒன்றின் படத்தை பார்க்கலாம். இசிஸ் என்பது, பண்டைய எகிப்தியரால் வழிபடப் பட்டு வந்த பெண் தெய்வம் ஆகும். (இஸ்லாமிய தேசம் எனும் ISIS உடன், இதனை குழப்பிக் கொள்ளக் கூடாது.)

பொம்பெய் ஓவியத்தில், கருப்பின பூசாரி ஒருவர் இசிஸ் எனும் பெண் தெய்வத்திற்கு வழிபாடு செய்வதைப் பார்க்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்களும், இத்தாலியர்களும் வழிபட்டு வந்த இசிஸ் ஆலயம், இன்றைய இந்துக் கோயில்கள் போன்று இருப்பதையும் அவதானிக்கலாம். 

இந்துக்களின் கோயில்களில் நடப்பதைப் போன்று, ஆப்பிரிக்கர்களின் இசிஸ் ஆலயத்திலும், பக்தர்கள் இரண்டு பக்கமும் வரிசையாக நின்று கும்பிடுகிறார்கள். (வெள்ளையின, கருப்பின பக்தர்கள் கலந்திருப்பது சுவரோவியத்தில் தெளிவாகத் தெரிகின்றது.) ஒரு கருப்பினப் பூசாரி தீபாராதனை காட்டுகிறார். கோயில் முற்றத்தில் கற்பூரம் கொளுத்துவதற்கு வசதியாக, கல்லால் செய்த ஒரு சதுர வடிவிலான தட்டு வைத்திருக்கிறார்கள். நான் சொல்வதை நம்பாதவர்கள், பொம்பெய்க்கு நேரில் சென்று பார்க்கலாம்.

ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்களின் வரலாற்றை மட்டும் இருட்டடிப்பு செய்யவில்லை. அரேபியர்கள், தமிழர்கள் (அல்லது தென்னிந்தியர்கள்) இடையிலான வர்த்தக, இராணுவத் தொடர்புகளையும் மறைத்து வந்தனர். அந்தக் காலங்களில், இந்தியாவும், அரேபியாவும், நாகரிக வளர்ச்சியில் ஐரோப்பாக் கண்டத்தை விட பல மடங்கு சிறப்பான நிலையில் இருந்துள்ளன.

உலகில் ஐரோப்பியர்கள் மேன் நிலைக்கு வந்தமைக்கு, அவர்களிடம் இருந்த நவீன ஆயுதங்கள் காரணம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் ஆயுத பலத்தில் மிகவும் பின்தங்கி இருந்தனர். கிறிஸ்தவ ஐரோப்பா, இஸ்லாமிய மத்திய கிழக்கை விட நாகரிகத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. 

சிலுவைப் போர் நடந்த காலத்தில், இன்றைய சிரியா வரையில் படையெடுத்து வந்த ஐரோப்பியர்கள், அந்தக் காலத்தில் மிகவும் நவீனமான ஆயுதங்களை கண்டு வியந்தனர். அதில் ஒன்று "டமாஸ் (Damatz) வாள்". அரேபியர்கள் பயன்படுத்திய டமாஸ்கஸ் வாள் என்பது மருவி, ஐரோப்பியர் வாய்களில் டமாஸ் வாள் என்று அழைக்கப் பட்டது. 

அப்படி அந்த வாளில் என்ன விசேஷம்? போர்க்களத்தில் எப்படிப் பாவித்தாலும் உடையவே உடையாது. அந்தளவு உறுதியான உலோகத்தால் செய்யப்பட்டது. பாவிக்க இலகுவானது. அது ஐரோப்பியரின் வாள்களைப் போன்று, கவசத்தை குத்தித் துளைப்பதற்கானது அல்ல. ஆனால், ஆழமாக வெட்டக் கூடியது. 

அதை எப்படி செய்தார்கள்? இரும்பை உருக்கி, 1600 பாகை வெப்பத்தில் திரவமாக்குவார்கள். பின்னர் அந்த இரும்புக் குழம்புக்குள் மரக் கரியும், சில குறிப்பிட்ட இலைகளும் கலப்பார்கள். நீண்ட காலமாக, டமாஸ் வாள் எப்படித் தயாரிக்கப் பட்டது என்பது, ஐரோப்பியருக்கு புரியாத புதிராக இருந்தது. தொழில்முறை இரகசியம் தெரியாத படியால், யாராலும் போலியாக தயாரிக்க முடியாமல் இருந்தது. (Historia, Nr.3/2015)

இந்தக் காலத்தில் படையினரால் விரும்பிப் பாவிக்கப் படும், AK - 47 துப்பாக்கிக்கு உள்ள மதிப்பு, அந்தக் காலத்தில் டமாஸ் வாளுக்கு இருந்துள்ளது. உண்மையில், அரேபியர்களும் அதனை தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தனர். இந்திய மன்னர்கள் பயன்படுத்தியதாக, படங்களில் பார்க்கும் அதே வாள் தான். வரலாற்றில் கடைசியாக திப்பு சுல்த்தானால் பயன்படுத்தப் பட்டது. கி.மு. 300 இலிருந்து தென்னிந்தியர்களினால் தயாரிக்கப் பட்ட டமாஸ் வாள், அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் விலையானது. 

இந்தியா ஒரு காலத்தில், உலகில் மிகச் சிறந்த ஆயுதங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்து வந்துள்ளது. அதாவது, இன்று அமெரிக்கா ஆயுதங்களை தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் போன்று, அன்று இந்தியா அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. பண்டைய வணிகத் தொடர்பு காரணமாக, அன்று இந்தியாவும், அரேபியாவும் உலகில் நாகரிகமடைந்த நாடுகளாக இருந்துள்ளன. பிற்காலத்தில் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்த, ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மூடி மறைந்த வரலாறுகளில் இதுவும் ஒன்று.

Sunday, March 08, 2015

நிசிங்கா : அங்கோலாவின் அரசி பற்றிய சரித்திரப் படம்


அங்கோலாவின் கடைசி அரசியான நிசிங்காவின் வரலாற்றைக் கூறும் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் நாகரிகமடைந்த நாடுகளும், அங்கே மன்னராட்சிகளும் இருந்துள்ளன. ஐரோப்பிய காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பெரும் போர்கள் நடந்துள்ளன. ஐரோப்பியரால் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆப்பிரிக்க வரலாறு, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது.

17 ம் நூற்றாண்டில் அங்கோலாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்கள், அங்கிருந்த மன்னன் நின்கோலா வின் பெயரே, அந்த நாட்டின் பெயர் என்று தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதனால், முபுண்டு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இராச்சியத்தின் பெயர், அன்றிலிருந்து அங்கோலா என்று அழைக்கப் படலாயிற்று.

1583 ம் ஆண்டு, கிளுவாஞ்சி மன்னருக்கு மகளாக பிறந்த நிசிங்கா, வருங்காலத்தில் இராணியாக வருவாள் என்பதை, ஒரு அப்போதே ஒரு பெண் சோதிடர் அறிவித்திருந்தார். கிளுவாஞ்சி மன்னர், போருக்கு செல்லும் போதெல்லாம், இளவரசி நிசிங்காவை தன்னோடு அழைத்துச் செல்வார்.

அங்கோலா மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், அங்கே கோட்டை கட்டி, மன்னருக்கு கீழ்ப்படிவான குடிமக்களையும் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த போரின் முடிவில், அங்கோலா மன்னருக்கும், போர்த்துகேய ஆளுநருக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

போர்த்துக்கேயருடனான சமாதான ஒப்பந்தத்தில் இளவரசி நிசிங்கா கையொப்பம் இட்டிருந்தார். சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக, கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்நானம் எடுத்து, Dona Anna de Sousa எனும் போர்த்துகேய பெயரை சூட்டிக் கொண்டார். ஆயினும், போர்த்துகேய காலனியாதிக்கவாதிகள் ஒப்பந்தத்தை மீறியதுடன், மீண்டும் போருக்குள் இழுத்து விட்டனர். பல வருடங்களாக தொடர்ந்த போரில், நிசிங்காவின் சகோதர்கள் கொல்லப் பட்டனர். இறுதியாக, மீண்டும் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப் பட்டது.

இதற்கிடையில், அங்கோலாவின் இன்றைய தலைநகர் லுவாண்டா உட்பட பல கரையோர பிரதேசங்கள், போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. ஏனைய உள்நாட்டுப் பிரதேசங்களில், நிசிங்கா தனது இராசதானியை கட்டியெழுப்ப விரும்பினார். ஆயினும், நீண்ட காலமாக நீடித்த போர் ஏற்படுத்திய அழிவுகள், விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.

நிசிங்கா தனது 80 வது வயதில், 17 டிசம்பர் 1663, மதங்கா எனுமிடத்தில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் காலனிய ஆட்சியதிகாரம் விரிவடைந்தது. பல்லாயிரக் கணக்கான அங்கோலா குடிமக்கள், அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அங்கோலா முழுவதும் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அங்கோலா இராணி நிசிங்காவின் வரலாறு முழுவதும் ஏற்கனவே எழுத்தில் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. தற்போது அது சினிமாப் படமாக தயாரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேய மொழி பேசும் இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Njinga - Rainha de Angola trailer english

Saturday, March 07, 2015

உலகளவில் சோஷலிசம் எட்டிய சாதனைச் சிகரங்கள்


வெனிசுவேலாவில், உழைக்கும் மக்களுக்காக கட்டப்பட்டு வரும் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட "சோஷலிச நகரம்". இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கக் கூடியதாக, திட்டமிட்டு உருவாக்கப் படுகின்றது. இப்படியான நகரம், தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரியது.

2.600 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 3456 மாடிக் கட்டிடங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இன்னும் 40 000 மாடிக் கட்டிடங்கள் கட்டப் படவுள்ளன. ஒவ்வொரு தொகுதியும், நான்கு சிறுவர் பாடசாலைகள், நான்கு இடைத்தர பாடசாலைகள், ஒரு நூலகம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு விளையாட்டு மைதானம் என்பனவற்றை கொண்டதாக இருக்கும்.

இந்த மிகப்பெரிய வீட்டுத் திட்டம், Valencia நகரில், US $ 590.000.000 செலவில் ஈரானின் உதவியுடன் கட்டப் படுகின்றது. வெனிசுவேலாவில் இதுவே முதலாவது சோஷலிச வீட்டுத் திட்டம் அல்ல. 2006 ம் ஆண்டு, தலைநகர் கராகசில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இது போன்ற நவீன குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன.

 *******

 உலகவங்கியின் அறிக்கையில் இருந்து: "லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும், மிகவும் சிறந்த கல்வியை வழங்கும் நாடாக கியூபா உள்ளது. கியூப மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி கற்கும் வசதி கிடைக்கிறது."



உலகிலேயே அதிகளவு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முதல் பத்து நாடுகளில் கியூபாவும் அடங்குகின்றது. அமெரிக்கக் கண்டத்தில் இரண்டாம் இடம், உலகளவில் நான்காம் இடத்தில் கியூபா உள்ளது. Inter-Parliamentary Union (IPU) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


இவை கியூபாவில் தேசியப் பேரவை எனும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுவரொட்டிகள்.

கியூபாவில், 612 பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் மேலதிக மாகாண அதிகார சபைகளுக்கான 15 பிரதிநிதிகளையும், 8.6 மில்லியன் வாக்காளர்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்வார்கள்.

தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை. ஆனால், வேட்பாளர்கள் தனித் தனியாக போட்டியிடுவார்கள். அவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு தேர்தலிலும், பெருமளவு கட்சி சார்பற்ற சுயேச்சை உறுப்பினர்களும், மக்களால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுகின்றனர்.

ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், பொது இடங்களில் ஒட்டப் பட்டிருக்கும். அந்த சுவரொட்டிகளில், வேட்பாளர்கள் தமது வழமையான உறுதிமொழிகளையும், திட்டங்களையும் குறிப்பிட்டு எழுதலாம். அவற்றை பார்வையிடும் வாக்காளர்கள், தேர்தலில் தமக்கு விருப்பமான வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகளை போட்டு தெரிவு செய்வார்கள்.

*******

சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசம் எட்டிய சாதனைகள். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

Friday, March 06, 2015

முன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையாத வர்க்க பேதமும்

பிரான்சில் வதிவிட அனுமதி பெற்ற பகீரதி என்ற பெண், தனது எட்டு வயது குழந்தையுடன் இலங்கையில் தனது ஊருக்கு சென்று திரும்பியவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள (புலி ஆதரவு) தமிழ் ஊடகங்கள், அவரை "சாதாரண பெண்" என்று குறிப்பிட்டாலும், முன்னொருகாலத்தில் புலிகளின் தளபதியாக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவரது கணவரும் பிரான்சில் ஒரு முக்கியமான புலிகளின் பிரமுகர் தான். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, பிரான்ஸ் சென்ற பகீரதி, இப்போது தான் நாடு திரும்பியுள்ளார்.

இதிலிருந்து சில உண்மைகள் தெரிய வருகின்றன. மகிந்த ஆட்சி மறைந்து, மைத்திரி ஆட்சி வந்தாலும், முன்னாள் புலிகள் விடயத்தில் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. பெரும்பான்மையானோர் அரசாங்கத்தை (ஜனாதிபதி + மந்திரி சபை) அரசு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆட்சியாளர்கள், கட்சிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகளும், அரசின் கொள்கைகளும் மாறுவதில்லை.

பகீரதி முன்னாள் புலித் தளபதி என்ற விடயம், ஊரில் அவரைத் தெரிந்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. அது பகீரதியின் உறவினர்கள் என்று பிரான்சில் வாழும் அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறுகின்றார்.

இது குறித்து வன்னியை பூர்வீகமாக கொண்ட மூதாட்டி ஒருவருடன் உரையாடும் பொழுது கேட்டேன். "சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்... தோட்டக் காட்டு (மலையக) சனங்கள் தான் இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவர்கள்... அவர்கள் எப்போதும் அப்படித் தான்..." என்று முன்முடிவுகளுடன் கூறினார். அந்தக் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இருப்பினும், மலையக கூலித் தொழிலாளர்கள் மீதான, யாழ்ப்பாணத் தமிழ் உயர் சாதியினரின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு அப்படித் தான் இருக்கும்.

வன்னியில் புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில், "சாப்பாட்டுக்கு வழியில்லாததுகள், அரசின் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு போட்டி போட்டார்கள்..." என்று சொல்லி வந்தனர். இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்க வேறுபாட்டை, இதை விடத் தெளிவாக ஒரு சாமானியனால் கூற முடியாது. ஆனால், படித்த மேதாவிகள் மட்டும் "தமிழ் மக்களுக்கு இடையில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து வருகிறார்கள்.

வயதில் மூத்தவர் என்பதால் அந்த மூதாட்டியுடன் நான் விவாதிக்கவில்லை. இருப்பினம், அவர் உட்பட, யாழ் சைவ- வேளாள கருத்தியல் கொண்ட வன்னியை பூர்வீகமாக கொண்ட நண்பர்கள் சிலர், "சாப்பாட்டுக்கு வழியில்லாத தோட்டக்காட்டு சனங்கள்" பற்றி, பல தடவைகள் என்னிடம் குறை கூறியுள்ளனர்.

அந்த மூதாட்டியுடன் பேசும் பொழுது, அண்மையில் காலச்சுவடு இதழில் மலையகத் தமிழர் பற்றி கருணாகரன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக, அ. யேசுராசா எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. "யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் முரண்பாடு ஒரு மிகைப் படுத்தல் என்றும், இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றும்," அ. யேசுராசா எழுதியிருந்தார்.

அ. யேசுராசா என்னால் மதிக்கப் படும் ஒரு மூத்த எழுத்தாளர். பல வருட கால இலக்கிய அனுபவமும், இடதுசாரி முகாமுடன் பரிச்சயமும் கொண்டவர். அவருக்கு தமிழர்கள் மத்தியில் நிலவும் வர்க்க வேறுபாடு பற்றி எதுவும் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் வர்க்க வேறுபாடுகளை மூடி மறைப்பது போன்று தான் அவரும் நடந்து கொள்கிறார். இதுவும் ஒரு வகை "மகிந்த சிந்தனைய" தான். மகிந்த ராஜபக்ச "நாம் எல்லோரும் இலங்கையர்" என்றார். இவர்கள் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்கிறார்கள்.

மலையகத்தில் நடந்த இனக் கலவரங்களுக்குப் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களான ஆயிரக் கணக்கான தமிழ் அகதிகள் வன்னியில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்கள் பல்கிப் பெருகி வன்னி மண்ணின் குடிமக்களாக வாழ்கின்றனர். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றனர். ஆயினும். வன்னியில் வாழும் பாரம்பரிய நிலவுடைமை வர்க்கமான வெள்ளாள ஆதிக்க சாதியினருக்கும், மலையக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடு இன்னும் மறையவில்லை.

வன்னியில் வாழும் தமிழ் மக்களுக்கிடையில் இன்னமும் நிலவும் வர்க்க முரண்பாடுகள், சில நேரம் பகை முரண்பாடுகளாக இருப்பதை, எம்முடன் பழகும் பல தமிழர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிகின்றது. தமிழ் தேசியவாதிகள் விதந்துரைப்பது போன்று, ஈழப்போரும், புலிகளின் போராட்டமும் வர்க்க முரண்பாடுகளை அழிக்கவில்லை. மாறாக, தமிழ் தேசிய அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டது.

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்த நிலவுடைமை வர்க்கத்தின் ஆதரவும், போராளிகளாக மனித வளத்தை வழங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவும் புலிகளுக்குத் தேவைப் பட்டது. இன்று, ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப் பட்டதற்குப் பின்னர், வர்க்க முரண்பாடுகள் பகிரங்கமாக வெளித் தெரிய ஆரம்பிக்கின்றன.

Sunday, March 01, 2015

தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்


ஈழத் தமிழ் தேசியவாதிகள் மத்தியில், கடந்த பல மாதங்களாக பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு போன்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பின்னணியில் நமக்குத் தெரியாத வேறு சில காரணிகளும் இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தர், சுமந்திரன் அணி மிதவாதிகளாக அறியப் படுகின்றனர். அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து மைத்திரி அரசை ஆதரிப்பது தெரிந்ததே. அதையே காரணமாகக் காட்டி, தீவிரவாதிகளின் அணி அவர்களுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை விடுத்த பிரிவினர் தான் இந்தத் தீவிரவாதிகள். ஆனால், தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரிக்கு தமிழ் மக்களின் அமோக ஆதரவு இருந்த காரணத்தால் அடக்கி வாசித்தார்கள். பின்னர், பெப்ரவரி 4 சுதந்திர தின நிகழ்வில், சம்பந்தர், சுமந்திரன் கலந்து கொண்டதை சாட்டாக வைத்து, "கிளர்ச்சி அரசியல்" செய்து கொண்டிருக்கிறார்கள்.

லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், சம்பந்தர், சுமந்திரன் உருவப் படங்களை எரித்த சம்பவத்தை, மேற்குறிப்பிட்ட பின்னணியில் தான் பார்க்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் தேசிய அமைப்புகள், தீவிர தமிழ் தேசியத்தை முன்னெடுப்பது அனைவரும் அறிந்ததே. 

அவர்களுடன் தொடர்புடைய கஜேந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளன. பொதுவாகவே, கடந்த காலங்களிலும் இந்தக் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை இருந்ததை, ஒரே மாதிரியான அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிர தமிழ்த் தேசியவாதிகளின் அணி, புலிகளின் அரசியலுக்கு தாமே வாரிசு என்று காட்டிக் கொள்வார்கள். தமது பிடிவாதமான போக்குகள் மூலம் அதனை "நிரூபித்துக்" கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பெரிய முரண்நகை என்னவென்றால், ஒரு காலத்தில் ஈழத்தில் புலிகள் இருந்த இடத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்பந்தர் அணி) இருக்கின்றது. 

1986 ம் ஆண்டு, புலிகளுக்கும், TELO இயக்கத்திற்கும் இடையில் நடந்த சகோதர யத்தத்தின் முடிவில் புலிகளின் கை ஓங்கியது. அப்போது, தமிழீழ மக்கள் மத்தியில் தமது இயக்கத்திற்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமக்கு மட்டுமே ஆதரவு இருப்பதாக TELO சொல்லிக் கொண்டது. 

இறுதியில் ஈழத்தில் காலூன்றிய புலிகள் தான் நிலைத்து நின்றனர். ஏனென்றால் அவர்களது ஆதரவுத் தளம், அந்த மண்ணில் வாழும் மக்களில் தங்கி இருந்தது. இன்றும் கூட, ஈழப் பிரதேசத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெருமளவு தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள். புலிகளின் காலத்தில் இருந்ததைப் போன்று, இதுவும் ஒரு வகை தார்மீக ஆதரவு தான். கூட்டமைப்பு தலைவர்கள் அயோக்கியர்கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டே, தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடும் மக்கள் ஏராளம். 

இங்கே ஈழத் தமிழ் மக்களுக்கு முக்கியமானது கட்சித் தலைமையோ, அல்லது கட்சியோ அல்ல. சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புக் காட்டுவதற்கு, ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி தேவைப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட காரணத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களை விட, புலம்பெயராத தமிழர்களே தமது ஆதரவுத் தளம் என்பதை சரியாகக் கணிப்பிட்டிருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழ் தேசியக் குழுக்களை கலந்தாலோசிக்காமல், சுயாதீனமாக முடிவுகளை எடுத்து வந்தது. 

இந்தியாவும், சர்வதேச சமூகமும், கூட்டமைப்பினர் இலங்கை அரசுடன் பேசித் தான், தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கறாராக சொல்லி விட்டனர். அதனால், இன்றைய மைத்திரி அரசுடன் இணக்க அரசியல் செய்யுமளவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளது. இது அவர்களது வர்க்க நிலைப்பாட்டில் இருந்து பார்த்தாலும் சரியான முடிவு தான். 

பொதுவாகவே, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அல்லது கொள்கை உடன்பாடு கொண்டவர்கள் என்பது இரகசியம் அல்ல. தற்போதைய மைத்திரி அரசை பின்னால் இருந்து இயக்குவதும் ஐ.தே.க. தான். அதனால், இனம் இனத்தோடு சேரும் என்பது போல, இதுவும் சிங்கள- தமிழ் மேட்டுக்குடி வர்க்க அரசியலின் ஓர் அங்கம் தான். அதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

அநேகமாக, சம்பந்தர் அணி அரசுடன் சேர்ந்து இணக்க அரசியலை செய்யலாம் என்ற அச்சமே, தற்போதைய சலசலப்புகளுக்கும் காரணமாக உள்ளது. லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர், சுமந்திரனுக்கு துரோகி முத்திரை குத்தப் பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னிலையில் நடந்துள்ளது. தமிழ் தேசியவாதிகளுக்குள் நடக்கும் பனிப்போருக்கும், அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

இதே நேரம், யாழ் நகரில் பல்கலைக் கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போதிலும், அரசியல் ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும், மக்களும் கலந்து கொண்டனர். போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கையை வெளியிடுவதை பின்போடக் கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பிப்பதற்காக அந்த ஊர்வலம் நடைபெற்றது. 

ஊர்வலத்தின் முடிவில், இந்து, கிறிஸ்தவ, (இஸ்லாம் எங்கே?) மத குருக்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. யாழ் நகரில், UNHCR, UNICEF, WHO என்று பல ஐ.நா. அமைப்புகளின் பிராந்திய அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள், அவற்றில் ஒன்றில் தமது கோரிக்கையை சமர்ப்பிக்காத காரணம் என்னவென்று தெரியவில்லை!

மேலும், யாழ் நகர் ஆர்ப்பாட்டத்திற்குள் நுளைந்த தீவிர தமிழ் தேசியவாதிகள், குறிப்பாக ஆனந்தி, கஜேந்திரன் குழு போன்றோர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பப் பயன்படுத்தினார்கள். அங்கே, சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது.

இதற்கிடையே, உதயன் பத்திரிகை நிறுவன முதலாளியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகருமான வித்தியாதரன், முன்னாள் புலிப் போராளிகளை ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். உள்ளூர் மக்களாலும், புலம்பெயர் சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்ட, அரச இயந்திரத்தினால் நசுக்கப்படும் பிரிவினரின் குறைபாடுகளை அரசியல்மயப் படுத்துவது நியாயமானது. 

தென்னிலங்கையில் நடந்த பெரும் இனப்படுகொலைப் போருக்குப் பின்னர், மீண்டும் உயிர்த்தெழுந்து மைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட ஜேவிபியை வித்தியாதரன் உதாரணமாகக் காட்டுகின்றார். அதாவது, எவ்வாறு ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேவிபியினர், அரசியல்வாதிகளாக மாற்றப் பட்டனரோ, அதே மாதிரி முன்னாள் புலிப் போராளிகளையும் கொண்டு வருவது தான் நோக்கம். 

புரட்சிகர அரசியலை கை கழுவி விட்டு, பாராளுமன்ற அரசியல் சாக்கடைக்குள் இறங்கிய ஜேவிபி, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த சிறிலங்கா அரசுடன் மட்டுமல்லாது, இந்தியா, அமெரிக்காவுடனும் சமரசம் செய்து கொண்டது. ஆகவே, வித்தியாதரன் முன்மொழியும் "தமிழ் ஜேவிபி", எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.  

ஆனால், முன்னாள் புலிப் போராளிகளைக் கொண்ட புதிய கட்சியின் இலக்கு என்ன, அரசியல் கொள்கை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. தாம் ஒரு கட்சியாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறுகின்றனர். உண்மையில் அது கட்சியாக இல்லாமல், ஒரு அரசு சார்பற்ற நிறுவனமாக இயங்குவது சிலநேரம் அதிக பலனைத் தரலாம்.

வித்தியாதரன் புதிய கட்சி தொடர்பாக இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியதாகவும், அரசிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வரவில்லை என்றும் உறுதிப் படுத்தி உள்ளார். ஏற்கனவே, வித்தியாதரன் ஐ.தே.க.வுக்கு நெருக்கமானவர். ஆகவே, உண்மையிலேயே புதிய கட்சி அமைக்கும் யோசனை, அரசிடம் இருந்து வந்திருக்கலாம். கட்சி தொடங்குவதற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், காலம் முக்கியமானது. 

அதாவது, மிதவாத, தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்குள் பனிப்போர் நடக்கும் காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீவிர தமிழ்தேசியவாதிகள், தாமே புலிகளின் வாரிசுகள் என்று உரிமை கோரி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக, உண்மையான புலிகளான, முன்னாள் போராளிகளை நிறுத்துவதன் மூலம், தீவிர தமிழ்தேசியவாதிகள் தமது இலக்கை அடைவதை தடுத்து நிறுத்தலாம். வருங்காலத்தில், ஈழத் தமிழ் தேசிய அரசியலில் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழலாம்.