Tuesday, February 24, 2015

சேகுவேராவின் சர்ச்சைக்குரிய பேரன் மெக்சிகோவில் காலமானார்

உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் பேரன்,  "கானக் சஞ்செஸ் குவேரா" (Canek Sanchez Guevara), மெக்சிகோவில் காலமானார். 21 ஜனவரி அன்று,மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, அறுவைச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

 காலஞ் சென்ற கானக் சஞ்செஸ், சேகுவேராவின் புதல்வியான ஹில்டித்தாவின் மகனாவார். அவரது தந்தை அல்பேர்ட்டோ சஞ்செஸ் ஒரு மெக்சிகோ இடதுசாரி ஆவார். 1974 ம் ஆண்டு, கியூபாவில் பிறந்த கானஸ் சஞ்செஸ், இளம் பராயத்தில் தாய், தந்தையருடன் கியூபாவிலும், ஸ்பெயினிலும் வளர்ந்து வந்தார்.

பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, கானக் சஞ்செஸ் குவேரா தனது தாத்தாவை மாதிரி ஒரு கம்யூனிஸ்டாக அல்லாமல், ஓர் அனார்க்கிஸ்டாக வாழ்ந்தார். ஐரோப்பிய அராஜகவாதிகள் மாதிரி Punk கலாச்சாரத்துடன் சிகையலங்காரம் செய்து கொண்டிருந்தார். இசையில் நாட்டம் கொண்டவராக ஒரு Heavy metal இசைக்குழுவை நடத்தி வந்தார். இவரது தன்னிச்சையாக திரியும் போக்கு, கியூப சமூகத்திற்கு ஒத்து வரவில்லை. பல தடவை, தனிப்பட்ட முறையில் பொலிஸ் சோதனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து கியூபா திரும்பிச் சென்ற சமயம், அரசு அவருக்கு இராணுவத்தில் தலைமை அதிகாரிப் பதவி ஒன்றை வழங்க முன் வந்தது. ஆனால், கியூப அரசுடன் முரண்பட்ட கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவை விட்டு வெளியேறி, மெக்சிகோவில் குடியேறினார். 1996 ம் ஆண்டு, தனது 22 வது வயதில், பல நெருக்குதல்கள் காரணமாக வெளியேறியுள்ளார்.

கானக் சஞ்செஸ் குவேரா, கியூபாவில் வாழ்ந்த காலங்களில் காஸ்ட்ரோ அரசை விமர்சித்த இடதுசாரிகளில் ஒருவராக விளங்கினார். சேகுவேராவின் பேரன் என்பதால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு எதிர்பார்த்ததும் முக்கியமான காரணம். அதனால், தனது தனித் தன்மை பாதிக்கப் படுவதாக உணர்ந்தார். 

காஸ்ட்ரோ அரசுக்கு எதிரான, கானக் சஞ்செஸ் தெரிவித்த கடுமையான விமர்சனங்கள் யாவும் அவரது அனார்க்கிஸ்ட் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. "காஸ்ட்ரோ அரசானது கிறிஸ்தவ மீட்பரின் அரசாட்சி போன்று நடந்து கொள்கிறது. ஒரு சோஷலிச ஆளும் வர்க்கத்தை கொண்ட அரசு இயந்திரம், மக்களை நசுக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருப்பதாக..." என்று குறிப்பிட்டுள்ளார்.

கானக் சஞ்செஸ், தனது பார்வையில், "கியூப அரசு (மக்கள்) ஜனநாயகத் தன்மை கொண்டதோ அல்லது கம்யூனிசத் தன்மை கொண்டதோ அல்ல" என்று விமர்சித்துள்ளார். சோஷலிசம், கம்யூனிசம், அனார்க்கிசம் போன்ற கோட்பாடுகளை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் புதிதல்ல. அனார்க்கிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச சமுதாயம் அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், அனார்க்கிஸ்டுகள் அது நேரடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். கம்யூனிஸ்டுகள் அதற்கு முதலில் ஒரு சோஷலிச அரசு அமைக்க வேண்டும் என்கின்றனர். சோஷலிச அரசானது, வழமையான அடக்குமுறை இயந்திரமாகவே இருக்கும் என்றும், அது காலப்போக்கில் கம்யூனிச சமுதாயம் உருவாகும் முன்னர் வாடி உலர்ந்து விடும் என்றும் லெனின் கூறியுள்ளார்.

மெக்சிகோவில் வாழ்ந்த கானக் சஞ்செஸ், அங்கிருந்த அனார்க்கிஸ்ட் குழுக்களுடன் சேர்ந்து இயங்கினார். ஒரு எழுத்தாளராக, இசைக் கலைஞராக, புகைப்படப் பிடிப்பாளராக வாழ்ந்த கானக் சஞ்செஸ் சாகும் பொழுது அவரது வயது 40 மட்டுமே.

No comments:

Post a Comment