Monday, December 08, 2014

மூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் (பாகம் - 2)


ஒரு சரக்கில் மறைந்துள்ள மனித உழைப்பானது, பயன் மதிப்பாகவும், பரிவர்த்தனை மதிப்பாகவும் தன்னைக் காட்டிக் கொள்கின்றது என்று பார்த்தோம். உழைப்பின் இரட்டைத் தன்மையை கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது, நாம் இன்றைக்கும் கல்லூரிகளில் படிக்கும், அதே முதலாளித்துவ பொருளியல் பாடம் பற்றித் தான் மார்க்ஸ் பேசுகின்றார். ஒரு பொருளின் மதிப்பை, மனித உழைப்புத் தான் தீர்மானிக்கின்றது என்பதைத் தான், மார்க்ஸ் இங்கே நிறுவ விரும்புகிறார். அதாவது, மூலதனம் புத்தகம் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான விமர்சனமாகவே எழுதப் பட்டுள்ளது.

உழைப்பின் இரட்டைத் தன்மையை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒரு மீட்டர் துணி, ஒரு சட்டை ஆகிய இரண்டு சரக்குகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக, நாங்கள் அவற்றின் மதிப்பை எப்படித் தீர்மானிக்கிறோம்? துணியை விட சட்டையின் மதிப்பு அதிகம் என்று நினைத்துக் கொள்கிறோம். தற்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி, ஒரு சட்டையின் பெறுமதிக்கு சமமானது. (W = 2 W)

சட்டையும், துணியும் பார்க்கும் போதே வித்தியாசம் தெரியும் பொருட்கள். அதாவது, இரண்டு வெவ்வேறு பண்புகள் கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்யும் தையல் இயந்திரம், நெசவு இயந்திரம் என்பனவும் வித்தியாசமான பண்புகளை கொண்டவை.

அவ்வாறு வெவ்வேறு பண்புகளை கொண்டிருப்பதால் தான், அவற்றுக்கு இடையே சரக்குகள் என்ற உறவு இருக்கிறது. அதாவது, யாரும் ஒரு சட்டைக்குப் பதிலாக, இன்னொரு சட்டையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தனக்குப் பயன்படும், தன்னிடம் இல்லாத இன்னொரு பொருளுடன் தான் பண்டமாற்று செய்வார்கள்.

பண்பு ரீதியாக மாறு பட்ட பொருட்கள் தான், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை உண்டாக்குகின்றன. அதனால், பொருட்களின் மதிப்பு கூடிக் குறைகிறது என்பது முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களின் வாதம். மார்க்ஸ் அதனை மறுக்கிறார். புராதன இந்திய உற்பத்தி முறையில், (முதலாளித்துவ) சரக்கு உற்பத்தி இருக்கவில்லை. ஆனால், அங்கே வேலைப் பிரிவினை இருந்துள்ளது.

நமக்கு நன்கு பரிச்சயமான இன்னொரு உதாரணமான தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். அங்கே பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள், ஒரு சரக்கின் வேறுபட்ட பாகங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை தமக்குள் பண்டமாற்று செய்து கொள்வதில்லை.

உழைப்பின் வெவ்வேறு வகைகளில் இருந்து உருவாகும் உற்பத்திப் பொருட்கள் தான் சரக்குகள் ஆக முடியும். சுருக்கமாக, பயன் மதிப்புள்ள பொருட்கள் எல்லாம் பண்பு வழியில் வேறுபட்டதாக இருப்பதால் தான், சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்களினால் அவர்களது சொந்த நலனுக்காகவும் சேர்த்து தயாரிக்கும் பயன்மதிப்புள்ள பொருட்கள், பின்னர் சமுதாய உழைப்புப் பிரிவினையாக வளர்ச்சி அடைகின்றது. ஒரு சட்டையை தைத்த தையல்காரர், அந்த சட்டையை அவரே அணிந்திருக்கலாம், அல்லது யாரோ ஒரு வாடிக்கையாளர் அணிந்திருக்கலாம். அந்த சட்டையின் பயன் மதிப்பு மாறப் போவதில்லை.

தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப் படாத புராதன காலத்தில் வாழ்ந்த மக்களும், சீதோஷ்ண நிலையில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆடைகளை தயாரித்து அணிந்து கொண்டார்கள். இன்றைக்கும் பனி படர்ந்த வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்கள், மான் தோலில் இருந்து தமக்கான குளிர் அங்கியை தாமாகவே தயாரித்துக் கொள்கிறார்கள். அங்கே எந்த தையல்காரரும் கிடையாது.

துணியும், சட்டையும், இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய செல்வங்கள் தான். இயற்கை அளித்த மூலப்பொருட்களை மனிதர்களின் தேவைக்காக பயன்படுத்தும் விளைபொருட்கள் அவை. எனவே, உழைப்பு பயன்மதிப்பாக அல்லது பயனுள்ள உழைப்பாக இருக்கிறது.

உழைப்பு என்பது, சமுதாயத்தின் எல்லா வடிவங்களுக்கும் பொருந்தக் கூடிய, மனித இனம் உயிர் வாழ்வதற்கு தேவையான இன்றியமையாத தேவை ஆகும். அது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றம்.

பயன்மதிப்புள்ள பொருட்களில் உள்ள உழைப்பை தனியாக பிரித்து எடுத்து விட்டால், இயற்கையின் ஆதாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஒரு சரக்கில் அது மட்டும் முக்கியமானால், இயற்கை செயற்படுவது போல மனிதனும் செயற்பட முடியும். மந்திரத்தால் சட்டை ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாத விடயம்.

ஆனால், மறுபக்கத்தில், உழைப்பு மட்டும் பயன் மதிப்புகளின் ஒரே ஆதாரம் அல்ல. வடிவத்தை மாற்றும் செயற்பாட்டில் இயற்கைச் சக்திகள் மனிதனுக்கு உதவுகின்றன. வில்லியம் பெட்டி என்பவர் கூறியது போல, "உழைப்பு ஒரு பொருளுக்கு தந்தையாகவும், பூமி அதன் தாயாகவும் உள்ளது."

ஒரு சட்டையின் மதிப்பு, துணியின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமானது என்று பார்த்தோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி ஒரு சட்டைக்கு சமமானது என்று அறிந்து வைத்திருக்கிறோம். இது வெறும் அளவு சார்ந்த வேறுபாடு. ஒரே ஆள், நெசவு வேலை, தையல் வேலை இரண்டையும் செய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டல்லவா?

ஒரு வேலையாள் ஒரு நாள் நெசவு வேலை செய்து துணி உற்பத்தி செய்கிறார். அவரே மறுநாள் தையல் வேலை செய்து சட்டை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், துணி, சட்டை ஆகிய பண்பு ரீதியாக மாறுபட்ட பொருட்கள் இரண்டும், ஒரே ஆளின் ஒரே உழைப்பைத் தானே கொண்டிருக்கின்றன? நமது முதலாளித்துவ உலகில் ஒரே ஆள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வேலைகளை செய்வதைக் காணலாம்.

பொருள் உற்பத்தி என்பது, ஒவ்வொரு மனிதனினதும் மூளை, தசை, நரம்புகளின், மனித உழைப்பின் செலவீடு தான். மனித உழைப்பை இரண்டு வகைகளில் செலவிட முடியும் என்பதை மேலே கண்டோம். அதாவது, ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அங்கே மனித உழைப்பு பிரயோகிக்கப் படுகின்றது.

அது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின்னர், பல விதங்களில் செலவிட முடியும் என்பது உண்மை தான். தேர்ச்சி பெற்ற தொழிலாளி, உயர் கல்வி கற்ற வங்கிப் பணியாளர், உழைப்பை வேறொரு மட்டத்தில் செலுத்துகின்றனர். ஆனால், சரக்கின் மதிப்பானது கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பின் செலவீட்டை குறிக்கின்றது.

ஒரு சாதாரண தொழிலாளியின் தேர்ச்சி அடையாத உடல் உழைப்பை சாமானிய உழைப்பு என்று கொள்வோம். தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது, ஒன்று திரட்டப் பட்ட சாமானிய உழைப்பாகும். அதாவது, பன்மடங்காக்கப் பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப் படுகின்றது.

ஒரு தேர்ச்சி பெற்ற உழைப்பு, தேர்ச்சி அடையாத சாமானிய உழைப்புடன் ஒப்பிட்டு சமன் செய்யப் படுகின்றது. அதாவது, சாமானிய உழைப்பு, ஒரு பொருளின் மதிப்பை அளப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப் படுகின்றது. (ஒரு கூலித் தொழிலாளிக்கு வழங்கும் கூலி வேறு விடயம். அதைப் பற்றி இங்கே பேசவில்லை. ஒரு தொழிலாளி வழங்கும் உழைப்பு நேரம் தான் கணிக்கப் படுகின்றது.)

சட்டையின் மதிப்பு, துணியை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கருதிக் கொண்டோம். இந்த வேறுபாடு எங்கிருந்து முளைத்தது? சட்டையில் அடங்கியுள்ள உழைப்பில் பாதியளவு தான் துணியில் அடங்கியுள்ளது. இன்னொரு விதமாகக் கூறினால், துணியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பைப் போன்று இரு மடங்கு, சட்டை உற்பத்திக்கு செலவிடப் பட்டிருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு சரக்கின் பயன் மதிப்பில் மறைந்துள்ள உழைப்பை பண்பு ரீதியாக அளவிடுகின்றோம். அதற்கு மாறாக, (பரிவர்த்தனை) மதிப்பு அளவு ரீதியாக கணக்கிடப் படுகின்றது. "ஒரு பொருளைப் பாவிப்பதால் என்ன பிரயோசனம்?" என்று அதன் பயன் மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம். "அந்தப் பொருள் எவ்வளவு விற்பனைக்கு வருகின்றது? அது எவ்வளவு காலம் பாவிக்கும்?" என்று அதன் (பரிவர்த்தனை) மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம்.

உதாரணத்திற்கு, ஒரு சட்டை உற்பத்தி செய்யத் தேவையான உற்பத்தித் திறன் (இயந்திரங்கள், தொழில்நுட்பம்) மாறாமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்படும் சட்டைகளின் மதிப்பு அவற்றின் தொகைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். அதாவது, ஒரு சட்டை உற்பத்தி செய்வதற்கு ஒரு வேலை நாள் தேவைப் பட்டால், இரண்டு சட்டைகள் உற்பத்தி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை.

ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு சட்டையின் உற்பத்திக்கு தேவையான வேலை நாள் இரு மடங்காகின்றது. அப்படியானால், முன்னர் இரு சட்டைகளுக்கு இருந்த பெறுமதி, தற்போது ஒரு சட்டைக்கு இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு சட்டைக்கு அரை நாள் வேலை நேரம் மட்டும் தேவைப் பட்டால், ஒரு சட்டையின் பெறுமானம் இரண்டு சட்டைகளுடையதாக மாறும். சுருக்கமாக, ஒரு பொருளின் உற்பத்திக்கு செலவிடப் பட்ட பயனுள்ள உழைப்பு அதே பண்பு கொண்டதாக நீடிக்கிறது. ஆனால், உழைப்பின் அளவு மாறியுள்ளது.

பயன் மதிப்புகளின் அளவிலான அதிகரிப்பு, பொருட் செல்வத்தின் அதிகரிப்பாகும். ஒருவர் அணிவதற்கு ஒரு சட்டை தான் தேவை. இரண்டு சட்டைகள் என்பது இரண்டு பேருக்குரியது. ஆனால், சட்டைகள் அதிகரிக்கும் பொழுது, அவற்றின் மதிப்பின் பெறுமதி குறைகின்றது. உற்பத்தி செய்யப்படும் அதிகளவு பொருட்களின் எண்ணிக்கையினால் செல்வம் அதிகரித்தாலும், மதிப்பால் குறைகின்றது. இந்த எதிரெதிர் திசையிலான போக்கிற்கு காரணம், உழைப்பின் இரட்டைத் தன்மை ஆகும்.

உற்பத்தித்திறன் என்பதும் மறைபொருளான உழைப்பின் வடிவம் தான். அதாவது, இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கவும், முன்கூட்டியே மனித உழைப்பு செலவிடப் பட்டுள்ளது. மனித உழைப்புச் சக்தியின் செலவீடு தான், அனைத்துப் பொருட்களிலும் மறைந்திருக்கும் உழைப்பு. மனித உழைப்பு சரக்கின் மதிப்பை படைக்கிறது, அதன் மதிப்பாகவே இருக்கிறது.

பிற்குறிப்பு: முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆதம் ஸ்மித், சரக்குகளை மதிப்பிடுவது மனித உழைப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், உழைப்பின் அளவைக் கொண்டல்ல, உழைப்பின் மதிப்பைக் கொண்டு சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறார். "ஒரு உழைப்பாளியின் ஆரோக்கியம், வலிமை, முனைப்பு சம அளவில் இருக்க வேண்டும். தொழிலாளி தனது மகிழ்ச்சி, ஓய்வு, சுதந்திரத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டும்." என்று சொல்கிறார். (நாடுகளின் செல்வம், புத்தகம் 1) ஆதம் ஸ்மித் நவீன கால கூலித் தொழிலாளியை நினைத்து அப்படி எழுதி இருக்கிறார். உழைப்பு என்பது உலகில் தோன்றிய ஜீவராசிகளின் இயல்பான நடவடிக்கை என்று அவர் கருதவில்லை.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 
1. மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்

No comments:

Post a Comment